Aran Sei

பாலஸ்தீனர்களை அச்சுறுத்தும் யூத பயங்கரவாதிகள் – கிராமங்களை விட்டு வெளியேற்றும் கொடுமை

ன்று நவீன நாஜிக்கள் வட கரோலினாவின் சார்லோட்டஸ்வில்லில் அணிவகுத்து சென்றபோது, “இருதரப்பிலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்,” என்று கூறினார் டொனால்டு ட்ரம்ப். வெள்ளை மேலாதிக்கத்தை வெறுப்பவர்கள் அதைக் கவனித்து எழுந்து நின்று அணிவகுப்பாளர்களைக் கண்டித்தனர். கடந்த வாரம் ஜெருசலேமில் நடந்த தீவிரவாத வலது சாரி அணிவகுப்பையும் இனவெறிக்கு எதிரானவர்கள் கண்டனம் செய்வது அறிவுடைமையாக இருக்கும்.

டமாஸ்கஸ் கேட் நுழைவாயிலிலிருந்து பழைய நகரம் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையிலான மோதல்களின் துவக்கத்தால்  ஜெருசலேமில் இந்த நிலை உருவாகி இருக்கிறது.  இரண்டு பாலஸ்தீன இளைஞர்கள்,  தீவிர மதவாத யூதர் ஒருவரை அறைந்ததை காட்டும் ஒரு டிக்-டாக் காணொளிக்குப் பதிலளிக்கும் விதமாக, லெஹாவா எனும் தீவிர வலதுசாரி யூதக் குழு “தேசத்தின் மரியாதைக்கான ஆர்ப்பாட்டம்” என்ற ஒன்றிற்கு அழைப்பு விடுத்தது.

கசிந்த சில புலனச் செய்திகள் பாலஸ்தீனியர்களைக் கொல்வதற்கான அழைப்புகளை விடுத்தது தெரியவந்தது. யூத- இஸ்ரேலிய தீவிரவாதிகள் தெருக்களில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த நிலையில், இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீன எதிர்ப்புப் போராட்டக்காரர்களை எஃகினால் ஆன இரப்பர் உறையிடப்பட்ட தோட்டாக்களால் சுட்டனர். ஒரு தீவிர மதவாத யூத இளம்பெண் விடுத்த செய்தி  அதிவேகமாக சமூக ஊடகங்களில் பரவியது. ” நான் உங்கள் கிராமங்களைத் தீக்கிரையாக்க விரும்பவில்லை. நீங்களாகவே வெளியேறிவிடுங்கள். நாங்கள் அவற்றை எடுத்துக் கொள்கிறோம்,” என்று அது கூறுகிறது. அவரது சட்டையில்” ரப்பி கஹானே சரியானவர்” என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. தீவிர தேசியவாதக் குழுவைச் சேர்ந்த ரப்பி அமெரிக்காவால் 2004 ல் பயங்கரவாதத் குழுக்கள் பட்டியலில் வைக்கப் பட்டிருந்தது.

‘நேரு, இந்திரா, ராஜிவ், மன்மோகன் உருவாக்கிய கட்டமைப்பால் தப்பிப்பிழைக்கும் இந்தியா’ – கொரோனா பேரிடர் குறித்து சிவசேனா

105 பாலஸ்தீனியர்கள் இந்த மோதலில் காயமுற்றனர்.அவர்களில் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய காவல்துறையினர் 20 பேரும் இதில் காயமடைந்துள்ளனர். மறுநாள் காலை இஸ்ரேல் உள்துறை அமைச்சர் அமீர் ஒஹானா விடுத்துள்ள அறிக்கையில் ” அராபியர்களின் தாக்குதலுக்கு” கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் யூதர்கள் நடத்திய வன்முறை பற்றி எதுவும் கூறவில்லை.

அமெரிக்க வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் ” தீவிர எதிர்ப்பாளர்களின் சொல்லாட்சியை” கண்டித்தார். எனினும் ஜெருசலேம் அறிக்கை “ஆழ்ந்த கவலை” தெரிவிப்பதாக மட்டும் கூறி, யூத பயங்கரவாதப் பிரச்சனையைத் தவிர்த்து விட்டது. அமெரிக்க யூத குழுவைச் சேர்ந்த அவி மேயர்,” வன்முறையைத் தூண்டும் தனிநபர்கள் எனக்கும் எனது யூத மதத்திற்கும்  அந்நியர்களாகவே தெரிகின்றனர், அவர்கள் மொட்டைத் தலைவர்களாக( பல நாடுகளிலும் உள்ள மழித்து தலையுடன் கூடிய இளைஞர்கள் குழு பெரும்பாலும் தவிர தேசியவாத கருத்துடையவர்களாக, செமிட்டிக் இன எதிர்ப்பாளர்களாகக் கருதப்படுகின்றனர்), வெள்ளை மேலாதிக்கவாதிதளாக மற்றும் உலகெங்கிலும் உள்ள   பிற இனவாதிகளாகத் தெரிகின்றனர். ஆனால் ஜெருசலேமில் “அராபியர்களுக்கு மரணம்” என்று முழக்கமிட்டவர்கள் இயல்பானவர்கள், இஸ்ரேலின் ஒரு பகுதியினராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள்,” எனத் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆளும் மாநிலங்களில் தேயும் பாஜக; தேர்தல்கள் சொல்லும் உண்மை – சரத் பிரதான்

ஜெருசலேமில் தீவிரவாதிகளின் அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்த லெஹாவா குழு உறுப்பினர்கள் கஹானியவாதிகள். இது ரப்பி மெய்ர் கஹானே என்பவனின் யூத மேலாதிக்கவாத கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட குழு. கஹானேவால் ஈர்க்கப்பட்டு, இஸ்ரேலிய குடியேற்றக்காரர் ப்ரூஃப் கோல்ட்ஸ்டைன், 1994 ல்  மேற்குக் கரையின் இப்ராஹிமி மசூதியில் 29 பாலஸ்தீனியர்களைப் படுகொலைச் செய்தார். 2014 ம் ஆண்டில் லெஹாவா குழுவைச் சேர்ந்த மூன்று பேர், ஒரு ஒருங்கிணைந்த பாலஸ்தீன- யூத இரு மொழிப் பள்ளிக்குத் தீ வைத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர்.

1998 ல், கஹானியத்தின் அரசியல் பிரிவான கச் கட்சி, இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில்  (Knesset) போட்டியிடுவதற்கு  தடை விதிக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை கச் கட்சியைப் பயங்கரவாத அமைப்பாக முத்திரையிட்டது. ஆனால் தற்போது கஹானிய இயக்கம் இஸ்ரேலிய அரசில் நுழைந்துள்ளதுடன், வெளிப்படையாகவே ஆயுதங்களுடன் இருக்கிறது.

‘ஒன்றிய அரசே, செவி மடு; தமிழகத்திற்கு மூச்சுக் காற்றை உடனே கொடு’ – மத்திய சுகாதார அமைச்சருக்கு சு. வெங்கடேசன் கடிதம்

சமீபத்தில் நடைபெற்ற இஸ்ரேலிய தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்ய விரும்புபவராக இருந்தார். தனது சொந்த கட்சியான லிகுட் கட்சி வாக்காளர்களையும் கூட, கஹானியத்தால் ஈர்க்கப்பட்டுள்ள  ஓட்சாமா யகுதித் கட்சியை உள்ளடக்கிய, அராபிய எதிர்ப்பு மதவாத யூத தேசிய வாத கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டினார். அதன்மூலம் தேர்தலில் வென்று விடலாம் என்று கருதினார். மதவாத தேசியவாதம் ஆறு இடங்களை வென்றது. இதனால் 1980 ம் ஆண்டிற்குப் பிறகு முதன் முறையாக கஹானியத்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையவிட்டது. தற்போது நெதன்யாகு கூட்டணி ஆட்சியை அமைக்க இயலாது என்பதை நிருபனமாகிவிட்டதால், பெரும்பாலும் அடுத்த  பிரதமராகும் வாய்ப்புள்ள நாஃப்டாலி பென்னட் மீது கவனம் திரும்பி உள்ளது.

2016 ல், பென்னட் மேற்குக் கரையை இணைத்துக் கொள்ள ” எங்கள் உயிரையும் தருவோம்” என்று இஸ்ரேலியர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்கள் தியாகத்தின் நாட்டுப்பற்றுடையச் செயல்கள் என்று கூறினார். பென்னட் அரசு அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில்,  மதவாத தேசியவாத அமைப்புகளுடனான சந்திப்புகளும் உள்ளன.

கிழக்கு ஜெருசலேம் – பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி இஸ்ரேலிய குடியேறிகளை அமர்த்துவதை எதிர்த்த இயக்கம்

பென்னட்டின் இத்தகைய வன்முறைக்கு அழைப்பு விடுக்கும் அறிவிப்புகள் நிச்சயமாக புனித நிலத்தில் அமைதியின்மையை அதிகரிக்க வழிவகுத்தன. ஜெருசலேமில் கடந்த வாரம் நடந்த தீவிரவாத அணிவகுப்பிற்குப் பின் பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்களுக்கும், இஸ்ரேலிய படைகளுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்றன. அத்துடன், காசா பகுதியிலிருந்து ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டன‌. அதற்கு இஸ்ரேலிய ராணுவம் குண்டு வீச்சால் பதிலளித்து வருகிறது. இறுதியாக, கடந்த ஏப்ரல் 25 ம் நாள் நிலைமையை மேலும் மோசமாக்க இஸ்ரேல் காவல்துறை ஆணையாளர் டமாஸ்கஸ் கேட்டில் உள்ள தடுப்பரண்களை அகற்றிவிட உத்தரவிட்டார்.

தற்போது ஜெருசலேமில் நிலைமை அமைதியாக இருந்தாலும், யூத தீவிரவாதத்தின் வெள்ள மடைகள் ஏற்கனவே விரிவாக திறந்து விடப்பட்டுள்ளன. சாய்லொட்டோஸ்வில்லியில் நடந்த நவீன நாஜி அணிவகுப்பும், அதற்கு ட்ரம்பின் பதிலும் உலகை மிகச் சரியாகவே எச்சரித்தது. ட்ரம்ப் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டிருந்தாலும், அவரது ஆட்சிகாலத்தில் மலர்ந்த இனவாத இயக்கம் அவரோடு தொடங்கியது அல்ல என்பதும், அது எல்லை மீறிச் சென்று விட்டது என்பதும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஜெருசலேமில் நடந்த கடந்த வார ” அராபியர்களுக்கு மரணம்” அணிவகுப்பிற்குப்பின் இஸ்ரேலில் உள்ள கஹானியத்தை எதிர்த்து பேச வேண்டியது நமக்கு அறிவுடைமை ஆகும்.

 

www.thewire.in இணைய தளத்தில் ஏரியல் கோல்டு எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்