Aran Sei

கஜா புயலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் – அழிவிலிருந்து மீளாத விவசாயிகள்

கஜா புயல் கடல் மட்டத்தில் உயர்வை உண்டாக்கி, கடலோர கிராமங்களில் உப்பு நீரை கொண்டு வந்தது. Image credit - thewire.in

வம்பர் 16, 2018 அன்று நாகப்பட்டினத்திற்கும் வேதாரண்யத்திற்கும் இடையே, கஜா புயல் தாக்கிய போது, 50 லட்சம் தென்னை மரங்கள், 1 லட்சத்துக்கும் அதிகமான மின் கம்பங்கள் மற்றும் பிற பழ மரங்கள் வீழ்ந்து சேதமடைந்தன. ஏழு கடலோர மாவட்டங்களில் இருந்த விவசாயிகள் தங்கள் பயிர்களை எல்லாம் இழந்தனர்.

நாகப்பட்டினம், புயலினாலும், புயல் உண்டாக்கிய அலை எழுச்சியாலும் இரட்டை சேதத்தை சந்தித்தது.

அலை எழுச்சி என்பது புயல்கள் அல்லது சூறாவளி போன்ற வானிலை அமைப்புகள் காரணமாக கடல் மட்டம் அசாதாரணமாக உயர்வது. 2018 நவம்பர் மாதம் கஜா புயல் கடல் மட்டத்தில் உயர்வை உண்டாக்கி, கடலோர கிராமங்களில் உப்பு நீரை கொண்டு வந்தது. வெள்ளபள்ளம், புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு போன்ற கிராமங்களில் கடல் வெள்ளம் வந்தாலும், கோவில்பத்து கிராமம் அதிகம் பாதிக்கப்பட்டது. அக்கிராமத்தில், அலை எழுச்சியினால் வளர்ந்து நின்ற பயிர்களையும், மரங்களையும் இழந்ததோடு மட்டுமில்லாமல், கிராமத்தின் நிலத்தடி நீரும், நிலமும் உப்பு கலந்து விட்டன.

2011 மக்கள்தொகை கணக்குப்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம் தாலுகாவின் கோவில்பத்து கிராமத்தில் மக்கள்தொகை 3,213 பேர். சில குடியிருப்புகள் சேர்க்கப்பட்ட பிறகு, மக்கள்தொகை இன்னமும் உயர்ந்திருக்கிறது. தென்னை, நெல், நிலக்கடலை, முந்திரி மற்றும் மாம்பழ சாகுபடிகளில் அங்குள்ள விவசாயிகள் வணிக ரீதியாக வெற்றி கண்டார்கள். ஆனால், கஜா புயலும், அலை எழுச்சியும் வந்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் அதனுடைய பாதிப்பில் இருந்து அம்மக்கள் மீளவில்லை.

புயல் எச்சரிக்கையை குறித்து கிராம மக்களுக்கு தெரிந்திருந்தாலும், அலை எழுச்சி வந்தது யாருமே எதிர்பார்க்காதது. இதற்கு முன் 2004-ல் சுனாமி தாக்கியபோது மட்டும் தான் கடல் வெள்ளம் கிராமத்திற்குள் வந்தது.

ஆனால், கிராமத்தை சேர்ந்த முதியவர்கள் இரண்டு பேர், 1950-களில் கிராமத்திற்குள் கடல் வெள்ளம் வந்ததாக சொல்கிறார்கள், ”1953, 54-களில் கடல் நீர் கிராமத்திற்குள் வந்த போது இவ்வளவு சேதம் இல்லை. சுனாமியும் அவ்வளவு மோசமாக இல்லை, கடல் நீர் மட்டும் தான் வந்தது. நாங்கள் எங்கள் மரங்களை இழக்கவில்லை” என எண்பது வயதுக்கு மேல் ஆன சந்திரா தங்கவேல் VillageSquare.in-இடம் கூறியுள்ளார் .

கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம், வங்காள கடலின் ஓரம் இருக்கும் நாகப்பட்டினம் – பாம்பன் பகுதியை 3 முதல் 5 மீ வரை கடல் அலை எழுச்சி உயரம் அபாயம் இருக்கும் இடம் என்று சொல்கிறது.

“கஜா புயல் வந்த போது, என் கழுத்து வரை தண்ணீர் இருந்தது, நான் நீந்தி தான் பக்கத்து வீட்டிற்கு போனேன்” என்கிறார் உமா தேவி. மேல் மாடிகள் இருந்த வீட்டில் கிராமத்து மக்கள் தஞ்சம் புகுந்தனர்.

இந்தக் கிராமம் கடற்கரையில் இருந்து ஒரு கிமீ தொலைவில் இருக்கிறது. பயிர்கள், கால்நடைகளை எல்லாம் இழந்தது மட்டுமல்லாமல், மீன் மற்றும் இறால் பண்ணைகளையும் இழந்திருக்கின்றனர் கிராம மக்கள். அறிவியலில் பட்டங்கள் பெற்ற பிறகும், விவசாயத்தைத் தொடரும் கிராமத்தின் இளைஞர்கள், பருவநிலை மாற்றத்தையும், அதனால் அவர்கள் வாழ்வாதாரத்தில் உண்டாகும் தாக்கத்தையும் குறித்து அறிந்திருக்கிறார்கள்.

சேதமான நிலம்

கடல்நீரின் உப்பினாலும், கடலில் இருந்த கசடுகள் எல்லாம் கிராமத்திற்குள் வந்ததாலும், பயிர்கள் எல்லாம் எரிந்தவை போல நின்றன.

சந்திரா தங்கவேல் தன்னுடைய நிலக்கடலை பயிரை முற்றிலுமாக இழந்திருக்கிறார். ராதாகிருஷ்ணன் சிவஞானம், நெல்லை இழந்திருக்கிறார். ஒவ்வொரு விவசாயியும் முழு இழப்பை சந்தித்திருக்கின்றனர்.

நாகப்பட்டினம் – வேதாரண்யம் சாலையில் இருந்து 2.5 கிமீ தள்ளி இருப்பதால், இந்தக் கிராமத்தின் நிலை உடனடியாக வெளிய தெரியவில்லை. சில நாட்களுக்கு, கடல் நீர் கலந்த நிலத்தடி நீரை வைத்து தான் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். மறுசீரமைப்பு வேலைகள் நடக்கத் தொடங்கிய பிறகு, அவ்வூர் பஞ்சாயத்து குடிக்க தண்ணீர் ஏற்பாடுகள் செய்திருக்கிறது.

கடல்நீரின் உப்பினாலும், கடலில் இருந்த கசடுகள் எல்லாம் கிராமத்திற்குள் வந்ததாலும், ராதாகிருஷ்ணன் சிவஞானம், நெற்பயிரை இழந்திருக்கிறார். - thewire.in
கடல்நீரின் உப்பினாலும், கடலில் இருந்த கசடுகள் எல்லாம் கிராமத்திற்குள் வந்ததாலும், ராதாகிருஷ்ணன் சிவஞானம், நெற்பயிரை இழந்திருக்கிறார். – Image credit: thewire.in

இருந்தாலும் வயல்களில் அலை எழுச்சி உண்டாக்கிய பாதிப்பு இன்னமும் இருக்கின்றது. வழக்கத்தை விட குறைவான விளைச்சலே நடக்கிறது. “தண்ணீர் தான் பிரதான பிரச்சினை. நல்ல மழை பெய்தால், உப்புத்தன்மை குறைந்திருக்கும், ஆனால், மழையும் இல்லை” எனச் சொல்கிறார் வீரராமகிருஷ்ணன் (30).

வழக்கமாக, நிலக்கடலை விளைச்சலால் இவருக்கு நான்கு லட்சம் லாபம் வரும். “ஒரு மூட்டை நிலக்கடலை விதை விதைத்தால், எங்களுக்கு பத்து மூட்டை அறுவடை கிடைக்கும். ஆனால், போன வருடம் நான்கு மூட்டைகள் தான் அறுவடை செய்தோம்” என்கிறார்.

கடந்த வருடம் நிலக்கடலை குறைந்த அளவிலேயே விளைந்ததாக விசு ராமையன் (30) என்பவரும் சொல்கிறார். பெயர் வெளியிட விரும்பாத விவசாயத்துறை அதிகாரி ஒருவர், விவசாயிகள் மொத்த வணிகர்களிடம் இருந்து விதைகளை வாங்காததால் தான் விளைச்சல் மோசமாக இருக்கிறது என்று சொல்கிறார். இதை ஏற்காத விவசாயிகள், மழை இல்லையென்றாலும் நம்பிக்கையோடே இருக்கின்றனர். “மூன்று வாரங்களில் இந்த சீசனிற்கு நிலக்கடலைகளை விதைப்போம்” என்கிறார் விசு ராமையன்.

இந்த ஆண்டு பெய்த மழை, நிலத்தின் உப்புத்தன்மையை கொஞ்சம் குறைத்திருக்கும் என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.

வண்டுகளினால் பிரச்சினை

விசு ராமையா வைத்திருந்த 120 தென்னை மரங்களில், புயலிற்கு பிறகு வெறும் 25 மட்டும் தான் தப்பித்து நின்றன. “புயலுக்கு பிறகு பல மாதங்கள் இந்த மரங்கள் வெறும் பாளைமடல்களை மட்டும் தான் தந்தன. அந்த ஆண்டு விளைச்சல் மிகக் குறைவாக இருந்ததால், தேங்காய்களை விற்காமல் நாங்கள் வீட்டில் பயன்படுத்த வைத்துக் கொண்டோம்” என்கிறார்.

சில மரங்களை தவிர, தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் இருந்த அத்தனை மரங்களையும் இழந்தார் வீரராமகிருஷ்ணன். கிராம மக்கள் அத்தனை பேரும் இதைப் போன்ற இழப்புகளை சந்தித்தனர்.

நாகப்பட்டினத்தில் இயங்கும் அரசு சாரா அமைப்பான ஈகா அறக்கட்டளை, வேறு இரண்டு அரசு சாரா அமைப்புகளோடு இணைந்து, வீழ்ந்திருந்த தென்னை மரங்களையும், மாமரங்களையும், முந்திரி மரங்களையும் அகற்றவும், கோவில்பத்து கிராமத்தில் நிலத்தை சீர் செய்யவும் ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டது.

ஈகா அறக்கட்டளை கடலோரத்தில் நிவாரண வேலைகள் செய்தாலுமே விவசாய வளர்ச்சி நடவடிக்கைகளை எல்லாம் கோவில்பத்து கிராமத்தில் மட்டுமே செய்தது.

“எங்கள் விவசாய வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியான மக்களுக்கு தென்னங்கன்றுகளை கொடுத்தோம்” என்கிறார் அறக்கட்டளையை சேர்ந்த மோகனராஜசேகரன்.

இதைப் போன்ற கொடைகளை வைத்தும், ஒரு மரத்திற்கு 1,100 ரூபாய் என அரசு கொடுத்த பணத்தை வைத்தும், எல்லா விவசாயிகளும் மறுபடியும் தென்னங் கன்றுகளை நட்டனர். ஆனால், நட்ட கன்றுகளை காண்டாமிருக வண்டுகள் தாக்கியது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின், வேளாண் பூச்சியியல் வல்லுநரான கே சந்திரசேகர், “மரங்கள் வீழ்ந்த போது இந்த வண்டுகள் இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியிருக்கும், அவை உடனேயே அகற்றப்படவில்லை” என்கிறார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வாக, சந்திரதேசர் நிறைய வழிகளை சொல்கிறார். “இந்த வண்டுகள் மரத்தின் வளர்ச்சியில் எந்த காலகட்டத்தில் வேண்டுமானாலும் தாக்கும். பெரிய மரங்கள் இல்லாததால் அவை கன்றுகளை தாக்கின” எனச் சொல்கிறார்.

“விவசாயிகள் எல்லோரும் சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகளை ஒன்று போல பின்பற்றினால் மட்டுமே வண்டுகளை அழிக்க முடியும். சிலர் மட்டுமே தனியே பின்பற்றுவதால் மட்டும் எதுவும் செய்ய முடியாது” என்கிறார்.

மரக்கன்றுகளை ஒரு ஆண்டு ப்ளாஸ்டிக் பைகளில் வளர்த்த பிறகு நடுகின்றனர், இது வண்டுகளை கட்டுப்படுத்த கொஞ்சம் உதவுகிறது. Image credit : thewire.in
மரக்கன்றுகளை ஒரு ஆண்டு ப்ளாஸ்டிக் பைகளில் வளர்த்த பிறகு நடுகின்றனர், இது வண்டுகளை கட்டுப்படுத்த கொஞ்சம் உதவுகிறது. Image credit : thewire.in

ஏக்கர் கணக்கில் கன்றுகளை நட்டிருக்கும் விவசாயிகள் ஒவ்வொன்றாக தேடி வண்டுகளை அழிக்க முடியாது என்கின்றனர். சில இதற்கு வேறு வழியும் கண்டுபிடித்திருக்கின்றனர். “அவர்கள் மரக்கன்றுகளை ஒரு ஆண்டு ப்ளாஸ்டிக் பைகளில் வளர்த்த பிறகு நடுகின்றனர், இது வண்டுகளை கட்டுப்படுத்த கொஞ்சம் உதவுகிறது. இதையே எல்லோரும் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் வீரராமகிருஷ்ணன்.

கஜா புயலுக்கு முன்பு, வீரராமகிருஷ்ணனும், விசு ராமையனும் தென்னை மரங்களில் இருந்து மாதத்திற்கு பதினைந்தாயிரம் ரூபாய் குறைந்தபட்சமாக ஈட்டியிருக்கின்றனர். விவசாயிகள் அத்தனை பேரும் மாமரங்கள், முந்திரி மரங்கள் மற்றும் சவுக்கு மரங்களில் இருந்து ஒரு கணிசமாக தொகையை ஈட்டியிருக்கின்றனர்.

“மரங்கள் வளர்ந்து பழங்கள் வர நேரம் எடுக்குமென்பதால், இப்போது காய்கறிகளை சாகுபடி செய்யும்படி மக்களிடம் சொல்லி, அதற்கு கன்றுகளையும் விதைகளையும் மக்களுக்கு கொடுத்திருக்கிறோம்” எனச் சொல்கிறார் ஈகா அறக்கட்டளையின் மோகனராஜசேகரன்.

கஜா புயலுக்கு முன் அய்யப்பன் ரெங்கையன் பயிரிட்டிருந்த கத்திரி செடிகளும், மல்லிகை செடிகளும் காப்பாற்றவே முடியாத அளவு கருகியிருந்தன. Image credit : thewire.in
கஜா புயலுக்கு முன் அய்யப்பன் ரெங்கையன் பயிரிட்டிருந்த கத்திரி செடிகளும், மல்லிகை செடிகளும் காப்பாற்றவே முடியாத அளவு கருகியிருந்தன. Image credit : thewire.in

வீரராமகிருஷ்ணன் அரை ஏக்கரில் கத்திரி நட்டிருக்கிறார். “நல்ல விளைச்சல் இருந்தது. கத்திரிக்காயும், கொத்தவரையும் நன்றாகவே வருகின்றன” என்கிறார் அவர். “எங்களுடைய வீட்டு செலவுகளை சமாளிக்கவேனும் இது உதவுகின்றது” என்கிறார்.

கஜா புயலுக்கு முன் அய்யப்பன் ரெங்கையன் போன்ற சில விவசாயிகளே காய்கள் வளர்த்தனர். அவர் ஒரு வாரம் கத்திரி அறுவடை செய்த முடித்திருந்த வேளையில் தான், புயல் தாக்கியிருந்தது. காப்பாற்றவே முடியாத அளவு கத்திரி செடிகளும், மல்லிகை செடிகளும் கருகியிருந்தன.

அவரிடம் தென்னை மரங்கள் இருந்தாலும், காய்கறிகளே அவருக்கு தினசரி வருவாயை ஈட்டிக் கொடுத்தன. அவர் நட்ட 120 தென்னை கன்றுகளில் 40 மட்டுமே வண்டுகளின் தாக்குதலில் இருந்து தப்பித்திருக்கிறன. ஆனால், அவர் கத்திரி மற்றும் மல்லிகை தரும் விளைச்சல் திருப்திகரமாக இருக்கிறது என்கிறார். இப்போதைக்கு காய்கறிகளை பயிரிடும் பல விவசாயிகளின் மனநிலை இதுவாகவே இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இந்த நிலை மேம்படும் என அவர்கள் நம்புகின்றனர்.

Village Square தளத்தில் வெளியான கட்டுரை. கட்டுரையாளர் ஜென்சி சாமுவேல், சென்னையை சேர்ந்த சிவில் எஞ்சினியர் மற்றும் பத்திரிகையாளர்.

நன்றி – thewire.in
மொழியாக்கம் செய்யப்பட்டது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்