Aran Sei

இரண்டு சதித் திட்டங்களும் ஒரு எரியூட்டலும் – அருந்ததி ராய்

முஸ்லீம் வழிபாட்டுத் தலம் ஒன்றின் மீது நெருப்பு குண்டு வீசும் ஒரு சிஏஏ ஆதரவாளர்

தீபாவளி நெருங்குகிறது. இந்துக்கள், ராமன் தனது ராஜ்யத்துக்கு (அவருக்காக அயோத்தியில் கட்டப்பட்டு வரும் புத்தம் புதிய கோயிலுக்கு) வெற்றியுடன் திரும்பி வருவதைக் கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறார்கள். நம்மைப் போன்ற மற்றவர்கள் எல்லாம் இந்தப் பருவத்தை இந்திய ஜனநாயகத்தின் தொடர் வெற்றிகளுக்கானதாக கொண்டாடுவதோடு திருப்தி அடைந்து கொள்ள வேண்டியதுதான்.

ஹத்ராஸ் கொலை செய்யப்பட்ட பெண்ணின் நினைவாக மும்பையில்
ஹத்ராஸ் கொலை செய்யப்பட்ட பெண்ணின் நினைவாக மும்பையில்

மனதைத் தொந்தரவு செய்யும் எரியூட்டல் பற்றிய பரபரப்பு செய்தி ஒரு புறத்திலும் ஒரு மாபெரும் சதித் திட்டத்தை முடித்துக் கட்டிவிட்டு இன்னொரு மாபெரும் சதித்திட்டத்தை தொடங்கி வைப்பது இன்னொரு புறத்திலும் இருக்க இவற்றுக்கு இடையே நம்மைப் பற்றியும், நமது பழைய மற்றும் நவீன கலாச்சார நாகரீக மதிப்பீடுகளைப் பற்றியும் நாம் பெருமைப்படாமல் இருக்க முடியுமா?

19 வயது தலித் பெண் ஒருவர் உத்தர பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸில் உள்ள அவரது கிராமத்தின் ஆதிக்க சாதி ஆண்களால் கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, உடல் சிதைக்கப்பட்டு, சாகும்படி விடப்பட்டது பற்றிய செய்தி செப்டம்பர் மத்தியில் வந்தது. பெரும்பான்மை பார்ப்பனர், தாக்கூர் சாதியினர் வசிக்கும் 600 குடும்பங்கள் கொண்ட அந்தக் கிராமத்தில் வாழும் 15 தலித் குடும்பங்களில் அந்தப் பெண்ணின் குடும்பமும் ஒன்று. தன்னை யோகி ஆதித்யநாத் என்று அழைத்துக் கொள்ளும் காவி உடை அணிந்த உத்தர பிரதேச முதலமைச்சர் அஜய் சிங் பிஷ்ட்டும் தாக்கூர் சாதியைச் சேர்ந்தவர். (எல்லா வகைகளிலும் அவர் கூடிய விரைவில் பிரதமர் மோடியின் இடத்திற்கு வருவதற்காக தயாரிக்கப்பட்டு வருகிறார் என்று தெரியவருகிறது.)

அந்தப் பெண் தாக்கப்பட்டவர்களால் கொஞ்ச காலமாகவே பின் தொடரப்பட்டு மிரட்டப்பட்டு வந்திருக்கிறாள். உதவிக்காக யாரிடமும் அவள் போக முடியாத நிலை. அவளைப் பாதுகாக்க யாரும் இல்லை. எனவே, அவள் வீட்டிலேயே இருந்தாள், வெளியில் போவதையே தவிர்த்தாள். அவளும் அவளது குடும்பமும் தங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்திருந்தார்கள். அப்படி அறிந்திருப்பது மட்டும் உதவப் போவதில்லை. தன் மகள் பசுக்களை மேய்க்க இட்டுச் சென்ற வயல் வெளி ஒன்றில் அவளது இரத்தம் சொட்டும் உடலை அந்தத் தாய் கண்டாள். அந்தப் பெண்ணின் நாக்கு கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டிருந்தது, அவளது முதுகெலும்பு முறிக்கப்பட்டிருந்தது, அவளது உடல் செயலற்றுப் போயிருந்தது.

அந்தப் பெண் முதலில் அலிகாரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் பின்னர் நிலைமை மோசமானதும் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் இரண்டு வாரங்கள் உயிரோடு இருந்தாள். செப்டம்பர் 29-ம் தேதி இரவு அவள் இறந்து போனாள். சென்ற ஆண்டு இந்திய மொத்தமான 1700 கொட்டடி கொலைகளில் கிட்டத்தட்ட 4-ல் ஒரு பங்காக 400 கொட்டடி கொலைகளை சாதித்துக் காட்டி புகழ்பெற்ற உத்தர பிரதேச போலீஸ் அந்தப் பெண்ணின் உடலை நடு இரவில் எடுத்துச் சென்று அவளது கிராமத்தின் வெளிப்பகுதிக்கு கொண்டு சென்றார்கள். அவர்கள் துயரத்தில் மூழ்கியிருந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தை வீட்டில் அடைத்து பூட்டினார்கள். அந்தப் பெண்ணின் அம்மாவுக்கு தனது மகளிடம் இருந்து இறுதி விடை பெறும் வாய்ப்பை, தனது மகளின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்கும் உரிமையை மறுத்தார்கள். இந்த உலகை விட்டுச் சென்று விட்ட அன்பான ஒரு மகளின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கான கௌரவத்தை அந்தச் சமுதாயத்துக்கு மறுத்தார்கள். அவர்களது மகளின் உடல்தான் எரியூட்டப்படுகிறது என்ற அறிவைக் கூட அவர்களுக்கு மறுத்தார்கள்.

கொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் உடைக்கப்பட்ட உடல், அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட சிதையில் வைக்கப்பட்டு, காக்கி போலீஸ் சீருடைகள் சூழ, இரவு வானத்தில் புகை எழும்பியது. அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தமது வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார்கள். அவர்கள் ஊடக வெளிச்சத்தினால் தெளிவாக பயந்து போயிருந்தார்கள். அந்த வெளிச்சங்கள் மங்கிய பிறகு அந்தக் கவனத்துக்காகவும் சேர்த்து தண்டிக்கப்படுவார்கள் என்ற நன்கு அறிந்திருந்ததால் அவர்கள் பயந்து போயிருந்தார்கள்.

அவர்கள் உயிர் பிழைத்து இருக்க முடிந்தால், அவர்களுக்கு பழக்கமான வாழ்வுக்குத் திரும்பிச் செல்வார்கள். மத்திய கால குரூரமும், மதிப்பின்மையும் தினமும் இழைக்கப்படும், தீண்டத்தகாதவர்களாகவும் மனிதர்களை விடத் தாழ்ந்தவர்களாகவும் அவர்கள் நடத்தப்படும், அவர்களது மத்திய கால சாதி பீடித்த கிராமத்தில் வாழ்வார்கள்.

உடல் பாதுகாப்பாக அழிக்கப்பட்டு விட்டது என்ற நம்பிக்கையுடன் எரியூட்டப்பட்ட அடுத்த நாள், அந்தப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படவில்லை என்று போலீஸ் அறிவித்தது. அவள் கொலை மட்டும்தான் செய்யப்பட்டாள். மட்டும்தான்!

சாதிய கொடூரங்களிலிருந்து சாதிய கோணத்தை வேகமாக நீக்கி விடுவது என்ற வழக்கமான நிகழ்முறையின் தொடக்கத்தை இது குறிக்கிறது. நீதிமன்றங்கள், மருத்துவமனை பதிவேடுகள், மையநீரோட்ட ஊடகங்கள் எல்லோரும் இந்த நிகழ்முறையில் ஒத்துழைக்க முடியும். வெறுப்பு நிறைந்த ஒரு சாதிய கொடூரத்தை இன்னும் ஒரு துரதிர்ஷ்டமான ஆனால் சாதாரண குற்றமாக மாற்றுவதை அவர்கள் செய்வார்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நமது சமூகத்தையும், நமது கலாச்சாரத்தையும், சமூக பழக்கங்களையும் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடும் நடைமுறை அது. இதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறோம். மிகப் பிரபலமாக 2006-ம் ஆண்டு கயர்லாஞ்சியில் சுரேகா போட்மாங்கேயும் அவரது இரண்டு குழந்தைகளும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வில் அது தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டிருந்தது.

ஹத்ராஸில் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம்
ஹத்ராஸில் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம்

பாரதிய ஜனதா கட்சி வாக்களிப்பது போல நமது நாட்டை அதன் புகழ்வாய்ந்த கடந்த காலத்துக்குக் கொண்டு போகும் நமது முயற்சியின் ஒரு பகுதியாக அடுத்த தேர்தலில், முடிந்தால் அஜய் சிங் பிஷ்ட்டுக்கு வாக்களிக்க தயவு செய்து மறந்து விடாதீர்கள். அவருக்கு இல்லையென்றால், அவருக்கு அடுத்த அளவில் முஸ்லீம் வெறுப்பைத் தூண்டும், தலித் வெறுப்பு நிரம்பிய அரசியல்வாதிக்கு வாக்களியுங்கள். அவர் யாராக இருந்தாலும் சரி. அப்லோட் செய்யப்படும் அடுத்த அடித்துக் கொல்லும் வீடியோவுக்கு “லைக்” செய்ய மறக்காதீர்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த வெறுப்பை உமிழும் தொலைக்காட்சி தொகுப்பாளரை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருங்கள். அவர்தான் நமது கூட்டு மனச்சாட்சியை பாதுகாப்பவர்.

மேலும், நாம் இன்னும் வாக்களிக்க முடிகிறது, நாம் உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் வாழ்கிறோம், “தோற்றுப் போன அரசுகள்” என்று நாம் அழைக்க விரும்பும் அண்டை நாடுகளைப் போல இல்லாமல் இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தும் நடுநிலையான நீதிமன்றங்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

ஹத்ராஸ் கிராமத்துக்கு வெளியில் நடைபெற்ற வெட்கக்கேடான, அதிர்ச்சியூட்டும் அந்த எரியூட்டலுக்கு ஒரு சில மணி நேரங்களில் செப்டம்பர் 30-ம் தேதி காலையில் சிபிஐயின் சிறப்பு நீதிமன்றம் ஒன்று அத்தகைய நடுநிலைக்கும் நேர்மைக்கும் ஒரு உயிர்த்துடிப்பான உதாரணத்தை நிகழ்த்திக் காட்டியது.

28 ஆண்டுகள் மிகக் கவனமாக ஆலோசித்த பிறகு, நவீன இந்தியாவின் வரலாற்றின் திசையை மாற்றி அமைத்த நிகழ்வான 1992-ம் ஆண்டு பாபர் மசூதியை இடிப்பதற்கு சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் (32 பேர்) குற்றமற்றவர்கள் என்று விடுவித்தது, அந்த நீதிமன்றம். விடுவிக்கப்பட்டவர்களில் ஒரு முன்னாள் உள்துறை அமைச்சர், ஒரு முன்னாள் மத்திய அமைச்சர், ஒரு முன்னாள் முதல் அமைச்சர் அடங்குவார்கள். தொகுத்துப் பார்க்கும் போது பாபர் மசூதியை யாருமே இடிக்கவில்லை என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம் சட்டப்படி. ஒருவேளை மசூதி தன்னைத்தானே இடித்துக் கொண்டு விட்டிருக்கிறது. ஒருவேளை அத்தனை ஆண்டுகளுக்கு முன்பு, பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6-ஐ தேர்ந்தெடுத்து, தன்னை சுத்தியலால் இடித்துக்கொண்டு தூள் தூளாக்கிக் கொண்டது. அன்று அங்கே கூடியிருந்த, தங்களை பக்தர்கள் என்று அழைத்துக் கொண்ட, காவி கர்ச்சீப் கட்டிய குண்டர்களின் கூட்டு மனபலத்தின் கீழ் அது நொறுங்கியிருக்கிறது.

பழைமையான அந்த மசூதியின் கோபுரங்களை இடித்துத் தகர்த்துக் கொண்டிருந்த நபர்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் நாம் பார்த்தது, நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களாக நாம் படித்ததும் கேட்டதும், அதைத் தொடர்ந்த மாதங்களில் வெளியான செய்தி அறிக்கைகள் எல்லாமே நமது கற்பனை மயக்கங்கள்தான் என்று ஆகியிருக்கிறது. எல் கே அத்வானி ஒரு திறந்த லாரியில் நாட்டின் வடக்கு தெற்காகவும், மேற்கு கிழக்காகவும் பயணித்த ரத யாத்திரை, அவர் பெரும் கூட்டங்களில் பேசியது, நகர சாலைகளை மூட வைத்தது, மசூதி நிற்கும் அதே இடத்தில் ராமர் கோயிலை கட்டுவதற்கு அயோத்தியில் கூடி கோயில் கட்டுவதில் பங்கெடுக்குமாறு இந்துக்களுக்கு அழைப்பு விடுத்தது, அவை எதுவுமே உண்மையில் ஒரு போதும் நடக்கவில்லை.

அவரது யாத்திரை தனது பாதையில் விட்டுச் சென்ற இறப்புகளும் அழிவுகளும் கூட நடக்கவில்லை. “இன்னும் ஒரு தள்ளு தள்ளு, பாபர் மசூதியை உடைத்து எறி” என்று யாரும் முழக்கமிடவில்லை. நாம் எல்லோரும் கூட்டாக, நாடு முழுவதுமான ஒரு போதை மயக்கத்தில் இருந்திருக்கிறோம். நாம் என்ன வகையான கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தோம்? நம்மை எல்லாம் ஏன் போதைப் பொருள் தடுப்பு அலுவலகம் விசாரணைக்கு அழைக்கவில்லை? ஏன் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள்? சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமமானவர்கள் இல்லையா?

டிசம்பர் 6, 1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது
டிசம்பர் 6, 1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது

மசூதியை இடிப்பதற்கு எந்தத் திட்டமும் இல்லை என்பதைக் காட்டுவதற்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி 2,300 பக்க தீர்ப்பை எழுதியிருக்கிறார். அது ஒரு சாதனைதான் என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். திட்டம் இல்லை என்பதைப் பற்றி 2,300 பக்கங்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் “ஒரு அறையில்” சந்தித்து இடிப்பதற்கான திட்டம் தீட்டியதாக நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் விவரிக்கிறார். அது அறைக்கு வெளியே, நமது தெருக்களில், பொதுக் கூட்டங்களில், நாம் அனைவரும் பங்கேற்கும் வகையில் நமது தொலைக்காட்சி திரைகளில் நடந்ததால் அறைக்குள் நடக்காமல் இருந்திருக்கலாம். அல்லது, போங்கடா, அதுவும் நமது “சரக்கு” கொடுத்த போதையில் தோன்றிய எண்ணங்கள்தானா?

எப்படியோ, பாபர் மசூதி சதித் திட்டம் இப்போதைக்கு இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது. ஆனால், இன்னொரு சதித்திட்டம் “காட்சிக்குள் நுழைந்து”, விறுவிறுப்பாக “டிரெண்ட்” ஆகிக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு டெல்லியின் உழைக்கும் வர்க்க பகுதியில் நடந்த 2020 டெல்லி படுகொலை சதித்திட்டம். அதில் 53 பேர் (40 பேர் முஸ்லீம்கள்) கொல்லப்பட்டனர். 581 பேர் காயமடைந்தனர். மசூதிகளும், மயானங்களும், மதரசாக்களும் குறி வைத்து தாக்கப்பட்டன. பெரும்பாலும் முஸ்லீம்களுக்கு சொந்தமான வீடுகளும், கடைகளும், வணிக நிறுவனங்களும், நெருப்பு குண்டு வீசப்பட்டு பின்னர் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்த சதித் திட்ட வழக்கிற்கான டெல்லி போலீசின் குற்றப் பத்திரிகை ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு செல்கிறது, அதில் ஒரு சில நபர்கள் ஒரு மேசையைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் புகைப்படம் கூட உள்ளது. ஆம்! ஒரு அறையில், ஒரு அலுவலக நிலவறையில் – சதித் திட்டம் தீட்டிக் கொண்டு இருந்திருக்கிறார்கள்!. அவர்களது முகபாவனைகளில் இருந்து அவர்கள் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. அது மட்டுமில்லை, குற்றம் சாட்டும் அம்புகள் அவர்களை குறி வைக்கின்றன, அவர்களை அடையாளம் காட்டி பெயர்களை சொல்கின்றன. தப்பவே முடியாத ஒன்று!

பாபர் மசூதியின் கோபுரங்களின் மீது சுத்தியல்களுடன் நின்றிருந்த ஆட்களை விட இவர்கள் அபாயகரமானவர்கள். அந்த மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தவர்களில் ஒரு சிலர் ஏற்கனவே சிறையில் உள்ளனர். மற்றவர்களும் விரைவில் சிறைக்குள் செல்வார்கள். கைதுகளுக்கு ஒரு சில மாதங்கள்தான் பிடித்தன. விடுவிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கலாம். பாபர் மசூதி தீர்ப்பை வைத்துப் பார்த்தால், 28 ஆண்டுகள் கூட ஆகலாம். யாருக்குத் தெரியும்!

அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ)-ன் கீழ் கிட்டத்தட்ட எல்லாமே குற்றங்கள்தான், தேச விரோத எண்ணங்களை சிந்திப்பது கூட குற்றம்தான். நீங்கள் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்குத்தான். போலீசின் குற்றப்பத்திரிகையை படிக்கப் படிக்க, அதை மையமாக வைத்து போலீஸ் பயன்படுத்திய நடைமுறையைப் பார்க்கப் பார்க்க, பைத்தியங்களின் குழு ஒன்றின் முன்பு சாதாரண மனிதர் ஒருவர் தனது இயல்புநிலையை நிரூபிக்கச் சொல்வது போலத்தான் தோன்றுகிறது.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

டெல்லி சதியானது முஸ்லீம் மாணவர்கள், செயல்பாட்டாளர்கள், காந்தியவாதிகள், “நகர்ப்புற நக்சல்கள்”, “இடதுசாரிகள்” ஆகியோரால் தீட்டப்பட்டது என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். அவர்கள் அனைவரும் தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து போராடி வந்தார்கள். இந்த மூன்றும் சேர்ந்து முஸ்லீம் சமுதாயத்தின் மற்றும் “சட்டரீதியான ஆவணங்கள்” இல்லாத இந்தியாவின் ஏழைகளின் வாழ்வதற்கான அடிப்படையையே பறிக்கின்றன என்று அவர்கள் கருதினார்கள். நானும் அப்படியே கருதுகிறேன். அரசாங்கம் மறுபடியும் வலுக்கட்டாயமாக இந்தத் திட்டத்தை அமல்படுத்த ஆரம்பித்தால் எதிர்ப்புப் போராட்டங்கள் மீண்டும் தொடங்கும், அப்படித் தொடங்க வேண்டும்.

போலீசின் கூற்றுப்படி, டெல்லி சதியின் திட்டம் என்னவென்றால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறை பயணமாக பிப்ரவரி மாதம் இந்தியா வரும் போது ஒரு ரத்தக் களறியான மதக் கலவரத்தைத் தூண்டி விட்டு இந்திய அரசை அவமானப்படுத்துவதுதான். குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்ட முஸ்லீம் அல்லாதவர்கள், போராட்டங்களுக்கு ஒரு “மதச்சார்பின்மை சாயம்” வழங்குவதற்காக சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். போராட்டங்களில் முன் நின்ற ஆயிரக்கணக்கான முஸ்லீம் பெண்கள் “பாலின சாயம்” கொடுப்பதற்காக “கொண்டு வரப்பட்டதாக” குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

போராட்டங்களின் அடையாளங்களாக இருந்த தேசியக் கொடியை அசைத்தல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை பொதுவில் வாசித்தல், பொங்கிக் கிளம்பிய கவிதைகளும் இசையும் அன்பும் இவை அனைத்துமே நேர்மையற்ற நடிப்புகள், கெட்ட எண்ணத்தை மறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை என்று ஒதுக்கித் தள்ளப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தப் போராட்டங்களின் மையக் கரு ஜிகாதி (மற்றும் ஆண்) – மற்றவர்கள் எல்லாம் மேல் பூச்சும் அலங்காரமும்தான்.

எனக்கு நன்கு தெரிந்த இளம் ஆய்வாளர் முனைவர் உமர் காலித் பல ஆண்டுகளாக ஊடகங்களால் துன்புறுத்தப்பட்டவர், துரத்தப்பட்டவர், போலி செய்திகளுக்கு இலக்காக்கப்பட்டவர். போலீசின் குற்றப்பத்திரிகையின்படி அவர் முக்கிய சதியாளர்களில் ஒருவர். அவருக்கு எதிராக போலீஸ் திரட்டிய ஆதாரங்கள் பத்து லட்சம் பக்கங்களுக்கும் மேல் உள்ளது என்கிறது போலீஸ். (இதே அரசுதான், மார்ச் மாதம் உலகத்தின் மிகக் கொடூரமான கொரோனா பொதுமுடக்கத்தை மோடி அறிவித்த பிறகு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள், ஒரு சிலர் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து சென்ற 1 கோடி இடம் பெயர் தொழிலாளர்கள் பற்றிய எந்தத் தரவும் இல்லை என்று அறிவித்தது. எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பேர் பட்டினி கிடந்தார்கள், எத்தனை பேர் நோய்வாய்ப்பட்டார்கள் என்ற தரவுகள் இல்லை என்றது)

உமர் காலிதுக்கு எதிரான பத்து லட்சம் பக்க ஆதாரத்தில் சேர்க்கப்படாதது ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தின் சிசிடிவி பதிவுகள். அவரது மர்மமான திட்டம் தீட்டுதலுக்கும் தூண்டி விடுதலுக்கும் களமாக இருந்ததாகச் சொல்லப்பட்ட இடம், அது. பிப்ரவரி 25 அன்றே, வன்முறை தலை விரித்து ஆடிய போதே, அதைப் பாதுகாக்கும்படி செயல்பாட்டாளர்கள் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வேண்டினார்கள். மர்மமான முறையில் அது அழிக்கப்பட்டிருக்கிறது.

நூற்றுக்கணக்கான பிற முஸ்லீம்களுடன் உமர் காலித் இப்போது சிறையில் உள்ளார். அவர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டு யுஏபிஏன் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர், மேலும் கொலை, கொலைமுயற்சி, கலவரம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழும் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். பத்து லட்சம் பக்கங்கள் கொண்ட “ஆதாரங்களில்” முழுகி முத்தெடுப்பதற்கு நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் எத்தனை வாழ்நாள் காலம் பிடிக்கும்?

டெல்லி கலவரத்தின் போது தாக்கப்பட்ட சில மசூதிகள்
டெல்லி கலவரத்தின் போது தாக்கப்பட்ட சில மசூதிகள்

பாபர் மசூதி தன்னைத் தானே இடிந்து போனது போலத் தோற்றமளிப்பது போலவே, போலீசின் தரப்பிலிருந்து பார்க்கும் போது 2020 டெல்லி படுகொலைகளில் முஸ்லீம்கள் தம்மைத் தாமே கொலை செய்யவும், தமது சொந்த மசூதிகளை எரிக்கவும், தமது சொந்த வீடுகளை இடிக்கவும், தமது சொந்தக் குழந்தைகளை அநாதைகளாக்கவும் சதி செய்து கொண்டனர். இவை எல்லாவற்றையும் எதற்காகச் செய்தார்கள் என்றால் இந்தியாவில் அவர்கள் எவ்வளவு மோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று டொனால்ட் டிரம்புக்கு காண்பிப்பதற்காம்!

டெல்லியில் தன்னெழுச்சியாக முளைத்த போராட்டக் களங்களை ஆதரிக்கவும், ஒருங்கிணைக்கவும் முயற்சித்த மாணவர்கள், செயல்பாட்டாளர்கள், செயல்பாட்டாளர் ஆதரவு குழுக்கள் ஆகியோருக்கு இடையேயான வாட்ஸ் ஆப் உரையாடல்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களை தமது வழக்கை வலுப்படுத்துவதற்கு போலீசார் குற்றப் பத்திரிகையுடன் இணைத்திருக்கின்றனர். கட்டார் ஹிந்து ஏக்தா, அல்லது கடும் ஹிந்து ஒற்றுமை என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவில் வெளிப்படையாக முஸ்லீம்களை கொன்றது பற்றி பீற்றிக் கொள்ளவும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை வெளிப்படையாக பாராட்டவும் செய்வது போன்ற உரையாடல்களிலிருந்து இந்த உரையாடல்கள் அவ்வளவு வேறுபட்டவை. அது இன்னொரு தனிப்பட்ட குற்றப்பத்திரிகையின் பகுதியாக உள்ளது.

மாணவர்-செயல்பாட்டாளர் உரையாடல்கள் பெரும்பாலும் உணர்வும், குறிக்கோளும் நிரம்பியதாக இருக்கின்றன. நியாயத்தால் தூண்டப்பட்ட கோப உணர்வில் உந்தப்பட்டு செயல்படும் இளைஞர்களின் உரையாடல்கள் அவை. அவற்றை வாசிப்பது நமக்கு சக்தி அளிப்பதாக உள்ளது. கொரோனாவுக்கு முந்தைய நாட்களில் ஒரு புதிய தலைமுறை தனது சொந்தக் காலில் எழுந்து நிற்பதைப் பார்க்கும் போது கிடைத்த உற்சாகத்தை தருகிறது. அதிக அனுபவம் கொண்ட செயல்பாட்டாளர்கள் மீண்டும் மீண்டும் தலையிட்டு அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். செயல்பாட்டாளர்கள் வழக்கமாக செய்வது போல ஒருவரோடு ஒருவர் வாதிட்டுக் கொள்கின்றனர், சண்டை போட்டுக் கொள்கின்றனர். இது ஜனநாயக செயல்பாட்டின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்.

அந்த உரையாடல்களில் முக்கியமான பிரச்சனையாக இருப்பது, ஷாஹீன்பாகில் கூடி போராடி வந்த ஆயிரக்கணக்கான பெண்களின் வெற்றிகரமான போராட்டத்தைப் போல பிற இடங்களிலும் நடத்துவதா என்பதைப் பற்றியது என்பதில் ஆச்சரியமில்லை. ஷாஹீன்பாகில் அந்தப் பெண்கள் பல வாரங்களாக, குளிர்காலத்தின் எலும்பை உறையச் செய்யும் குளிரையும் பொருட்படுத்தாது, பிரதான சாலையில் அமர்ந்து கொண்டு, போக்குவரத்தை மறித்து, குழப்பங்களை உருவாக்கினார்கள், ஆனால், அதன் மூலம் தம் மீதும், தமது இலக்கின் மீதும் பெரும் அளவிலான கவனத்தைப் பெற்றார்கள்.

பில்கிஸ் பானு, ஷாஹீன்பாகின் தாதி (பாட்டியம்மா), டைம் பத்திரிகையின் 2020-ன் மிகச் செல்வாக்கான மனிதர்களின் பட்டியலில் இடம் பெற்றார். (இவரை இன்னொரு பில்கிஸ் பானுவோடு குழப்பிக் கொள்ள வேண்டாம். அந்த பில்கிஸ் பானு அப்போது 19 வயதானவர். 2002-ம் ஆண்டு நரேந்திர மோடி மாநில முதலமைச்சராக இருந்த போது குஜராத்தில் நடத்தப்பட்ட முஸ்லீம் விரோத கலவரங்களில் தப்பிப் பிழைத்தவர். தனது 3 வயது மகள் உட்பட குடும்பத்தின் 14 உறுப்பினர்கள் கொலைவெறியோடு வந்த ஹிந்து ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட ஒரு தாக்குதலை நேரில் பார்த்தவர். அவர் கர்ப்பமாயிருந்தார், கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். மட்டும்தான்!)

டெல்லி ஹாஹீன் பாகில் பெண் போராட்டக்காரர் ஒருவர்
டெல்லி ஹாஹீன் பாகில் பெண் போராட்டக்காரர் ஒருவர்

டெல்லி செயல்பாட்டாளர்களின் வாட்ஸ் ஆப் உரையாடல்களில் வடகிழக்கு டெல்லியில் “சக்கா ஜாம்” (சாலை மறியல்) செய்வதா வேண்டாமா என்பதில் அவர்கள் எதிரெதிராக பிரிந்திருந்தனர். சாலை மறியலுக்கு திட்டமிடுவது என்பது புதிதான ஒன்று இல்லைதான். விவசாயிகள் மீண்டும் மீண்டும் அதைச் செய்திருக்கின்றனர். அவர்கள் இப்போது சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கி சிறு விவசாயிகளை வாழ்வையே நெருக்கடிக்குள் தள்ளி விடுபவையாக உள்ள விவசாய மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாபிலும் ஹரியானாவிலும் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

டெல்லி எதிர்ப்புப் போராட்டங்களில் ஒரு சில செயல்பாட்டாளர்கள் சாலைகளை மறிப்பது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று வாதிடுகின்றனர். அந்தப் பகுதியில் ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் டெல்லி தேர்தலில் கேவலமாக தோற்றுப் போன அவமானத்தில் பாஜக தலைவர்கள் வெளிப்படையாக மிரட்டல்களை விடுத்து வரும் சூழலில், சாலைகளை மறிப்பது கோபத்தைத் தூண்டி விட்டு அதன் விளைவான வன்முறையை தமது சமுதாயத்தின் மீது திருப்பி விடும் என்று சில பகுதி செயல்பாட்டாளர்கள் பயப்படுகின்றனர். விவசாயிகள் அல்லது குஜ்ஜார்கள் அல்லது தலித்துகள் கூட சாலை மறியல் செய்வது வேறு, முஸ்லீம்கள் அதைச் செய்வது முற்றிலும் வேறானது. இதுதான் இந்தியாவின் இன்றைய யதார்த்தம்.

சாலைகளை மறித்து, கவனத்தைத் திருப்பும்படி நகரத்தை கட்டாயப்படுத்தா விட்டால், போராடுபவர்கள் வெறுமனே புறக்கணித்து ஒதுக்கப்பட்டு விடுவார்கள் என்று மறுதரப்பினர் வாதிட்டனர். இறுதியில் சில போராட்ட இடங்களில் சாலைகள் மறிக்கப்பட்டன. ஊகித்தது போலவே, கொலைகார ஆயுதங்களுடனும் கொலைவெறி முழக்கங்களுடனும் ஆயுதபாணியாக்கப்பட்ட இந்து குண்டர் படையினர் எதிர்பார்த்திருந்த வாய்ப்பை அது அவர்களுக்கு வழங்கியது.

அடுத்த சில நாட்களில் நம்மைத் திணற வைக்கும் அளவிலான கொடூரத்தை அவர்கள் கட்டவிழ்த்து விட்டார்கள். அவர்கள் போலீசால் வெளிப்படையாக ஆதரிக்கப்படவும் பக்கபலம் வழங்கப்படவும் செய்கிறார்கள் என்பதை வீடியோக்கள் காட்டின. முஸ்லீம்கள் திருப்பித் தாக்கினார்கள். இரு தரப்பிலும் உயிர்களும் சொத்துக்களும் இழக்கப்பட்டன. ஆனால், முழுக்க முழுக்க சமனற்ற முறையில். எந்த ஒரு சமப்படுத்தலையும் இங்கு செய்ய முடியாது. வன்முறை பெருகி பரவுவதற்கு அனுமதிக்கப்பட்டது. மோசமாக காயமடைந்த முஸ்லீம் இளைஞர்கள் சாலையில் விழுந்து கிடக்க அவர்களைச் சூழ்ந்து நின்ற போலீஸ்காரர்கள் தேசிய கீதத்தை பாடும்படி கட்டாயப்படுத்திய காட்சியை நாம் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரான ஃபைசான் விரைவிலேயே இறந்து போனார்.

நூற்றுக்கணக்கான உதவி கேட்கும் அழைப்புகளை போலீஸ் புறக்கணித்தது. அழிவுச் செயலும் படுகொலைகளும் தணிந்த பிறகு, ஒரு வழியாக நூற்றுக்கணக்கான புகார்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், தாக்கியவர்களின் பெயர், அடையாளத்தை நீக்கும்படியும், துப்பாக்கியும் வாளும் ஏந்திய கும்பல்களின் மதவாத முழக்கங்களையும் நீக்கும்படி போலீஸ் கட்டாயப்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். குறிப்பான புகார்கள், குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில், முடிவு காண முடியாத வகையிலான பொதுவானவையாக மாற்றப்பட்டன (வெறுப்பு- குற்றங்களில் இருந்து வெறுப்பு வெட்டி நீக்கப்பட்டது)

முஸ்லீம் வழிபாட்டுத் தலம் ஒன்றின் மீது நெருப்பு குண்டு வீசும் ஒரு சிஏஏ ஆதரவாளர்
முஸ்லீம் வழிபாட்டுத் தலம் ஒன்றின் மீது நெருப்பு குண்டு வீசும் ஒரு சிஏஏ ஆதரவாளர்

வாட்ஸ் ஆப் உரையாடல்களில் வடகிழக்கு டெல்லியில் வாழ்ந்து வரும் ஒரு குறிப்பிட்ட முஸ்லீம் செயல்பாட்டாளர் சாலை மறியலின் அபாயம் பற்றி திரும்பத் திரும்ப மற்றவர்களை எச்சரித்த பிறகு,  இறுதியாக ஒரு கடுப்பான, கண்டிக்கும் செய்தியை வெளியிட்டு விட்டு குழுவில் வெளியேறுகிறார். இந்தச் செய்தியைத்தான் போலீசும், ஊடகங்களும் பிடித்துக் கொண்டன. அதைப் பயன்படுத்தி அவர்களது மோசமான வலையைப் பின்னி ஒட்டுமொத்தக் குழுவையும் வன்முறையான கொலை வெறி கொண்ட சதியாளர்களாக சித்தரித்தனர். இந்தக் குழுவில் இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், திரைப்படக் கலைஞர்கள் உள்ளனர்.

ஆனால் குற்றமின்மை நிரூபிக்கப்பட பல ஆண்டுகள் பிடிக்கக் கூடும். அதுவரையில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களது வாழ்க்கை முழுவதுமாக அழிக்கப்பட்டு விடும். உண்மையான கொலைகாரர்களும் தூண்டி விட்டவர்களும் சுதந்திரமாக வாழ்ந்து தேர்தல்களை வெல்வார்கள். நிகழ்முறையே ஒரு தண்டனையாக வழங்கப்படுகிறது.

இதற்கிடையே பல சுயேச்சையான ஊடக அறிக்கைகள், குடிமக்களின் உண்மை அறியும் குழுக்கள், மனித உரிமை அமைப்புகள் வடகிழக்கு டெல்லியில் நிகழ்ந்த வன்முறைக்கு போலீஸ் உடந்தையாக இருந்தது என்று கூறுகின்றன. அம்னஸ்டி இன்டர்நேஷனல், நாம் எல்லோரும் பார்த்த மனதைத் தொந்தரவுபடுத்தும் வன்முறை நிறைந்த வீடியோக்களில் சிலவற்றை ஆய்வக பரிசோதனை செய்த பிறகு போராட்டக்காரர்களை அடித்து சித்திரவதை செய்வது வன்முறை கும்பலுடன் சேர்ந்து கொண்டது ஆகியவற்றில், டெல்லி போலீஸ் குற்றவாளிகள் என்று கூறியது. அதன் பிறகு அம்னஸ்டி இன்டர்நேஷனல் மீது நிதி முறைகேடுகள் குற்றம் சாட்டப்பட்டு, அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அது தனது இந்திய அலுவலகங்களை இழுத்து மூடி விட்டு இந்தியாவில் அதன் 150 ஊழியர்களை விடுவிக்க நேர்ந்தது.

நிலைமை படுமோசமாக ஆகத் தொடங்கும் போது முதலில் வெளியேறுபவர்கள் அல்லது வெளியேற்றப்படுபவர்கள் சர்வதேச பார்வையாளர்கள்தான். எந்த நாடுகளில் இதே முறையை நாம் முன்பு பார்த்திருக்கிறோம்? யோசியுங்கள், அல்லது கூகுளில் தேடுங்கள்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஒரு நிரந்தர இடத்தை இந்தியா வேண்டுகிறது, உலக விவகாரங்களில் தனது சொல்லுக்கும் மதிப்பைக் கோருகிறது. ஆனால், சித்திரவதைக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்தை நிறைவேற்ற மறுக்கும் ஐந்தே நாடுகளில் ஒன்றாக இருக்கிறது, இந்தியா. ஒற்றைக் கட்சி ஜனநாயகம் (சுயமுரண்) ஆக எந்த பொறுப்பும் இல்லாத அரசாக இருக்க விரும்புகிறது, இந்திய அரசு.

போலீஸ் உற்பத்தி செய்த அபத்தமான 2020 டெல்லி சதித்திட்டம், அதே அளவுக்கு அபத்தமான 2018 பீமா கொரேகான் சதித்திட்டம் (இந்த அபத்தம் அச்சுறுத்தலுக்கும் அவமானப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படுவதன் ஒரு பகுதியாகும்) ஆகியவற்றின் உண்மையான நோக்கம் செயல்பாட்டாளர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள், தொழிற்சங்கவாதிகள், மற்றும் ஒத்துழைக்காத என்ஜிஓக்களை சிறைப்படுத்தி முடக்குவது ஆகும். கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் கொடூரங்களை அழிப்பதற்கு மட்டும் இன்றி இனிமேல் வரப் போவதற்காக மேடையை தயாரிப்பற்குமானது அது.

10 லட்சம் பக்க தடயங்கள் திரட்டுதலுக்கும், 2,000 பக்க நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், ஜனநாயகத்தின் உயிரற்ற உடல் இன்னும் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான நிரூபணம் அவை. கொலை செய்யப்பட்ட உத்தர பிரதேசம் ஹத்ராஸ் பெண்ணைப் போல அது இன்னும் எரியூட்டப்படவில்லை. உயிரற்ற உடலாகக் கூட அது தன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிகழ்வுகளின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. அது உதறித் தள்ளப்பட்டு நிகழ்வுகள் துரிதப்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. நம்மை ஆள்பவர்கள் மத்தியில் இருக்கும் பேசப்படாத முழக்கம் “இன்னொரு தள்ளு தள்ளு, ஜனநாயகத்தை இடித்து விடு, புதைத்து விடு” என்பதாகத்தான் இருக்கும்.

அந்த நாள் வரும் போது ஒரு ஆண்டில் 1700 கொட்டடி கொலைகள் என்பது நமது சமீபத்திய மகத்தான கடந்த காலத்தின் பசுமையான நினைவாக இருக்கும்.

அந்தச் சிறிய உண்மை நம்மை தடுத்து நிறுத்தி விட வேண்டாம். நமது கை கால்களை ஒவ்வொன்றாக பிய்த்து எறிந்து கொண்டே நம்மை வறுமைக்கும் போருக்கும் இட்டுச் செல்லும் நபர்களுக்கு தொடர்ந்து வாக்களித்துக் கொண்டே இருப்போம்.

குறைந்தபட்சம் அவர்கள் நமக்காக ஒரு மாபெரும் கோயிலை கட்டுகிறார்கள். அது ஒன்றுமில்லாதது இல்லைதானே!

கட்டுரை & படங்கள் – நன்றி : scroll.in
மொழியாக்கம் செய்யப்பட்டது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்