Aran Sei

நீட் தேர்வு – அரசு ஆதரவுடன் சாதிக்கும் தெலங்கானா எஸ்சி, எஸ்டி மாணவர்கள் : நவநீத கண்ணன்

தெலுங்கானாவில் மாநில அரசின் உதவிபெறும் தெலங்கானா சமூக நல கல்வி நிறுவனங்கள் சங்கம் (Telangana Social Welfare Residential Educational Institutions Society – TSWREIS) சார்பில் 190 மிகவும் பின் தங்கிய சமூகங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ இடங்களை பெறக்கூடிய அளவிற்கு அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இச்சங்கம் அளித்த இலவசப் பயிற்சியில் 108 மாணவர்கள் தெலுங்கானாவில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு வெற்றி பெற்ற 190 மாணவர்களில் 142 பேர் தெலுங்கானா அரசு சமூக நலப் பள்ளிகளிலும், மற்ற 48 பேர் பழங்குடியினர் நலப் பள்ளிகளிலும் பயின்றவர்கள். பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவர்கள் அனைவரும் மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியைச் சார்ந்தவர்கள். அவர்களது பெற்றோர் விவசாயம், தேநீர் விற்பது, காய்கறிகள் விற்பது, பீடி உருட்டல், விடுதி பணி, பாதுகாப்பு காவலர், மெக்கானிக் போன்ற பணிகளைச் செய்துவருகின்றனர்.

இந்த 190 மாணவர்களும் தெலுங்கானா அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று பலனடைந்தவர்கள்; “ஆப்ரேஷன் ப்ளூ கிரிஸ்டல்” என்று பட்டியல் சாதி மாணவர்களுக்கும், “ஆப்ரேஷன் எமரால்ட்” என்று பழங்குடியின மாணவர்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களில் சிலருக்கு புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில்கூட இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார் இச்சங்கத்தின் செயலாளர் பிரவீண் குமார்.

த நியூஸ் மினிட் ஆங்கில இணையத்தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “2015-ம் ஆண்டுக்கு முன் ஒன்றுப்பட்ட ஆந்திர மாநிலத்தில், ஐந்திற்கும் குறைவான அரசுப் பள்ளி எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் நுழைந்தனர். தெலுங்கானா புதிய மாநிலம் உருவான பின்னர், 2015-ம் ஆண்டு மாநில சமூகநல மற்றும் பழங்குடியினர் நல அமைச்சகத்தின் உதவியால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பின்தங்கிய சமூக மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்கிவருகிறோம். சென்ற ஆண்டு 108 மாணவர்கள் மருத்துவ இடங்கள் கிடைக்கப் பெற்றனர். இந்த ஆண்டு 190 மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்.

இத்திட்டத்தால் பலனடைந்து 595 மதிப்பெண்கள் பெற்று எஸ்.டி. பிரிவில் அகில இந்திய தரவரிசையில் 85-வது இடம் பெற்ற மாணவர் தேஜவத் கிரிஜா, த நியூஸ் மினிட்டிடம் பேசுகையில், “என் குடும்பம் விவசாயப் பின்னணியைக் கொண்டது; மருத்துவம் படிக்கவேண்டும் என்பது என் நீண்டகாலக் கனவு; அரசு சார்பில் அளிக்கப்பட்ட இந்த இலவச தினசரி பயிற்சி வகுப்புகளால்தான் நான் இப்போது இந்தக் கனவுக்கு நெருக்கமாக வந்துள்ளேன். இருதயவியல் அல்லது புற்றுநோய் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற விரும்புகிறேன்; என் குடும்பத்தில் கல்லூரிக்கு செல்லும் முதல் நபர் நான்தான்” என்று தெரிவித்தார்.

கிரிஜாவைத் தவிர அபிலாஷ் (எஸ்.சி பிரிவு – 168-வது இடம்), வம்சிதர் (எஸ்.சி. பிரிவு – 1233-வது இடம்), பூஜிதா (எஸ்.சி. பிரிவு – 1969-வது இடம்) ஆகியோரும் அகில இந்திய அளவில் குறிப்பிடத்தக்க இடங்களைப் பெற்று சாதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அபிலாஷ் கூறுகையில், “உண்மையில் என் குடும்பத்தால் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைக்க முடியாது; இந்த “ஆப்ரேஷன் ப்ளூ கிரிஸ்டல்” திட்டம் இல்லையென்றால் என் மருத்துவக் கனவு சிதைந்திருக்கும். நீட் தேர்விற்கு சில தினங்களுக்கு முன் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன்; எனினும் முன்பே சிறப்பான பயிற்சி பெற்றதால் வெற்றிபெற முடிந்தது” என்று கூறினார்.

தெலுங்கானாவில் பின்தங்கிய சமூக மாணவர்களுக்கு இப்படிப்பட்ட தனி கவனம் செலுத்தி மருத்துவ இடங்கள் பெற அம்மாநில அரசு வழிவகைச் செய்கிற வேளையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோ சமீபத்தில் செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்படும் என்றும், இரண்டாவது முறை தேர்வெழுதும் மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்கள் மூலமாக பயிற்சி பெற்றுதான் தேர்வெழுத வேண்டும்” என்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை குறித்த எந்த அக்கறையுமின்றி கருத்து தெரிவித்தார்.

நீட் தேர்வைப் பொறுத்தவரையில் முதல்முறையே தேர்ச்சி பெற்று மருத்துவ இடங்களைப் பிடிப்பதென்பது மிக மிக கடினமானது; சென்ற 2019-ம் ஆண்டு, அரசு அளித்த கணக்கின்படியே 33% மாணவர்கள்தான் முதல்முறை தேர்வெழுதி மருத்துவ இடங்கள் பெற்றுள்ளனர். அதிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘இலவச நீட் பயிற்சி’ சரியான முறையில் வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. அதற்கு வலுசேர்க்கும் விதமாக ‘கடந்த 3 ஆண்டுகளில் அரசு வழங்கும் இலவச நீட் பயிற்சியில் பயன்பெற்ற ஒரு அரசுப் பள்ளி மாணவர்கூட மருத்துவப் படிப்பில் சேரவில்லை’ என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

இதுகுறித்து அரண்செய்-காக நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளியில் படித்து ஓராண்டு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர் ‘ஜீவித் குமாரும்’ அரசு இலவசப் பயிற்சி வகுப்பில் தான் பெற்ற மோசமான அனுபவத்தை விரிவாக பகிர்ந்துள்ளார். அதில் அவர் “அங்கே இணைய வசதிகூட சரியாக இருக்காது எனவும், ஒருவாரம் நடந்தவேண்டிய பாடத்தை ஒருமணி நேரத்தில் அவசர அவசரமாக நடத்தி முடித்துவிடுவார்கள் என்றும்” கூறியிருந்தார்.

இந்த ஆண்டு மருத்துவ இடங்களுக்கான நீட் கட்-ஆப் மதிப்பெண்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசு சார்பில் அளிக்கப்பட்ட நீட் பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்ற, வெறும் 19 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவும் ஒருமாதத்திற்கு மேலாக ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீட் விலக்கிற்கு மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கும் அதே வேளையில், நடைமுறை யதார்த்தத்தை கருத்தில் கொண்டு, தெலுங்கானா அரசைப் போல் தமிழக அரசும், நீட் தேர்விற்கு தயாராகும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரிவு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனிச்சிறப்பான ஒரு திட்டத்தின்மூலம் சிறப்பான நீட் பயிற்சி அளிக்க முன்வரவேண்டும்.

(கட்டுரையாளர் நவநீத கண்ணன் மருத்துவ இளங்கலை மாணவர்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்