Aran Sei

உமர் காலித்திற்குள் ‘தீவிரவாதியை’ தேடுகிறார்கள் – தாரப் ஃபரூக்கி

இல்லாத பூனையை இருட்டில் தேடும் குருடர்கள் போல, உமர் காலித்திற்குள் “தீவிரவாதியை“ தேடுகிறார்கள்.

நாங்கள் சிரித்தபோது  அந்த சிரிப்பு உமர்காலித்தை வருத்தப்பட வைத்தது. லட்சக்கணக்கான மக்கள் பட்டினியிலும் கவலையிலும் இருப்பது அவரது சொந்த மகிழ்ச்சிகூட  அவருக்கு அந்நியமாகிவிட்டது.

சிலர், உமர் காலித்தின் அப்பாவித்தனத்திற்கு சாட்சியாய் இருக்க, வேறு சிலர் அவர் தீவிரவாதி இல்லை எனில் விடுதலை செய்யப்பட்டு விடுவார் என சாதாரணமாக கூறுகின்றனர்.

ஒரு மிகப் பெரிய கூட்டம் நெருப்பில்லாமல் புகையாது  என தத்துவம் பேசுகிறார்கள். இது ஒரு சில வருடங்களுக்கு முன்னால் கூட உண்மையாக இருக்கலாம்.ஆனால் இன்று சமூக வலைதளங்கள் இருக்கும் நிலையில், நெருப்பையும் புகையையும் உண்டாக்குவது கணினி வரைகலைகளே.

இப்போதைய கேள்வி உமர்காலித் தீவிரவாதியா இல்லையா என்பதே.

என்னிடம் இதற்கு பதிலில்லை. நான் இதுவரை எந்த தீவிரவாதியையும் சந்தித்ததும் இல்லை. அவர்களோடு தொடர்பு கொண்டதும் இல்லை. நான் உமர் காலித்தை பலமுறை சந்தித்துள்ளேன். பல நூறு முறை பேசி உள்ளேன்.

தீவிரவாதிகள் எது பற்றி பேசுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. உமர் காலித் என்னிடம் கூறியவற்றுள் சில அவரை “தீவிரவாதி”யை போல காட்டியிருக்கக் கூடும். இது போன்ற “தீவிரவாதி”களை சந்தித்து இருப்பதாக தெரிவதால், நான் உமர் காலித்துடன் நடத்திய விவாதங்களில் சிலவற்றை  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதிலிருந்து ஒருவேளை அவருக்குள் இருக்கும் “தீவிரவாதியை” கண்டுபிடிக்க முடியலாம்.

அவரை கைது செய்வதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை அவர் ஜெய்ப்பூரில் இருந்தார். கொரோனா தொற்று பரவல் விளைவாக ஏற்பட்ட ஊரடங்கினால் நானும் ஜெய்ப்பூருக்கு சென்று விட்டேன். நாங்கள் இருவரும் தினமும் சந்தித்து பல மணிநேரங்கள் நீண்ட விவாதங்களை நடத்தி இருக்கிறோம்.

என் மனைவி கூட அவரை சந்தித்து விவாதம் செய்திருக்கிறாள். அவரை சந்தித்து விட்டு வந்து “எவ்வளவு அமைதியான பண்பாடான பையன். இது போன்ற பையன்களைத்தான் ஒவ்வொரு அப்பாவும் தன் பெண்ணுக்கு திருமணம் முடிக்க விரும்புவார்கள். “ என்று குறிப்பிட்டார்.

“அதில் இரண்டு பிரச்சனை. ஒன்று அவர் படித்திருப்பது. இன்னொன்று அவர் ஒரு முஸ்லீமாக இருப்பது.  அதனால் அவர் ஒரு ‘தீவிரவாதி’ என்றேன் நான்.

என் மனைவி சிரித்தாள்.  இத்தகைய சொற்கள் இனிமேலும் நகைச்சுவையாக இருக்காது என்பதை உடனடியாக உணர்ந்ததால் நான் சிரிக்கவில்லை.

எனக்கும் காலித்திற்கும் இடையே ஒரு அமைதியான நட்பு  இருந்தது. எப்போதும் தனது ஒரு கையை பின்புறம் வைத்துக்கொண்டு நிற்கும் காலித், அதை வலுப்படுத்துவது போல அழுத்திக் கொண்டு இருப்பார். மற்றவர்கள் பேசுவதைக் கவனிக்கும் போது தொடர்ந்து ‘ ம்ம்’ ‘ ம்ம்’  என்று மட்டும் முணகுவார். அது எனக்கு சிறிது எரிச்சலாகக் கூட இருக்கும்.

நான் இதை அவரிடம் பலமுறை எடுத்துக் கூறி, அடுத்த ‘ம்ம்’ போடுவதற்கு முன் கொஞ்சம் இடைவெளி கொடு என்று கூட சொல்லி இருக்கிறேன்.

ஆனால் அது அவருடைய இயல்பாக இருந்தது. கருத்த கண்களையுடைய அவர் நிற்பதற்குப் போதுமான உடல் எடையையே கொண்டிருந்தார். அதில் சிறிது குறைந்தாலும் காற்றில் பறந்து விடுவது போல இருந்தார். ஆனால் சிறந்த  குறிப்பிடத்தக்க நல்ல எண்ணங்களை கொண்டிருப்பவர்.

நான் அவருடன் நடத்திய விவாதங்களைப்பற்றி கூறி விடுகிறேன். அதன்மூலம் அவருக்குள் ஒளிந்திருக்கும் ‘தீவிரவாதியை’  வெளிக்கொண்டு வருவோம்.

பெரும்பாலும் அவர் கைது பற்றித்தான் எங்கள் உரையாடல் இருந்தது. அவர் கைது செய்யப்படுவாரா மாட்டாரா என்பது பற்றி அல்ல. ஆனால் எப்போது, எவ்வளவு நாட்கள் என்பதுதான் கேள்வி. “அவரை ஏன் கைது செய்ய வேண்டும்? அவர் என்ன தவறு செய்தார்?”  என்ற கேள்விகளையே பல முறை ஒரு சிலர் கேட்டனர்.

முன்பு போலவே இந்த நாட்டில் சட்டம் வேலை செய்கிறது என நம்புபவர்களும் இன்னும் இருக்கிறார்களே என எண்ணி அவர்களைப் பார்த்து எங்களுக்கு சிரிப்புத்தான் வந்தது. இந்த மாயை இன்னும் சிறிது காலத்தில் மறைந்து விடும் என்பது உறுதி.

ஆதித்யநாத் அரசு, மருத்துவர் கஃபீல்கானை கைது செய்து , கடந்த ஜனவரி 29லிருந்து எட்டு மாதங்களாக சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது. அவர் டிசம்பர் 12, 2019 அன்று அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் சிஏஏ, என்ஆர்சி பற்றி பேசியதற்காகத்தான் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன தெரியுமா?

ஆரம்பத்தில் அவர் மீது ,  மத அடிப்படையில் இரு குழுக்களிடையே எதிர்ப்புணர்வைத் தூண்டியதாக, சட்டப்பிரிவு 153A  வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர்  சட்டப்பிரிவு 153B ( பழி சுமத்துதல், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவித்தல்), பிரிவு 109 ( தூண்டுதல்) மற்றும்  இனங்களுக்கிடையே வெறுப்புணர்வையும், பகைமை உணர்வை உருவாக்குவது அல்லது வளர்ப்பது  502(2) ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவரை கைது செய்த பின்பு பிப்ரவர் 13 ல் தேச பாதுகாப்புச் சட்டம் (NSA) அவர் மீது பாய்ந்தது.

தேச பாதுகாப்பு சட்டம் என்பதுதான் என்ன?

இந்த சட்டத்தின்படி, ஒருவர் தேசத்தின் பாதுகாப்பிற்கும் அல்லது சட்டம் ஒழுங்கிற்கும்  பங்கம் விளைவிக்கலாம் என நிர்வாகம்  நினைத்தால் கூட எவ்வித குற்றச்சாட்டும் இன்றி 12 மாதங்கள் சிறை வைக்கமுடியும்.

எனினும், இதனை  மூன்று மாதங்களுக்கு  மேல் நீடிக்க , ஒரு ஆலோசனைக் குழுவின் ஒப்புதல்  பெற வேண்டும். இதன் பொருள் யாரையும் எளிதில்  ஒரு வருடத்திற்கு சிறை வைக்கலாம். அவரது குடும்பத்தினர் எதுவும் செய்ய இயலாது.

“அவர் நிரபராதி என்றால்  தானாகவே விடுதலை செய்யப்படுவார் “ என நீட்டி முழங்குபவர்களிடம்  நான் கேட்க விரும்புவது இதுதான். நீங்கள் நிரபராதி தானே?  ஏன் உங்களை ஒரு வருடம் சிறை வைக்கக் கூடாது?  18 வயதான எல்லோரையும் ஏன் ஒரு வருடம் சிறையில் தள்ளக் கூடாது?  நாம் எல்லோரும் நிரபராதிகள் தானே?  தானாகவே விடுதலை ஆவோம் தானே? இதற்கு உங்களிடம் பதில் உள்ளதா?

எட்டு மாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றம், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து,  தனது தீர்ப்பில்,  தேச ஒருமைப்பாட்டிற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் அறைகூவல் விடுக்கும் கஃபீலின் முழு பேச்சையும் சிறிதும் கவனிக்காமல் அவர் மீது தேச பாதுகாப்புச் சட்டத்தின்படி தவறாக குற்றம் சுமத்தி உள்ளது என மிகத் தெளிவாக கூறியுள்ளது.

இதுதான் உமருக்கும் நடக்கும். நான் உறுதியாக கூறுகிறேன்.

மூன்று, ஆறு, ஒன்பது மாதங்கள்,  ஏன் ஒரு வருடத்திற்குப் பிறகு நீதிமன்றம் , அவரது தேசப்பற்றையும்  ஒருமைப்பாட்டையும் பிரதிபலிக்கும் பேச்சை, செயல்களை, கருத்துக்களையும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் அதுவரை, கஃபீல் எட்டு மாதங்களை வீணாக்கியது போல, ஒரு முழு வருட வாழ்க்கையையும் அவர் சிறையில் வீணாக்க வேண்டும்.

நாம் நெருக்கடி நிலை காலத்தில் அனைத்து எதிர் கட்சித் தலைவர்களும் சிறையிலடைக்கப்பட்டதை கேட்டிருக்கிறோம். குறைந்தது அப்போது அவசர நிலை என்றாவது அறிவித்திருந்தார்கள். இப்போது இருப்பது ஒரு புதிய வகை நெருக்கடி நிலை மிக அமைதியாக தன் வேலையைச் செய்து கொண்டு உள்ளது. அனைத்துக்  குரல்களும் படிப்படியாக  ஒடுக்கப்படும். ஒவ்வொருவராக சிறையில் அடைக்கப்படுவர். அவர்களால் வெளியே வர முடியாது.  ஜனநாயகத்தை ஏமாற்றியவர்கள் இந்த நாட்டில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக உண்மையை உணர்வார்கள்.

உண்மைக்காகப் போராடிச் சிறை செல்வது ஒரு கெடுவாய்ப்பு அல்ல.

மாறாக, ஒரு புரட்சியாளனின் மனதிற்குள் சென்று உண்மையை அறிவது நாட்டின் உயரிய விருதான அசோக சக்கரா விருதை வாங்குவது போன்றதுதான். அந்த விருது ஒவ்வொரு புரட்சியாளனும் பெருமையுடன் நெஞ்சில் ஏந்திக் கொள்ள விரும்புவதுதான். ஆனால் தாங்கள் விரும்பாதவற்றைப் பேசியதற்காக, தங்கள் எதிர்ப்பைக் காட்ட தலையை உயர்த்தியதற்காக, அவர்களுக்கு முன்னால் தலை வணங்க மறுத்ததற்காக, மறு நிரூபணம் வேண்டி மற்றும் தங்கள் மறுப்பை முகத்தில் வெளிகாட்டியதற்காகவே நிரபராதிகளை சிறைக்குள் தள்ளுவது பற்றி இங்கு பேசவேண்டியது பொருத்தமானதாகும். இத்தகைய நபர்களை நீங்கள் என்ன சொல்வீர்கள்?

ஓ! நான் மறந்தே விட்டேன். உமருடன் நான் உரையாடல் பற்றி  தொடர்கிறேன். அப்போதுதான் நீங்களும் நானும் உமருக்குள் இருக்கும் ‘தீவிரவாதி’ யை கண்டுபிடிக்க முடியும்.

உமர் அடிக்கடி கூறுவது ” நான் முஸ்லீம்களுக்காகப் போராடுகிறேன். ஏனெனில் அவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். ஒரு வேளை முஸ்லீம்கள் அடக்குமுறை செலுத்துபவர்களாக இருந்தால், அவர்களை எதிர்த்து போராடுவேன். பலவீனமானவர்களுக்காக, அவர்கள் தலித்தாகவோ, தொழிலாளர்களாகவோ, கலைஞர்களாகவோ, அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள யாராக இருந்தாலும் அவர்களுக்காக நான் போராடுவேன்.”

நான் அவரிடம், “உங்களுக்குப் போராடுவதின் மீது ஒரு கவர்ச்சி உள்ளது” என்று கூறிய போது அவர், ”அவர்கள் மக்களை ஒடுக்கும் வரை எனது இந்த போராடும் பண்பு போகாது. அவர்கள் ஒடுக்குவதை விட்டு விடட்டும். நானும் போராடுவதை விட்டு விடுகிறேன்.” என்றார் மிக அழுத்தமாக. நான் அமைதியாகி விட்டேன்.

மனிதர்கள் மோசமானவர்கள் தான். ஆனால் அழகாக சிந்திக்க தெரிந்தவர்கள். ஒரு நாள் எங்கள் விவாதம் ‘அழுக்குத் திவலைகள் ‘ (strings of dirt) பற்றி நடந்தது.

இந்த சொற்றொடரின் பொருளை அறிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள் . நீங்கள் தோலை,  உங்கள் விரலால்  தேய்த்தால், உடலில் உள்ள வியர்வையும் அழுக்கும் சேர்ந்து  கருநிற திவலைகளாக வரும். அவைதான் அழுக்குத் திவலைகள். இது உருவாக ஒரு சில நிபந்தனைகள் உள்ளன. ஒரு மெல்லிய வேர்வை அடுக்கு படித்திருக்க வேண்டும். குளித்து ஒருமணி நேரமாவது ஆகி இருக்க வேண்டும். இப்போது அழுக்கு திவலைகள் என்றால் என்ன என்பது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த விவாதத்தைப்பற்றி அறிய ஆவலாக இருப்பீர்கள்.

இந்த அழுக்குத் திவலைகளுக்கும் இந்தியாவிற்கும் தொடர்பு உள்ளது என உமர் நம்பினார். இங்கு வாழ்ந்து, அதை உணர்ந்தவர்களுக்குத்தான் இந்தியா என்ன என்பது பற்றி புரிந்து கொள்ள முடியும். இந்த அழுக்குத் திவலைகள் ஒருவித மனநிலை. இந்த நாட்டில் உழைக்கும் ஒவ்வொருவன் உடலிலும் இவை போர்த்தப்பட்டிருக்கும்.  தொலைக்காட்சியில் தோன்றுபவர்களைப்போல அவர்கள் ஒரு நாளும் பளப்பளப்பாக, சுத்தமாக இருக்க முடியாது. ஆனால் இந்த அழுக்குத் திவலைகள்தான்  உண்மையில் அவர்கள் உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பு அரண் ஆகும்.

இந்த அழுக்குத் திவலைகள் மூலம்தான் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டும், தெருக்களில் தங்கள் குரலை உயர்த்திக் கொண்டும் உள்ளனர். அவர்கள்தான் இந்த நாட்டின் ஆன்மாக்கள். வேர்வையில் மூழ்கி இருக்கும் இந்த திவலைகள்தான் நமது வலிமை.

இந்த உரையாடலின் முடிவில் உமர் என்னிடம், “குளிர் சாதன அறையில் வாழும் மனிதர்கள் மீது இந்த  அழுக்குத் திவலைகளை காண முடியுமா நண்பா?“ என்று கேட்டார்.

என்னிடம் இதற்கு பதில் இல்லை.  ஒருவேளை உங்களிடம் இருக்கலாம்.

இதுபோன்ற பல்வேறு கருத்துக்களை நாங்கள் விவாதிப்போம். “எவருக்கும் அடுத்தவர் உயிரைப் பறிக்கும் அதிகாரம் இல்லை. அதே சமயம், அடுத்தவர் உயிரைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.” என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் உமர்.

“எவ்வளவு சொத்து இருந்தால் போதுமானது?” என்று ஒருமுறை அவர் என்னிடம் கேட்டார். “அதற்கு ஏதுவது எல்லை இருக்கிறதா?”  நாட்டில் பல கோடிக்கணக்கான பேர் பட்டினியால் உறங்கும் போது ஆடம்பரத்திற்கு ஒரு உச்சவரம்பு இருக்க வேண்டாமா?”

“எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்ததால் நான் படித்து இன்று ஒரு தலைவனாக இருக்கிறேன். ஆனால் எனது குழந்தை பருவத்தில் என்னோடு விளையாடிய எத்தனையோ ஆண், பெண் நண்பர்கள், ஒரு சிலர் என்னைவிட அறிவாளிகள், இது போன்ற கோடிக்கணக்கான பேர் நமது அக்கம்பக்கத்தில் அழுகிக் கொண்டிருக்கிறார்கள்.” என்று வேதனையோடு கூறினார்.

நிறைய‌ பேசும் பண்புடையவர் அவர். பேச ஆரம்பித்துவிட்டால் எதுவும் அவரை நிறுத்த முடியாது. அவரது கண்கள் அவரது வலியை பிரதிபலித்தன. அவரது குரல் வருத்தம் தோய்ந்திருந்தன‌ அவர் சிரிப்ப வேதனையின் வெளிப்பாடாக இருந்தது. அவரது சொந்த மகிழ்ச்சி அந்நியமாகி இருந்தது.

தான் கைது செய்யப்படுவோம் என்பதை முன்பே அறிந்திருந்தார். சில நேரம் புகைப் பிடிக்கும் பழக்கம் அவரிடமிருந்தது. சிறையில் இருக்கும் போது படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலையும் கூட போட்டு வைத்திருந்தார்.  அவர் தயாராகவும், எச்சரிக்கையுடனும் இருந்தார்.

என்ன மாதிரியான அமைப்பு இது எனது நாட்டு மக்களே?  ஒரு அநியாயம் நடக்கப்போவது தெரிந்தும் அதை தாங்கிக் கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற வலிகளுக்கு மருந்தும் இல்லை, மருத்துவமும் இல்லை. நாம் ஏறக்குறைய அடக்குமுறைகளை சகித்துக்கொள்ளப் பழகிவிட்டோம்.

இப்போது, உமர்காலித்திற்குள் ஒளிந்திருக்கும் தீவிரவாதியை நீங்கள் அடையாளம் கண்டிருப்பீர்கள். இல்லையென்றால் அவரது பெயரை வைத்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவர் பெயர் உமர் காலித்.

‘சத்தியமேவ ஜெயதே’ என்ற இந்திய அரசு இலட்சினையில் உள்ள வார்த்தைகளுக்கு ‘வாய்மையே வெல்லும்’  என்று பொருள்.   இந்தியாவின் குறிக்கோள் கூட உண்மையைக் கண்டறிவதுதான்.  ஆனால் இன்று, உண்மையைத் தேடுவதில் இல்லை.  மாறாக ஒவ்வொரு பெயரிலும் ‘தீவிரவாதியைத்’ தேடிக் கொண்டிருக்கிறோம்.

வாய்மையே வெல்லும் என்பது இன்னும் இந்தியாவின் இலட்சினையாக இருக்கலாம், ஆனால் இன்று இந்த நாடு போகின்ற போக்கைப் பார்த்தால், நமது இலட்சினை, “வெறுப்பே வெல்லும்” என்று மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ஏனெனில் வெறுப்பு மட்டுமே இங்கே வென்று கொண்டிருக்கிறது.

(www.thewire.in இணையதளத்தில் ‘தாரப் ஃபரூக்கி’ எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்