Aran Sei

ஒன்றிய அரசின் சட்டங்களும் – நிலைமை மாறாத ஜம்மு காஷ்மீரும்

ம்மு காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 ஐ விலக்கிய பின் ஒன்றிய அரசின் 800 சட்டங்கள் அங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் மாநிலங்கள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அண்மையில் தெரிவித்துள்ளார். ஸ்ரீ நகரில் நடைபெற்ற “நல்லாட்சி நடைமுறைகளின் பிரதி” என்ற பகுதி மெய்நிகர் மாநாட்டின் துவக்க விழா நிகழ்ச்சிக்குப்பின் அமைச்சர் உரையாற்றினார். இந்த மாநாட்டில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 750 அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். வெறுமனே ஒன்றிய அரசின் சட்டங்களை நீட்டிப்பது மக்களின் பிரச்சனைகளை தீர்த்து விடுமா? இந்த 800 சட்டங்களும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பயனுடையதாக இருந்ததா?

டேனிஷ் சித்திக்கி: உண்மைக்கு ஒளியூட்டிய மக்கள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்

இந்த 800 சட்டங்களையும் ஆய்வு செய்வது நமக்கு இயலாத காரியம். எனவே கடந்த மூன்றாண்டுகளாக நான் ஒன்றிய அரசின் தகவல் அறியும் உரிமை சட்டம்(RTI), காடுகள் உரிமைச் சட்டம் (FRA) மற்றும் நில கையகப்படுத்துதலில் நேர்மையான இழப்பீடு  மற்றும் வெளிப்படைத் தன்மை, புனர்வாழ்வு மற்றும் மீள் குடியமர்த்துதல் சட்டம் (RFCTLARR) ஆகிய மூன்று முற்போக்கான திட்டங்களைப் பற்றி சில ஆராய்ச்சிகளை செய்துள்ளேன். சில நாட்களுக்கு முன், அரசின் ஒரு சிறிய செய்தி அறிக்கையைப் பார்த்தேன்‌. அதில் தகவல் அறியும் உரிமை சட்டம்(RTI) மற்றும் ஜம்மு காஷ்மீர் பொதுச் சேவைகள்  உறுதியளிப்பு சட்டம்(PSGA) ஆகிய சட்டங்களை தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் செயல்படுத்துமாறு அரசு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். நான் உடனடியாக அந்த கூட்டத்தை கூட்டிய கூடுதல் துணை ஆணையாளர் முஸ்தாக் சிம்மானிக்குப் பாராட்டுத் தெரிவித்தேன். 370 வது பிரிவை நீக்கியபின் ஒரு மூத்த அதிகாரி தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளை த.அ.உ(RTI) மற்றும்  பொது சேவைகள் உத்தரவாத சட்டம் பொ.சே. உ.(PSGA) சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கூறுவதே இதுவே  முதல்முறை. பொ.சே.உ. சட்டம் 2019 ஆகஸ்ட் 5 க்கு முன்புவரை முந்தைய மாநில அரசால் சட்டப் பாதுகாப்பு தரும் வகையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கள யதார்த்தத்தில் அது நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் படி (2019) பாதுகாக்கப்பட்ட பல சட்டங்கள் இதே நிலையில் உள்ளன.

பொது சேவைகள் உத்தரவாத சட்டத்தின் பின்னணி

2009 ல் தகவல் சட்டத்தில் ஒரு முற்போக்கான அணுகுமுறையை மேற்கொண்டு ஜம்மு காஷ்மீர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றிய (பிரிவு 370ஐ நீக்கிய பின் திரும்பப் பெறப்பட்டு விட்டது)  உமர் அப்துல்லா தலைமையிலான‌ தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசு 2011 ல் மற்றுமொரு மக்கள் நல சட்டமான பொதுச் சேவை உத்தரவாதச் சட்டத்தையும் நிறைவேற்றியது. ஜம்மு காஷ்மீர் இந்த சட்டத்தை நிறைவேற்றிய பின் அசாம், பீகார், ஒடிசா, மே. வங்காளம், மகாராட்டிரம் மற்றும் பல மாநிலங்களும் மாநில அளவிலான பொதுச் சேவை சட்டங்களை கொண்டு வந்தன.

‘ஸ்டான் சுவாமியின் மரணம் இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு கறை’ – ஐ.நா. மனித உரிமை செயற்பாட்டாளர் மேரி லோலர்

பாகிஸ்தானின் கைபர் பாக்டுங்வா மாகாண அரசும் கூட 2014 ல்  “ஹக் இ ஹசூல் இ கிடமாத் கா கானூன்” என்ற இதே போன்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அது மேலும் ஒருபடி சென்று பொதுச் சேவை உரிமைகள் ஆணையத்தையும் உருவாக்கியது. நாமும் 2011 ல் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து  அது போன்ற ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும் எனக் கோரி வருகிறோம்.

பொ.சே. உ. சட்டப்படி  எந்த ஒரு ஜம்மு காஷ்மீர் குடிமகனும் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு பொதுச் சேவையை பெறும் உரிமை உண்டு. அத்தகைய சேவை தரப்படவில்லை எனில் தொடர்புடைய அதிகாரி தண்டணைக்குரியவர். சில ஆண்டுகளுக்கு முன் மேலும் 88 சேவைகள் அந்த சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டன. தற்போது 183 சேவைகள் இந்த சட்டத்தின் கீழ் வந்துள்ளன. ஆனால் இதை நடைமுறைப் படுத்துவது என வரும்போது நிலைமை மிகவும் வருத்தத்திற்குரியது. திறனற்ற பொதுச் சேவைகளால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப் படுகிறார்கள். லஞ்சம் அரசு அலுவலகங்களில் பரவிக் கிடக்கிறது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகளும் அவர்களுடைய உதவியாளர்களுமே இந்த சட்டத்தைப் பற்றி முழுதும் அறிந்தவர்களாக இல்லை. கடந்த மூன்றாண்டுகளில் ஒரு பயிற்சிப் பட்டறைக் கூட நடத்தப்படவில்லை. பிரிவு 370 ஐ நீக்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு உணர்திறன் திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை. 2029, ஆகஸ்டிற்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகி விட்டது.

‘பிணை பெற்றவர்களை காலந்தாழ்த்தி விடுவிக்கும் சிறை நிர்வாகம்’ – தன்னிச்சையாக விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம்

மக்களுக்கு  இந்த சட்டத்தின் படி உரிய அதிகாரி அல்லது முதலாவது அல்லது இரண்டாவது மேல் முறையீட்டு அதிகாரி யார் என்று கூடத் தெரியவில்லை. அவர்களுடைய விவரங்கள் அதிகாரபூர்வ வலைத்தளத்திலும் இல்லை. இது இந்த சட்டத்தை அடிப்படையிலேயே  தேவைப்படாத ஒன்றாக ஆக்கிவிட்டது.

ஜம்மு காஷ்மீரில் த.அ.உ.சட்டம்

இந்த ஜனவரி மாதம், நான் 2005 ம் ஆண்டின் பொ.சே.உ.சட்டம் மற்றும் த.அ.உ.சட்டம்  ஆகியவற்றின் கீழ் 2019 நவம்பர் 1 லிருந்து 2020, ஜனவரி வரை, பின்வதங்கிய சமூகங்கள் மற்றும் நியமிக்கப்பட்ட  அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட பயிற்சி திட்டங்கள் பற்றிய விவரங்களை த.அ.உ. சட்டத்தின்படி கேட்டிருந்தேன். அதற்கு பட்கம் துணை ஆணையர் அலுவலகத்தில்  உள்ள பொது தகவல் அதிகாரி தவறான வழிகாட்டும் பதிலை கொடுத்தார்.  “தனது அலுவலகத்தின் களஞ்சியத்தில் தகவல் இல்லை என்றும், கீழே கையொப்பமிட்டுள்ளவர் அத்தகைய எந்த ஒரு துல்லியமானத் தகவலைத் தருவதிலிருந்துத்  தடுக்கப்பட்டுள்ளார்,” என்கிறது அவரது பதில்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

நான் 2019, நவம்பர் 1 ம்  தேதியிலிருந்து 2020 ஜனவரி வரையிலான தகவல்களைத் தான் கேட்டேன். 40-50 ஆண்டுகளுக்கு முந்தைய அலுவலக பதிவேடுகளிலிருந்து தகவல்களை கேட்கவில்லை. உண்மையில் பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் பட்கம் மாவட்டத்தில் அந்த சட்டங்கள் குறித்த எந்த பயிற்சிப் பட்டறையும் நடத்தப்படவில்லை. இதே நிலைதான் பிற மாவட்டங்களிலும் உள்ளது.

த.அ.உ. சட்டத்தின் 26 வது பிரிவின் படி அரசு பின்தங்கிய சமூகங்களுக்கும், நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கும் த.அ.உ. சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  2005 ம் ஆண்டின் த.அ.உ. சட்டம் புதியது. மேலும் ஏற்கனவே உள்ள 2009 ம் ஆண்டின் ஜம்மு காஷ்மீர் த.அ.உ. சட்டத்திற்கும் இந்த சட்டத்திற்கும் சில வேறுபாடுகள் உள்ளன.  அதனால் இந்த சட்டத்தை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அதிகாரிகளின் வேலை  இல்லையா? உண்மையில் சட்டப்படி இது அவர்கள் கடமை ஆகும்.

தில்லி கலவரம்: வெற்றுத் தாளில் கையொப்பம் வாங்கிக் கொண்டு 16 மாதங்களாக சிறை வைக்கப்பட்ட இஸ்லாமியர்

2005 ம் ஆண்டின் த.அ.உ. சட்டத்தின் பிரிவு 26

பிரிவு(அ) வில் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் அமைப்பு ரீதியான திட்டங்களில் பொது அதிகாரிகளை பங்கெடுக்கச் செய்வதுடன் அத்தகைய திட்டங்களை அவர்களே நடத்தவும் ஊக்குவிக்க வேண்டும். பொது அதிகாரிகள் தங்கள் செயல்பாடுகள் குறித்துத் துல்லியமான தகவல்களை சரியான நேரத்தில் மற்றும் திறம்பட பரப்புவதை ஊக்குவித்தல் மற்றும் ஒன்றிய பொது அதிகாரிகள் அல்லது மாநில பொது அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் மட்டுமின்றி அந்த அதிகாரிகளே அத்தகைய பயிற்சிகளுக்கான பொருத்தமான பொருட்களை உருவாக்கலாம்.

மக்களுக்கு த.அ.உ. சட்டம் குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் இருப்பதன் மூலம் அரசு சட்ட ஏற்பாடுகளை மீறுவது மட்டுமல்ல, மக்களுக்கு அறிந்து கொள்ளும் உரிமையை மறுக்கும் குற்றத்தையும் செய்கிறது. ஜம்மு காஷ்மீரில் இந்த சட்டம் அமலாகி மூன்று ஆண்டுகளாகியும் இந்த சட்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அழைக்கும் விளம்பரத்தை செய்தித் தாள்களிலோ, மின்னணு ஊடகங்களிலோ ஜம்மு காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை ஒரு முறை கூட இதுவரை செய்யவில்லை. மறுபுறம் ஜிதேந்திர சிங் மற்றும் பிற பாஜக தலைவர்கள் ஜம்மு காஷ்மீரில் த.அ.உ. சட்டம் நீட்டிக்கப்பட்டதை மோடி அரசின் சாதனையாக உயர்த்திப் பிடிக்கின்றனர்.

கண்காணிப்பின் அரசியல் – அமேசானும் தொழிலாளர் பிரச்சினையும்

கால வரையறையுடன் கூடிய பதிலளிக்கும் செயல்முறையை பார்க்கையில் 2005 ம் ஆண்டு த.அ.உ. சட்டத்தை விட 2009 ம் ஆண்டின் ஜம்மு காஷ்மீர் த.அ.உ.சட்டம் (தற்போது திரும்பப் பெறப்பட்டு விட்டது) மிகவும் சிறப்பானதாகும். தற்போது நாங்கள் ஒரு சுதந்திரமான மாநில தகவல் ஆணையம் பெறுவதை இழந்து விட்டோம். தற்போது புது தில்லி மத்திய தகவல் ஆணையத்திடம்தான் இரண்டாவது மேல் முறையீட்டை பதிவு செய்கிறோம். இந்த வழக்குகள் ஆறேழு மாதங்களுக்குப் பிறகும் பட்டியலிடப்படுவதில்லை. ஜம்மு காஷ்மீர் த.அ.உ. சட்டப்படி மாநில தகவல் ஆணையம் மேல் முறையீட்டு மனுக்களுக்கு 60-120 நாட்களுக்குள் பதிலளிக்கப்பட வேண்டும். இத்தகைய விதி மத்திய த.அ.உ. சட்டத்தில் இல்லை. இதனால்தான் மத்திய தகவல் ஆணையத்திலும், மாநில தகவல் ஆணையங்களிலும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் குவிந்து கிடக்கின்றன.

பெருமையோடு திரியும் ஜாமியா துப்பாக்கிச் சூடு நடத்தியவன் – கவலையற்று இருக்கும் காவல்துறை

ஸ்ரீ நகரிலும், ஜம்மு காஷ்மீரிலும் உள்ள உள்ளூர் செய்தித்தாள்களில்  மாநில, மத்திய அரசுகளின்    திட்டங்கள் முழுபக்கங்களில் விளம்பரம் செய்யப்படுகின்றன. ஆனால் ஜம்மு காஷ்மீர் மக்கள் த.அ.உ.சட்டம் மற்றும் பொ.சே. உ. சட்டம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள கோரும் விளம்பரம் ஒன்றைக் கூட ஒரு போதும் நாங்கள்  பார்தத்ததில்லை. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு நிறைவேற்றிய சட்டங்களையும் திட்டங்களையும் பாஜக அரசு முன்னெடுக்க விருப்பவில்லை என்றே தெரிகிறது. ஒன்றிய அரசு த.அ.உ. சட்டம் மற்றும் பொ.ப.உ. சட்டம் ஆகியவற்றைப நடைமுறைப்படுத்துவது பற்றி  உண்மையான அக்கறைக் கொண்டிருந்தால் இந்த கோவிட் 19 தொற்றுக் காலத்தில் அது நூற்றுக்கணக்கான அரசு அலுவலர்களுக்கு அது குறித்து மெய்நிகர்  பயிற்சி அளித்திருக்க முடியும். ஜம்மு காஷ்மீரிலும் பிற மாநிலங்களிலும் நல்லாட்சியை நடத்த உதவும் சட்டங்களை வலுப்படுத்தாமல் ஜூலை 2,3 ஆகிய இரண்டு நாட்கள் ” நல்லாட்சி நடைமுறைப் பிரதி” என்ற வட்டார மாநாட்டை நடத்தியது கேலிக்குரியதாகும். நல்ல நிர்வாகம் குறித்தும், எண்ணியல்வழி கற்றல் ஆகியவற்றில் பணியாற்றும் அரசு சாரா தன்னார்வலர்கள், குடிமைச் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு இம்மாநாடு குறித்து அறிவிக்கப்படவே இல்லை. நான் தனிப்பட்ட முறையில் அரசிடம் இதில் மக்கள் பங்களிப்பும் இருப்பதை உறுதி செய்யுமாறு முன்னரே கேட்டிருந்தேன்.

ஏழைகளின் வயிற்றில் அடித்துள்ளதா ஜிஎஸ்டி: அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை

நடைமுறைப் படுத்தப்படாத காடுகள் உரிமைச் சட்டம்(FRA)

பிரிவு 370 ஐ நீக்கிய உடனே 2006 ம் ஆண்டின் காடுகள் உரிமைச் சட்டம் ஜம்மு காஷ்மீருக்கும் விரிவாக்கப்பட்டது. 2019 அக்டோபர் 31 முதல் நடைமுறைக்கும் வந்தது. நவம்பர் 2020 வரை ஒன்றிய அரசோ அல்லது உள்ளூர் நிர்வாகமோ அது பற்றி ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. அதன் பிறகு, நவம்பர் மாத துவக்கத்தில், 94 ஆண்டுகள் பழமையான, வழக்கிழந்த, காலாவதியாகிப் போன 1927 ம் ஆண்டின்  இந்திய காடுகள் சட்டத்தை அரசு கொண்டுவந்து, காஷ்மீரின் பல பகுதிகளும் வாழ்ந்து வந்த மலைவாழ் மக்களான குஜ்ஜார்கள் மற்றும் காடுகளை நம்பி வாழ்க்கையை நடத்தும் மக்களுக்கு அவர்கள் இடங்களை காலி செய்ய அறிவிக்கைகளை அனுப்பக் துவங்கியது. சில குஜ்ஜார்களின் மர குடிசைகள் இடித்துத் தள்ளப்பட்டன. பல ஆப்பிள் பழத் தோட்டங்கள் வனத்துறை அதிகாரிகளால் வெட்டி சாய்க்கப்பட்டன‌.

பட்கம்மின் கனிடாஜன் பகுதியில், நவம்பர் மாதத்தில் ஏறத்தாழ 10,000 ஆப்பிள் மரங்கள் வெட்டப்பட்டன. உள்ளூர் மக்கள் காடுகளை ஆக்கிரமித்து விட்டதாக அரசு கூறியது. இந்திய அரசு உண்மையில் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு காடுகள் உரிமைச் சட்டத்தின்படி அவர்களுக்குரிய நிலத்தை கொடுக்க வேண்டும் என்பதில் நேர்மையாக இருந்திருந்தால் ஒன்றியப் பகுதிக்கும் விரிவாக்கப்பட்ட உடனேயே அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். அதற்கு மாறாக நவம்பர் மாத இடைப்பகுதியில் பட்கமின் உயர்ந்த பகுதிகளிலும் அதே போல்  பிற மாவட்டங்களில் வாழ்ந்து வந்த மலைவாழ் மக்களுக்கும், பாரம்பரியமாக காடுகளை நம்பி வாழ்க்கை நடத்துபவர்களுக்கும் வெளியேறுமாறு அறிவிக்கைக் கொடுத்தது.

மதுரையில் மீட்கப்பட்ட பஞ்சமி நிலம் – நடவடிக்கை தொடருமா?

இவ்வாறு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட மக்கள் பல தலைமுறைகளாக இங்கே வாழ்ந்து வருபவர்கள்.  எதிர்ப்புப் போராட்டம், மெஹ்பூபா முஃப்டி போன்ற அரசியல் தலைவர்கள் மற்றும்   ஊடகங்களின் வருகை உள்ளிட்ட ஒரு மிகப் பெரிய பொது மக்கள் எழுச்சி உருவானது. அரசு உடனே தனது வெளியேற்றும் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு காடுகள் உரிமைச் சட்டம் நடைமுறை படுத்தப்படும் என அறிவித்தது. காஷ்மீரில் கடும் பனிப் பொழிவு நிலவிய ஜனவரி மாதத்தில் எலும்பையும் உலுக்கும் குளிரில் கிராம அவைகள் காடுகள் உரிமைக் குழுக்களை தேர்ந்தெடுத்தன.

இப்போது கிராம அவைகள் கூட்டப்பட்டு காடுகள் உரிமைக் குழுக்களும் அமைக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும், ஜம்மு காஷ்மீர் முழுவதும் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும்,  காடுகள் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு புகார் கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உட் கோட்ட அல்லது மாவட்ட அளவிலான காடுகள் கமிட்டி இந்த புகார்கள் குறித்து முடிவெடுக்க இது வரை எந்த கூட்டத்தையும் கூட்டவில்லை. இதற்குப் பதிலாக,  வனத்துறையின் ஜம்மு காஷ்மீர் மலைவாழ் மக்கள் விவகாரத் துறை,  காடுகள் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு கிளை முகமையை(nodal agency) அமைத்தது. பிற மாநிலங்களில் இவ்வாறு நடைபெறவில்லை.

பசுஞ்சாணமும் கொரோனாவும்; மோடி அரசின் அறிவியல் ஆலோசனைகள் – சத்யசாகர்

தேசிய மட்டத்திலும் கூட மலைவாழ் மக்கள் விவகார அமைச்சகம் தான் கிளை முகமையாக செயல்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம், காடுகள் உரிமைச் சட்டம் நடைமுறை படுத்தப்படுவதைக் காண மலையக மக்கள் விவகார அமைச்சகம் ஒரு வல்லுநர் குழுவை அனுப்பியது. குழிவின் உறுப்பினர்களான வி‌. கிரிராவ், ரமேஷ் பட்டி, ப்ரியா டைட் மற்றும் பிறர், குப்வாரா, பட்கம், அனந்தநாக் மாவட்டங்களைச் சேர்ந்த சாப்பன்கள் போன்ற  மலைவாழ் மக்களுடனும், கால்நடை மேய்ப்பர்கள் சமூகத்தினருடனும் கலந்துரையாடினர். ஆனால் அவர்கள் ஜம்மு காஷ்மீரில் காடுகள் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மலையக மக்கள் விவகாரத் துறை கிளை முகமையாக இல்லாமலிருப்பது கண்டு மிகுந்த கவலை அடைந்தனர்.

சாப்பன்கள் என்று அழைக்கப்படும் குஜ்ஜார்கள் மற்றும் காஷ்மீரி கால்நடை மேய்ப்பவர்கள் குறிப்பாக, கோடைக்காலத்தில் தங்கள் கால்நடைகளுடன் இடம்பெயரும் போது தொடர்ந்து கடினமான வாழ்க்கை நிலையில் இருக்கின்றனர். உயரமான மலைப்பகுதிகளில் உள்ள மரம் மற்றும் மண்ணாலான ‘கோத்தா’ என்றழைக்கப்படும் அவர்களது குடிசைகள் ஒவ்வொரு குளிர்கால பனிப் பொழிவிலும் நாசமாகி விடுகின்றன. அவைகளை அவர்கள் பழுதுபார்க்க வனத்துறை  அவர்களை அனுமதிப்பதில்லை. பெரும்பாலான சமயங்களில் மலைவாழ் மக்கள் வனத்துறை அலுவலர்களுக்கு லட்சம் கொடுக்க வேண்டி உள்ளது. அவ்வாறு லஞ்சம் கொடுக்க இயலாதவர்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு நெகிழி விரிப்புகளுக்கு கீழும், சிதிலமடைந்த கூடாரங்களிலிலும் இவர்கள் வாழ வேண்டும். காடுகள் உரிமைச் சட்டம் செயலுக்கு வந்தால் இவர்களின் துன்பம் தீரும் என நம்பப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

நான் அண்மையில்  பிர்பஞ்சால் மலைகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களைச் சென்று நேரில் பார்த்த போது அவர்கள் தார்பாலின்களுக்கு கீழ்தான் இன்னும் வாழ்ந்து வருவதைப் பார்க்க வேண்டியதிருந்தது‌. நான் 3,600 அடி உயரத்தில் திஸ்கால் பகுதியில் உள்ள புல்வெளியில் அஜீஸ் பேகம் என்ற கால்நடை மேய்ப்பவரைச் சந்தித்தேன். அவரது மரக் குடிசையுடன் மேலும் ஆறேழு குடிசைகளையும் திஸ்காலில் உள்ள கடத்தல்காரர்கள் பல ஆண்டுகளுக்கு முன் தீக்கிரையாக்கி விட்டனர். சாப்பன்கள் வனத்துறையினருக்கு உளவு சொல்பவர்களாக இருப்பதாக கடத்தல்காரர்கள் ஐயமுறுகிறார்கள். அஜீஸ் பேகத்தை அவருடைய குடிசையை சீர்செய்ய வனத்துறை அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அவர் 5,000-6000 ரூபாய் செலவிட்டு தார்பாலின்களையும், நெகிழி விரிப்புகளையும் வாங்கி வந்து தற்காலிக கூடாரம் அமைத்துக் கொள்கிறார். ஆனால் அவையும் கூட பலத்த காற்று வீசும் போதும், பனிப் பொழிவின் போதும் சேதமடைந்து விடுகிறது.  மற்ற சாப்பன்களைப் போலவே அஜீக்கு என சொந்தமாக ஆடுகள் இல்லை. அவர் விவசாயிகளின் ஆடுகளை பாதுகாத்து ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒரு சிறிய அளவுத் தொகையைப் பெற்று வருகிறார்.

மாட்டிறைச்சி உண்ணாதவர்கள் வசிக்கும் பகுதியில் மாட்டிறைச்சிக்கு தடை – சட்டமியற்றும் அசாம் மாநில அரசு

சாப்பன்கள் நிலமற்ற விவசாயிகளைப் போன்றவர்கள். எனினும், லடாக் அல்லது  ஜம்மு மற்றும் இமாச்சல் பகுதிகளில் வாழும்  காடிஸ் இனத்தவரை நீண்ட காலத்திற்கு முன்பே இந்திய அரசு பட்டியலின மலைவாழ் பழங்குடியினர் என அறிவித்துள்ள போதிலும் சாப்பன்களை இந்தப் பட்டியலின் கீழ் இதுவரை கொண்டுவரவில்லை.

பிற சாம்பன் குடும்பங்களோடு  தன்னையும்  காடுகளில் விறகு பொறுக்கக் கூட வனத்துறையினர் அனுமதிக்கவில்லை என நம்மிடம் அஜீ கூறினார். முன்பெல்லாம் இத்தனைக் கட்டுப்பாடுகள் இல்லை என அவர் மேலும் கூறினார். நான் சில வன அதிகாரிகளிடம் ஏன் குஜ்ஜாரிகளையும், கால்நடை மேய்ப்பவர்களையும் தங்கள் குடிசைகளை சீரமைத்துக் கொள்ளக் கூட அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்ட போது, அவர்கள் மூத்த அதிகாரிகளிடமிருந்து அதிகாரபூர்வ உத்தரவு தங்களுக்குத் தரப்படவில்லை என்று கூறினர்.

நியமிக்கப்படாத பட்டியல், பழங்குடி ஆணையத்தின் பொறுப்புகள் – வன்கொடுமை வழக்குகளை நீர்த்துப் போக செய்கிறதா ஒன்றிய அரசு?

RFCTLARR சட்டம்

2013 ம் ஆண்டின் வலுவான  RFCTLARR சட்டம் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பயனுடையதாக இருந்திருக்கும். இந்தச் சட்டத்தை ஒன்றிய பகுதிக்கும் விரிவுபடுத்தி உள்ள போதும் ஸ்ரீ நகர்  வட்டச்சாலைக்காக தங்கள் நிலப் கையகப்படுத்துவதை காஷ்மீர் விவசாயிகள் மகிழ்ச்சியாக ஏற்கவில்லை. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் இந்த ஸ்ரீ நகர் அரைவட்டச் சாலைத் திட்டத்திற்காக 800 ஏக்கர் நிலத்தை எடுக்கப் போகிறது. இதில் ஸ்ரீநகர் மற்றும் பட்கம் மாவட்டங்களிலிருந்து மட்டும் 700 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த 62 கி.மீ. மாற்று வழிச்சாலையால் ஸ்ரீ நகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில்(தே. நெ. சா. 44) வாகன நெரிசல் குறையும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவிக்கிறது. மேலும் இராணுவ வாகனங்கள் எனிதில் லடாக்கிற்குச் செல்லவும் இது உதவும். இந்தத் திட்டம் 2018, மே 19 ம் தேதி மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதற்கான ஆணை,  2017 ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் நில கையகப்படுத்துதல் சட்டத்தின் (1934) கீழ் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தச் சட்டம் 2017, ஆகஸ்ட் 5 ம் தேதியே திரும்பப் பெறப்பட்டு விட்டது.

ஒன்றிய அரசின் RFCTLARR சட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குப் பொருந்தாது. 1934 ம் ஆண்டின் ஜம்மு காஷ்மீர் நில கையகப்படுத்தும் சட்டத்தின் 4 மற்றும் 6 பிரிவின் படி குறிப்பாணைகளை அனுப்பிய பின், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் ஜூலை 2019 ல் ஆடைகளைப் பிறப்பிக்கப் தவறி விட்டது. இதனால் குறித்த, இரண்டு ஆண்டுகளுக்குள் ஏராளமான விவசாயிகளுக்கு இழப்பீடு தரப்படவில்லை.  ஜம்மு காஷ்மீர் நில கையகப்படுத்தும் சட்டத்தின் 6 வது பிரிவின் படி 2017, ஆகஸ்ட் மாதம் தரப்பட்ட குறிப்பாணைகளுக்கு அதற்குரிய இரண்டாண்டுகளாகியும் ஜூலை 2019 வரை ஆணைகள் பிறப்பிக்கப்படாததால் அது காலாவதியாகிவிட்டது.

இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் இந்துத்துவா – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமா?

2020, மே 18 ல்  காஷ்மீர் கோட்ட ஆணையாளருக்கு பட்கம் துணை ஆணையர் ஒரு அதிகாரபூர்வ கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் பட்கமில் உள்ள கிராமங்கள் உரிய அலுவலரிடமிருந்து ஆணையைப் பெறவில்லை. மேலும் அதில் அவர், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் காலாவதியாகிவிட்டதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். துணை ஆணையர் RFCTLARR சட்டத்தின் கீழ் புதிய நடைமுறைகளை மேற்கொள்ள  கோட்ட ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

” பிரிவு அ வில் கண்டுள்ளபடி, 2013 ம் ஆண்டின் RFCTLARR சட்டப்படி  நிலம் கையகப்படுத்துவதில் புதிய  நடைமுறைகளை  முன்னெடுக்க வழிகாட்ட வேண்டும்,” என அக்கடிதத்தின் முக்கிய பகுதி கூறுகிறது”

அடுத்த மூன்று மாதத்திற்குள், 2020, ஆகஸ்ட் 13 ல்,  திரும்பப் பெறப்பட்ட ஜம்மு காஷ்மீர் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி (1934) அதிகார பூர்வ அலுவலரான வருவாய் நிதி ஆணையர் ஓராண்டிற்கு முன் காலாவதியாகிவிட்ட ஆணைகளுக்கு  ஒப்புதலை வழங்கினார். இதன்மூலம்  அற்ப விலையில் நிலத்தை அபகரிக்க  அரசு ஒரு சட்ட மோசடியை செய்துள்ளது. உண்மையில், ஜம்மு காஷ்மீர் அரசுக்கும் அப்துல் சலாம் என்பவருக்கும் இடையிலான ஒரு வழக்கில் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் அரசுக்கு ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் நிலம் தேவைப்பட்டால் RFCTLARR சட்டத்தின் படி புதிய குறிப்பாணையை கொடுக்கலாம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த உயர்நீதிமன்ற உத்தரவை அரசு நடைமுறைப் படுத்தவில்லை.

சாதி அமைப்பு முறையை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? ஹரப்பாவினரா? – மரபணு சொல்வது என்ன?

இன்னொரு முரண்பாடு என்னவெனில்  ஆப்பிள் மற்றும் பிளம்ஸ் போன்ற பழம் தரும் மரங்களை மரங்களை சாலை அமைப்பதற்காக வெட்ட வேண்டிய திருந்தார் அதற்கு தரப்படும் இழப்பீடு பழத்தின் சந்தை விலையை விட ஐந்து அல்லது ஆறு மடங்கு குறைவாகவே இருந்தது. இதனையும் சில ஆண்டுகள் முன்பு வரை எதிர்ப்பிற்கிடையிலும் பெற்று வந்தனர். ஆனால் பிறகு மரங்களை வெட்ட இடைக்காலத் தடையை வாங்கி விட்டனர். ஆப்பிளுக்கு கிலோவிற்கு 16 ரூபாய், பிளம்ஸ் கிலோ 13 ரூபாய் என்ற அடிப்படையில் அந்தந்த மரங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலைகள் 1995 ல் நிர்ணயிக்கப்பட்டவை. 22 ஆண்டுகளுக்குப் பிறகும் இது மாற்றப்படவில்லை.

இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசின் முற்போக்கான சட்டங்களின் பயன்களைத் தருவதில் அரசுக்குள்ள நோக்கத்திற்கும்  அதன்  நடைமுறைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பது தெளிவாகிறது. இந்திய அரசின் வேளாண் செயலாளர் ஐந்தாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படியான ஊதியத்தைத் தற்போது பெற்றுக் கொள்வாரா? அவரால் அது இயலாதென்றால்,  மிகக் குறைவான விவசாய நிலம் வைத்துள்ள ஜம்மு காஷ்மீரின் ஏழை விவசாயி மட்டும் தற்போதுள்ள சந்தை விலைக்கு சற்றும் பொருந்தாத விலைக்கு சமமான இழப்பீட்டை ஒப்புக் கொள்ள முடியும்?

 

www.thewire.in இணையதளத்தில்  வெளிவந்த  கட்டுரையின் மொழியாக்கம்

கட்டுரையாளர்: ராஜா முசாஃபர் பட்

ஸ்ரீ நகரைப் பூர்வீகமாக கொண்ட சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர், ஆய்வாளர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்