Aran Sei

’ ஹலோ துபாயா? ஸ்கோர் என்ன சார்? ’ – ஐ.பி.எல் ரசிகர்கள் ரெடி

ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் போட்டியுடன் இவ்வாண்டுக்கான ஐ.பி.எல் திருவிழா அபுதாபியில் இன்று தொடங்குகிறது.

தற்போதைய இந்தியச் சூழலை மட்டும் கணக்கில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகம் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த அனுமதி கொடுத்துவிடவில்லை. உங்கள் நினைவுகளை தோண்டினால், இரண்டு நிகழ்வுகள் நினைவுக்கு வரும்.

முதலாவது, 1986-ல் ஷார்ஜாவில் நடந்த ஆஸ்திரலேசிய கோப்பையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இறுதி ஆட்டத்தின் கடைசி பந்தில், ஜாவத் மியண்டட் சிக்ஸர் அடித்து பாகிஸ்தானை வெற்றி பெறச் செய்த நிகழ்வு.

இரண்டாவது, 1998-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கோகோகோலா கோப்பை இறுதி ஆட்டத்தில், சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து இந்தியாவிற்கு கோப்பை பெற்று தந்தது.

நன்றி : Economictimes

இந்த ஞாபகத் தொகுப்பில் மேலும் ஒரு பூச்செண்டாக, இன்று அபுதாபி ’ஷேக் சயத்’ மைதானத்தில் நடக்கவுள்ள தொடக்கப் போட்டி அமையவுள்ளது. காரணம் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸும், சென்ற ஆண்டு இறுதிப் போட்டியில் கோப்பையை தவறவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸும் மோதுகின்றன.

கடந்த மார்ச் 29-ம் தேதி இந்தியாவில் தொடங்கவிருந்த ஐ.பி.எல் போட்டிகள், கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைப்பட்டிருந்தன. இந்நிலையில் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டதால் கிடைத்த ஓய்வு நாட்களை இந்திய கிரிக்கெட் வாரியம் பயன்படுத்திக்கொண்டது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்குமான கிரிக்கெட் உறவு 2014-லிலேயே தொடங்கிவிட்டது. அந்த ஆண்டு இந்தியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் காரணமாக, ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடைபெற்றன.

நன்றி : Thestatesman

தற்போது உலகம் முழுவதும் மக்களிடையே கொரோனா தொற்று குறித்த அச்சம் இருந்து வருகிறது. அதனால் ஐ.பி.எல் நிர்வாகிகளும் அமீரக அதிகாரிகளும் வீரர்களுக்கான பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எட்டு அணிகளின் பங்கேற்புடன், 53 நாட்கள் நடக்கவுள்ள ஐ.பி.எல் போட்டிகள் அபுதாபி, ஷார்ஜா ஆகிய இரண்டு மைதானங்களில் நடக்கவுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இவர்கள் மூலம் மேலும் சில வீரர்களுக்கும் பரவியிருக்கலாம். இனி வரும் நாட்களில் அதன் தாக்கம் தெரியவரும் என்ற அச்சமும் உள்ளது.

இத்தகைய பிரச்சனைகளையும் தாண்டி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற உலக அளவில் பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் வீரர்களால் இந்தாண்டும் ஐ.பி.எல் போட்டிகள் பெரும் பணம் புரளும் நிகழ்வாகவே தொடர்கின்றன.

நன்றி : The Quint

இந்திய ரசிகர்களை பொறுத்த வரை, ராயல் சாலன்ஜர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா போன்ற இந்திய நட்சத்திரங்களின் அதிரடி ஆட்டங்களை அடுத்த இரண்டு மாதங்களுக்குக் காணலாம். இன்னும் முத்தாய்ப்பாக, சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆட்டத்தை காண அவரது ரசிகர் ஆவலாக உள்ளார்கள்.

முதல் ஆட்டத்தில் மோதவுள்ள முக்கிய அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை தவிர்த்து, முன்னால் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபத் அணிகளுடன், ராயல் சாலன்ஜர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிடல் அணிகளும் இந்தாண்டு உத்வேகத்துடன் களம் இறங்குகின்றன.

கொரோனா தொற்று தொடர்பான அச்சங்களுடன், அமீரகத்தில் நிலவும் 40 செல்சியசிற்கும் அதிகமான தட்பவெட்ப சூழலும், ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களும் வீரர்கள் எதிர்கொள்ளவேண்டிய முக்கிய தடைகளாக உள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்