Aran Sei

பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் சிக்கல்கள் – புதிய கல்வி கொள்கை

’கற்பித்தல் என்கிற உயர்ந்த பணியை செய்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின் கல்வி திறன், சேவை மனப்பான்மை, கற்பித்தல் திறன் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும்’ என்ற நோக்கில் பல திட்டங்களை தேசிய கல்வி கொள்கையில் வடிவமைத்திருக்கிறதாக சொல்கிறது. அதில் பல திட்டங்களுக்கு சரியான வரையரைவுகளை பற்றி குறிப்பிடாமல் விடப்பட்டிருக்கிறது.

நான்கு வருட பி.எட் படிப்பு

நாடு முழுவதும் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட் படிப்பிற்கான பிரத்தியேக கல்லூரிகளை உருவாக்க இருப்பதாக கூறுகிறது. கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் அவர்களுக்கு ஊக்க தொகையும், கிராமப் புறங்களில் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கூடுதல் சம்பளம் வழங்க இருக்கிறது.

கிராமப்புற ஆசிரியர் நியமனம்

அந்தந்த கிராமப்புற/நகர்ப் பகுதிகளில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அந்த பகுதியிலேயே வேலை நிர்ணயம் செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என்கிறது. ஒரு கிராம பள்ளியில் ஒரு காலி இடம் உள்ளது. அதே கிராமத்தில் இருவர் தகுதி தேர்வில் வெற்றிப்பெறுகிறார்கள் என்றால், இவர்களில் யாருக்கு வேலை நிர்ணயம் செய்யப்படும் என்பது குழப்பமாக உள்ளது. அது குறித்து சரியான வரைமுறை இதில் விளக்கப்படவில்லை.

ஆசிரியர்கள் இடமாற்றம்

மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை முன்மாதிரிகளாக கருதுவதால், அவர்களின் இடம் மாற்றம் மாணவர்களின் கற்றலில் தடை ஏற்பட வாய்ப்புள்ளதால், ‘தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே’ இடமாற்றம் வழங்கவுள்ளதாக கூறுகிறது. இந்த நடவடிக்கை மாநில-மத்திய அரசுகளின் முறைப்படுத்தப்பட்ட விதத்தில் நடைப்பெறும் என்கிறது.

இதில் தவிர்க்க முடியாத சூழல் என்று எதையெதை குறிப்பிடுகிறார்கள் என்ற விவரம் இல்லை. மேலும் இது ஆசிரியர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. அவர்களின் சொந்த வேலைகள், குடும்ப சூழ்நிலைகளை இது கணக்கில் கொள்ளுமா என்றும் தெரியவில்லை. எனவே இது நடைமுறை சிக்கல்களை உருவாக்கும்.

ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மற்றும் தேசிய தேர்வு ஆணையம் (NTA)

தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் உள்ளடக்கும் விதத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (TET) வடிவமைக்கப்பட இருக்கிறது. வேலை வாய்ப்பின் போது ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மற்றும் தேசிய தேர்வு ஆணையம் (NTA) நடத்தும் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளப்படும் என்கிறது.

இந்த நுழைவு தேர்வுகளும் தேர்வாணையங்களும் கிராமப்புறத்தில் இருந்து வருபவர்களுக்கும் பின்தங்கிய சமூகப் பின்னணி கொண்டவர்களுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

மாஸ்டர் பயிற்றுனர்கள்

பாரம்பரிய உள்ளூர் கலைகள் வல்லுனர்களை, கைவினை பொருட்களை செய்பவர்களை, விவசாயிகள், தொழில் முனைவோர்களை ‘மாஸ்டர் பயிற்றுனர்கள்’ என்ற பெயரில் பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ளதாக கூறுகிறது. ஆனால் இதன் நியமன விதிகள் குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும் எந்தக் கலையை, தொழிலை தேர்வு செய்வார்கள், மாஸ்டர் பயிற்றுனர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்வார்கள், அதன் பாடத்திட்டம் மற்றும் அவர்களில் ஊதியம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

ஆசிரியர்கள் பகிர்வு

சிறிய பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் அருகில் உள்ள பெரிய பள்ளிகளின் ஒரு பகுதியாக வேலை செய்யும் வாய்ப்பினைப் பெறுவார்கள் என்பது மேலோட்டமாக நல்ல செய்தியாக இருந்தாலும், இது சிறிய அளவிலான பள்ளிகளுக்கு பிரச்சனையாக அமையும். மேலும் சிறிய பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினால் பெரும் பயன் அடையப்போவது பெரிய பள்ளிகள் தான்.

நன்றி : Indiatoday.in

சமூக சேவகர்கள் / ஸ்வயம் சேவகர்கள்

பயனுள்ள கற்றல் சூழலை உருவாக்க பள்ளி வளாகங்களில் மேம்படுத்த ஆலோசகர்கள், சமூக சேவகர்கள் (ஸ்வயம் சேவகர்கள்) போன்றோரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சமூக சேவர்கள் யாராக இருப்பார்கள் என்பதை பள்ளிகள் முடிவெடுக்கும் முறையானது, எந்த அமைப்புகளுக்கு சாதகமாக இருக்கும் என்பது கண்கூடு. மேலும் இவர்களால் ஆசிரியர்களின் நிர்வாகத்திலும் கற்பித்தல் நடைமுறையிலும் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

நிர்வாக வேலை ஊழியர்கள்

ஆசிரியர்கள் புத்தக விநியோகம், மத்திய உணவு போன்ற பள்ளிகளில் உள்ள பிற நிர்வாக வேலைகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்ற கூறப்பட்டிருப்பது, ஆசிரியர்களுக்கு பயன் தரும் முடிவாக தெரிகிறது. ஆனால் இது போன்ற நிர்வாக வேலைகளுக்கென தனியாக வேலையாட்கள் நியமிக்கப்படுவார்களா என்பது பற்றி எதுவும் இல்லை. இந்த நிர்வாக நியமனம் பள்ளிகளில் மேலும் ஒரு அதிகார மையத்தை உருவாக்கும்.

வேலை உறுதிப்பெறுதல்

ஆசிரியர்களின் வேலை உறுதி பெறும் முறை கடுமையாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகு அவர்கள் குறைந்த காலம் ’தற்காலிய ஊழியர்களாக’ வேலை செய்வார்கள். இந்த குறைந்த காலம் என்பது எவ்வளவு காலம் என்று குறிப்பிடவில்லை.

நியமனத்திற்காக எழுதப்பட்ட தகுதி தேர்வுகளான TET மற்றும் NTA தேர்வுகள் போதாதென்று, அந்த ’குறைந்த காலத்தில்’ அவர்களின் செயற்பாடுகள் முழுதும் கண்கானிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களின் வேலை உறுதி செய்யப்படும் என்கிறது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, வருகை பதிவு போன்றவை இதில் கருத்தில் கொள்ளப்படும் என்கிறது. இது ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிப்பதுடன், பள்ளிக்கு வெளியே உள்ள சமூக அமைப்புகளில் அவர்கள் செயல்படும் ஜனநாயகத்தை பறிக்கும்.

மேலும் இந்த நிரந்திரமற்ற தொழிலாளர்கள் முறை பன்னாட்டு நிறுவனங்களில் இருக்கும் ’தொழில் பழகுநர்’ முறையை போன்று இருக்கிறது.

பதவி உயர்வு தேர்வுகள்

ஆசிரியர்கள் தங்கள் பதவி உயர்வுகளை தகுதி தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மூலமே பெற முடியும் என்கிறது. நியமனங்களுக்கு மட்டுமே இடவொதுக்கீடு உள்ள நிலையில், பதவி உயர்வுகளுக்கும் இடவொதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், இந்த பதவி உயர்வு முறை அதில் பின்னடைவை ஏற்படுத்தும்.

எதிர்கால இந்தியாவை திறன்பட கட்டமைப்பதில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி எத்தனை முக்கியமோ அதே அளவு, அவர்களை கற்பிக்கும் ஆசிரியர்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தை காப்பதும் முக்கியம். இதை அரசு கவனத்தில் எடுத்து, கல்வி கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, எல்லா தரப்பு தற்கால ஆசிரியர்களையும் வருங்கால ஆசிரியர்களையும் கருத்தில் கொண்டு தேசிய கல்வி கொள்கையை வடிவமைக்க வேண்டும். அதுவே எல்லோருக்குமான தேசிய கல்வி கொள்கையாக இருக்கும்.

– அரவிந்ராஜ் ரமேஷ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்