Aran Sei

“எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும்?” என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்வி தவறானது – காஞ்சா அய்லய்யா

image credit : thewire.in

13% மராத்தா இட ஒதுக்கீடு செல்லுபடியாகுமா இல்லையா என்பதை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு, மண்டல் கமிஷன் தீர்ப்பின்படி கொடுக்கப்பட்டுள்ள 50% உச்சபட்ச அளவைப் பற்றியும் ஆராயும்.

இந்த கேள்வி, தற்போதைய இந்திய நீதித்துறையின் சிந்தனை முறை சாதிய-கலாச்சார சமத்துவமின்மையை மாற்றுவதில் இட ஒதுக்கீடு ஆற்றிய நேர்மறையான பங்கை ஐயத்துடன் பார்ப்பதையே குறிக்கிறது.

ஆனால் இதுவரை எந்த உச்சநீதிமன்ற நீதிபதியும், “எத்தனை தலைமுறைகள் சாதி சமத்துவமின்மை தொடரும்?” என நீதிமன்ற அமர்விலிருந்து கேட்டதில்லை.

இட ஒதுக்கீட்டை தகுதி விரோதமாகவும் சோசலிச சமத்துவத்திற்கு எதிராகவும் கருதப்பட்ட இடங்களில், சூத்திரர்கள் அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலை எப்படி இருக்கிறது என்பதை மேற்கு வங்காளத்தை எடுத்துகாட்டாக எடுத்துக் கொண்டு பார்ப்போம்.

image credit : thewire.in
image credit : thewire.in

பொதுவாக வங்காளம், குறிப்பாக பிரிவினைக்குப் பின் மேற்கு வங்காளம் இந்தியாவில் பல்வேறு முன்னணி அறிவுஜீவிகளை உருவாக்கி உள்ளது. பார்ப்பனர்கள், காயஸ்தர்கள் மற்றும் பைத்யாக்கள் ஆகிய மூன்று சாதியைச் சேர்ந்தவர்கள்தான் அங்கு அதிகம் படித்தவர்கள். இதுதான் வங்காள மறுமலர்ச்சி என்று அறியப்பட்டது.

அவர்களது தேசிய மறுமலர்ச்சியின்  போக்கில் அவர்கள் தம்மை ‘பத்ரலோக்’ (பெரிய மற்றும் நற்குணம் வாய்ந்தவர்கள்) என்று அழைத்துக் கொண்டனர். மீதமுள்ள சூத்திரர்களும், நாம சூத்திரர்களும் ‘சோட்டோலோக்’ (சிறியவர்கள் அல்லது கீழ் மக்கள் அதாவது கீழ்சாதி அல்லது சராசரி சாதிகள்). இவ்வாறு பத்ரலோக், சோட்டோலோக் எனப் பிரித்தது சாதி அமைப்பில் அவமதிப்பையும், அடக்குமுறையையும் கூடுதலாக்கியது. ஆனால் வங்காள பார்ப்பன மறுமலர்ச்சி இதனை இயல்பானதாக ஏற்றுக் கொண்டது.

தமிழ்நாடு இட ஒதுக்கீட்டிற்கானப் போரை துவங்கிய போது வங்காள பத்ரலோக் அறிவுஜீவிகள் அதனை நவீனத்துவத்திற்கு எதிரானதாகவும், தரத்திற்கு எதிரானதாகவும் பார்த்தனர். பார்ப்பன எதிர்ப்பு விழிப்புணர்வு வங்காளத்தில் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வகையான கருத்தியலையும் சேர்ந்த வங்காள பத்ரலோக்குகள் (அம்மாநிலம் தாராளவாதிகள், கம்யூனிஸ்ட்டுகள் என்று முக்கியமாக பிரிந்திருந்தது) தெற்கிலிருந்து வந்த இட ஒதுக்கீடு என்ற கருத்தியலை வெறுத்தார்கள்.

வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்டு விவசாயப் பணிகளையும், கைவினைப் பணிகளையும் செய்து வந்த சோட்டோலோக் மக்கள் பத்ரலோக் மக்களிடம் தங்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று ஒருபோதும் கேட்கவில்லை. இன்றளவிலும் பத்ரலோக் மக்கள் கலப்பையில் கை வைத்ததில்லை. பத்ரலோக்குகளின் சோசலிச, தாராளவாத கருத்தியல்கள் சாதி அடிப்படையிலான வேலைப் பிரிவினையை மாற்றி விடவில்லை.

ஆங்கிலேயர்கள் இங்கு வந்த போது இந்த வங்காள பத்ரலோக்குகளில் பெரும்பான்மையினர் சமஸ்கிருதத்திலும், பாரசீக மொழியிலும் (முஸ்லீம்கள் ஆட்சியின் போது) கல்வி கற்றவர்களாக இருந்தனர். ஆங்கில ஆட்சி அமைந்தவுடன் ராஜா ராம் மோகன் ராய் முதலாக, அவர்கள்தான் முதலில் ஆங்கிலம் கற்ற இந்தியர்களாக இருந்தார்கள். அவர்கள்தான் பார்ப்பனிய விதிகளை மீறி முதலில் கடல் கடந்து சென்றவர்கள். இங்கிலாந்தில் இறந்த முதல் பார்ப்பனர் ராம் மோகன் ராய் ஆகத்தான் இருக்கும்.

ஆணோ அல்லது பெண்ணோ சோட்டோலோக்  யாரும் இதுவரை வங்காளத்தின் முதலமைச்சர் ஆக முடியவில்லை.

இட ஒதுக்கீட்டினால் தங்கள் மிக அடிப்படையான கொள்கையான ‘வங்காளிகளின் தரம்’ என்ற தாரக மந்திரத்தை அழிக்க விரும்பாத வங்காளம்தான் இட ஒதுக்கீட்டின் படி சூத்திரர்கள், பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர், பட்டியலினத்தவர், பட்டியலின பழங்குடியினர் ஆகியோருக்கு மிகக் குறைவான அரசு வேலைகளைக் கொடுத்துள்ள மாநிலம் ஆகும்.

இட ஒதுக்கீட்டினால் மிக அதிக பயன் பெற வேண்டிய, விவசாயிகளாக உள்ள மிகப் பெரும் எண்ணிக்கையில் உள்ள சூத்திர வகுப்பினரான மஹிஷ்யா சமூகத்தினர்தான் தற்போது பாஜக பக்கம் சாய்ந்துள்ளனர். அந்தக் கட்சி ஒரு சூத்திரரான திலீப் கோஷ் என்பவரை கட்சியின் மாநிலத் தலைவராக்கி முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவும் தமிழ்நாடும்

வங்காளத்திற்கு நேர் மாறாக மகாராஷ்டிராவின் சோதனை வேறுபட்ட வழியைக் காட்டுகிறது. அதிலும் கூட பார்ப்பனர்கள், பனியாக்கள், சூத்திரர்கள் மற்றும் அதி சூத்திரர்களும் கூட ஆங்கிலக் கல்வி பெற்று, பாலகங்காதர திலக், கோபால் கிருஷ்ண கோகலே வி.டி. சாவர்க்கர், மகாத்மா ஜோதிராவ், சாவித்ரி பாய் பூலே போன்றவர்கள் உருவாகினர்.

image credit : thewire.in
பாலகங்காதர திலகர் – image credit : thewire.in

சூத்திரர்கள் மற்றும் அதி சூத்திரர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமையுடன் நடத்தப்படுவதற்கான தொடக்க கால கோரிக்கைகள் இருந்தன. கோலாப்பூர் மன்னர் சத்ரபதி சாஹூ மகராஜ் ஆரம்பகால இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன்னெடுத்தார். இதுதான் தலித் சமூகத்திலிருந்து வந்த அண்ணல் அம்பேத்கர் பல சாதியினரின் லட்சியத்திற்கு குரல் கொடுக்க உதவியது. 1990-ல் இட ஒதுக்கீட்டை ஆதரிக்காத மராத்தாக்கள் இப்போது அதன் தேவையை உணர்கிறார்கள். தற்போது சாஹூ மகராஜின் பேரப் பிள்ளைகளும் கூட இட ஒதுக்கீடு கேட்கின்றனர். இட ஒதுக்கீட்டால் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து சாதிகளிலிருந்தும் ஒரு வலுவான கல்விசார் லட்சிய நடுத்தர வர்க்கம் உருவாகி உள்ளது. இதில் மற்றவர்களும் பங்கு வகிக்க விரும்புகிறார்கள்.

இதைப் போலவே இட ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டின் பரிசோதனை அனைத்து சாதியினரின் நிலையையும் மேம்படுத்தி உள்ளது. இட ஒதுக்கீட்டின் எல்லைக்கு அப்பால் உள்ள பார்ப்பனர்களும் செட்டியார்களும் உழைப்பாளர் சந்தைக்குள் தள்ளப்படவில்லை. அவர்கள் மேம்பட்ட வாழ்க்கையை, புதிய வழிகளில் தேடிக் கொண்டனர்.

அனைத்து சாதியினரும், வகுப்பினரும் அனைத்துத் துறைகளிலும் இடம்பெற்று பன்முகத்தன்மையுடன் விளங்கும் இந்த தமிழக மகாராஷ்டிர மாநில வெற்றிகரமான மாதிரிகளின் வெளிச்சத்தில் இட ஒதுக்கீட்டை இந்திய நீதித்துறை காண வேண்டும். மறுபுறம் மேற்கு வங்காளம் ஒரு எதிர்மறை எடுத்துக்காட்டாக உள்ளது. அங்கு கல்வி ஊக்குவித்தல் குறித்தும் இட ஒதுக்கீடு குறித்தும் விழிப்புண்ர்வு ஏற்படுத்தப்படாததால் சமூகத் தேக்கம் நிலவுகிறது.

அங்கு சூத்திரர்கள் மத்தியிலும், நாம சூத்திரர்கள் மத்தியிலும் ஒரு பெரிய அளவிலான நடுத்தர வர்க்கம் உருவாகவில்லை. பாஜக இந்த சூத்திரர்களையும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் கவர்ந்திழுக்க முனைகிறது. இடதுசாரி தாராளவாதிகளின் வங்காளத்தில் ‘சாதி இல்லை’ என்ற கோட்பாடு மிக பிற்போக்கான சித்தாந்த போக்காக பார்க்கப்படுகிறது.

image credit : thewire.in
பாஜக தேர்தல் கூட்டம் – image credit : thewire.in

பத்ரலோக்குகளின் இந்த அடையாள எதிர்ப்பு அரசியல் சிந்தனை ஓட்டம் இப்போது மிகப் பெரிய விலையைக் கொடுக்கிறது. இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்கள் எல்லா நிறுவனங்களிலும் தங்கள் வகுப்பு அடையாளங்களை வெளிப்படுத்துவதுடன், தங்கள் சமூக நிலையில் கவனத்தைக் குவிக்கச் செய்தது ஒரு மாற்றத்திற்கான பங்கை ஆற்றி வருகிறது. ஆனால் இடதுசாரி தாராளவாதிகள் அம்பேத்கரின் இயக்கத்தைத் தவறவிட்டு விட்டு மார்க்சையும், தாகூரையும் படித்துக் கொண்டிருந்தனர்.

இட ஒதுக்கீடு அனைவருக்குமான சோசலிச மற்றும் ஜனநாயக சம வாய்ப்பை கிடைக்கவிடாமல் செய்துவிடும் என்ற வலுவான பார்வையை இடதுசாரி பத்ரலோக் அறிவுஜீவிகள் கொண்டுள்ளனர்.

தங்களை அவமதிப்பதும் மனிதநேயமற்றதும் ஆன “சோட்டோலோக்” என்று அழைக்கப்படுவதைக் குறித்து சிந்தித்துப் பார்க்க எந்த சோட்டாலோக்கும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலை சோட்டாலோகுகள் எந்த நிறுவனத்திலும் பத்ரலோகுகளுடன் இணையாக பங்கேற்பதை அனுமதிக்கவில்லை. எந்த ஒரு மத்திய அரசின் பெரிய பல்கலைக்கழகம் அல்லது ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் இருக்கும் ஆங்கில கல்விமுறையில் பயின்ற சோட்டோலோக் ஆண் பெண்களின் எண்ணிக்கை பத்ரலோக் அறிவுஜீவிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகமிகக் குறைவாக உள்ளது.

மண்டல் குழு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்த கேள்வி எழுந்த போது ஜோதிபாசு ” இங்கு சாதிகளே இல்லை” என பெருமையாக அறிவித்தார். நாம் அந்த மாநிலத்திலிருந்து நாட்டின் வரைபடத்தில் வங்காளத்திலிருந்து ஒரே ஒரு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவரையோ அல்லது அறிவுஜீவித் தலைவரையோ கூட காண முடியவில்லை.

சோட்டோலோகிலிருந்து தோன்றக் கூடிய சமமான, போட்டியிடும் நடுத்தர வர்க்கத்தை வங்காளம் பெற்றிருக்கவில்லை. சூத்திர இந்தியர்களுக்கு மிகப் பெரிய அளவில் நாடு முழுவதும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது.

இப்பொழுது அந்த இந்திய வலதுசாரி பத்ரலோக், இடதுசாரி பத்ரலோக்குகளின் சேர்ந்திசையில் இணைந்து கொண்டு இந்தியாவின் சோட்டாலோக்குகள் இன்னும் எத்தனை தலைமுறைக்கு இட ஒதுக்கீட்டை அனுபவிப்பார்கள் என்று கேட்கிறார்கள்.

image credit : thewire.in
ஜேஎன்யு கட்டிடம் – image credit : thewire.in

ஆனால் நவீன, முதலாளித்துவ இந்தியாவில் எந்த அரங்கிலும் சமமில்லாமல், எத்தனை தலைமுறை இந்த சோட்டோலோகுகள் நிலத்தை உழது, பத்ரலோகுகளுக்கு உணவளித்துக் கொண்டிருப்பார்கள் என்று கேட்பதில்லை. இன்னும் எத்தனை காலம் பத்ரலோகுகள் உற்பத்தியிலிருந்து ஒதுங்கி இருந்து, அந்த களத்திற்கு வெளியே தரம் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்று கேட்பதில்லை. அல்லது கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உற்பத்தியின் தரம் பற்றி பேசாமல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் பற்றியே பேசுவார்கள் என கேட்பதில்லை.

நீதிமன்றத்தின் இந்த மனநிலை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சாதி இருட்டடிப்பு ஆகியவை குறித்த பத்ரலோகுகளின் கருத்திலிருந்தே வருகிறது.

www.thewire.in இணையதளத்தில் காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்