Aran Sei

தொ.பரமசிவன் மரணம்: வேர்களை நோக்கி பயணித்த ஆலமரம் வீழ்ந்தது – உமேஷ் சுப்ரமணி

முன்னொரு நாள் வேறு ஏதோ நிகழ்வுக்காக எழுதி வைத்த கட்டுரை. இறுதியில் தொ.பரமசிவன் ஐயா அவர்களின் இரங்கல் கட்டுரையாகும் என்று கனவிலும் எண்ணவில்லை.

வரலாற்றின் மிக முக்கிய காலகட்டத்தில் இருக்கும் நாம் பலதரப்பட்ட பண்பாட்டு தாக்குதல்களை அரசியல் பக்கங்களில் இருந்து சந்தித்து வரும் நாம் அதில் இருந்து மீள நம் வேர்களை நோக்கியே பயணப்பட வேண்டும். நம் வேர்களின் மிக முக்கிய ஆணி வேர்களில் ஒருவர் பேராசிரியர் தொ.ப .

என் சமூக அறிவியல் சார்ந்த அறிவை இரண்டாக பிரிக்கலாம் அது தொ.ப விற்கு முன் தொ.ப விற்கு பின். ஏனென்றால் தொ.ப தான் நம் காலத்து தமிழ் சமூகத்தின் கல்வெட்டு. அவரை கொண்டே நமது சமூகவியல் காலத்தை கணக்கிடல் வேண்டும்.

தொ.ப வாசிப்புக்கு பின் நடந்த முக்கியமான மாற்றம் என்றால் கோவில் பற்றியும் இறப்பு சடங்குகள் பற்றியும் திருமண சடங்குகள் பற்றியுமான பார்வையில் நிகழ்ந்த புதிய திறப்புகளே. எவ்வாறு பல்லாயிர ஆண்டு பழமையான சடங்கின் மீது பார்ப்பனியம் வந்தமர்ந்து அச்சடங்கை தன்வயப்படுத்திக்கொண்டது என்று புரிந்தது.

அது வரை அனைத்தும் பார்ப்பனிய மயப்பட்ட சடங்குகள் இவை ஒதுக்கப்பட வேண்டும் என்று நினைத்திருந்த சமயத்தில் தொ.ப வின் கட்டுரைகள் நுட்பமான திறப்புகளையும் சமூக புரிதலையும் வழங்கியது.

நமது பார்வை அனைத்தும் கோபுரம் வைத்த பார்ப்பனர் வேத மந்திரம் ஓதும் கோவில்கள் அனைத்தும் மேலானவை என்றும் ஆட்டுகடா பலி கொடுக்கும் நாட்டார் தெய்வங்கள் கீழானவை ,இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் decency இல்லாத மக்கள் செய்யும் வழிபாடு என்ற எண்ணமும் தான் இருந்தது. ஆனால் தொ.ப வின் பண்பாட்டு அசைவுகள் இதை தலைகீழாக திருப்பி போட்டது.

அழகியல் பின்னான இந்த கோவில்களின் மறை அதிகாரம் எவ்வாறு பல்லாயிர மக்களை ஒடுக்கி இருக்கிறதென்றும் கூரை இல்லாத தெய்வங்கள் எப்படி ஜனநாயக தன்மை கொண்டிருந்தது என்றும் வெகுஜன மக்களின் வார்த்தைகளில் விளக்கியவர் தொ.ப

நாம் அனைவரும் பல்வேறு வகைகளில் முயன்றும் புரிய வைக்க முடியாத மறை அதிகாரம் ஜாதிய படிநிலை அதில் உழைக்கும் வர்க்கங்களின் பண்பாடு என்னவாக உள்ளது என்பதை தொ.ப போல் விளக்க கூடிய ஒருவர் இல்லை.

ஹிந்துத்துவம் மக்களை மதங்களாக பிரிக்க சூழ்ச்சி செய்யும் போது இங்கு மதம் தாண்டி சாதாரண மக்கள் மாமன் மச்சானாக பழகியவர்கள் என்று தொ.ப கூறும் எடுத்துக்காட்டுகள் மிக முக்கியமானவை.

அவர் தொடர்ந்து வேர்களை பற்றியே பேசினார். தமிழ்நாட்டின் வேர் மத மோதல்களை அனுமதியாது என்று தீர்க்கமாக நம்பினார்.

2003இல் தொ.ப ” இன்னும் சில இழப்புகளுக்கு பிறகு , உலகமயமாக்கல் பொருளாதார கலாச்சார இழப்புகளை நாம் உணர்ந்த பிறகு , பெரியாருக்கு திரும்புவதை தவிர , தமிழருக்கு வேறு வழியில்லை என்றே நினைக்கிறேன்” எனக் கூறுகிறார்.

இன்று தமிழகம் எவ்வாறெல்லாம் பெரியாரை தூக்கி சுமக்கிறது என்று பார்த்து கொண்டுதானே இருக்கிறோம். புத்தக சந்தையில் அவர் நூல்களே அதிகம் விற்கின்றன , அவரை புகழ்ந்து பாடல்கள் , மீம்கள் , வீடியோக்கள் என்று மீண்டும் பெரியாரிடம் தான் நாம் வந்து நிற்கிறோம். இதனை 17 ஆண்டுகளுக்கு முன்னே கூறியவர் தொ.ப.

தொ.ப பேசிய ஒவ்வொரு வரியுமே ஒரு பெரிய வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவர் சுந்தர் காளியுடன் நடத்திய உரையாடல் ” சமயம் ஓர் உரையாடல் ” என்ற நூலாக வெளி வந்தது. அந்நூலில் அவர் “நான் எழுத்து மரபிற்கு அதிக முக்கியத்துவம் தராதீர்கள் என்று கூறுகிறேன். எழுத்து என்பதே அதிகாரத்தின் பிறப்பிடமாகத்தான் இருந்துவந்திருக்கிறது என்று நினைக்கிறேன்” என கூறுகிறார்.

அவர் எண் தான் அறிவியலை உருவாக்கியது எழுத்து அல்ல என்றும் கூறுகிறார்.

நம் சமூகத்தின் அறிவியல் எது? பானை செய்வது , துணி நெய்வது , மாடு வளர்ப்பது , தோணி செய்வது போன்ற அனைத்தும் எண்ணை அடிப்படையாக கொண்ட அறிவியல் செயல்பாடுகள். ஆனால் இவர்கள் எட்டமுடியாத அதிகாரத்தை எழுத்தை முதன்மையாக கொண்ட செயலில் ஈடுபட்ட பார்ப்பனர்களால் அடைய முடிந்ததன் காரணம் எழுத்து அதிகாரம் சார்ந்தது.

இவ்வாறு போகிற போக்கில் பல தெறிப்புகளை கொடுத்து செல்வார் தொ.ப அதனால் தான் “தொ.ப வின் தெறிப்புகள்” என்றே  ஒரு நூல் வந்தது. ஒரு மனிதன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு சமூகத்தின் வரலாறையும் மானுடவியலையும் பண்பாட்டையும் தாங்கி நிற்கும் என்றால் அது தொ.ப வின் வார்த்தைகள் தான்.

இறுதியாக தொ.ப வின் இந்த வரிகளோடு முடிக்க நினைக்கிறேன். பொருளாதாரம் வளர்ந்த இந்த நிலையிலும் மக்கள் ஏன் இன்னும் ஜாதியை பிடித்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் உலகமயமாக்கல் , தாராளமயமாக்கல் மக்களிடம் ஒரு நம்பிக்கையின்மையை , ஸ்திரமின்மையை உருவாக்கி உள்ளது. தொழில் சங்கங்கள் அழிந்தொழிந்து போய் உள்ளன. உழைக்கும் வர்க்கம் பாதுகாப்பற்று நிற்கிறது. சாதி பாதுகாப்பற்றவனின் புகலிடமாக விளங்குகிறது. இந்த பாதுகாப்பை வெளியில் இருந்து கொடுக்கும் நேரம் ஜாதி தன் பிடியை இழக்கும்.

அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய கொள்கைகளால் தான் உழைக்கும் வர்க்கத்திற்கு அந்த பாதுகாப்பை அளித்து சாதியை அழித்தொழிக்க முடியும். விடுபூக்கள் நூலில் தொ.ப கூறியது போல் ” இதுவே சனநாயகம்! ” ஆகும்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்