விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒரு பொது இடத்தில் தங்கள் கொடியை ஏற்றுவதற்காக அமைதிவழிப் போராட்டத்தை கையிலெடுக்க வேண்டி வருவது, அவர்கள் புதுவிராலிப்பட்டியில் மட்டுமே எதிர்கொள்ள வேண்டிவந்த விசயம் அல்ல. ஆகஸ்ட் 2020இல், மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த எஸ். மேலப்பட்டி கிராமத்தில் இதே போன்றதொரு சம்பவம் நடைபெற்றது. இந்த ஆண்டு ஜனவரியில், விசிகவினர் மதுரை உசிலம்பட்டியில் ஒரு கொடிக்கம்பம் நட்டு தங்கள் கொடியை ஏற்றினர். அப்போது சாதி இந்துக்கள் சாலை மறியலிலும் பிற போராட்டங்களிலும் ஈடுபட்டனர். காவல்துறையும் வருவாய்த் துறை அதிகாரிகளும் கடைசியில் அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ஜனவரி 28 அன்று விசிக கொடியை அகற்றினர். நடுநிலைமையாக நடந்துகொள்வது போல் தெரியவேண்டும் என்பதற்காக அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளையும் அகற்றினர். கம்யூனிஸ்ட்டுகளோ, அப்போது ஆட்சியிலிருந்த அதிமுகவோ ஒரு பொதுப் பேருந்து நிலையத்தில் தங்கள் கொடிகளை பறக்க விடுவதற்கான சனநாயக உரிமையை வலியுறுத்தி போராட்டம் நடத்தவில்லை. அப்படிச் செய்தால், விசிகவுக்கும் அதே உரிமைகள் இருப்பதை ஏற்க வேண்டி வருமே! அவர்கள் ஆதிக்க சாதி உணர்வுகளை எதிர்த்துக்கொள்ள விரும்பவில்லை. பதிலாக, விசிக தன் உரிமைகள் விட்டுக்கொடுக்க வேண்டி வருமென்றால், அதற்காக தங்களுக்கு பொதுவில் கிடைக்கும் கவனத்தை விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்கள்.
இதேபோன்றதொரு போராட்டம் இப்போது சேலம் மாவட்டம், கணவாய்புதூர் பஞ்சாயத்தில் காடையாம்பட்டிக்கு அருகிலிருக்கும் மோரூர் கிராமத்தில் தொடங்கியுள்ளது. 22 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வரும் விசிக சேலம் (வடக்கு) மாவட்டச் செயலாளரான ஏ. வசந்த்துடன் விரிவாக உரையாடினேன். பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மோரூர் பேருந்து நிலையத்தில் கொடியேற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றனர், இதில் விசிக தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் கலந்துகொள்வதாக இருந்திருக்கின்றது. கட்சியின் உள்ளூர் செயலாளரான வேல்பாண்டியன் இந்நிகழ்வுக்காக காவல்துறையினரின் அனுமதியும் கோரியிருக்கிறார். செப்டம்பர் 14 அன்று, கொடிக்கம்பம் நடுவதற்காக விசிக உறுப்பினர்கள் குழி தோண்டி கொடிக்கம்பத்தை தாங்குவதற்காக ஒரு குழாயை அடித்தளமாக நட்டு வைத்திருக்கின்றனர். வசந்த் சொல்வதன்படி, விசிக கொடி ஏற்ற எதிர்ப்பு இருப்பதாக செப்டம்பர் 15 அன்று காலை விசிகவினருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்ப்பு தெரிவித்த நபர்கள் யாரென்று பெயர் கேட்டபோது, கிராம நிர்வாக அலுவலர் (அம்பேத்கர் மாது) யார் பெயரையும் சொல்ல மறுத்து, பாமகவினரும் வன்னியர் மக்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாக பொதுவாக சொல்லியிருக்கிறார். போலீசும் வருவாய்த் துறை அதிகாரிகளும் மாற்றி மாற்றி கைகாட்டி தட்டிக் கழித்திருக்கின்றனர். மோரூரில் அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு பாமக கொடி, ஒரு வன்னியர் சங்கக் கொடி (அப்பகுதியின் ஆதிக்க சாதியினரான வன்னியர் சாதியினரின் சாதிச் சங்கம்), ஒரு திமுக கொடி, விஜயகாந்த்தின் தேமுதிக கட்சிக் கொடி ஆகியவை இருந்திருக்கின்றன. இந்த இடம் சேரியிலிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. இப்போது கிராமப் பேருந்து நிலையம் இருக்கும் இந்த இடமே 1930களில் சேரி மக்களால் கொடுக்கப்பட்ட நிலம்தான் என்கிறார் ஏ. வசந்த். விசிக கொடியை ஏற்றுவதற்கான போராட்டத்தில் மோரூர் கிராம தலித் பெண்கள் முன்னணியில் நிற்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார். “கட்சி அவர்கள் உணர்வுகளை ஏற்க வேண்டும், அவர்கள் தங்கள் உரிமைகளைக் கோரும்போது மதிக்க வேண்டும்.” இக்கிராமத்தைச் சேர்ந்த 65 வயது கோவிந்தம்மாளை அவர் உதாரணமாகச் சொல்கிறார். பேருந்து நிலையம் இருக்கும் இடம் மட்டுமல்ல, அருகாமையிலிருக்கும் அரசுப் பள்ளிக்கான நிலமும் கூட தலித்துகளால் வழங்கப் பட்டதுதான் என்கிறார் கோவிந்தம்மாள்.
மோரூர் கிராமத்தை உள்ளடக்கிய சேலம் (மேற்கு) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பாமகவைச் சேர்ந்த ஆர். அருளை விசிகவினர் தொடர்புகொண்டபோது தன் கட்சியினர் இவ்வாறு எந்த எதிர்ப்பும் எழுப்பியிருப்பதாகத் தனக்கு தெரியாது என்று சொல்லியிருக்கிறார். தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றிருக்கிறார். செப்டம்பர் 15இல், விசிகவினர் வருவாய்த் துறை அதிகாரிகளிடமும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மீண்டும் முறையிட்டபோது இது குறித்து கவனிப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
மறுநாள், விசிக கட்சி அலுவலர்களான பாவேந்தன், ஏ.கே. அர்ஜுனன் மற்றும் வேல்பாண்டியன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க மனு கொடுத்துள்ளனர். அந்த நிலம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது, அவர்களிடம் பேசி அனுமதி கிடைப்பதை உறுதிசெய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் ஆட்சியர். செப்டம்பர் 17 நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம் கொடி ஏற்றுவதற்கு அனுமதி மறுத்து காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கடிதம் அனுப்பியிருக்கிறார். சில நாட்கள் கழித்து கிராம நிர்வாக அலுவலர் வந்து விசிகவினர் கொடிக்கம்பம் நடுவதற்காக வைத்த அடித்தளத்தை அகற்றிவிட்டார் என்று கிராம மக்கள் ஏ.வசந்த்துக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். வீடியோ ஆதாரத்துடன் எதிர்கொள்ளப்படும் வரை கிராம நிர்வாகத்தினர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கின்றனர். மேலும் ஒருவார காலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை, காவல்துறையினர், நெடுஞ்சாலைத் துறை, வருவாய் அதிகாரிகள் என்று மாற்றி மாற்றி அலையவிடப் பட்டிருக்கிறார்கள். புதுவிராலிப்பட்டியில் அதிகாரிகள் இரண்டு அமைதி ஏற்படுத்தும் கமிட்டுக் கூட்டங்கள் என்ற நாடகங்களையாவது நடத்தியிருக்கிறார்கள், சேலம் மாவட்டம் மோரூரில் அப்படி எதுவும் கூட நடக்கவில்லை.
சமத்துவத்திற்கான நீண்ட போராட்டமும் மறுக்கப்படும் அரசியல் உரிமைகளும் – மீனா கந்தசாமி
செப்டம்பர் 22 அன்றைக்கு மறுநாள் ஒரு கொடி ஏற்றும் நிகழ்வுக்கு விசிக அனுமதி கோரியதும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு அனைவரும் தங்கள் கொடிகளை ஒரு வாரத்துக்குள் அகற்ற வேண்டுமென நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. வசந்த் சொல்வதன்படி, விசிக பிரதிநிதிகள் எந்தக் கொடியையும் அகற்ற வேண்டுமென தாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள், எல்லா கொடிகளையும் ஒரு வாரத்தில் அகற்ற வேண்டுமென்றால், விசிக கொடியையும் அந்த ஒரு வாரத்துக்கு பறக்க விட அனுமதிக்க வேண்டுமென்றுதான் விவாதித்திருக்கிறார்கள்.
செப்டம்பர் 23 அன்று, பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் உட்பட மோரூரைச் சேர்ந்த 300 தலித்துகள் தங்களது கொடி ஏற்றும் உரிமையை வலியுறுத்தி அமர்ந்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். போராட்டத்தை சேரிக்குள்ளிருந்தே தொடங்கியிருக்கிறார்கள். அங்கிருந்தவரான வசந்த் சொல்வதன்படி, போலீசார் தலித் பெண்களை நகர்த்தி தள்ள முயற்சித்தும் அந்தப் பெண்கள் நகராமல் இருந்திருக்கிறார்கள். மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் விசிக நிர்வாகிகள் பின்னால் நிற்க வேண்டிவந்தது என்று அவர் ஒப்புக்கொள்கிறார். முதலில் செய்யப்பட்ட கொடிக்கம்பம் 100 கிலோவுக்கு மேல் கனமானது என்றும் போராட்டத்தில் முன்னால் நின்ற சேரியைச் சேர்ந்த பெண்கள் ஒரு சிறிய கொடிக்கம்பத்தை, நட்டு கொடி ஏற்றுவதற்காக எடுத்து வந்திருந்தார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். “முன்னமே ஒரு சதித்திட்டம் திட்டமிடப் பட்டிருந்திருக்கிறது. சேரியைச் சேர்ந்த மக்களின் மீது சோடா பாட்டில்களும் கற்களும் வீசப்பட்டன. ஒரு குழுவினர் இரவு முழுக்க பள்ளி வளாகத்தில் ஒளிந்திருந்திருக்கின்றனர். மக்களைக் காப்பாற்றுவதற்காக, அவர்களை சேரிக்குள் பின்வாங்கி வருமாறு அறிவுரைத்தோம்” என்கிறார் வசந்த். இதே நேரம் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார். நேரில் பார்த்தவர்கள் சொல்வதன் படி, அவர் விசிக செய்தித் தொடர்பாளர் பாண்டியனைத் தாக்கியதோடு, லத்திசார்ஜ் மற்றும் கைது செய்வதற்கான கட்டளைகளையும் பிறப்பித்துள்ளார். லத்தி தாக்குதலில் 20க்கு மேற்பட்ட தலித்துகள் மோசமாக காயம்பட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட பல பெண்களை மிதித்தும், பலமாக அடித்தும், வேறு பல அவமானப்படுத்தல்களுக்கும் ஆளாகியிருக்கின்றனர் என்றும் தெரிகிறது.
நிலக்கரி பற்றாக்குறைக்கு யார் காரணம்? – தனியார் முதலாளிகளா? அரசா?
போலீசாரால் கைது செய்யப்பட்ட 17 தலித்துகள் ஆத்தூர் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆதிக்க சாதியினர் தர்மபுரி சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 27ஆம் தேதி போலீசார், இயந்திர வாகனங்களின் உதவியுடன் மோரூர் பேருந்து நிலையத்தில் இருந்த எல்லா கட்சிக் கொடிகளையும் அகற்றினர். பிற கட்சிகள் சார்பாக முணுமுணுக்கும் போராட்டம் கூட நடத்தப்படவில்லை.
விசிக இச்சம்பவங்களை கண்டித்து சென்னை, சேலம் மற்றும் மதுரையில் போராட்டங்கள் நடத்தப்படுமென அறிவித்தது. சென்னையில் செப்டம்பர் 28 போராட்டம் நடைபெற்றது. போலீஸ் துறையைக் கையாளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அலுவலகத்திலிருந்து கடைசி நிமிடத்தில் தலையிட்டதால் சேலம், மதுரை போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த சம்பவம் விசாரிக்கப் படுமென்று அவர் உறுதியளித்திருக்கிறார்.
பிற மாவட்டங்களில் கட்சிக் கொடி ஏற்றுவதற்கான போராட்டம் பல ஆண்டுகள் தொடர்ந்திருக்கிறது, அல்லது துயரமான முடிவுகளைக் கண்டிருக்கிறது. இந்த உரிமையைப் பெற பல தலித் இளைஞர்கள் தங்கள் உயிரையே இழந்திருக்கின்றனர். 2018இல், திருப்பத்தூரைச் சேர்ந்த 24 வயது அரவிந்தன் விசிக கொடி ஏற்றியதற்காக அவரை வேலைக்கு வைத்திருந்த முதலாளிகளால் கொல்லப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ராஜகோபாலபுரத்தில், விசிக செயற்பாட்டாளர்களும் சேரியைச் சேர்ந்த மக்களும் தங்கள் பகுதியின் ஒரு தூரத்து மூலையில், பொதுவில் கூட அல்ல, கட்சிக் கொடியை ஏற்றுவதற்கான அனுமதி கோரி 2015இலிருந்து ஒரு நீண்டு தொடரும் வழக்கில் போராடிக் கொண்டிருக்கின்றனர். 2021இல் அவர்கள் சட்டப்படி உரிமையை வென்றனர், கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இந்த செப்டம்பரில் கொடி ஏற்றினார். இராமநாதபுரத்தில் ஒரு உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் இப்படி சவால் விட்டிருப்பதாக சொல்லப்படுகிறது: “நான் இங்கே எஸ்பியாக இருக்கும் வரை ஒரே ஒரு விசிக கொடி கூட இங்கே பறக்காது”. தாங்கள் எந்தச் சமூகத்திலிருந்து வருகிறோமோ, அந்தச் சமூகத்தையே போலீஸ் படைகளும் பிரதிபலிக்கின்றன. அவை அமைதியையும் ஒற்றுமையையும் பராமரிப்பதாக சொல்லி தற்போதிருக்கும் நிலையைத் தூக்கிப்பிடிக்கவே தங்கள் அதிகாரத்தை எந்தத் தயக்கமுமின்றி பயன்படுத்துகின்றன.
`சர்தார் உத்தம்’ – பிற தேச பக்தி திரைப்படங்களில் இருந்து ஏன் மாறுபடுகிறது?
தலித் அரசியல் வலியுறுத்துபவற்றைப் புரிந்துகொள்ளுதல்
தங்கள் இலட்சியங்களின் பிரதிநிதியாக இருக்கும் கட்சியின் கொடியை ஏற்றவேண்டுமென்று தமிழ்நாடெங்கும் இருக்கும் தலித் மக்கள் கொண்டுள்ள விருப்பங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் பல சுவாரசியமான கேள்விகளை எழுப்புகின்றன: ஒரு “சமூக நீதி” தளத்தைக் கொண்ட ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் கூட, உள்ளூர் திமுக உறுப்பினர்கள் – உசிலம்பட்டி, மோரூர் அல்லது புதுவிராலிப்பட்டியில் – ஆதிக்க சாதிகளின் வெளிப்படையான கட்டுப்பாடுகளை எதிர்த்து நிற்பதில்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? தலித் இலட்சியங்களை சிதைக்க சட்டரீதியான காரணங்களை உற்பத்தி செய்யும் உயர்நிலை போலீஸ் அதிகாரிகளின் துணிச்சலை எப்படிப் புரிந்துகொள்வது? அதுவும் விசிக முக்கியப் பங்காற்றும் ஒரு கூட்டணியைக் கொண்ட, முற்போக்காக தன்னை அமைத்துக் கொண்ட திமுக அரசின் கீழ் பணியாற்றிக்கொண்டே இதைச் செய்வதை?
ஆதிக்க சாதிகளின் வன்முறைகளையும் நியாயமற்ற கோரிக்கைகளையும் அரசு இயந்திரம் எவ்வளவு நுட்பமாக செல்லுபடியாக்குகிறது என்பதை எப்படி பிரித்துப் பார்த்துப் புரிந்துகொள்வது? இந்த அதிகார அமைப்பு எப்படியொரு சாதிப் பெருமைவாத எதேச்சதிகாரமாகிவிட்டது என்பதை தலித்துகளால் வெளிச்சம் போட்டு காட்ட முடியுமா? அம்பேத்கரியவாதிகளான சிறுத்தைகள் தாங்கள் எல்லோருக்குமானவர்கள், தங்களை ஒரு அடையாளத்துக்குள் அடைக்க முடியாதென மறுபடி மறுபடி உரக்கச் சொல்லும்போது – ஏன் அது ஆதிக்க சாதிகளை உறுத்திக்கொண்டே இருக்கிறது?
இவற்றை எல்லாம் புரிந்துகொள்ள, நான் எடின்பர்க் பல்கலைக்கழக சமூகவியலாளரான ஹியூகோ கோரிஞ்சின் எழுத்துகளை நாடினேன். அவர் கடந்து இரு பத்தாண்டுகளாக சிறுத்தைகள்/விசிகவினரைக் குறித்து மிக விரிவாக ஆராய்ந்திருக்கிறார். Out of the Cheris: Dalits Contesting and Creating Public Space in Tamil Nadu (சேரிகளிலிருந்து வெளியே: தமிழ்நாட்டில் தலித்துகள் பொது வெளிகளை உருவாக்குவதும், அவற்றில் போட்டியிடுவதும்) என்பது அவரது மிக முக்கியமான படைப்பாகும். அதில் அவர் பொது இடங்களுக்கு தலித்துகள் போட்டியிடுவது எவ்வாறு “எல்லா சாதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும், எல்லா சாதிகளுக்கும் இடமளிக்கும் அர்த்தமுள்ள பொது வெளிகளை உருவாக்க முயன்றது” என்று எழுதுகிறார். மேலும் இது “தங்கள் சமூக நிலையை தக்கவைத்துக் கொள்ள அடிக்கடி வன்முறையில் இறங்கிய, உயர் சமூக நிலையில் இருந்த, சாதிகளிடம் எதிர்ப்புகளைத் தோற்றுவித்தது” என்பதையும் குறிப்பிடுகிறார். இந்தக் கருத்தை விரிவாக்கி மேலும் எழுதுகிறார், “ஒரு சனநாயக சமூகத்தில், எல்லா சமூக வெளிகளுமே போட்டியிடத் தக்க, விவாதத்துக்குள்ளாக்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்கள்தான். கோவில்களிலிருந்து சுவர்கள் வரை, குறிப்பிட்ட இடங்களுக்கும் வெளிகளுக்கும் உள்ளார்ந்து வைக்கப்பட்டிருக்கும், வெளியிலிருந்து சுமத்தப்படும் அர்த்தங்கள் எல்லாமே சவாலுக்குள்ளாக்கப்பட்டு, மீள்கண்டுபிடிப்போ மீட்டுருவாக்கமோ செய்யப்படுபவைதான். இந்த செயல்பாட்டில், சாதி மாற்றத்தின் இயங்குமுறை சமூக வெளியில் எப்படி எழுதப்பட்டுள்ளதென்றால் சிறிய சம்பவங்கள் கூட ஊதிப் பெரிதாக்கப்படும். ஒரு கட்சிக் கொடியை ஆடம்பரமாகப் பறக்க விடுவதால் கலவரம் வரலாம்; காதல் திருமணத்துக்காக வீடுகள் எரிக்கப்படலாம்; ரோட்டோரம் ஒரு அடையாளப் பலகையை மாற்றுவது கைகலப்பிலும் நீதிமன்ற வழக்குகளிலும் முடியும். இதெல்லாம் நமக்கு நினைவுபடுத்துவது என்னவென்றால் ஒரு சனநாயக சமூகத்துக்கான பாதை தொந்தரவற்றதாகவும் நேராகவும் இருக்குமென்று நம்புவது எவ்வளவு தவறென்பதைத்தான் (2016:166).”
‘காட்டுயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் ஒன்றிய அரசு’ – சதீஷ் லெட்சுமணன்
களத்தில் நடக்கும் சம்பவங்கள், இது ஒரு நேரிடையான போராட்டமாக இருக்காதென்று நமக்கு தெளிவுபடுத்துகின்றன. ஆளும் திமுக, தனது வாக்கரசியல் கூட்டாளிகளை எவ்வளவு ஏற்றுச் செயல்படுகிறது என்பதைத்தான் அடுத்த ஐந்தாண்டுகளில் பல விசயங்கள் நம்பியிருக்கின்றன. ஒவ்வொரு சின்னஞ்சிறிய, சாதியவாத கிராமத்துக்கும் சமூக நீதி சென்று சேர்வதை உறுதிப்படுத்துவது ஸ்டாலினின் முன்னுள்ள சவால் – இதுவொரு கடினமான பணி, அவரது கட்சிக்காரர்கள் பெரியாரின் கொள்கைகள் மீது தங்களுக்குள்ள பிடிப்பை மீண்டும் உறுதி செய்வது மட்டும் போதாது, ஆதிக்கவாதம் நிறைந்த தற்போதைய சூழ்நிலையை மாறாமல் நிலைநிறுத்த முயற்சிக்கும் சக்திகளின் பிடியில் அரசு இயந்திரம் சிக்கிவிடாமல் இருக்க போதுமான நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவேண்டும்.
கடைசியாக, எளிதாக கோவப்படுபவர்கள், பிரச்சினையைத் தேடிச் செல்பவர்கள், வன்முறையாளர்கள் என இளம் தலித் ஆண்கள் மீது கவனமாக வடிவமைக்கப்பட்ட ஆபத்தான, தவறான கருத்தாங்களையும் இந்த தலித் பெண்களுடைய எழுச்சி மற்றும் போராட்டத்தின் பின்னணியாகப் பொருத்திப் பார்க்க வேண்டும்; இந்தப் பிரச்சாரக் கதைகள் தலித் ஆண்களுடைய செயல்பாடுகளை போலீசும், மையநீரோட்ட ஊடகங்களும், ஆதிக்க சாதி அமைப்புகளும் குற்றச்செயல்களாக அடையாளங்காட்ட உதவுகின்றன. தலைமுறை இடைவெளிகளைக் கடந்து தலித் பெண்கள் ஒரு கட்சிக் கொடியை ஏந்தி, அதைத் தங்களுடையதாக உரிமை கொண்டாடி, அரசு இயந்திரமும் ஆதிக்க சாதிகளும் தரும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி பின்வாங்க மறுக்கும்போது – அது நம் பொது வெளிகளில் ஆற்றல் மிகுந்த பெண்ணியத்தை உள்ளிடுகிறது.
‘டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றம் உலக மக்களின் சிந்தனையை தூண்டும்’ – அறிஞர் அண்ணா
ஒருங்கிணைந்த அரசியல் ஆற்றலாகத் திரண்டு தங்களுக்குரிய வெளிகளை உரிமைகோரும் தலித் பெண்களின் போராட்ட உணர்வை, கொடூரமான சாதி அமைப்பையும் பக்கச்சார்புடைய போலீஸ் இயந்திரத்தையும் அவர்கள் எதிர்த்து நிற்கும் இக்கணத்தை, பெண்ணியவாதிகளாக, சாதி எதிர்ப்பாளர்களாக, சனநாயகத்தில் நம்பிக்கையுள்ளோராக நாமெல்லாம் போற்றிக் கொண்டாட வேண்டும். புதிவிராலிப்பட்டியிலும்(பெரம்பலூர்) மோரூரிலும்(சேலம்) விசிக கொடியை ஏந்தி நடந்த பெண்கள் நமக்கு யோசிக்கவும் கற்றுக்கொள்ளவும் ஒரு கணத்தை அளித்திருக்கிறார்கள்; அவர்களது அரசியல்மயமாக்கலையும், புரட்சிகர துணிவையும் வணங்குவதற்கான கணம். இவை அரசுசாரா நிறுவன பாணியில் கையேடுகளும், தொழில் பயிற்சியும் வைத்துக்கொண்டு பேசும் அதிகாரமளித்தல் பற்றிய பேச்சல்ல. அமைப்பாக்கப்பட்ட பிரதிநிதித்துவ சனநாயகத்தில் சமூக நீதி தரும் வாய்ப்புகளால் அரசியலின் அடிமட்டத்தில் அடிமேல் அடி எடுத்து வைத்து தனிநபர் அதிகாரத்தையும் கவனத்தையும் பெறுவது கிடையாது இது, அங்கே பெரும்பாலும் அந்தப் பெண்களின் குடும்ப ஆண்களே பின்னாலிருந்து அதிகாரத்தை கையில் வைத்திருப்பார்கள். இதுவொரு தீவிரமான சுயேச்சையான போராட்டம்; இது எண்ணற்ற நெருப்புகளை ஏற்றி வைக்கப்போகும் தீச்சுடர். சனநாயகத்தின் கொடியை ஏந்திய இந்தப் போராட்டக்காரர்கள் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை என்ற அரசியல் இலட்சியங்களை நோக்கி நடைபோடும்போது, இத்தகைய தன்னிச்சையான தலித் பெண் தலைமைகள் நம் அரசியல் வெளியில் ஒரு உறுதியான மாற்றத்தை முன்னறிவிக்கின்றன.
(அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக எல்லா பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.