Aran Sei

மண்ணையும் மக்களையும் கற்க ஆற்றுப்படுத்திய பேராசான் தொ.ப – மாணவர் அஞ்சலி

1999ஆம் வருடம் – மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு மேற்படிப்பிற்கு வீட்டில் அனுமதி பெற்றிருந்தேன். விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு, முதலில் எழுத்துத் தேர்வு அடுத்து நேர்காணல் என்பதாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வழமையான நடைமுறையிலேயே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டேன்.

பதற்றமான மனநிலை தான். “தெரிஞ்சதை சொல்லுங்கம்மா.. எல்லாம் தெரிஞ்சவங்கன்னு, யார் இருக்காங்க? கத்துக்கத்தான வந்திருக்கோம்?” என்று வாஞ்சையுடன் ஆற்றுப்படுத்திய குரல், பேரா. பரமசிவன் அவர்களுடையது. உண்மையில் அடுத்த மூன்றரை ஆண்டுகள் மட்டுமல்ல, வாழ்வின் ஒவ்வொரு இக்கட்டான தருணங்களிலும் ஆற்றுப்படுத்தியது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கற்ற கல்வியே.

அங்கு இருக்கும் துறையானது, ‘தமிழ் இலக்கியத் துறை’ என அழைக்கப்படுவதில்லை. மாறாக, “தமிழியல் துறை” என்றே அழைக்கப்படுகின்றது.  இரண்டிற்கும் என்ன வேறுபாடு? என்பதுதான் பேராசிரியர் தொ.ப  அவர்கள் நடத்திய முதல் வகுப்பு.

“இங்கு நாம் இலக்கிய, இலக்கணங்களை மட்டும் கற்றுக் கொள்ளப் போவதில்லை. அதுவும் உண்டு. அதனோடு தொடர்புடைய மற்ற விடயங்களையும், உதாரணத்திற்கு மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல், அகராதியியல் போன்றவையும் உங்கள் பாடத்திட்டத்தில் இருக்கிறது. ஒரு நூலை, தனியாக – எழுதப்பட்ட அச்சுப்பிரதி என்று மட்டும் புரிந்து கொள்வீர்கள் என்றால், அதை நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. வெறும் எழுத்து மட்டும் இல்ல, பொருண்மையும் முக்கியம். அப்போது தான் அதை முழுமையாக – அதன் ஒட்டு மொத்த சாரத்துடன் உங்களால் புரிந்து கொள்ள முடியும்” என்று தொடங்கியது அந்த வகுப்பு. முதல் வகுப்பு முடிந்து வெளிவரும் போது இருந்த மன உணர்வு, விவரித்தலுக்கு அப்பாற்பட்டது.

ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் நுணுகிப் பார்க்கும் ஆய்வாளர் அவர். மாணவர்களைப் பேசவிட்டுக் கேட்பார். “நீங்க எந்த ஊர் மா? உங்க ஊர்ல … (குறிப்பாக எதையாவது சொல்லி) இருக்குதே..? போய்ப் பாத்திருக்கீங்களா?” என்று தான் பெரும்பாலும் தன் உரையாடலைத் தொடங்குவார்.

“வெறும் புத்தக அறிவு, அறிவாகுமா? போங்க.. களத்துக்கு போங்க.. மக்களோட பேசுங்க..
அவங்கள illiterateன்னு சொல்றாங்க.. ஒரு பூச்சி கடிச்சா.. ஒரு முள்ளு குத்தினா.. என்ன செய்யணும்ன்ற அறிவு அவங்களுக்கு இருக்கு. நமக்கு தெரியுதா? எந்தக் காற்று, எங்கேயிருந்து காற்று வீசினால் மழை வரும்ன்னு அவங்களுக்குத் தெரியுதா. நமக்குத் தெரியுதா? உங்க மேதாவித்தனம் அவங்கிட்ட இல்ல. அவங்க கால் மண்ணில் இருக்கு. புழுதி படிஞ்சு நிக்கற அந்தக் கால்களுக்கு, கல் எது? கரம்பை எது? ன்ற அறிவு இருக்கு.
அப்பறம் எப்படி illiterate ன்னு சொல்வீங்க? வேணும்னா unletteredன்னு சொல்லிக்கோங்க. உங்க கிட்ட இருக்கறது – அவங்க கிட்ட இல்லாத எழுத்தறிவு மட்டும் தானே ஒழிய, புதுசா அறிவெல்லாம் இல்ல” – ஒரு பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர் இப்படிப் பேசுவார் என்று நம்மால் கற்பனை கூட செய்ய இயலாதே? ஆனால், பேராசிரியர் அப்படித்தான் பேசுவார்.

மிகச் சிறந்த நினைவாற்றல் கொண்டவர். சங்கப் பாடல்கள் தொடக்கம், பாரதி, பாரதிதாசன் வரை மனப்பாடமாக பாடல்கள் அருவி போல் கொட்டும். ஏழு ஆண்டுகள் முன்பு ஒருமுறை சந்திக்க வாய்ந்த போது, தன் நினைவாற்றல் குறைந்தது வருவதாகக் குறிப்பிட்டார். “எனக்குக் கொஞ்சம் அம்னீஷியா மாதிரி இருக்கு.. மறந்து போகுது” என்றபோது அவரது பதைபதைப்பை உணர முடிந்தது.

கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர். மேற்கொண்ட கொள்கையைத், தன் வீட்டில் திணிக்காதவர். ஒவ்வொரு பங்குனி உத்திரத்திற்கும் கோயில் கோயிலாக ஏறி இறங்குவார். பங்குனி உத்திரம் – நெல்லை மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. தோளில் கேமராவும் கையில் குறிப்பேடுமாக அவர் நடப்பது, காணத் தெவிட்டாத ஒன்று.

“புனிதம் ன்னு இங்கு எதுவும் இல்லை” – என புனிதத்தன்மையை உடைத்தவர் அவர். மற்றவர்களை குறை கூறுவது நமக்கு எளிது. சுயவிமர்சனம் கடினமான ஒன்று. அதனாலேயே நாம் அதைச் செய்வதில்லை.

“நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். மதம் எனக்கு பொருட்டு இல்ல. ஆனா… சாதியை என்னால் கடக்க முடியலையே?
இதுதான் மதத்துக்கும் சாதிக்குமான வித்தியாசம். இங்க மதம் இல்லாமல் இருந்திடலாம். சாதி..? – நம்மை பீடிக்கும் பெருநோய் அது. எது உங்க சாதியோட எல்லை? நீங்க எங்க வரை மண உறவுகள் வைக்கறீங்களோ அதுவரை உங்க சாதியோட எல்லை. ஆக, சாதியை அழிக்க முடியாது.. எல்லையைக் கடந்து மண உறவுகள் ஏற்படும் போது அதை கரைக்க முடியும். கரைந்து கரைந்து சாதி, ஒண்ணும் இல்லாமல் போகும்” – இது அவரது அணுகுமுறை.

அடிக்கடி வகுப்பில் சொல்லும் வாசகம் – “தட்டுங்கள் திறக்கப்படும்; திறக்காத கதவுகள் உடைக்கப்படும்” என்பது‌. கம்யூனிச இயக்கங்களுடன் நட்பும் முரணுமான உறவு பூண்டவர். “ஏங்க.. பொதுவுடைமை நாட்டு அணுஉலை வெடிக்காதா? அந்த அணுக்கதிர் வீச்சு தொழிலாளர்களைப் பாதிக்காதா?” – கேலியும் வருத்தமுமாக கூடங்குளம் அணுஉலை பற்றி அவர் பேசுகையில் சொன்னது இது.

பொதுவாக, பெண்களுக்கு கல்லூரிகளுக்கு செல்ல அனுமதி கிடைப்பதே பெரிய சுதந்திரம் தான். அதைத்தாண்டி, வேறு வேறு ஊர்களில் நடக்கும் கருத்தரங்குகளுக்கு எங்களை அழைத்துச் செல்வார். “கேட்டால், டிபார்ட்மெண்ட்ல்ல கூட்டிட்டு போறாங்கன்னு சொல்லுங்க.. இப்ப படிக்காம – ஊர் சுத்தாம எப்ப போகறது?” ன்னு வீட்டில் பேச தைரியம் கொடுப்பார். அதேநேரம் எங்கள் பாதுகாப்பில் மிகவும் அக்கறை எடுப்பார். “என் மகளுக்கும் உங்க வயசு தானம்மா?” என்பதில் தகப்பனின் கரிசனம் வெளிப்படும்.

மொழிஆளுமை வளர அவர் கொடுத்த பயிற்சிகள்: – ஆகும்.. வேண்டும்.. இப்படி வழக்கமா முடியற விகுதிகள் இல்லாமல் ஒரு இரண்டு பக்கங்கள் எழுதிட்டு வாங்க..- அகராதியில் இல்லாத, வீட்டில் புழங்கும் வார்த்தைகள்… ஒரு ஐம்பது வார்த்தைகள் எழுதிட்டு வாங்க..

அன்றே தேர்வுக்கட்டணம் கட்டவேண்டும் என்ற கடைசி நேரத்தில் அறிவுறுத்தல் வந்த போது, மாணவர்களுக்காக மேலிடத்தில் சண்டை போட்டார். “பிள்ளைகள் வந்து கேப்பாங்கன்னு எடுத்து வைச்சிருக்கேன்” என தன் சட்டைப் பையைத் தட்டியவாறு அவர் சொன்னது, இன்னமும் கண்களில்.

பாடப்புத்தகம், பாடத்திட்டம் எல்லாவற்றையும் தாண்டி மண்ணையும் மக்களையும் கற்க ஆற்றுப்படுத்தியவர்.இன்னும் எத்தனை எத்தனையோ நினைவுகள் மேலெழும்பி வருகின்றன.

நேற்றிரவு தோழி அதிர்ந்து போய் பேசும் போது, “குரூப்ல்ல சார் போட்டோ வந்திதுடி.. இந்த மனுசன் இப்ப என்னத்த புதுசா எழுதியிருக்காரு? ன்னு நெனச்சு தான் படிக்க ஆரம்பிச்சேன்.. இரங்கல் போட்டிருக்காங்க? அவர் இல்லன்னா.. நாம ஏது? வெளியே போய் தொ.ப. மாணவர்ன்னு சொன்னா, எவ்வளவு மரியாதையா நம்மள பாக்குறாங்க? ச்சே.. கொடுமை” என்று முடித்தாள்.

இதைவிட வேறென்ன சொல்ல அவரைப் பற்றி?
போய் வாருங்கள் ஐயா

கட்டுரையாளர்

ப. முத்துகாந்திமதி ( தொ.பரமசிவம் அவர்களின் மாணவர்)

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்