Aran Sei

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் தனியார்மயம்தான் – ஷோபா சக்தி

லங்கை சுதந்திரம் பெற்ற 1948-ல், ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பணக்கார நாடாக இலங்கை இருந்தது. 1970-ல் அமைந்த இடது கூட்டணி அரசு முற்றாக இலவசக் கல்வி, இலவச மருத்துவம், கூட்டுறவு முறையில் உணவுப் பங்கீடு என ஆசியாவிலேயே சிறந்த சமூகநல அரசாக இலங்கையை உருவாக்கியது. 1980-ல் உலகிலேயே வாழ்க்கைச் செலவு குறைந்த நாடுகளின் வரிசையில் முதலாவதாக இலங்கை இருந்தது. ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கையுடன் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு மெல்ல மெல்லச் சரியலாயிற்று. யுத்தம் அதை இன்னும் தீவிரமாக்கியது.

திறந்த பொருளாதாரக் கொள்கை, சுதந்திர வர்த்தக வலயம், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பன்னாட்டுக் கொள்ளை நிறுவனங்களுக்கு நாட்டைத் திறந்துவிட்ட எல்லா மூன்றாமுலக நாடுகளிலும் இந்த வீழ்ச்சி நடந்திருக்கிறது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்ட  தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா போன்ற ஏழு தூரகிழக்கு ஆசிய நாடுகளை முதலாளிய ஆதரவாளர்கள் ‘ஏழு பொருளாதாரப் புலிகள்’ எனப் புகழ்ந்த வாயை மூடும் முன்பே, அவை பெரும் பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்தது நமக்கு ஞாபகமிருக்கிறது.

பொதுமக்களை குற்றவாளியாக்கும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – மக்களவையில் மஹுவா மொய்த்ரா ஆவேசம்

திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும், பன்னாட்டு நிறுவனங்களும் மூன்றாமுலக நாடுகளிகளின் மீது பல்வேறு அழுத்தங்களைப் போட்டுப் பணிய வைக்கின்றன. வரலாற்று ரீதியாகவே தேசிய முதலாளித்துவ அரசாக உருவாகாமல், வெறும் தரகு முதலாளித்துவ அரசாக வெம்பிப் பிறந்த இலங்கை போன்ற அரசுகளுக்கு முதலாளியம் வேறு தெரிவுகளை விட்டு வைக்கவில்லை.

இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி திடீரென ஏற்பட்டதல்ல. திறந்த பொருளாதாரக் கொள்கை கடந்த நாற்பது வருடங்களாக உருவாக்கி வந்த படிப்படியான சீரழிவு இது. ஏற்பட்டுக்கொண்டிருந்த வீழ்ச்சியை மேலும் துரிதமாக்கியவர்கள் ராஜபக்ச சகோதரர்கள். அவர்கள் சிவப்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக்கொண்டே இலங்கையைத் துண்டுபோட்டுச் சீன நிறுவனங்களுக்கு விற்றுத் தள்ளிய வேகம் சீனாவையே வியக்க வைத்தது.

தீவிரமாகும் வெப்பமயமாதல் – உலகைக் காக்க வழி கூறும் ஐ.பி.சி.சி

இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைக் காரணம் காட்டி இனி மேலும் அழுத்தங்கள் பன்னாட்டு நிறுவனங்களாலும், உலக வங்கியாலும், சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளாலும் இலங்கை மீது திணிக்கப்படும். முதல் வெட்டு சமூகநலத் திட்டங்களின் மீதே விழும். இலவச மருத்துவம், இலவசக் கல்வி, உணவு மானியம் எல்லாவற்றையும் படிப்படியாகக் குறைத்து இல்லாமலாக்குமாறு கட்டளையிடப்படும். அரசு நிறுவனங்களான போக்குவரத்து சபை, மின்சார சபை போன்றவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்க ஊக்குவிக்கப்படும். குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழுதாக விற்கப்படும்.

உண்மையில், இந்த நிலை ஏற்படும் என்பதை இலங்கையின் இடதுசாரி அறிஞர்கள் நீண்டகாலமாகவே சொல்லி வந்திருக்கிறார்கள். குறிப்பாக ‘சோசலிஸ சமத்துவக் கட்சி’ இது குறித்து ஏராளமான நூல்களையும் ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் மூன்று மொழிகளிலும் பல பத்து வருடங்களாக வெளியிட்டு வருகிறது.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாலன்றி, இந்த வீழ்ச்சியிலிருந்து இலங்கையால் எழுந்து வர முடியாது. அத்தகைய ஒரு பொருளாதாரக் கொள்கை மாற்றத்தைச் சாதிக்க நினைக்கும் வெனிசுலாவின் சாவேஸ் போன்ற ஒரு தலைவர் இலங்கையில் உருவாகி ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும் உலக முதலாளித்துவம் இலங்கையை உலகப் பொருளாதார அச்சிலிருந்து விலக்கி வைத்துத் தண்டிக்கும்.

இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் எழுச்சி ஆட்சியாளர்களிற்கும், இனிவரப் போகும் ஆட்சியாளர்களிற்கும் நிச்சயமாகவே ஒரு பலத்த எச்சரிக்கையையும் அழுத்தத்தையும் கொடுத்திருக்கிறது. இலங்கையின் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்படும்வரை வெகுமக்களின் இந்த விழிப்புத் தணிந்துவிடக் கூடாது என்று சொல்வதைக் காட்டிலும், இனிக் காலம் பூராவுமே இத்தகைய விழிப்புடனேயே இருக்க வேண்டியிருக்கும்.

கட்டுரையாளர் – ஷோபா சக்தி, எழுத்தாளர்

இச்சா, BOX கதைப் புத்தகம், கண்டி வீரன், கொரில்லா, தேசத்துரோகி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

…………..

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான ஒப்பந்தத்தால் தமிழர்களுக்கு ஆபத்து என்கிறார் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி

மேலும், அறிய லிங்க்கை கிளிக் செய்யவும்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்