Aran Sei

நியூட்ரினோ விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் பொய் கூறிய ஒன்றிய அரசு – பூவுலகின் நண்பர்கள்

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில்  நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க ஒன்றிய அரசு முயன்று வருகிறது. இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசின் சார்பில் அண்மையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய பின்னரே உரிய சுற்றுச்சூழல் அனுமதியை சுற்றுச்சூழல் துறையிடமிருந்து பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் பொய்யான தகவலாகும். 2018ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்தது. இந்த விண்னப்பத்தின் மீது 25.01.2018 அன்று சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு நடத்திய பரிசீலனையின் போது திட்டத்திற்காக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தின் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்: சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள்? – பூவுலகின் நண்பர்கள் கேள்வி

அதனடிப்படையில் 8.7.2010 அன்று இத்திட்டத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியதாகவும் அது தொடர்பான ஆவணங்களையும் மதிப்பீட்டுக் குழுவிடம் TIFR வழங்கியது. ஆனால், 8.7.2010 அன்று நடைபெற்றது ஒரு கலந்தாய்வுக் கூட்டம் மட்டுமே. சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையின் படி நடத்த வேண்டிய கருத்துக் கேட்புக் கூட்டம் இல்லை. TIFR மதிப்பீட்டுக் குழுவிடம் அளித்த ஆவணத்தின் தலைப்பே ”Draft summary of INO outreach meeting in Ramakrishnapuram Govt High School, July 8, 2010, in presence of Collector, Theni District” என்பதுதான்.

நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை Category B என்ற பிரிவில் கருதுவதால் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்பதே பின் நாட்களில் நீதிமன்றங்களில் ஒன்றிய அரசின்  வாதமாக இருந்தது. குறிப்பாக 18/06/2018 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒன்றிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

‘நச்சைக் கக்கும் தமிழ்நாட்டு அனல்மின் நிலையங்கள்’ – பூவுலகின் நண்பர்கள்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கூட இத்திட்டத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கிய பதிலில் தெரிவித்துள்ளது.

இப்போதும் கூட திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான ஆவணங்கள் இடம்பெற்றிருக்கும் அரசின் அதிகாரப்பூர்வ PARIVESH  இணையதளத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் என்பதை க்ளிக் செய்தால் எந்த தகவலையும் பெற முடியாது.

 ஆதாரம்.

http://environmentclearance.nic.in/DownloadPfdFile.aspx?FileName=Ftn28+gzuTJqQUFAgIQgPoBzMKC/plkirZXyehlU3/Z3WdefIfooGk8gWet8J8yX8W23I17Cl3GgcQTirgW/3b4C05UEQhyyngjcxB6ZSgg=&FilePath=93ZZBm8LWEXfg+HAlQix2fE2t8z/pgnoBhDlYdZCxzU58BnhvJgYCZmnh7L8vuUpAjRlPQFm4dqIX0YXm9oQdIXvs4CpAbUBzBFrV7e1RFE=

அடுத்ததாக இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு (EIA –  Environmental Impact Assessment ) செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்திருப்பது மற்றுமொரு பொய்யாகும். 2018ம் ஆண்டு இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டபோது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்வதற்கான எவ்வித ஆய்வு எல்லைகளையும் (Terms of Reference) நிபுணர் மதிப்பீட்டுக் குழு வழங்கவில்லை. இத்திட்டத்தை Category B என்ற பிரிவில் கருதுவதால் EIA செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதே ஒன்றிய அரசின் வாதமாக இருந்து வந்தது.

நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது பேரிடர்களுக்கு விடுக்கும் அழைப்பு – பூவுலகின் நண்பர்கள்

இத்திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான ஆவணங்கள் இடம்பெற்றிருக்கும் அரசின் அதிகாரப்பூர்வ PARIVESH  இணையதளத்தில் EIA/EMP என்பதை தேர்வு செய்தால் EMP மட்டுமே கிடைக்கும்.

ஆதாரம்.

http://environmentclearance.nic.in/auth/ECReport_New.aspx?pid=10696&status=New

கடந்த வாரம் தமிழ்நாடு அரசு இவ்வழக்கில் தனது நிலைப்பாட்டைத் மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்துவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பும் புலிகள் உள்ளிட்ட பல்வேறு காட்டுயிர்களின் வாழிட பாதுகாப்பையும் கருதி இத்திட்டத்தை அனுமதிக்க முடியாது என்பதே தமிழ் நாடு அரசின் நிலைப்பாடாகும்.

இந்த நிலையில் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வு, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக ஒரு தவறான தகவலை ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக சமர்ப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்