Aran Sei

’சிரிப்பு வருதுதுது… ஆனா வரல’- அமேசான் தமிழ் சிட்காம் சீரிஸ்

கவிதாலயா தயாரிப்பில், அமேசான் ப்ரைம் வெளியிட்டிருக்கும் காமெடி தொடர்  ‘டைம் என்ன பாஸு’. நரு நாராயணன், மஹாகெர்தியுடன் சூப்பர் சுபு எழுதி      இயக்கியிருக்கிறார். சுந்தர் சியின் பேய் பட குத்துப்பாட்டுகளில் வருவது போல, ‘காதல்’ பரத், ரோபா சங்கர், பிரியா பவானி சங்கர், அசோக் செல்வன், கருணாகரன்,‘அலெக்ஸின் ஒண்டர்லேண்ட்’ புகழ் அலெக்சாண்டர் பாபு என நட்சத்திர பட்டாளங்களுக்கு குறைச்சல் இல்லை. மேலும் பார்த்திபனும், மொட்டை ராஜேந்திரனும் அவர்கள் பங்கிற்கு வாய்ஸ் ’ஓவராகவே’ கொடுத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியின் முயற்சி பல இடங்களில் கை கூடி வந்திருக்கிறது. ஆனால் நமக்கு தான் சிரிக்க வாய் கூடி வரவில்லை

சென்னையின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருக்கும் ஐடி இளைஞனான பாலாவின் (பரத்) ரெஸ்ட்ரூமில் நடக்கும் அதிசயம் ஒன்றால், ரெஸ்ட்டே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் அவன் வாழ்க்கையில் ஏற்படும் சாதக, பாதக, ராசி பலன்கள் தான் கதை. பத்தாம் நூற்றாண்டில் இருந்து சோழ ஒற்றன் கிள்ளியாக ரோபோவும், 70களில் இருந்து பிஎச்டி படித்த கம்பராமாயண புகழ் சிவகுமாரின் ரசிகையாக பிரியாவும், 2070களில் இருந்து ஹிப் பாப் ஆதியின் தற்கொலைப் படையை சேர்ந்த பாகியாக கருணாகரனும், 1870களில் இருந்து வந்த ‘மதராஸபட்டிணம்’ எமியை ஞாபகப்படுத்தும் தானதோம்தனன ஹன்னாவும், வாட்ச் மேனாக வந்து நம் வாட்சிங்கை ’தொந்தரவு’ செய்யும் அலெக்சாண்டரும் சேர்ந்து செய்யும் (செய்ய நினைத்த) கலாட்டா தான் டைம் என்ன பாஸ்.

நன்றி : Scroll.in

அடுக்குமாடி குடியிருப்பு அறை, ஐந்து நண்பர்கள், டிபன் ஷாப், பின்னால் ஒளிக்கும் புஹாஹா சிரிப்பு ட்ராக் எல்லாம், பிரபல அமெரிக்க சிட்-காம் தொடரான ‘ப்ரெண்ட்ஸை’ ஞாபகப்படுவதாக இருக்கிறது. 70’s கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரைக்குமான நாஸ்டாலஜி பொருட்களான ’என்றும் பதினாறு’ சிவகுமார், இளையராஜா-ரகுமான், 7ஜி ரெயின்போ காலனி, ஹிப்பாப் ஆதி என எல்லாம் சரிசமமாகவே தூவப்பட்டுள்ளது.

பத்து எப்பிசோடுகளும், பத்து விதமான டாஸ்க் போல எடுத்திருக்கிறார்கள். மொத்தமாக மூன்று மணிநேரத்திற்கு மேல் இருக்கும் சீரியசை ’எப்படியாவது ஓடிக்கடந்து விடுவது’ தான் நம்முடைய டாஸ்க்காக இருக்கிறது. ‘சிரிக்க தான் மாட்ற இதையாச்சும் பண்ணு’ என்று பார்வையாளரையும் தன் டாஸ்க்குக்குள் ’இழுத்து’ வந்தது தெற்காசிய ’அமேசான்’ காடுகள் வரலாற்றிலேயே இதுதான் முதன் முறை.

நாம் ரெஸ்ட் ரூம் சென்று வருவதற்கு, ஸ்விக்கி ஆர்டர் வாங்கி வைப்பதற்கு, மேகி செய்து சாப்பிடுவதற்கு, ஊரில் இருக்கும் அப்புத்தாவை கடைசியாக பார்த்து வருவதற்கு, கேர்ள் ப்ரெண்ட்டின் போனை எடுக்காமல் விட்டதால் ஏற்படும் ‘ச்ச்சிறிய’ சண்டையை தீர்த்துக்கொள்ளவதற்கென்று சில எப்பிசோடுகள் பிரத்தியோகமாக எடுக்கப்பட்டிருக்கிறது. எப்பிசோடுகளை Pause செய்யாமல், அப்படியே ஓடவிட்டு இந்த வேலைகளை செய்யலாம். அதனால் கதை தொடர்ச்சியில் எந்த பிரச்சனையும் நமக்கு வராது என்பது கூடுதல் சிறப்பு.

’அப்பாடி இப்ப தான்ப்பா கொஞ்சம் சூடு பிடிக்குது’ என்று எழுந்து உட்கார போனால், கண்ணகியும் கோவலனும் வேலை தேடி வேளச்சேரி வந்த காலத்திலேயே கடுமையான ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, அசோகர் காலத்தில் உயிர் கொள்ளி ஜோக்குகள் என்று தடை செய்யப்பட்ட காமெடிகளை முகத்திலேயே எறிகிறார்கள். அதிலும் அலெக்சாண்டர் ‘ஒண்டர்லேண்டில்’ இருந்து நேராக கீழடிக்கு போய் அங்கிருந்து, சில கடி ஜோக்குகளை அகழ்வாய்ந்து சொல்கிறார். இது நாம் சங்க காலத்திற்கே சென்று வந்த அனுபவத்தை தருகிறது.

சின்ன சின்ன வசங்களிலும், ப்ராப்பர்டீஸ்களிலும் எழுத்தாளர்கள் நிறையவே உழைத்திருக்கிறார்கள். பிரியாவின் சிவகுமார் மோகம், பாகியின் உணர்ச்சிகளின் வளர்ச்சி (உனா,வனா புஹாஹாஹா), ஹன்னாவின் இசை மோகம் என ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்குமான குணாதிசியங்களுக்கும், அவர்களின் கதாப்பாத்திர வளர்ச்சிக்கும் தனியான கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.  அதுவே பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்க தவறினாலும், சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறது.

பெரிய அளவில் ட்ராமா ஒர்கவுட் ஆகாமல் போனது, சின்ன சின்ன வசனங்களில் காட்டிய கவனத்தை முழு காட்சிகளிலும் காட்டாமல் விட்டது, தேவையில்லாத இடங்களில் வரும் laughing track என சொதப்பல்களுக்கான காரணங்கள் நிறையவே இருக்கிறது. ஆனால் இந்த எழுத்தாளர் டீமால், இதை விட சிறப்பான ஒரு காமெடி சீரியஸை கொடுக்க முடியும் என்பது நிச்சயம். இதை பார்க்க நினைப்பவர்களுக்கு பத்து எப்பிஸோடையும்  பார்த்து முடிப்பது தான் உங்கள் லட்சியம்.

– அரவிந்ராஜ் ரமேஷ்

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்