Aran Sei

`அவர்களின் நலனுக்காக விழைகிறேன்’ – டி.எம்.கிருஷ்ணாவின் The Edict Project – பச்சோந்தி

டி.எம்.கிருஷ்ணா எழுதிய `செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ நூல் 2020 பிப்ரவரி மாதம் சென்னையில் வெளியானது. மிருதங்கம் செய்யும் தொழிலாளர்கள் குறித்து நான்கு ஆண்டு தொடர் ஆய்வுக்குப் பிறகு புத்தகமாக வெளியிட்டிருந்தார். மிருதங்கக் கலைஞரான பாலக்காடு மணி ஐயருக்கும் மிருதங்கத் தயாரிப்புக் கலைஞரான பர்லாந்து (எ) பெர்னாண்டஸுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்தை அடிப்படையாகக்கொண்ட ஒரு உறவுமுறை இருந்திருக்கிறது. பர்லாந்து, தலித் கிறிஸ்தவராவார். முதலில் இந்நூல் கலாசேத்ராவில் நடைபெறுவதாக இருந்தது. பின்பு அங்கு நிகழ்ச்சி நடைபெற தடை ஏற்பட வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

`தான் வார்பிடித்து உருவாக்கும் மிருதங்கம், அவர்களின் வீட்டு பூஜையறை வரை செல்கிறது. ஆனால், சாதியின் காரணமாகத் தன்னால் அவர்களது வீட்டு வாசற்படி ஏறமுடியவில்லை’ என்பதை மிருதங்கப் படைப்பாளர் சொன்னதாக டி.எம்.கிருஷ்ணாவின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த காரணத்தால் கலாசேத்ராவில் இந்த நூல் வெளியிட தடைவிதிக்கப்பட்டது.

மத்திய கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும் கலாசேத்ரா இதுதொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில் ‘ கலாசேத்ரா அரசு நிறுவனமாக இருப்பதால் அரசியல், கலாச்சாரம், சமூக நீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் அனுமதிக்கமுடியாது’ என்று கூறியிருந்தது.

Credit : thefederal

பின்பு, சென்னை தரமணியில் உள்ள ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியில், குறிப்பிட்ட அதே நாளில் நூல் வெளியீடு நடைபெற்றது. மிருதங்கக் கருவியை உருவாக்கும் கலைஞர்கள் மேடையேற்றப்பட்டு, அவர்கள் மூலம் புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் மற்றும் ராஜாஜி-காந்தி ஆகியோரின் பேரனும் ஆய்வாளருமான ராஜ்மோகன் காந்தி இருவரும் வெளியிட்டனர். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நூல் வெளியீட்டில் பேசிய தொல்.திருமாவளவன் “உலகில் தோன்றிய முதல் இசைக்கருவி பறைதான். அதன்பிறகு அதன் வடிவம் மெல்ல மெல்ல தவிலாக, மிருதங்கமாக இன்னும் வெவ்வேறு கருவிகளாக மாறியது. மரத்தாலான கருவியின் வடிவம் மாற மாற பெயர் மாறுகிறது. புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை கலாஷேத்ரா ரத்துசெய்ததும், நான் வெளியிடுகிறேன் என்கிற காரணத்தால்தான் ரத்து செய்தார்களோ என நினைத்தேன். ஆனால், புத்தகத்தில் இருக்கும் கருத்துகள்தான் காரணம்.

நாலு வர்ணம்தான் இன்றும் இந்த நாட்டை ஆட்சிசெய்துகொண்டிருக்கிறது என்பதற்கு கலாசேத்ரா இந்நூல் வெளியீட்டை ரத்துசெய்ததுதான் சாட்சி. மிருதங்கத்துக்கே இந்த நிலை எனும்போது, தோல்கருவிகளுக்கெல்லாம் முன்னோடியான பறையின் நிலை என்ன? உண்மையில், மிருதங்கமும் பறைதான். மிருதங்கப்பறை. உழைக்கும் மக்களின் கருவிகளான தோல் இசைக்கருவிகளை என்றைக்குமே இந்தச் சமூகம் உதாசீனப்படுத்திவந்துள்ளது. ‘நாலு வர்ணத்தையும் நானே படைத்தேன்’ என்றார் கிருஷ்ண பரமாத்மா, சமத்துவமும் ஜனநாயகமும் பேசுகிறார் இந்தக் கிருஷ்ணா. கிருஷ்ணர் என்றாலே கலகம்தான். இந்தக் கலகம் கேள்விகளை எழுப்பட்டும். அவர்களைச் சிந்திக்க வைக்கட்டும். அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி” என்றார்.

இதுகுறித்துப் பேசிய `கலாசேத்ராவில் நிகழ்ச்சி நடைபெறாமல் போனதால் எனக்கு வருத்தமில்லை. இது அவர்களுக்குத்தான் இழப்பு’ என டி.எம்.கிருஷ்ணா தெரிவித்திருந்தார்.

டி.எம்.கிருஷ்ணாவின் குரல் அதிகாரத்துக்கு எதிராகத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே வருகிறது. 2019 – ம் ஆண்டு சீன அதிபர் தமிழகம் வந்திருந்தபோது சென்னை விமான நிலையத்தில் நாட்டுப்புறக்கலைஞர்கள் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து ”நான் டிவியில் பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது கலைஞர்கள் வேற்றுமையுடன் நடத்தப்பட்டது நன்றாக தெரிந்தது. பரதநாட்டியக் கலைஞர்களுக்கு மட்டும் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மற்ற நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மேடை இல்லை.

அதேபோல், சீன அதிபர் ஷி ஜிங்பிங் தங்கிய ஐடிசி ஓட்டல் முன்பு நாதஸ்வரக் கலைஞர்கள் மேடையில், வெயிலில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். இதுபோன்று பாகுபாட்டுடன், வேற்றுமையுடன் நடத்துவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால், இந்தியப் பண்பாட்டை நாம் கொண்டாடி வருகிறோம் என்று கூறி வருகிறோம். உண்மையில் நாம் சாதியத்தைத் தான் கொண்டாடி வருகிறோம்.

நான் என்னுடைய பார்வையில் எதையாவது தவற விட்டு இருந்தால் குறிப்பிடவும். விமான நிலையத்தில் பரத நாட்டியக் கலைஞர்கள் குறித்தும் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் இதற்கு இதுவரை எந்தப் பதிலும் இல்லை” என்று பதிவிட்டிருந்தார்.

கிறிஸ்துவ, இஸ்லாமிய பாடல்களை கர்னாடக இசையில் பாடியதால் கர்னாடக இசைக் கலைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு அலைகள் எழுந்தன. ஒருமுறை `நீங்கள் இசையைத் தாண்டி அரசியலில்தான் அதிகம் ஈடுபடுவதாகத் தெரிகிறதே’ என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பிய போது ‘இசையில் அரசியல் இல்லை என்று யார் சொன்னது. இசை எங்கே இருக்கிறது; சமுதாயத்தில் தானே. யார் இசையில் அரசியல் இல்லை என்று சொல்கிறானோ அவனே அதிகபட்ச அரசியலைக் கையாள்பவனாக இருப்பான். கேள்வி எழுப்பாமல் இருப்பதும் ஒரு அரசியல். எனவே, இசையில் அரசியல் இருப்பது நிஜம்’ என்று பதிலடி கொடுத்தார்.

கர்னாடக இசையுலகில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் டி.எம்.கிருஷ்ணாவின் சமீபத்திய முன்னெடுப்பு ‘ தி எடிக்ட் புராஜெக்ட்’. உலக மக்களுக்கு அன்பையும் அமைதியையும் போதித்த அசோக மாமன்னனின் கல்வெட்டுச் சித்திரங்களுக்குக் கர்னாடக இசை வடிவம் கொடுத்துள்ளார். இக்கல்வெட்டுச் சித்திரங்கள் பிராகிருத மொழியில் உள்ளன. ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய இக்காணொலியை அசோகா பல்கலைக்கழகத்துடன் இணைத்து தயாரித்துள்ளார். அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய அக்டோபர் 14 – ம் தேதி யூடியூப் – ல் பதிவேற்றி உள்ளார்.

`எல்லோரும் எனது மக்கள். எல்லோரும் எனது குழந்தைகள். நான் அவர்களின் நலனுக்காக விழைகிறேன். எத்தகைய நலன்? நலன் இந்த உலகத்தில் உள்ளது. அதற்கு அப்பாலும்…’ என்று தொடங்கும் அப்பாடல் இசை ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்