முன்னாள் பிரதமரான சவுத்ரி சரண் சிங், 1954-ல் அவர் உத்தரபிரதேச அமைச்சராக இருந்த போது பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு ஒரு பரிந்துரையை வழங்கினார். அரசு அதிகாரிகளாக விரும்புபவர்கள் சொந்த சாதிக்கு வெளியே திருமணம் செய்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது அப்படி விரும்புவோராக இருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை இயற்றுமாறு அவர் நேருவிடம் கேட்டுக் கொண்டார்.
அந்தப் பரிந்துரை இந்திய குடிமக்களின் சுதந்திரமாக செயல்படும் உரிமையை மீறுவதால் நேரு அதனை நிராகரித்து விட்டார்.
ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குதல்
சரண் சிங்கின் மாநிலமான உத்தர பிரதேசத்தில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதை தடை செய்யும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது, அந்த நிலைப்பாட்டிலிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகி வந்து விட்டோம் என்பதற்கு காட்டுகிறது. உத்தர பிரதேச அரசாங்கத்தின் முழு கவனமும் முஸ்லீம் ஆண்களை திருமணம் செய்வதிலிருந்து இந்து பெண்களை ‘பாதுகாப்பதில்’ உள்ளது. அதனை ‘மத மாற்றங்களை ஒழுங்குபடுத்துவது’ என்ற போலி நியாயத்தின் கீழ் அது செய்கிறது
உத்தர பிரதேசத்தின் சட்டம் மத்தியப்பிரதேசம் போன்ற பாரதிய ஜனதா கட்சி ஆளும் பிற மாநிலங்களுக்கும் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது.
பாஜகவுக்கு உத்தரகாண்டில் ஏற்பட்ட சங்கடம்
பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான உத்தரகாண்ட் உத்தர பிரதேசத்துக்கு அருகில் உள்ளது. அம்மாநிலத்தின் சமூக நலத்துறை வெளியிட்ட வழக்கமான ஒரு செய்திக்குறிப்பில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் திருமணம் செய்வதை ஊக்குவிக்கும் திட்டத்தை முன் நிறுத்தியிருந்தது.
உத்தரகாண்ட் மாநில சமூக நலத்துறையின் இந்த செயல், ‘மத சுதந்திரத்துக்கான’ சட்டங்கள் என்று அழைக்கப்படும் சட்டங்கள் மூலம் பாஜக ஆளும் மாநிலங்கள் வேகமாக புகுத்தி வரும் மதவாத பார்வைக்கு விரோதமாக இருந்தது. எனவே, இந்தச் செய்திக்குறிப்பு முறைகேடானது என்று கருதிய மாநில முதலமைச்சர் ஒரு விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.
மதம் மாறி திருமணம் செய்வதற்கான சட்ட உரிமை
1872-ம் ஆண்டில், பிரம்ம சமாஜத்தின் கேஷப் சந்திர சென், வெவ்வேறு [மத, சாதிய] பின்புலத்தைக் கொண்டவர்கள் தங்களது ‘மனசாட்சிக்கு இணங்க’ திருமணம் செய்வதை அனுமதிக்கக் கோரி அனுப்பிய மனுக்களின் அடிப்படையில், காலனிய அரசு அதற்கான ஒரு சட்டத்தை உருவாக்கியது.
சுதந்திர இந்தியாவில் 1954-ம் ஆண்டின் சிறப்பு திருமணச் சட்டம் இதை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் சென்றது. அத்தகைய திருமணம் செய்து கொள்பவர்கள் தத்தமது சொந்த மதத்தைத் துறக்க வேண்டும் என்ற காலனிய சட்டத்தின் நிபந்தனையை 1954 சட்டம் ரத்து செய்தது.
ஆனால், மத அடிப்படையிலான தனிநபர் சட்டங்களைப் போல அல்லாமல், திருமணம் குறித்து முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று நிபந்தனையை 1954 சட்டம் விதித்தது. அதன் மூலம் திருமணத்தில் அரசின் தலையீட்டுக்கு அது வழி வகுத்தது.
ஏற்கனவே திருமணம் செய்த துணைவர் யாரும் உயிரோடு இல்லை என்பதையும், திருமண வயதை எட்டாத குழந்தைகளுக்கு திருமணம் செய்யப்படவில்லை என்பதையும் உறுதி செய்வதற்காக இந்த நிபந்தனை சேர்க்கப்பட்டது. ஆனால், மதவாத குழுக்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் திருமண இணைவுகளை தடுத்து நிறுத்துவதற்கு இந்த நிபந்தனையை தவறாக பயன்படுத்துகின்றனர்.
சகோதரத்துவத்தை அழிக்கும் சட்டங்கள்
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில், சமீப காலங்களில் கால்நடைகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவது தொடர்பாகவும், திருமணம் தொடர்பாகவும் மத மாற்றங்கள் தொடர்பாகவும் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும் போது அவை முஸ்லிம்களை குறிவைக்கின்றன; பொதுவான சமூக வெளிகள் குடியரசின் சமத்துவமான குடிமக்கள் என்ற அவர்களது உரிமைகள் இரண்டையும் அவர்களுக்கு மறுக்கின்றன.
இது நீண்ட காலமாக இந்தியாவின் யதார்த்தமாக உள்ள அன்றாட வாழ்க்கை சகோதரத்துவத்தை அழிக்கிறது. உத்தரபிரதேச சட்டவிரோத மத மாற்றத்திற்கு எதிரான அவசர சட்டம் – 2020, மத்தியப் பிரதேச மத சுதந்திர மசோதா – 2020 ஆகிய அவசர சட்டங்கள் குறைந்தது நான்கு அம்சங்களில் குறிப்பிடத்தக்க வகையில் மோசமானவை.
அடிப்படையிலேயே தவறானவை
நமது அரசியலமைப்பின் கீழ், தனிப்பட்ட குடிமக்களுக்குத்தான் உரிமைகளும் கடமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன, அவர்கள் அவற்றை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்தப் புதிய சட்டங்கள் தனிப்பட்ட குடிமக்களின் இடத்தில் மத சமுதாயங்களை அடிப்படை அலகுகளாக வைக்கின்றன. இந்திய அரசியலமைப்பு வழங்கும் ஒவ்வொரு தனிநபரும் பயன்படுத்துவதற்கான உரிமையை மறுப்பதன் மூலம் அவை நமது குடியரசின் கட்டமைப்பை அடிப்படையில் சிதைக்கின்றன.
சிறுபான்மை உரிமைகள் பற்றியும் தீண்டாமை பற்றியும் பேசும்போது நமது அரசியலமைப்பு சட்டம் சமுதாயங்களைப் பற்றி பேசுகிறது என்று சிலர் வாதிடலாம். அவை, சமூக ரீதியான பாகுபாட்டையும் அவற்றை சீர் செய்வதையும் அங்கீகரிப்பதற்கு மட்டுமே ஆகும். ஏனென்றால், அத்தகைய பாகுபாடுகள் குடிமக்கள் தனிநபர்களாக தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கின்றன.
உலகத்தையே ‘இந்துக்களுக்கும்’ ‘முஸ்லிம்களுக்கும்’ இடையே பிளவுபட்டிருப்பதாக பார்க்கும் காப் பஞ்சாயத்துகளின் உலகப் பார்வை மூலம், நவீன காலத்தின் அடிப்படையான தன்மையான, தனிநபர்கள் என்ற வகையில் எல்லா இந்தியர்களுக்கும் தரப்பட்டிருக்கும் சுயேச்சையாக செயல்படும் உரிமைக்கான உத்தரவாதம் உடைபடுகிறது.
தனிநபர் அந்தரங்கத்தையும் தேர்வு செய்யும் உரிமையையும் மீறுதல்
இரண்டாவதாக, இந்தச் சட்டங்கள் தனிநபர் அந்தரங்க உரிமையை அப்பட்டமாக மீறுகின்றன. 2017-ம் ஆண்டில், தனிநபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை என்று இந்திய உச்சநீதிமன்றம் மிகவும் பாராட்டப்பட்ட ஒரு தீர்ப்பில் அங்கீகரித்தது.
இரு தனிநபர்களுக்கு இடையேயான உறவை உறுதி செய்யும் சமூக ரீதியான திருமண உறவில் அரசு தலையிடுவது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுகிறது.
மத உரிமை மறுப்பு
மூன்றாவதாக, அரசு அனுமதி பெறாமல் தனது மத நம்பிக்கையை முடிவு செய்வதற்கான ஒரு நபரின் உரிமையை இந்தச் சட்டங்கள் மறுக்கின்றன.
இந்தப் புதிய சட்டங்களின் கீழ், காவல்துறை, உள்ளூர் நிர்வாகம், மதவாத குழுக்கள், குடும்பங்கள் என யார் வேண்டுமானாலும், அதற்கான தகுதி இல்லாமலேயே, மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் விஷயத்தில் தலையிடவும் தனிநபரின் உரிமையை மறுக்கவும் போதுமான கால அவகாசம் வழங்கப்படுகிறது.
செய்யும் தொழிலை மாற்றிக் கொள்வது, தேசிய இனத்தை மாற்றிக் கொள்வது, தேர்தலில் வாக்களிப்பதை மாற்றிக் கொள்வது, ஏன் அரசியல் கட்சிகளை மாற்றிக் கொள்வதில் கூட, இத்தகைய குறுக்கீடு எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை
முன்னதாக, மத்திய பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் கொண்டு வந்த மதம் மாறுவதற்கான கட்டுப்பாடுகளை, “வன்முறை, மோசடி அல்லது ஆசை காட்டி மதமாற்றுவதை” தண்டிக்கின்றன என்ற வகையில் உறுதி செய்வதாக உச்சநீதிமன்றத்தின் (1977) தீர்ப்பு கூறியது.
தனது சொந்த மதத்தை பிரச்சாரம் செய்யவும் அதனை கடைப்பிடிக்கவும் ஒவ்வொரு நபருக்கும் இருக்கும் உரிமை இதன் இன்னொரு அம்சம். எனவே, வலுக்கட்டாயமாக அல்லது ஆசை காட்டி மதம் மாற்றுவதன் மூலம் இன்னொரு நபரின் அத்தகைய மத உரிமையில் தலையிடுவதை தடை செய்வது இந்திய அரசியலமைப்பின் 25(1) வது பிரிவை மீறுவதாகக் கூற முடியாது, ஏனெனில் 25(1) வது பிரிவு பொது நலனுக்கு உட்பட்ட மத சுதந்திரத்திற்குத்தான் உத்தரவாதம் அளிக்கிறது.
“மதப் பிரச்சாரத்தை” சர்ச்சைக்குரியதாக மாற்றுவதன் மூலம், 1977 தீர்ப்பு 25-வது பிரிவின் கீழ் வழங்கப்படும் சுதந்திரங்களை மட்டுப்படுத்தியது, அதன்படி டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தன்னை பின்பற்றுபவர்களுடன் கூட்டாக புத்த மதத்திற்கு மாறியதும் சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும். 1977 தீர்ப்பை ரத்து செய்வதற்கு பதிலாக, இந்தச் சட்டங்கள் ஒரு நபரின் மத உரிமையை மேலும் குற்றச் செயலாக்குகின்றன.
ஆணாதிக்க கட்டுப்பாடு
நான்காவதாக, புதிய சட்டத்தின் அடிப்படை ஆழ்ந்த ஆணாதிக்கமாக உள்ளது. 1920-களில், வட இந்தியாவில் இந்து மகள்கள் ஆடு மாடுகளைப் போல கடத்திச் சென்றதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை தூண்டி விட்ட போட்டி மதவாதம் என்ற இந்தியா எதிர்கொண்ட கொடுங்கனவு இப்போது மறுபடியும் உயிர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
வயதுவந்த பெண்களை சொத்தாகப் பார்க்கும் ‘லவ் ஜிஹாத்’ என்ற தீங்கு விளைவிக்கும் கட்டுக்கதை, ஒரு துண்டுப்பிரசுரமோ அல்லது வாட்ஸ்அப் செய்தியோ மட்டுமல்ல, அது இப்போது சட்டமாகி விட்டது.
2017-ல் கேரளாவைச் சேர்ந்த 25 வயதான மருத்துவ ஊழியரான ஹதியா, இசுலாமுக்கு மதம் மாறி திருமணம் செய்து கொண்ட, ஒரு ஆண்டு கழித்து அவரது திருமணம் தொடர்பாக சட்டத்தை எதிர்கொண்டார். அப்போதே, ‘சட்ட விரோத மத மாற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கான அவசர சட்டம், 2020’ இன் இருண்ட விளைவுகளைப் பற்றிய ஒரு சுருக்கமான முன்னோட்டத்தை நாம் பார்க்க முடிந்தது.
இந்தச் சட்டம் முஸ்லீம் ஆண்களை குறிவைக்கிறது, ஆனால் இந்துப் பெண்களுக்கு வாழ்க்கையை நரகமாக்குகிறது.
செயலின்மையின் விலை
குடியரசின் சட்டத்தில் விளக்கி, எழுதப்பட்ட மதிப்பீடுகளின் உதவியோடு இந்தியாவில் ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்தது என்று கூறலாம். அரசியலமைப்பு நாம் அடைவதற்கான உயர்ந்த கொள்கைகளின் இலக்கை வழங்கியது. அவற்றை இந்தியர்கள் ஒருபோதும் முழுமையாக அடைய முடியாமல் போகலாம்.
ஆனால் அது நமக்கு ஒரு உயர்ந்த தரத்தை நிர்ணயிக்கிறது, நாம் தொடர்ந்து சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டிருப்பதை உறுதி செய்கிறது, மேன்மையடைவதை உறுதி செய்கிறது. அதுவே அந்த இலக்கின் நோக்கமாக இருந்திருக்கலாம்.
எல்லாச் சட்டங்களும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அந்த நோக்கத்தை நிறைவு செய்ய வேண்டும். ஆனால், இந்தப் புதிய சட்டங்கள் அதற்கு நேர்மாறாக செயல்படுகின்றன; திருமணத்தையும் கூட்டு உறவையும் கட்டுப்படுத்தும், பிற்போக்குத்தனமான பெரும்பான்மை மதவாத சமூக அதிகாரத்திற்கு ஆதரவாக அரசு அதிகாரத்தையும் சட்டத்தையும் அவை நிறுத்துகின்றன.
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான திருமணங்கள் நாட்டில் நிகழும் மொத்த திருமணங்களில் 2.5% க்கும் குறைவாக இருக்கலாம், ஆனால் அவை இந்த எண்ணிக்கையைத் தாண்டிய நம்பிக்கையை வழங்குகின்றன. அவை சுதந்திரத்தையும் சகோதரத்துவத்தையும் ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி, அனைத்து குடிமக்களும் சமமானவர்கள் என்ற அடிப்படை அரசியலமைப்பின் அடிப்படை அனுமானத்தை உறுதிப்படுத்துகின்றன.
இது கொடூரமானது
லவ் ஜிகாதுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அரசாங்கம் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்திய பிறகும் போலவே, ‘லவ் ஜிஹாத்’ பற்றிய வதந்திகளைப் பரப்புவது கொடூரமானது. ஆனால் அதற்கும் மேலாக, இது அவநம்பிக்கையை விதைப்பதால் மிகவும் ஆபத்தானது, மேலும் பன்முகத்தன்மை கொண்ட ஒவ்வொரு ஜனநாயக சமூகமும் வாழ வேண்டிய அடிப்படை விதிகளை அது மாற்றுகிறது.
அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை பாதுகாக்க விரும்பினால், இந்தச் சட்டங்களை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்.
செப்டம்பர் 1935-ல், ஹிட்லர் நியூரம்பெர்க் இனவெறிச் சட்டங்களை இயற்றியபோது, மிஷ்லிங் என்று அழைக்கப்பட்ட ஜெர்மன்-யூத கலப்பு வம்சாவளி குழந்தைகள் பற்றிய பயம், தூய்மை வெறி கொண்ட நாஜி மனதைத் தொந்தரவு செய்தது . 50% யூதர் 50% ஆரியர் என்ற வகையில் அவர்கள் நாஜி கருத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தனர்.
இத்தகைய திருமண உறவுகளையும் பாலியல் உறவுகளையும் தடுப்பது சந்தேகத்துக்கிடமான யூஜெனிக்ஸ் [உயர் தரமான மனிதர்களை மட்டும் தேர்ந்தெடுத்து குழந்தைகளை பெற வைப்பது என்ற போலி அறிவியல்] மீதான நாஜி நம்பிக்கையுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தது. சோகம் என்னவென்றால், இந்த சட்டங்கள் இயற்றப்பட்டபோது அவை போதுமான அளவில் எதிர்க்கப்படவில்லை. ஹிட்ரலின் ஆட்சியின் எஞ்சிய ஆண்டுகளில் நாஜி இனக் கொள்கையை அது வழிநடத்தியது.
வெறுப்பை சட்டமாக்கும் எந்த ஒரு சமூகமும் ஒரு நாடும் செலுத்த வேண்டியிருக்கும் விலையை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.
– சீமா சிஷ்டி
thehindu.com தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.