Aran Sei

தடைகளை தகர்த்து இந்திய அணியில் இடம் பிடித்த சின்னப்பம்பட்டி நடராஜன்

டந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். துல்லியமான யார்க்கர் பந்துகளால் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். 

தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் பாராட்டுகளை அவர் பெற்றுள்ளார். இதன் காரணமாக  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் வலைப் பயிற்சியின் போது இந்திய அணி வீரர்களுக்கு, நடராஜன் பந்துவீசும் வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த விடியோவில், “ஐபிஎல் தொடரில் நடராஜன் வெற்றிகரமாக பந்துவீசியதை நாம் பார்த்தோம். இந்திய அணிக்கு முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அவர் இந்திய அணிக்கு முதன்முறையாக பந்துவீசுகிறார். கனவு நனவான தருணம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பார்ப்பனர் அல்லாத தமிழக வீரர் ஒருவர் இந்திய அணியில் இடம்பிடித்து ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ஏக்கத்திற்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறார் நடராஜன்.

யார் இந்த நடராஜன்?

தமிழகத்தின் கடைக்கோடி கிராமமான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியின் தெருக்களில் கையில் டென்னிஸ் பந்துடன் சுற்றித்திரிந்தவர் தான் நாம் கொண்டாடும் 29 வயது நிரம்பிய சாதித்த, சாதிக்கத் துடிக்கும் இளைஞன் நடராஜன்.

சாலையோரத்தில் சிக்கன் கடை வைத்திருக்கும் தாய், நெசவு நெய்யும் கூலித்தொழிலாளியான தந்தை, மூன்று தங்கை, ஒரு தம்பி என ஏழ்மை தாண்டவமாடிய குடும்பத்தின் தலைமகன் தான் நடராஜன். அரசு பள்ளியில் இலவசமாக படிக்க வாய்ப்பு கிடைத்தாலும் புத்தகம், நோட்டு கூட வாங்க கையில் காசு இல்லாமல் எதிர்கால வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் நமது கதாநாயகன்.

நடராஜனின் காதல்

ஐந்து வயது முதலே கிரிக்கெட்டை காதலித்தாலும், கிரிக்கெட் என்னவோ நடராஜனின் காதலை காதுகொடுத்து கேட்கவே இருபது வருடம் எடுத்துக்கொண்டது. ஆம் 15 ஆண்டு காத்திருப்பிற்கு பிறகு தான் நடராஜன் நேசித்த கிரிக்கெட் பந்து (கல்லுப்பந்து) அவருக்கு தரிசனமே வழங்கியிருக்கிறது. 

ஐபிஎல் கிரிக்கெட் கமென்டரியில் ஆர்ஜே பாலாஜியின் வக்கிரம் – பா.பிரேம்

என்னதான் காதலை ஏற்றுக்கொண்டாலும் தன்னை முழுவதும் அர்ப்பணிக்க கிரிக்கெட் விளையாட்டு மேலும் 10 வருடம் நடராஜனை காத்திருக்கவைத்திருக்கிறது. நடராஜனை இத்தனை ஆண்டுகாலம் ஏன் காக்க வைக்க வேண்டும், கிரிக்கெட் விளையாட்டு என்ன அவ்வளவு கல்நெஞ்ச காரியா என நினைத்துவிட வேண்டாம். வழக்கமாக காதலன் சந்திக்கும் பெற்றோர்களின் எதிர்ப்பை விட நடராஜன் சந்தித்த எதிர்ப்பு நம் எதிரிக்கு கூட கிடைத்துவிடக்கூடாது என நினைக்கும் எதிர்ப்பு.

ஏன் நாம் நடராஜனை கொண்டாட வேண்டும்

நடராஜனை கொண்டாடும் முன் தமிழக கிரிக்கெட் விளையாட்டின் வீரர்கள் தேர்வில் உள்ள அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் மற்ற விளையாட்டுகளை போல் அல்ல கிரிக்கெட். என்னதான் தெருக்களில் நம் தமிழ் சமூகம் பேட்டும், பந்துமாக சுற்றித்திருந்தாலும் அந்த விளையாட்டை விளையாட ‘உனக்குலாம் தகுதி வேணும்டா’ என்பார்கள் ஒருசிலர். 

சரித்திரத்தை புரட்டிப்பார்த்தால் தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 30-ஐ தாண்டும், இதில் பார்ப்பனர் அல்லாத வீரர் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு, இல்லை என்று விடை சொல்கிறது வரலாறு. இந்நிலைக்கு காரணம் நம் சமூகத்திற்கு திறமை இல்லை என்பது அர்த்தமல்ல. 

“ஆறு பாலும் யாக்கரா?” – ஏற்காடு எக்ஸ்பிரஸ் தங்கராசன் நடராஜன்

பார்ப்பனர் அல்லாத ஒருவர் கோயில் கருவரை சென்று மந்திரம் ஓத முடியுமா? என்பது தான் இதற்கான பதில். சம காலத்தில் கோயிலுக்குள் நுழையவே  முடியாத தமிழ் சமூகத்திலிருந்து கருவரை சென்று மந்திரத்தை என்னாலும் ஓத முடியும் என நிரூபித்துக்காட்டியிருக்கிறார் நடராஜன். 

நம்மாலும் இனி இந்திய அணியில் விளையாட முடியும் என ஏக்கத்தோடு சாதிக்க துடிக்கும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் இளைஞர்களின் கையை பிடித்து பாதை அமைத்துக்கொடுத்திருக்கிறார். 

அப்படி என்ன தான் சாதித்தார் நடராஜன்

கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேன்கள் ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்கள் பறக்க விடுவது கூட சாதாரணம். ஆனால் பவுலர்கள் ஆறு பந்துகளையும் யார்க்கர்களாக வீசுவது என்பது அசாதாரணம். இந்த அசாத்திய சாதனையை உலக அரங்கிற்கு நிகழ்த்திக்காட்டியவர் தான் நம்ம சின்னப்பம்பட்டி யார்க்கர் மன்னன் நடராஜன்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பிரட்லி போன்ற ஜாம்பவான்களே கண்டு மிரளும் அளவிற்கு யார்க்கர்களை வீசி பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்திருக்கிறார். விராட் கோலி, தோனி, டிவில்லியர்ஸ் என உலகம் கொண்டாடும்  பேட்ஸ்மேன்களின் ஸ்டெம்பை பிடுங்கி எறிந்திருக்கிறார் நடராஜன். 

‘800 படத்தின் அரசியலில் உடன்படாததால் நடிக்க மறுத்துவிட்டேன்’- நடிகர் டீஜே

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நடராஜனின் பந்துவீச்சை கவனித்த அதிரடிக்கு பெயர் போன வீரேந்திர சேவாக் அவரது திறமையை கண்டு வியந்து 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் வீரர்களின் ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக மூன்று கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து  அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறார்.

படிக்கும் காலத்தில் பென்சில் வாங்க ஒரு ரூபாய் இல்லாத நடராஜனின் முதல் சம்பளம் மூன்று கோடி ரூபாய் 

நடராஜன் உடைத்தெரிந்த தடைகற்கள்

தமிழக கிரிக்கெட் வரலாற்றில் பார்ப்பனர்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாட தகுதியுடையவர்கள் என்ற கொடுமையில் தன்னுடைய விடா முயற்சியாலும்,  கூட பிறவாத சகோதரரான ஜெயபிரகாஷ் என்னும் நல் உள்ளத்தின் ஊக்கத்தாலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 

வாய்ப்பை தனக்கானதாக மாற்றியமைத்து தடை கற்களை யார்க்கர்களாக வீசி காதலியை கரம்பிடிக்க நெருங்குகிறார்.

அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை இந்த வாய்ப்பு அம்பேத்கர் பள்ளிக்கு செல்ல எவ்வளவு தடைகளை சந்தித்தாரோ அதே சோதனைகளை நடராஜனும் சந்தித்திருக்கிறார். பணம் தேடும் முதலாளிகளின் பணத்தாசைக்கு நடராஜன் போன்றோர்களின் திறமை   தேவைப்பட்டது என்பது தான் அவருக்கான வாய்ப்பு.

முத்தையா முரளிதரன் தமிழர்களுக்கு மட்டும்தான் எதிரானவரா?

வாய்ப்பு கொடுத்தாலும் நடராஜனை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல இவர்களுக்கு மனமில்லை. வடநாட்டு ஜாம்பவான் சேவாக் அடையாளம் கண்டு உலக அரங்கிற்கு நடராஜனை அறிமுகப்படுத்தியிருந்தாலும் இச்சமூக கட்டமைப்பில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல அவரால் முடியவில்லை.

‘நீ எல்லாம் முன்னேறி வரலாமா’ என நினைத்தோர்கள் எறிந்த அடுத்த கல் தான் உனது பந்துவீச்சு விதிமுறைக்கு புறம்பாக உள்ளது என்று கூறியது. தன்னை நோக்கி வந்த அந்த தடைக் கல்லையும் சுக்குநூறாக்கி மைதானம் முழுவதும் ஊதித்தள்ளினார். 

இருட்டில் தீக்குச்சியின் வெளிச்சத்தை எப்படி ஒளித்துவைக்க முடியாதோ அப்படித்தான் திறமையையும் உங்களால் ஒளித்துவைக்கமுடியாது.

முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும் – சபா நாவலன்

கிரிக்கெட்டிற்காக என்ன செய்தார் நடராஜன்

தான் நேசித்த காதலியான கிரிக்கெட் கொடுத்த  பல கோடி ரூபாய் பரிசை தன் அடுத்த தலைமுறைக்காக பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கிறார். ஆம் அவரது ஊரிலேயே ஒரு பயிற்சி மையம் ஆரம்பித்து தன்னை போன்று சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சியளித்து அவர்களை சர்வதேச வீரர்களாக தயார்படுத்தி வருகிறார். இதற்கு சான்று கடந்த ஆண்டு தமிழ்நாடு பிரீயர் லீக் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்நாயகன் விருது வென்ற பெரியசாமி.

அனைவருக்குமானதாக மாறுகிறதா கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாட்டு சோறு போடுமா?  விளையாட்டா? விவசாயமா? என கேள்வி எழுப்பியதுடன் கிரிக்கெட் எங்களுக்கு வேண்டாம் என போராடி விரட்டியடித்த நீங்கள் இப்போ மட்டும் ஏன் கிரிக்கெட் வேண்டும் என்கிறீர்கள்? என வயிறு எறியும் சிலருக்கு இரண்டு அரசியலையும் புரியவைக்க கடமைப்பட்டுள்ளோம். 

நாங்கள் கிரிக்கெட் வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் விரும்பும் ஒன்றை, ஏகோபித்த மக்கள் விரும்பும் விளையாட்டை எங்கள் போராட்டத்தின் ஆயுதமாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டோம் என்பது தான் அதற்கான விளக்கம்.

முத்தையா முரளிதரனின் சுழலும், விஜய் சேதுபதியின் விக்கெட்டும் – பாமரன் (பகுதி – 3)

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு என்பது பணக்காரர்களின் கையிலும், ஒரு சமூகத்தின் கையில் சிக்கிக்கொண்டிருக்கிறது இந்த அரசியலை உடைக்க ஐ.பி எல் போன்ற கிரிக்கெட் தொடர் உளியாக உருவெடுத்திருக்கிறது. இந்த உளி செதுக்கிய முதல் சிலைதான் சின்னப்பம்பட்டி நடராஜன். 

பானி பூரி விற்பவர் மகன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு, சாலையோர வியாபாரியின் மகன் கிரிக்கெட்டில் சாதனை, இவையெல்லாம் சமீப காலமாக ஒலித்துக்கொண்டிருக்கும் செய்தி. 100 ஆண்டு கால காத்திருப்பிற்கு கிடைத்த பரிசு.

நாம் நேசிக்கும் கிரிக்கெட் விளையாட்டு மூலமும் நம் சமூகம் முன்னேற முடியும் என்பதற்கு ஐபிஎல் வழிகாட்டியாக உருவெடுத்திருப்பதற்கு நடராஜன் வாழும் சாட்சியாகவும், நம்பிக்கையை தெளிக்கும் வீரனாகவும் ஜொலிக்கிறார்.

குப்பனும், சுப்பனும் இந்திய அணியில் களமாடுவதற்கான விதையை விதைத்துவிட்டார் நடராஜன், இதை மரமாக வளர்த்தெடுக்க வேண்டியது நம் சமூகத்தின் இளைஞர்களின் கடமை.

தமிழ் சமூகத்தின் நம்பிக்கையான நடராஜன் ஆஸ்திரேலியாவிலும் தனது திறமையை நிரூபித்து  தலைநிமிரவைக்க வேண்டும் என்பதே அனைவரின் ஏக்கம்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்