இன்றைய நிலையில் மரபின் ஆராய்ச்சிகளை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று, முழுக்க மறுமலர்ச்சியின் நவீன சிந்தனையில் பழமையை மதிப்பிடுவது. மற்றொன்று மரபின் பெருமிதங்களை மீட்டெடுக்க முயற்சிக்கும் அரசியல் செயல்பாடு. இதில் இறையியல், பண்பாடு, வாழ்வியல் எனப் பழமைகளை ஆராயும் வேளையில் அதன் கற்பிதங்களுக்குள் வீழாமல், நவீன வரையறைகளுடனும் வேறுபடும் தொ.பவின் லாவகம் தனித்துவமானது.
முதல் பார்வையை எடுத்துக்கொண்டால் நவீனத்தைப் பொறுத்தவரைப் பழமை பிற்போக்கானது. மக்கள் நாகரீகமற்றவர்கள். அவர்கள் பழக்கவழக்கங்கள் முட்டாள்தனமாக இருந்தது என்ற பொது பிம்பம் இருக்கிறது. இந்தியாவில் பார்ப்பனிய ஆதிக்கமும், அதன் சாதியமும் தொடங்கி மேற்கு நாடுகளின் மதபீடங்களின் இறுக்கமான செயல்பாடுகள் வரை இதற்குக் காரணங்கள் இருந்தன. ஆனால், பழமையே மோசமானதுதான் என்று கூறிவிடுவது சரியா என்றால் இல்லை. கடந்த காலங்களின் பிற்போக்குத்தனங்களுக்கும் நிகழ்கால ‘முற்போக்குகளுக்கும்’ யார் காரணம் என்ற கேள்வி எழுகிறது. இங்குதான் இவை ஒவ்வொன்றையும் மதிப்பிடும், நிறுவனப்படுத்தும் ஆதிக்க நிறுவனங்களை அடையாளம் காணவேண்டியுள்ளது. மத்திய நிலப்பிரபுத்துவ கால அதிகார நிறுவனமாக மதம் இருந்தது. இது அடித்தளத்தில் மக்களின் சமூக வாழ்வியலாகவும் இருந்தது. இன்று முதலாளித்துவ மதிப்பீடு இறையியல் சார்ந்த வாழ்வியலைப் புறம் தள்ளுகிறது. அதற்கு மாற்றாக அரசின் அடையாளமான தேசியத்தை மதமாக்கியுள்ளது. இந்த ஆதிக்கத்தின் சார்பாக இருந்துகொண்டு பழமையை ஆராய்வது பொருத்தமற்றது. மற்றொன்று பழமையின் பெருமையையும் வீரத்தையும் மீட்கிறேன் என்ற பெயரில் நவீனத்தின் மீது ஒவ்வாமை கொண்டிருப்பது. இரண்டும் தாம் நம்பிய குறுகிய அரசியலின் சார்பாக வெளிப்படுகிறது. இருவகை ஆய்வுகளிலும் நேர்மையும் உண்மையையும் காண்பது அரிது.
மண்ணையும் மக்களையும் கற்க ஆற்றுப்படுத்திய பேராசான் தொ.ப – மாணவர் அஞ்சலி
‘நவீனம், நவீனத்துவம் என்ற பெயரால் நாம் பேசுகிற எல்லா விஷயங்களையும் அதிகாரக் கட்டுமானத்தை நேரடியாகவோ எதிர்மறையாகவோ நம் மனதில் இருத்தி வைத்துக்கொண்டு பேசுகிறோம்’ என்கிறார் தொ.ப. அனைத்தையும் அதிகாரம் செலுத்து என்ற தாராளவாத மனோநிலையில் இருந்துகொண்டு இறையியலையும் மரபையும் மதிப்பிடுவது சரியா?.. இங்குதான் தொ.ப என்ற தமிழ்ச் சமூகத்தின் சிறப்புமிக்க ஆய்வாளர் உருவாகிறார். மரபின் வேர்களைத் தேடிய தொ.பவின் ஆய்வுகள் உரையாடல், நாட்டாரியல் போன்ற சமூக கூறுகளைக் கொண்டவை. அதன் முடிவுகள் முழுக்க நவீன சிந்தனையாக உருப்பெற்றவை. இன்று நம்மிடம் மரபின் சிறப்புகளையும், அதன் பன்முக வாழ்வியலையும் பரிந்துரைக்கும் தொ.ப, அதன் அதிகார கூறுகளையும் கட்டுடைக்கிறார். அந்தவகையில் தமிழ் சிந்தனையின் சமரசமற்ற கொடையாக அவரது ஆய்வுகள் உள்ளன.
நவீன மேட்டிமையுடன் மரபை அணுகுவதில் உள்ள சிக்கலைப்போல், முழுவதுமாக மரபுடன் சரணடைவதிலும் அபாயங்கள் உள்ளது. பழம்பெருமை கற்பனாவாத கனவுகள், அதிகார மற்றும் வன்முறை ஏற்பு, அடித்தள உரிமைகள் மறுப்பு, நிறுவன இறையியல், இனங்களுக்கு இடையேயான காழ்ப்பு போன்ற பல பிற்போக்கு நிலைகளுக்கு அது வழிவகுக்கும். சாதாரண பழமைவாதி தொடங்கி, அரசியல்வாதிகள், வரலாற்று ஆய்வாளர்கள் வரை இதற்கு உடன்பட்டே செயல்படுகிறார். இந்நிலையில்தான் தொ.ப போன்ற சமத்துவ நோக்கரின் தேவையை உணர வேண்டும்.
மரபை அடைவதிலும், இறையியலின் ஜனநாயக வெளியை வெளிக்கொணர்வதிலும் ஆய்வுலகில் புதிய வெளிச்சம் பாய்ச்சினார் தொ.ப. மேற்கூறிய அதிகார சுமைகளையும், அதன் பின்னுள்ள அரசியலையும் பேச்சு வாக்கில் கட்டுடைப்பது அவரது தனித்தன்மை. உதாரணமாக, பெரும்பாலான பார்ப்பனர்களின் வீடுகளில் கிணறு இருந்தது சூழல் காரணமோ, வாழ்வியல் வழக்கமோ அல்ல. நீரின் புனிதத்தைக் காக்க வேண்டியே உருவாக்கப்பட்டன என்கிறார். இதனை ஒரு வாதமாக ஏற்க முடியாதவர்களுக்குத் தமிழகத்தின் நீரியல் பயன்பாடு தொடங்கி இன்றுவரையிலான தட்பவெப்பநிலை வரை விவரிப்பார். தமிழ் நிலத்தின் ஏதோ ஓர் மூலையில் இருக்கும் சிறிய கோவில் பற்றியும், அந்த ஊர் பழக்கவழக்கங்களும் தொபவின் சொல் வழக்கில் இயல்பாகக் கடந்து செல்லும்.
பண்பாட்டின் வழியே வரலாற்றைக் கண்டடைந்தவர் – தொ.ப வுக்கு அஞ்சலி
இதேபோன்று நாம் சிறிய விஷயங்கள் என்று நினைப்பவற்றுக்குப் பின்னுள்ள நீண்ட அரசியலையும் விவாதிப்பார். கோவில்களில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தை அரசு தடை செய்ய முயன்றதை எடுத்துக்கொள்வோம். இவை நவீன அரசு கண்ட முற்போக்கு திட்டம் என வறட்டுவாதிகளால் கொண்டாடப்பட்டது. வெகுஜன இதழ்களில் எழுதும் மேட்டுக்குடியினரும் இத்தகைய வழிபாட்டின் மீதிருந்த காழ்ப்பைக் கொட்டித்தீர்த்தனர். இந்த இடத்தில் தமிழர் வாழ்வில் உயிர்ப்பலி எந்தளவிற்கு ஒன்றியதாக இருந்திருக்கிறது என்ற தேடலுக்கும், அரசின் சட்டங்கள் குறிப்பிட்ட சாரார்க்கு மட்டும் எவ்வாறு வளைந்துகொடுக்கிறது என்ற விமர்சனத்திற்கும் ஒரே நேரத்தில் பரிந்துரையாகிறார் தொ.ப. ‘மறிக்குரல் அறுத்து, துரூஉப் பலிகொடுத்து’ என்று இறையியலைக் குறிப்பிடும் சங்க காலத்தைய பழக்கத்தை ஏற்காத சட்டம், பெருந்தெய்வ கோயில்களில் ஆறடிக்கு ஆறடி கர்ப்ப கிரகத்தைப் பார்ப்பனர்கள் மட்டுமே மேலாண்மை செய்யும் அதிகாரத்தை அரசியலமைப்பில் பாதுகாக்கிறது. இதுபோன்ற நிலையே மரபு என்பதை ஒருமுகப்படுத்தப்பட்ட பின்னணியாக அல்லாமல், பன்முக முரணாகச் சோதிப்பதை அவசியப்படுத்துகிறது. வழிபாட்டில் புலால் நீக்கம் என்பது பெரும்பாலான அம்மக்களின் வாழ்வியல் மீது தொடுக்கும் தாக்குதலேயாகும். இதை எதிர்கொள்ள மரபின் மீதான அதிகாரத்தை உணர வேண்டும்.
தொ.பவுடைய எழுத்துக்கள் அதிகாரத்தைக் களைந்து நிற்க முக்கிய காரணமாக அவரது மார்க்சிய பார்வை அமைகிறது. அவை பழமையை நவீன இகழ்ச்சியிடமிருந்தும், நவீனத்தைப் பழமை இருண்மைவாதத்திலிருந்தும் மீட்கிறது. சமீபத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளான முருகன் பற்றிய விவாதத்தைப் பார்ப்போம். முருகன் பற்றிய சில செய்திகளையும், அவர் பற்றிய பாடல்களையும் நாத்திகம் பேசுபவர்கள் விமர்சிக்கிறார்கள். முருகனைக் கடவுளாக வழிபடும் இந்து அமைப்புகள் இருக்கிறார்கள். மற்றொருபுறம் முருகனைத் தமிழ் இனத்தின் முன்னோடியாகவும், தமிழ் கடவுளாக வணங்கும் குழுவினரும் உண்டு. இதற்கிடையில், ஒரு பண்பாட்டு ஆய்வாளன் முருகனை எவ்வாறு அடையாளப்படுத்துவது. முற்போக்காளர் என்ற விதத்தில் முருகன் மீதான நாத்திக விமர்சன பிரச்சாரத்தை அப்படியே ஏற்பதா அல்லது முருகனை இந்துத்துவத்துடனோ அல்லது புனித பிம்பமாகவோ அப்படியே விட்டுவிடுவதா. இதனைத் தவிர்த்து அடித்தளத்தின் வேரை அடைகிறார் தொ.ப.
‘பழங்காலத்தில் சிந்தனை அளவில் இளம் குழந்தைகளாக வாழ்ந்த மனிதர்கள் தெய்வம் என்பதை ஒரு ஆற்றலாகத்தான் (Force) கருதினர். கைகால்களுடன் கூடிய உருவமாகவோ அல்லது மனிதனைப் போன்ற உருவமாகவோ கருதவில்லை. தமிழ்நாட்டில் கூட ‘முருகு’ எனப்பட்ட ஆற்றலையே முதலில் வணங்கினர். பின்னர் தனிமனித சிந்தனை வளர்ந்தபோதுதான் ‘முருகு’ ‘முருகன்’ ஆக்கப்பட்டான். இவ்வகையான குறிகளும், குணங்களும், குலங்களும் கொண்ட கடவுள்களும் அந்தந்த சமூகத்தின் தேவைக்கேற்ப அமைந்தவையே’. (தெய்வங்களும் சமூக மரபுகளும்)
நாகாலாந்து கொலையும் அமித்ஷா அறிக்கையும் – கோபமடைந்த பாஜக தலைவர்கள்
இயற்கையோடு ஒன்றிய மனிதன் ஆரம்பத்தில் தன்னுடைய தேவைக்கு இயற்கையைச் சார்ந்திருந்தான். இயற்கையை உடன்படுத்தல், போலச் செய்தல், வழிபடுதல் போன்ற நிலைகளின் வழியாக ஆதிகால இறை நம்பிக்கை உருவாகிறது. மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சன் போன்றவர்கள் இதனை விரிவாக விளக்கியிருக்கிருக்கிறார்கள். இதனைத் தமிழ் நிலப்பகுதியின் குறிப்பிட்ட சூழலோடு பொருத்துகிறார் தொ.ப. இயங்கியல் ரீதியாகப் பார்த்தல் முருகனின் ஆரம்ப வடிவம் ஆற்றலாகவே இருக்க முடியும் என நிரூபணமாகிறது. தனிமனித சிந்தனைப்போக்கில் ஆற்றல் லட்சிய நபராக மாறுகிறது என்கிறார். தனிச்சொத்து, குடும்பம் போன்ற முறைகள் மனித சிந்தனையை இயற்கையிலிருந்து விலக்குகிறது. ஆற்றல் எல்லாம் நிறுவன அடையாள வடிவமாகிறது. அவையும் குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் உற்பத்தி உறவினை சார்ந்தே உருவாகிறது என்ற மார்க்சிய வெளியைக் கண்டடைகிறார். தொப அடைந்த இந்த இடம் மதவாதங்களையும் அடையாள முற்போக்கையும் ஒரே நேரத்தில் இல்லாமல் செய்கிறது.
இறை மறுப்பாளரான தொப தெய்வங்கள் எனும் தமிழ் இறையியலில் அதிகம் சார்புத்தன்மை கொண்டிருப்பதை அவர் எழுத்துக்களில் காணலாம். மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட சிறு தெய்வங்களின் சனநாயக அம்சங்களை ஆதரிப்பதிலும், சைவம், வைணவம் போன்ற நிறுவன அமைப்புகளாயினும் பன்முக இறையியல் கூறுகளைக் கொண்ட அதன் அடுக்குகளை நேர்மையாக ஆராய்ந்ததிலும் சிறந்து விளங்கினார். அப்படிப்பட்டவர் பிற்காலங்களில் உருவான பெருந்தெய்வங்கள் மற்றும் பிரமாண்ட கோயில்களின் விமர்சகரானார்.
இன்றைய பிரமாண்ட கோவில்கள் சமூக அதிகாரத்தின் வடிவங்கள் என உறுதியாக இருக்கிறார். சமூகம் அதிகாரமையமாக மாறியபோது அவை ‘கோவில்’களாயின என்ற இடத்தையும் அடைகிறார். சங்க காலம் வரையிலும் பெரிதும் இறையியல் சாராத தமிழ் நிலம், தம் வாழ்வியல் பொருட்டு உருவாக்கிக்கொண்ட தெய்வங்களிடம் எல்லா வகையான உரிமைகளையும், உறவுகளையும் வைத்துக்கொண்டது. எளிய சாமானியன் அண்டமுடியாத ராட்சத வழிபாடு அன்று இல்லை. பார்ப்பனிய மேலாண்மையினை தாங்கிக்கொண்டிருக்கும் பெருங்கோயில்கள் வழிபாட்டில் கூட நேரடியாக வணங்கக் கூடாது, இறைத்திருமேனியை தொடக்கூடாது என்ற தீண்டாமையைக் கொண்டிருக்கிறது. எளிய சாமானியன் தன் இறைவன் மீது கொண்ட உறவும் உரிமையும் இங்கு தகர்கிறது. இந்த இடமே பிற்கால அரசதிகாரத்தின் கலாச்சார வடிவமாகக் கோவில்களை தொபவால் விமர்சிக்க வைக்கிறது. ‘பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச இக்கற்றளி இராஜராஜீச்வரம் உடையார்க்கு’ என்று தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் முதல் கல்வெட்டு இறைவழிபாடு என்பதை விட அரசனின் ஏகபோகத்தை பறைசாற்றுவதாகவே உள்ளது.
தொ.ப மீது வைக்கப்படும் விமர்சனம் என்றால் சாதியைக்காக்கும் சிறு தெய்வங்கள் மீது சார்பும், பல பிற்போக்கு பழமைகளில் மென்மைத்தன்மையையும் கையாள்வார் என்பார்கள். தொப என்ற பண்பாட்டு ஆய்வாளரின் நோக்கம் அடித்தட்டு மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்துவது. அதன் வழியிலான பண்பாட்டு அசைவுகளுக்கு நேர்மையாக நியாயம் சேர்ப்பது. இன்றுவரை கற்பித பெருமைவாதங்களையும், அரசதிகார மேன்மையையும் கொண்டிருப்பவர்கள் அதன் நிழலில் மற்றவற்றைப் புறம் தள்ளுகிறார்கள். கற்பித வரையறைகள் வழியே வரலாற்றைத் தேட முயன்றவர்களுக்கு மத்தியில் மக்களின் வாழ்வியலுடன் உலவினார் தொ.ப. சிறு தெய்வங்கள் சாதியைக் காக்கிறதா என்றால் தொ.ப ஆம் என்பார். ஆனால், சாதி என்பது இடைக்கால பார்ப்பனிய அதிகாரம் திணித்த ஒடுக்குமுறை செயல்பாடு. சிறு தெய்வ வழிபாடு வாழ்வியலிலிருந்து ஒன்றி பிறந்தது. சாதி வாழ்வியல் மீது திணிக்கப்பட்டது. இதனைக் கூறும்போது, ‘தெய்வங்களுக்குச் சாதி தேவையில்லை. சாதிக்குத்தான் தெய்வங்கள் தேவைப்படுகிறது’ என்கிறார்.
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதை – பிணை கிடைத்தாலும் சிறை கதவு திறப்பதில்லை
தமிழ் பழக்கவழக்கங்கள் பிற்போக்குகளுடனோ அதிகாரத்துடனோ உடன்படும்போது தன் எதிர்ப்பை சமரசமில்லாமல் பதிவு செய்திருக்கிறார். இன்று தீபாவளி பண்டிகை தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் என்ற அரக்கன் கிருஷ்ணனால் வதம் செய்யப்பட்ட நாள் தீபாவளி என இந்துமதம் கூறுகிறது. ஆனால், சமண மத தீர்த்தங்கரரான மகாவீரர் இறந்த நாள் தீபம் ஏற்றி அனுசரிக்கப்படுகிறது. வரலாற்று நோக்கில் கண்டால் சமணத்தை வென்ற பார்ப்பனியம் மகாவீரர் இறந்தநாளை கொண்டாட்டமாக்கியுள்ளது. தீபாவளியன்று இறந்தவர்களின் இறுதிச் சடங்கான ‘கங்கா ஸ்நானத்தை’ பார்ப்பனியர்கள் அனுஷ்டிக்கிறார்கள். விஜயநகர பேரரசின் இந்து சாம்ராஜ்யத்திற்கு பிறகு தமிழ்நாட்டிற்குள் தீபாவளி நுழைகிறது. இதே நாளில் தமிழர்களும் தமிழ் முறைப்படி நீத்தார் நினைவைக் குறிக்கும் விதமாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறார்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற தமிழ் வழக்கம் அதிகாரத்தோடு உடன்படுவதைச் சாடுகிறார் தொப.
இதுபோல் வழக்கமாயினும் அவை ஆதிக்கத்தின் வினைப்பொருளானதை கடுமையாக எதிர்க்கும் புள்ளி தொபவை பெரியாரியராக உருவாக்கியது. தமிழ் பழமைவாத சிந்தனையாளர் தொ.ப பெரியாரை ஆதரிப்பது நெகிழ்ச்சியான அரசியல். தமிழ் மரபைப் பெரியார் சிதைத்துவிட்டார் என்று கூச்சலிடும் கூட்டங்களுக்கு மத்தியில் பெரியாரை நாட்டாரியலோடு ஒப்பிட்டு எழுதியவர் தொ.ப. மரபு என்பது அடிபணிவதல்ல. ஏற்க வேண்டியதை ஏற்றுக்கொண்டு நீக்க வேண்டியதை நீக்கிவிட வேண்டும். நீக்க வேண்டிய மரபுகளைப் பாரபட்சமின்றி உதறித்தள்ளியவர் பெரியார் என்கிறார். அத்தகைய சிந்தனை பக்குவமே தொ.பவின் ஆய்வுகளைப் பழமைவாத கற்பனைகளிலிருந்து வேறுபடுத்துகிறது. அந்தவகையில் இடைக்கால தமிழர் வரலாற்றை முற்றிலும் பெருமைவாதங்களுக்குள் மூழ்கடிக்கவைக்காமல் அதன் முரணைக் குறிப்பிடும் தொ.பவின் இயங்கியல் சிந்தனையை அறிவது இன்று அவசியம். இடைக்கால மற்றும் இன்றைய இந்திய அரசியலை தொ.பவின் கீழ்கண்ட கூற்றொடு ஒப்பிடலாம்.
‘மரபு வழிப்பட்ட தமிழ்ச் சமூகம் சாதிய அடுக்குகளால் ஆனது. ‘சாதிகளை மீறிய தனிநபர் என்று மரபு வழிபட்ட சமூகத்தில் யாருமில்லை. எனவே சமூகம் ஆக்கிய எல்லா நிறுவனங்களிலும் கருத்தியல்களிலும் சாதியும் அவற்றின் அடையாளங்களும் கவனமாகப் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. நிலமானிய சமூக அமைப்பில் உற்பத்தித் தளங்களும் காலமும் வெளியும் சாதியபடிநிலை வரிசைக்கு ஏற்பவே பங்கிடப்பட்டன. சமூகத்தின் அடித்தள மக்களின் ஆன்மீகத் தளங்களிலும் சாதிப்படிநிலை மரபுகள் கடுமையாக விதிக்கப்பட்டன. மரபுகள் மீறப்படும்பொழுது மீற முயன்றவர்கள் நேரடி வன்முறைக்கு ஆளானார்கள்..’
கட்டுரையாளர்: அப்துல்லா.மு, ஊடகவியலாளர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.