Aran Sei

டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

சென்ற வாரம் (ஜூலை 19, 2021) டெல்லியில் டாக்டர் அம்பேத்கர் காலனியில் இருந்த கிறிஸ்தவ ஆலயம் (Little Flower Syro Malabar Church) ஒன்று இடிக்கப்பட்டது. தெற்கு டெல்லி சடார்பூர் பகுதியில் இருந்த ஆலயம் இது. கோவாவில் இருந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இப்படி நடந்துள்ளது தனக்குத் தெரியாது எனவும் அது ”டெல்லி வளர்ச்சி அதிகார” நிர்வாகத்தின் (Delhi Development Authority – DDA) கீழ் உள்ளது எனவும் கூறியுள்ளார். ஆனால் DDA உயர் அதிகாரி ஒருவர்  இது தனக்குத் தெரியாது எனவும் தாங்கள் இதைச் செய்யவில்லை எனவும் கூறியுள்ளதை ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் பதிவு செய்துள்ளது. ஆனால் DDA நீதிமன்ற அனுமதி பெற்று இப்படி இடித்துள்ளதாகவும் செய்தி வருகிறது. தாங்கள் அம் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யத் தயாராக உள்ளதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இன்னொரு பக்கம் இந்த நேரத்தில் டெல்லியில் இருந்த கேரள முதல்வர் பினரயி விஜயன், “அதிர்ச்சி அளிக்கிறது” – என இந்த ஆலய இடிப்பைக் கண்டித்துள்ளார். கேரள அரசு இதில் ஏதும் செய்ய முடியாது எனவும், இது குறித்து என்ன செய்யலாம் என ஆலோசிப்பதாகவும் கூறியுள்ளார்.

மோடி அரசை விரட்டும் ‘பெகாசிஸ்’ என்னும் பிசாசு – அ.மார்க்ஸ்

மொத்தத்தில் டெல்லி மீதான இரட்டை அதிகாரம் இப்படி இந்த ஆலய இடிப்பை யார் செய்தது என்று கூட அறிவிக்காமல் செய்வதற்கு வாய்ப்பாக இருந்துள்ளது. தற்போது தாங்கள் தற்காலிகமாக ஓரிடத்தில் வழிபாடுகளைச் செய்து வருவதாக அந்த ஆலய குருவான அருட்தந்தை ஜோஸ் கூறியுள்ளார்.

ஆலயம் இருந்த இடம் பொதுவானது எனவும் அதைக் கிறிஸ்தவர்கள் ஆக்ரமித்து அந்த ஆலயத்தைக் கட்டியுள்ளனர் எனவும் தெற்கு டெல்லி BDO (Block Development Officer) கூறியுள்ளார்.

டெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமலும், இது குறித்து எங்களிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தாமலும் இது செய்யப்பட்டுள்ளதாக அருட்தந்தை ஜோஸ் கூறுகிறார். ”இடிப்பது என நிர்வாகம் முடிவெடுத்திருந்தால் அது குறித்த முன் அறிவிப்பு செய்திருக்க வேண்டும். அப்படி ஏதும் செய்யவில்லை. எந்தப் பேச்சுவார்த்தை, உரையாடல் எதுவும் நடக்கவில்லை. என் கண் முன்னால் எல்லாம் நடந்தேறியது. புனிதர்களின் திரு உருக்கள் தகர்க்கப்பட்டன. வழிபாட்டுக்கான புனிதங்கள் உடைக்கப்பட்டன. பூசை நடத்தும்போது பயன்படுத்தப்படும் எலெக்ட்ரானிக் கருவிகளும் சேதப்படுத்தப் பட்டன. பலிபீடம் இருக்கிறது. ஆனால் அதை இனி பயன்படுத்த முடியாது. இது ஒரு கான்க்ரீட் கட்டிடம்கூட இல்லை. ஒரு 14 ல்லது 15 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த ஒன்று”

இதற்கிடையில் தெற்கு டெல்லி மாவட்ட அதிகாரி (South Delhi District Magistrate) அங்கிடா சக்கரவர்த்தி இது குறித்துச் சொல்கையில் காவல்துறையின் (Home Police-II Department) கடிதம் ஒன்றின் அடிப்படையில் இது மேற்கொள்ளப் பட்டதாகக் கூறியுள்ளார். ஆக்ரமிப்பு நிலங்களில் உள்ள கட்டிடங்களை இடிப்பதற்கான 2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை ஒன்று இதற்கு ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

ஆக்ரமிப்பாளர்கள் இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகியதாகவும், மதம் தொடர்பான பிரச்சினைகளுக்கான குழுவுக்கு அதை அனுப்பியதாகவும், அங்கிருந்து காவல்துறைக்கு அனுப்பி, சென்ற மார்ச் 03 (2021) அன்று இடிப்பதற்கு ஆணை இடப் பட்டதாகவும் அங்கிதா கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக 2015 இல் உயர்நீதிமன்றம் அளித்த ஆணை ஒன்றும் (HC order of 2015) காட்டப்பட்டதாகச் சொல்லியுள்ளார். அந்த ஆணையின்படி அடித்தளத்திற்கு மேலுள்ள முழுக் கட்டிடம் மற்றும் சிலைகள் வைக்கப்படாத அடித்தளப் பகுதிகள் முழுவதையும் இடிக்க ஆணை இடப்பட்டுள்ளதாகவும் அங்கிதா கூறியுள்ளார். மதப் பிரச்சினைகளுக்கான குழுவின் (Religious Committee) முடிவுக்குக் காத்திராமல் இதைச் செய்யுமாறும் அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அப்படி என்ன அவசரம் இந்த நடவடிக்கைக்கு என நமக்குப் புரியவில்லை.

‘ஜெய்பீம்’: வரலாறும் பின்னணியும் – ஆதவன் தீட்சண்யா

கிறிஸ்தவ அமைப்பினரின் புலம்பல்கள்

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் இப்போது அதிகரித்து வருகின்றன. 2021 மார்ச் 19 அன்று உ.பியில் உள்ள ஜான்சி எனும் இடத்தில் பயணம் செய்து கொண்டிருந்த கிறிஸ்தவ கன்னியர்கள் கைது செய்யப்பட்ட செய்தியை அறிவோம்.

இந்த நாட்டிலிருந்து பாதிரிகளை விரட்ட வேண்டும் எனும் திட்டத்தின் கீழ் மூன்று கொலைகள் உட்பட 145 வன்முறைகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தற்போது நடந்துள்ளதாக கிறிஸ்தவர்கள் தரப்பில் இப்போது குற்றம் சாட்டுகின்றனர். டெய்னிஸ் பாஸ்கர் (Dainik Bhaskar) எனும் பெயரில் செயல்படும் ஊடகங்களின் வழியாக “முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இல்லாத இந்தியா” (Chadar aur Father Mukt Bharat ) என்கிற கருத்து இப்போது  பரப்ப்ப் படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். Evangelical Fellowship of India (efionline.org) எனும் கிறிஸ்தவ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இப்படிநடைபெற்றுள்ள 145 வன்முறைகள்  பட்டியல் இடப்பட்டுள்ளன. இதில் 3 கொலைகள், 22 கிறிஸ்தவ தேவாலயம் தக்கப்பட்டது, கிறிஸ்தவர்கள் மீதான சமூகத் தடைகள் மேற்கொள்ளப்பட்ட 20 சம்பவங்கள் தொடர்பான விவரங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன.

வரலாற்றின் நினைவில் ஒரு பயணம் – பாபாசாஹேப்பின் பெடரேஷன் கட்சியும் அதன் செயல்பாடும்

இதில் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் இப்படியான 30 சம்பவங்கள் நடந்துள்ளன. ஆதிவாசிகள் அதிகமாக உள்ள பகுதி இது என்பது குறிப்பிடத் தக்கது. மதமாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் முதலில் இயற்றப்பட்ட மாநிலமும் அதுதான். கிறிஸ்தவர்களைப் பொருத்த மட்டில் அடுத்து மிகவும் ஆபத்தாக உள்ள மாநிலம் உத்தரபிரதேசம் எனவும் அங்கு நடந்த 22 தாக்குதல்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன. கர்னாடகத்தில் 14 தாக்குதல்களும், சட்டிஸ்கரில் 13 தாக்குதல்களும் நடந்துள்ளன. எட்டு மாநிலங்களில் இன்று மதமாற்றத் தடைச் சட்டங்கள் உள்ளன.

இப்படி நிறையச் சொல்லலாம் என இது தொடர்பான அறிக்கையில் கிறிஸ்தவ அமைப்பினர் புலம்பியுள்ளனர்.

கொரானாவை கையாளாததால் விசாரணைக்கு உள்ளாகும் பிரேசில் அதிபர் – எப்போது மோடி?

கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல்: நாங்கள் பங்கு பெற்ற இரண்டு ஆய்வுகள்

2008 ல் ஒடிஷாவின் கந்தமால் மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டவை நினைவிருக்கலாம். வெளியில் இருந்து அங்கு வந்து பல ஆண்டுகளாக ஆசிரமம் நடத்திக் கொண்டு இந்துத்துவ அரசியல் செய்துவந்த இந்து சாமியார் லஷ்மணானந்தா என்பவரை மாவோயிஸ்டுகள் அப்போது கொன்றார்கள். தாங்கள்தான் கொன்றோம் என்பதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்கள். அதை ஒட்டி  மிகப்பெரிய அளவில் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர். அப்போது மனித உரிமைப் போராளி டாக்டர் பாலகோபால் உயிருடன் இருந்தார். அவரது முயற்சியின் விளைவாக ஒரு குழு அமைக்கப்பட்டு நான், சுகுமாரன் உட்பட அங்கு நேரில் சென்று ஆய்வுகளைச் செய்தோம். இந்துப் பழங்குடியினருக்கும் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் இடையில் பகை மூட்டி மிகப் பெரிய அளவில் ”கர்வாபசி” நடந்து கொண்டிருந்த காலம் அது. எங்களையும் ஒரு கும்பல் தாக்க முயன்றபோது நாங்கள் உயிர் தப்பி வந்ததே சிக்கலானது. அந்த நேரத்தில்தான் வட கர்நாடகம் மங்களூர் மாவட்டத்திலும் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டனர். கிறிஸ்தவ ஆலயங்களும் உடைக்கப்பட்டன.

பலகோபால் தலைமையிலான குழுவில் மீண்டும் நாங்கள் அங்கு சென்று ஆய்வு செய்தோம். அப்போது வெளிவந்த கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்த எனது நூல் முக்கியமான ஒன்று. (தற்போது அச்சில் இல்லை). வரலாற்று ரீதியாக இந்தியக் கிறிஸ்தவம் பற்றிய சில முக்கிய குறிப்புகள் அடங்கிய நூல் அது.

ஏழைகளின் வயிற்றில் அடித்துள்ளதா ஜிஎஸ்டி: அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை

2019 இல் மீண்டும் அதிக அளவில் ஒடிஷாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டனர். கிறிஸ்தவர்கள் என்றால் ஏதோ கேரளம் அல்லது தமிழகத்தில் உள்ளது போல அவர்கள் ஓரளவு வசதியானவர்கள் இல்லை. அவர்கள் பெரும்பாலும் அடித்தள மக்கள். பழங்குடியினர். தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில்தான்  ஆதிக்கசாதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் குறிப்பிட்ட அளவு உள்ளனர்.

ஒடிஷா அல்லது வட கிழக்கு மாநிலங்களில் உள்ளவ கிறிஸ்தவர்கள் மிகவும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் பழங்குடி மக்கள். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் ஏழ்மையையும் தீண்டாமையையும் அனுபவித்த போதும் அவர்களுக்கு எஸ்.சி பட்டியலில் இடம் கிடையாது. எனவே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு முதலிய சலுகைகளும் இவர்களுக்குக் கிடையாது. ஆனாலும் அவர்கள் பொய்சொல்லி அதைப் பயன்படுத்துகின்றனர் என்கிற பிரச்சாரம் மதவெறியர்களால் செய்யப்பட்டது. ஒடிஷா மாநிலத்தில் உள்ள கந்தமால் மாவட்டத்தில் இந்துத்துவ சக்திகள் இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையை மையப்படுத்தி தலித்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையே பகை மூட்டினர். ஏழை எளிய தலித் கிறிஸ்தவர்கள் பெரிய அளவில் கட்டாயமாகக் கர்வாபசி செய்யப்பட்டு மீண்டும் இந்து மத்த்திற்குக் கொண்டு வரப்பட்டதும் அப்போது நடந்தது. நாங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கிறிஸ்தவர்களைச் சந்திக்கவும் இயலாத அளவிற்கு அப்போது அச்சுறுத்தலும் இருந்தது.

பசுஞ்சாணமும் கொரோனாவும்; மோடி அரசின் அறிவியல் ஆலோசனைகள் – சத்யசாகர்

கொரோனா கொடுந் துயரிலும் குறையாத கொடுமைகள்

சென்ற நவம்பர் 12, 2020 இல் மதச் சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் குறித்து ’ஆன் லைன்’ இல் நடந்த பன்னாட்டுப் பிரார்த்தனை நாள் வழிபாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 150 பிரதிநிதிகள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். (பார்க்க: https://adfinternational.org/news/one-attack-per-day-on-christians-in-india/). கொரோனா தாக்குதல் பின்னணியிலும் கூட சிறுபான்மையினர் மீதான இந்தத் தாக்குதல்கள் குறையவில்லை எனவும் சராசரியாகத் தினசரி ஒரு தாக்குதல் நடப்பதாகவும் அவர்கள் கூறினர். இந்திய அரசியல் சட்டத்தில் எல்லோருக்கும் வழிபாட்டு உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தும் அதனால் பயனில்லை எனவும் அவர்கள் தம் வேதனையை வெளிப்படுத்தினர். 2019 லிருந்து கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது. எங்காவது பிரார்த்தனை கூட்டங்கள் நடந்தால் அங்கே கும்பலாக வந்து அதைக் கலைப்பது, பெண்கள் குழந்தைகள் எனப் பார்க்காமல் வந்து தாக்குவது என்பதாக இவை நடக்கின்றன. காவல்துறை வந்து வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் பாதிரிமார்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டார்கள் என அவர்கள் மீதே வழக்குத் தொடர்வது என்பதுதான் நடைமுறையாக உள்ளது எனவும் அவர்கள் தம் துயரங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் இந்துத்துவா – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமா?

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக மிக்க் குறைவு வெறும் 2.3% தான். அதுவும் குறைந்து வருகிறது.தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் மேகாலயா முதலான பகுதிகளில்தான் அவர்கள் கொஞ்சம் செரிந்துள்ளனர். அந்த வகையில் கிறிஸ்தவத்தை ஒருவகையான திராவிட மற்றும் பழங்குடி மதம் எனச் சொல்வாரும் உண்டு. கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் எனப் பரவலாகக் கருத்து இருந்தபோதிலும் அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருவதே உண்மை.

 

கட்டுரையாளர் : அ.மார்க்ஸ்
ஓய்வுபெற்ற பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்