Aran Sei

மோடியின் தவறுகள் – கட்டுப்பாடு இல்லாத ஒரு பெருந்தொற்று : தி கார்டியன் தலையங்கம்

image credit : theguardian.com

ந்த வாரம் இந்தியாவில், அரசியல் அகங்காரம் பெருந்தொற்று யதார்த்தத்தை எதிர்கொண்டது. மார்ச் தொடக்கத்தில், இந்தியாவின் ஹிந்து தேசியவாத நரேந்திர மோடி அரசாங்கம், இந்தியா கொரோனாவின் “இறுதிக் கட்டத்தில்” உள்ளது என்று கூறிக் கொண்டது. இப்போதோ, இந்தியா வாழும் நரகத்தில் உள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் பி.1.617 என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய “இரட்டை மாற்ற” வகை நோய்க்கிருமி தோன்றியுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகளும் ஆக்சிஜனும் இல்லாமல் போகும் நிலையை இந்தப் பேரழிவான இரண்டாவது அலை ஏற்படுத்தியுள்ளது. உடல்கள் வீடுகளிலேயே சிதைந்து போகும் நிலையில் விடப்படும் அளவுக்கு பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. இறந்து போனவர்கள் தெருக்களில் விடப்படுவதற்கான அபாயம் உள்ளது என்று தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.

வெள்ளிக்கிழமை இந்தியாவில் 3.32 லட்சம் [நேற்று 3.19 லட்சம்] புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகின. இது உலக அளவில், இந்தியா ஒரே நாளில் தொற்றுகள் அதிகரிப்பில் அதிகபட்ச அளவை எட்டிய, தொடர்ச்சியான இரண்டாவது நாள் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 2,200க்கும் [நேற்று 2,762] அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன.

பல நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை தடை செய்திருக்கின்றன அல்லது இந்தியாவுக்குப் போவதை தவிர்க்குமாறு தமது குடிமக்களுக்கு பரிந்துரைத்துள்ளன அல்லது இந்தியா போய் வந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி வலியுறுத்துகின்றன.

ஆனால், ஆறு வாரங்களுக்கு முன்பே, மக்கள் தொகையில் 1% கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நிலையில், இந்தியா “உலகத்தின் மருந்தகம்” என்று அறிவித்தார் திரு மோடி. பெருந்தொற்றுக்கு முந்தைய வாழ்க்கையை மீண்டும் தொடங்கலாம் என்ற செய்தியை அதன் மூலம் அவர் மக்களுக்கு அளித்தார்.

இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானவர்கள் விளையாட்டு மைதானங்களை நிரப்பியதாலும், கும்ப மேளா திருவிழாவில் இலட்சக்கணக்கான ஹிந்துக்கள் கங்கையில் குளித்ததாலும் தொற்று பரவல் பெருமளவு அதிகரித்தது.

டொனால்ட் டிரம்பைப் போலவே திரு மோடியும் பெருந்தொற்று அலை வீசிக் கொண்டிருக்கும் போது கூட தேர்தல் பிரச்சாரத்தை கைவிட தயாராக இல்லை. இந்தியா ஐந்து மாநில தேர்தல்களை ஏப்ரல் மாதம் நடத்துவதை நிறுத்தவில்லை, முகக்கவசம் அணியாத மோடி பெரும் பொதுக்கூட்டங்களை நடத்தினார்.

மோடியின் முத்திரையிலான இந்திய தனித்துவவாதம், அசட்டைத்தனத்தை வளர்த்தது. தேசிய மகத்துவம் என்ற ஒரு முன்அனுமானம் தயாரிப்பில்லாத நிலைக்கு வழி வகுத்தது, மிகக் குறிப்பாக தடுப்பூசி உற்பத்தியில் தயாரிப்பில்லாத நிலைக்கு வழி வகுத்தது.

இந்தியாவை உலக மருந்து உற்பத்தியின் முக்கியமான கண்ணியாக ஆகும்படி இந்தியாவை மேற்கத்திய நாடுகள் ஊக்குவித்தன. ஆனால், இது ஒரு தவறாக இருக்கலாம் என்று இந்த வாரம் ஜெர்மன் வேந்தர் ஏஞ்சலா மெர்க்கல் கருத்து தெரிவித்திருந்தார்.

இப்போது, சீனாவும் அமெரிக்காவும் இப்போது இந்தியாவை விட அதிக தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. இருந்தாலும், ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமெரிக்கா இணங்கவில்லை [இப்போது அமெரிக்கா இந்தியாவுக்கு ஏற்றுமதிகளை அனுமதித்துள்ளது], இந்தியா ரசியாவிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டது.

இந்திய பிரதமர் தனது சொந்த உள்ளுணர்வுகள் மீதான அசட்டு நம்பிக்கையால் பீடிக்கப்பட்டுள்ளார், அவர் நிபுணர்களின் அறிவுரையை ஒதுக்கித் தள்ளுகிறார். ஒரு முன்னாள் காங்கிரஸ் பிரதமர் அவர்களுக்கு ஆலோசனை வழங்கத் துணிந்ததற்காக மோடியின் அமைச்சர்கள் அவரை மோசமாக தாக்கினார்கள். அவர் சென்ற வாரம் கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்ற ஆண்டு, மோடி இந்தியாவின் 130 கோடி மக்கள் மீது ஒரு கொடூரமான திடீர் முழு அடைப்பை சுமத்தினார். முன் எச்சரிக்கை இல்லாத முழு அடைப்பு நாட்டின் நோய்த்தொற்று நிபுணர்களின் அறிவுரைக்கு  மாறானதாக இருந்தாலும், நாடகத்தனமான நடவடிக்கைகளை விரும்பும்  மோடிக்கு அது உகந்ததாக இருந்தது.

ஒப்பீட்டளவில் இளஞர்களை அதிகமாகக் கொண்டுள்ள இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் விகிதாசாரம் பிற நாடுகளை விடக் குறைவாகவே இருக்க வேண்டும். இருந்தாலும், இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து பதிவு செய்வது தொடர்பான சந்தேகங்கள் தொடர்ந்தாலும், இந்தியர்கள் ஏதோ ஒரு வகையில் அதிக நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டவர்கள் என்ற ஆதாரமில்லாத கருத்து நாட்டு மக்கள் மத்தியில் பரவியது, அதைத் தடுக்க மோடி எதுவும் செய்யவில்லை.

கொரோனா முதல் அலை இந்தியாவின் நகரங்களை தாக்கியது, ஆனால் அது இப்போது நாட்டின் பெரும்பான்மையினர் வாழும் கிராமப் புறங்களுக்கு பரவி வருகிறது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட பல நாடுகளைப் போல, இந்தியாவின் அதிக இறப்பு எண்ணிக்கை தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியதே, அது ஆணவமான, திறமையில்லாத அரசு நிர்வாகத்தால் ஏற்பட்டது.

இந்தியா ஒரு பெரிய, சிக்கலான, வேறுபாடுகள் நிறைந்த நாடு. நல்ல காலத்திலேயே அந்த நாட்டை ஆள்வது சிரமமானது. ஒரு தேசிய நெருக்கடியின் போது கேட்கவே வேண்டாம். இப்போது அது,  இணையான இரண்டு பெருந்தொற்றுகளான கொரோனாவாலும் பயத்தாலும் அவதிப்படுகிறது.

உயிரியியல் ரீதியான தொற்றையும் சமூகத் தொற்றையும் கட்டுப்படுத்துவதற்கு நம்பும்படியான உத்தரவாதம் தேவைப்படுகிறது. பீதியை மட்டுப்படுத்தவும், மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிக்கான விதிகளை பின்பற்றுவது அவசியமாக உள்ளது.

இந்த சீர்குலைவை சரி செய்வதற்கான பொறுப்பை மோடி மாநில அரசுகள் மீது சுமத்தியுள்ளார். ஆனால், பொறுப்பு அவரிடம்தான் உள்ளது. பெருமளவு துன்பங்களை ஏற்படுத்தியுள்ள, தனது தவறுகளை ஒத்துக் கொண்டு அவற்றை அவர் சரி செய்ய வேண்டும்.

கட்டுப்பாடுகளை எப்படி அமல்படுத்துவது என்பது தொடர்பாக நிபுணர்களுடன் ஆலோசிக்க வேண்டும். வாக்களித்தபடி அரசின் சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒற்றுமை தேவைப்படும் இந்த நேரத்தில், அவரது பிரித்தாளும் பிரிவினை சித்தாந்தத்தை கைவிட வேண்டும். பேரழிவான பொதுச் சுகாதார விளைவுக்கு இட்டுச் சென்ற, தனது பிற்போக்கான கருத்துக்களிலேயே தொடர்ந்தால், திரு மோடியை வரலாறு மன்னிக்காது.

 

தி கார்டியன் நாளிதழில் வெளியான தலையங்கத்தின் மொழியாக்கம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்