Aran Sei

இந்தியாவில் உணவுச் சந்தையை பிடிக்கத் துடிக்கும் மேற்கத்திய கார்ப்பரேட்டுகள் – உத்சா பட்நாயக்

Image Credit : thehindu.com

விவசாயிகள் போராட்டம் தொடர்பான உலகளாவிய பார்வை – உத்சா பட்நாயக்

விவசாயிகளை பெரிதும் பாதிக்கக் கூடிய, ஆனால், அவர்களை கலந்தாலோசிக்காமலேயே நிறைவேற்றப்பட்ட, மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களை ரத்து செய்வதற்கான விவசாயிகளின் போராட்டம், இரண்டாவது மாதத்தை எட்டியுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம்.

இந்தப் போராட்டம் குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கானது மட்டுமல்ல, உணவுப் பொருட்களை அரசு கொள்முதல் செய்வது, பொது வினியோகம் செய்வது உள்ளிட்ட ஒட்டு மொத்த கட்டமைப்பு தொடர்பானது இந்தப் போராட்டம்.

நாட்டின் தானிய களஞ்சியமான வட இந்தியாவில் உணவு தானிய உற்பத்தியின் பொருளாதார சாத்தியத்தை உறுதி செய்யாமல் அரசு கொள்முதலும், பொது வினியோகமும் தொடர்வதை உறுதிப்படுத்த முடியாது. இந்த முறையில் குறைபாடுகள் இருந்தாலும் அது நாட்டின் பெருவாரியான மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்கின்றது.

காலனி ஆட்சி காலத்தின் நிலைமைகள் மறுபடியும் உருவாக்கப்படுதல்.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற வடக்கத்திய தொழில்துறை நாடுகள், அவர்களது நாட்டு நுகர்வுக்குத் தேவையான அளவில் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பயிர்களை தாமே உற்பத்தி செய்ய முடியாது. அதே நேரத்தில் ஒற்றைப் பயிர் வேளாண்மை அடிப்படையில் உணவு தானியங்கள், பால் பொருட்கள் அந்நாடுகளில் ஏராளமாக உற்பத்தி செய்யப்பட்டு அவற்றின் உபரி அந்நாடுகளில் மலையாக குவிகின்றன.

அந்நாடுகள் இந்த உபரி உற்பத்தியை விற்பதற்கு ஏற்றுமதி சந்தைகளை தேடுகின்றன. இருபது ஆண்டுகளாக வளரும் நாடுகள், தமது சொந்த சொந்த அரசு கொள்முதல் முறைகளை கைவிடுமாறு இடைவிடாத அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். மாறாக, வளரும் நாடுகள் முன்னேறிய நாடுகளிலிருந்து தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில் தங்கள் விவசாய நிலத்தை தொழில்துறை நாடுகள் வாங்க விரும்பும், ஆனால் அவர்களால் உற்பத்தி செய்ய முடியாத, ஏற்றுமதிக்கான பயிர்களின் உற்பத்திக்குத் திருப்பி விட வலியுறுத்துகின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால், காலனி ஆட்சி காலத்திய பொருளாதார சூழ்நிலையை உருவாக்க முன்னேறிய நாடுகள் விரும்புகிறார்கள்.

1990 களின் நடுப்பகுதியில் பிலிப்பைன்ஸ், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு போட்ஸ்வானா (ஆப்பிரிக்கா) வரையிலான டஜன் கணக்கான வளரும் நாடுகள் இந்த அழுத்தத்திற்கு அடிபணிந்தன.

அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உணவு தானியங்கள் எரிசாராய (எத்தனால்) உற்பத்திக்குத் திருப்பி விடப்பட்ட போது, உலகச் சந்தையில் உணவு தானியங்களின் விலை 2007-ம் ஆண்டு இறுதியில் இருந்து சில மாதங்களில் மூன்று மடங்காக அதிகரித்தது. அந்நாடுகள் அதிகரித்த விலையில் உணவுதானியங்களை வாங்க வேண்டிய நிலையில் கடும் பாதிப்பை எதிர் கொண்டன.

புதிதாக இறக்குமதியை சார்ந்திருக்கச் செய்யப்பட்ட 37 நாடுகளில் உணவுக்கான கலவரங்கள் நடந்தன, நகர்ப்புற ஏழை மக்கள் அதிக வறுமையில் தள்ளப்பட்டனர்.

வளரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்பு என்பது உலகச் சந்தையின் தயவில் விட முடியாத அளவுக்கு முக்கியமானது. ஆனால், தமது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்நாடுகள் தானியங்களை பொதுக் கையிருப்பில் சேமித்து வைப்பதன் மீது இடைவிடாத தாக்குதல் தொடர்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா அழிவின் விளிம்பில் இருந்து த்ப்பிப் பிழைத்து. ஆறு ஆண்டுகளாக குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படாமல் தேக்கமடைந்த பிறகு 2008-ல் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டன. அதன் மூலம் பொருளாதார ஆதரவு மேம்பட்டதால் பஞ்சாபில் உணவு தானிய உற்பத்தி தேக்க நிலையில் இருந்து மீண்டது.

ஆனால் ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே’ உள்ளவர்களுக்கான ரேஷன் அட்டை என்ற பிரிவிலிருந்து பலரை தொடர்ந்து விலக்குவதால் உணவு தானியங்களை வாங்கி நுகர்வது மேம்படவில்லை, அதே நேரத்தில், 2016-ம் ஆண்டின் பண மதிப்பு நீக்கம், அதைத் தொடர்ந்த 2020 கொரோனா பெருந்தொற்று இவற்றின் காரணமாக அதிகரித்த வேலையின்மை உணவு தானியங்களுக்கான மொத்த வேண்டலை வரலாறு காணாத அளவுக்குக் குறைத்து விட்டிருக்கிறது.

நியாயமற்ற வர்த்தகத்துக்கான ஒரு உதாரணம்

எந்த காரண காரியங்களும் இல்லாமல் நமது விவசாயிகள் நியாயமற்ற வர்த்தகத்துக்கும், உலகச் சந்தையின் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் பலியாக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் திருப்பிச் செலுத்த முடியாத கடன் சுமைகளிலும் பிற துயரங்களிலும் தள்ளப்பட்டுள்ளனர். பஞ்சாபில் ஒரு கிராமத்தில் மட்டும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்ட விவசாயிகளின் 59 விதவைகள் உள்ளனர்.

வடக்கத்திய முன்னேறிய நாடுகளுடனான வர்த்தகம் நியாயமற்றது. ஏனென்றால், 1990 களின் நடுப்பகுதியில் இந்த முன்னேறிய நாடுகள், விவசாயத்துக்கான தங்கள் சொந்த விலை ஆதரவு நடவடிக்கைகளை விவசாயிகளுக்கு நேரடி பணப் பரிமாற்றமாக மாற்றிக் கொண்டன. தமது நலன்களுக்கு உகந்த வகையில் அவற்றை விவசாயத்துக்கான ஒப்பந்தத்தில் எழுதிக் கொண்டனர். அதன்படி, இந்த நேரடியாக பணம் வழங்கும் வடிவிலான மானியங்கள், உலக வர்த்தகக் கழகத்தின் விவசாய ஒப்பந்தத்தின் கீழ் குறைக்கப்பட வேண்டிய கடப்பாடுகளுக்கு உட்பட்டவை அல்ல.

இந்தியாவும் பிற நாடுகளும் இந்த நிபந்தனையின் தாக்கத்தைப் பற்றி அதிக சிந்தனை இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அமெரிக்காவில் 20.2 லட்சம் விவசாயிகளுக்கு நேரடி பண பட்டுவாடா செய்யப்படுகிறது. அது அமெரிக்காவின் ஆண்டு விவசாய உற்பத்தியில் பாதி அல்லது அதை விட அதிகமான தொகை ஆகும். இதற்கு அமெரிக்க அரசு அதன் வரவு செலவு திட்டத்தில் 1% மட்டுமே செலவிடுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, மத்திய அரசின் ஒட்டுமொத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 50% க்கும் மேல் செலவிட்டால்தான் நமது 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டு விவசாய உற்பத்தியில் கால் பகுதி மானியத்தைக் கூட வழங்க முடியும். இது பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது நிர்வாக ரீதியில் ஒரு கொடுங்கனவு.

வேண்டியது நியாயமான ஒரு விலை

அற்ப தொகைகளை இலவசமாக பெறுவது தங்களுக்குத் தேவையில்லை என்பதை விவசாயிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்; அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்கள் நாட்டுக்காக உற்பத்தி செய்யும் முக்கிய உணவுப் பயிர்களுக்கு நியாயமான விலை வேண்டும் என்பதே. அதன் மூலம் அவர்கள் தமது விவசாய செலவுகளை ஈடுகட்டி, மிதமான தரத்தில் வாழ்க்கை நடத்த முடியும்.

இந்திய சூழ்நிலைகளில், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை மட்டுமே உண்மையில் சாத்தியமான ஒன்றாகும். பஞ்சாபில் நிலத்தடி நீர் மட்டம் வீழ்ச்சியடைவது ஒரு உண்மையான பிரச்சினையாக இருந்தாலும், அதற்கான தீர்வு நெல் பயிரிடுதலை குறைப்பதில் இல்லை, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் நெல் தீவிர சாகுபடி போன்ற முறைகளை அறிமுகப்படுத்துவதில் தீர்வு உள்ளது. தலைவலி என்றால் தலையை வெட்டுவது தீர்வாகாது!

விவசாயம் தொடர்பாக உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தில் முன்னேறிய நாடுகள் அவர்களது விருப்பப்படி, அபத்தமான கணக்கீட்டு விதிகளின் கீழ் பயிர்களுக்கான ஆதரவு விலைகளை வரையறுக்கின்றன.

மே 2018 இல் உலக வர்த்தக கழகத்தில் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா புகார் அளித்தது,

  • உணவுப் பயிர்களுக்கான ஆதார விலையை கணக்கிடுவதற்கான ‘குறிப்பு விலை’ குறிப்பிட்ட பயிரின் 1986-88 சராசரி உலக விலை ஆகும்.
  • அந்த விலை அப்போதைய ரூபாய் டாலர் மாற்று விகிதமான டாலருக்கு ரூ 12.5 என்பதற்கு ஏற்ப ரூபாயாக மாற்றப்பட்டது.
  • அதன்படி 2013-14ம் ஆண்டில் ஒரு குவின்டால் அரிசி, கோதுமைக்கு இந்தியா வழங்கிய ஆதரவு விலை முறையே ரூ 235, ரூ 354 ஆக இருந்திருக்க வேண்டும்!
  • உண்மையான ஆதரவு விலைகள் ரூ1,348 மற்றும் ரூ1,386 ஆக இருந்தன. இந்தக் கணக்கீட்டின்படி வேறுபாடு குவின்டால் ஒன்றுக்கு ரூ1,000 க்கும் அதிகமாக இருந்தது.
  • இந்த வேறுபாட்டை 2013-14 ம் மொத்த நெல் மற்றும் கோதுமை உற்பத்தி அளவால் பெருக்கினால் அவை முறையே அவற்றின் மொத்த உற்பத்தி விலையில் முறையே 77%, 67% (https : //bit.ly/3mROANe) ஆக இருந்தன.
  • இது, ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவான 10% ஐ விட அதிகமான ஆதரவு என்று அமெரிக்கா புகார் செய்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா இந்தியாவுக்கு புதிய கேள்விகளை அனுப்பியது. வளரும் நாடுகளை ஏமாற்றுவதற்காக ஒவ்வொரு வகையான நேர்மையற்ற, அபத்தமான நிபந்தனைகள் விவசாய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

நமது விவசாயிகள் உலகின் மிகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்பவர்களாக உள்ளனர், எனவே, 2013-14 -ம் ஆண்டில் அப்போதைய விகிதமான டாலருக்கு ரூ 60.5 என்ற அளவில் வழங்கப்படும் ஆதரவு விலைகள் உலகளாவிய விலையை விடக் குறைவாக உள்ளன, அதாவது இந்திய விவசாயிகள் பெறும் குறைந்தபட்ச ஆதரவு எதிர் எண்ணாக உள்ளது.

சரியான மதிப்பீடு

உலகளாவிய வேண்டலின் தற்போதைய சுருக்கத்தின் காரணமாக கோதுமை விலையும், அரிசி விலையும் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னேறிய நாடுகளில் விவசாய மானியங்கள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளன, எனவே, தமது தானியங்களை நமது சந்தைகளில் கொட்டுவதற்கான அந்நாடுகளின் தவிப்பும் அதிகரித்துள்ளது.

போராடும் விவசாயிகள், தாங்கள் எதிர்க்கும் விவசாய சட்டங்களில் இருந்து ஆதாயம் அடைபவர்களாக உள்நாட்டு கார்ப்பரேட்டுகளை சரியாக அடையாளப்படுத்தினாலும், வெளிநாட்டு விவசாய கார்ப்பரேட்டுகளும் அதே அளவுக்கு ஆபத்து விளைவிப்பவையாகவே உள்ளன.

விவசாயிகள் ஏற்கனவே பஞ்சாபிலும் ஹரியானாவிலும் வெளிநாட்டு விவசாய நிறுவனங்களுடன் ஒப்பந்த விவசாயம் செய்து அனுபவம் பெற்றிருக்கிறார்கள். சக்திவாய்ந்த, முகமற்ற தனியார் நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய விரும்பவில்லை என்று அவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள். அந்நிறுவனங்கள் தமக்கு தேவைப்படும் போது விலை ஒப்பந்தங்களையும், அளவு ஒப்பந்தங்களையும் முறித்துக் கொள்கின்றன.

அரசு கொள்முதலில் திறன் இன்மையும், பணம் வருவதில் தாமதமும் இருந்தாலும், விவசாயிகள் அரசு முகவர்களிடம் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்பதையே விரும்புகிறார்கள். புதிய சட்டங்களால் அனுமதிக்கப்படும் தனியார் சந்தைகளில் ஒழுங்குமுறை ரத்து செய்யப்படுதல், சந்தையில் வணிக நிறுவனங்கள் நுழைதல், அவை இந்திய நிறுவனங்களாக மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களாகவும் இருப்பது ஆகியவை அரசு கொள்முதல், குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவற்றுக்கான ஒட்டு மொத்த கட்டமைப்பையும் சீர்குலைப்பது என்று விவசாயிகள் சரியாகவே கருதுகின்றனர்.

‘பசுமை எரிசக்தி’ உந்துதல்

வடக்கத்திய முன்னேறிய நாடுகளில் இருந்து மானிய விலையில் தானியங்களை இறக்குமதி செய்வது நம்நாட்டு ஏழை நுகர்வோருக்கு பயனளிக்கும் என்று வாதிடும் பல இந்திய அறிவுஜீவிகள் உள்ளனர். முன்னேறிய நாடுகளில் ‘பசுமை எரிசக்தியை’ ஆதரிக்கும் போக்கு அதிகரித்து வருவதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அதன் மூலம் தானியங்களை எத்தனாலாக மாற்றுவது ஊக்குவிக்கப்படுகிறது.

எனவே ஆரம்பத்தில் குறைந்த விலை தானிய இறக்குமதிகள், அனுமதிக்கப்பட்டால், அது நம் விவசாயிகளை அழிப்பது மட்டுமல்லாமல், விரைவில் விலைவாசி உயர்வுக்கும் நகர்ப்புற துயரங்களுக்கும் வழிவகுக்கும்.

நமது சொந்த நாட்டின் கடினமாக உழைக்கும் விவசாயிகள் மீதும் வறுமையில் வாடும் நுகர்வோர் மீதும் உண்மையான அக்கறை கொண்ட எவரும், உள்நாட்டு, வெளிநாட்டு மேல்தட்டு வணிக நிறுவனங்களின் சூழ்ச்சிகளுக்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டும்.

– உத்சா பட்நாயக்

தி ஹிந்து இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்