Aran Sei

விவசாய போராட்டங்களை புறக்கணிக்கும் தொலைக்காட்சிகள்

விவசாய சட்ட மசோதாவிற்கு எதிராக நாடு முழுதும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி வகித்த அகலி டால் கட்சி, பாஜக-வின் மக்கள் விரோத கொள்கைகளால் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. ஆனால் பெரும்பாலான தேசிய தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த செய்திகளை புறக்கணித்து விட்டு, பாலிவுட்டில் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வரும் போதை பொருள் செய்திகளிலேயே கவனம் செலுத்தி வருகின்றன.

பாலிவுட்டின் நட்சத்திரங்களான தீபிகா படுகோன், சாரதா கப்பூர் மற்றும் சாரா அலிகான் மீது போதை பொருள் தடுப்பு ஆணையம் தொடுத்திருக்கும் வழக்கை மட்டும் தான் பெரும்பாலான தேசிய தொலைக்காட்சி ஊடகங்கள் கையில் எடுத்துள்ளன. மேலும் ஐநா சபையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை பற்றிய செய்திகளும் ஒளிப்பரப்பப்படுகிறது.

என்டிடிவி 24X7 தொலைக்காட்சி மட்டுமே விவசாய போராட்டத்தை பற்றிய செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

என்டிடிவி 24X7

பிக் ஃபைட்’ என்ற அதன் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ‘கார்ப்பரேட்களின் வசதிக்காக மத்திய அரசு இன்னொரு பேரிடியை விவசாயிகள் மீது திணிக்கப்பார்க்கிறதா?’ என்ற கேள்வியை எழுப்பியது.

‘விவசாய மசோதா : விவசாயிகளுக்கு சாதகமா பாதகமா?’, ‘மத்தியரசா எதிர்கட்சியா? : விவசாயிகளை வெல்லப்போவது யார்’ போன்ற தலைப்புகளில் விவசாய மசோதாவை பற்றிய விவாதங்களை நடத்தி வருகிறது.

இந்தியா டூடே டிவி

ராகுல் கன்வால் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ‘தீபிகா, சாரா, சாரதா மீது புது சம்மன்கள் இல்லை’, ‘என்சிபி இரண்டு வழக்குகள் மீது விசாரனை நடத்தியுள்ளது’ என்ற தலைப்புகளில் விவாதம் நடத்தியது.

மேலும் ’சுஷாந்த் போதை பொருள் எடுத்துக்கொண்டதாக சாரா கூறுகிறார்-அதன் ஆதாரம்’, ‘தீபிகா போதை பொருள் உட்கொண்டதை ஒப்புக்கொள்ளவில்லை – அதன் ஆதாரம்’,’ஐந்து மணி நேரம் விசாரிக்கப்பட்ட தீபிகா’ போன்ற செய்தி தலைப்புகளை திரையில் ஓடவிட்டப்படி இருந்தது.

அதோடு ஐநா சபையில் இந்தியா அதன் நிரந்தர உறுப்பினர் ஆவது குறித்த பிரதமர் மோடியின் உரை பற்றியும், கோவிட் நோய் தொற்று கட்டுப்பாட்டில் ஐநா-வின் பங்கு குறித்து கேள்வி எழுப்பும் தலைப்புகளை ஓடவிட்டபடி இருந்தது.

டைம்ஸ் நவ்

டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சியின் ராகுல் சிவசங்கர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ‘சீனா – பாகிஸ்தான் – கணிக்க முடியாத நேரங்கள்’ என்ற தலைப்பில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கரின் புதிய புத்தகமான ’தி இந்தியன் வே’ குறித்த நேர்காணல் நடந்தது.

இந்தியா தன் நிலத்தை வென்றுவிட்டதா?’, ‘ஜெய் சங்கரின் தேடலுக்கான பதிலை கேளுங்கள்’ போன்ற தலைப்புகளில் இந்தியாவின் பாக், சீன பிரச்சனைகளை பற்றி அந்த நிகழ்ச்சி சென்றது.

ரிபப்ளிக் டிவி

போதைப் பொருள் விசாரனைகளை மையமாக வைத்தே அதன் நிகழ்ச்சிகள் நடந்தன. பாலிவுட்டின் மூன்று முன்னணி நடிகைகள் பற்றியே அந்நிகழ்ச்சிகளின் கேள்விகளும் விவாதங்களும் நடந்தன.

ரிபப்ளிக் பாரத்

அர்னாப் கோஸ்வாமியின் இந்தி தொலைக்காட்சியில் சுஷாந்த் சிங்கின் தற்கொலை குறித்தும், அதையொட்டி எழுந்த பாலிவுட் பிரபலங்களின் போதைப்பொருள் சர்ச்சைகள் குறித்துமே ப்ரைம் டைம் நிகழ்ச்சிகள் நடந்தன.

பெரும்பாலான இந்தி தொலைக்காட்சிகளும் பாலிவுட் நடிகைகள் பற்றியே செய்தி வெளியிட்டு வந்தன. ‘போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் யார்?’, ‘சுஷாந்த்தை கொன்றது போதை பொருள் கடத்தல் கும்பல்தானா?’ என்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகளும் விவாதங்களும் நடந்தன.

என்டிடிவி இந்தியா

இந்த தொலைக்காட்சியும் முழுக்க முழுக்க பாலிவுட் போதைப் பொருள் வழக்கை பற்றியே விவாதித்துக் கொண்டிருந்தது. அதன் தொகுப்பாளர் சங்கெத் உபத்யாய் ’போதை பொருட்கள் மீது எவ்வளவு நம்பிக்கை’ என்ற தலைப்பில், போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் நடிகைகளை எவ்வாறு விசாரனை செய்கின்றன என்று நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார்.

thewire.in தளத்தில் வெளிவந்த கட்டுரையின் சுருக்க வடிவம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்