Aran Sei

தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிப் பாதைக்கு அச்சுறுத்தல் – கலையரசன் ஏ, எம் விஜயபாஸ்கர்

image credit : thewire.in

மூகக் குழுக்களுக்கு இடையேயும் பிராந்தியங்களுக்கு இடையேயும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு விரிவடைந்து வருவது சமகால இந்திய முன்னேறத்தின் ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. முன்னேற்றத்தின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தில் ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில், பல நேரங்களில் அது அனைத்தும் தழுவிய முன்னேற்றமாக மாறுவதில்லை. உதாரணமாக, இமாச்சல பிரதேசமும் கேரளாவும் மனிதவள மேம்பாட்டில் உயர்ந்த நிலைகளை எட்டியிருந்திருந்தாலும், அது உற்பத்திப் பொருளாதாரத்தில் போதுமான அளவிலான செயல் துடிப்பை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை.

அதே போல, மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் உற்பத்தித் துறையில் காணும் செயல்துடிப்பு அதற்கு இணையான மனிதவள நல மேம்பாட்டுக்கு இட்டுச் செல்லவில்லை. சமீபத்திய ‘பகவதி-சென்’ விவாதம் இந்த முரணிலையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. ஜகதீஷ் பகவதி, பணக்காரர்களிடம் குவியும் செல்வம் சமூகத்தில் பரவிச் செல்வது என்ற வளர்ச்சிக்கான அணுகுமுறையை ஆதரிக்கிறார். அது மனிதவள மேம்பாட்டுக்குத் தேவையான உபரி வளங்களைத் தருவதன் மூலம் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்கிறார். ஜீன் டிரேஸ், அமர்த்யா சென் இருவரும் மனிதத் திறன்களில் முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்லும் மனிதத் திறன்களை மையமாகக் கொண்ட முன்னேற்றப் பாதையை ஆதரிக்கின்றனர்.

தமிழ்நாட்டின் பாதை

தமிழ்நாடு, இந்தப் போக்குக்கு எதிராக, ஒப்பீட்டளவில் உயர் அளவிலான மனிதவள மேம்பாட்டுடன் கூடவே பொருளாதார செயல்துடிப்பையும் இணைத்து வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த தனித்துவமான முன்னேற்றப் பாதையை எப்படி விளக்குவது? தமிழ்நாட்டின் அரசியல் அணி திரட்டலின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பாதைக்கு விளக்கம் அளிக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான மக்கள்திரள் அரசியல் அணிதிரட்டலும் அதோடு கூடவே அனைவரையும் உள்ளடக்கிய நவீனமயமாக்கத்துக்கான அரசியல் முக்கியத்துவமும் இந்த நிகழ்முறைக்கு முக்கியமானதாக உள்ளது.

தமிழ்நாட்டில், அடுத்த மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பல்வேறு கட்சிகள் போட்டி போட்டு அறிவித்துள்ள மக்கள்நல வாக்குறுதிகள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் தனித்துவமான முன்னேற்றப் பாதை என்ற கேள்வி விவாதிக்கப்படுவது அரிதாகவே உள்ளது.

திராவிட அணிதிரட்டல் ‘பொருளாதார ஜனரஞ்சகம்’, ‘சமூக ஜனரஞ்சகம்’ என்ற இரண்டு வகையான கொள்கை தலையீடுகளை நிறுவனமயமாக்கியுள்ளது என்று நாங்கள் முன் வைக்கிறோம். இந்த இரண்டும் ஒப்பீட்டளவில் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு முன்னேற்றப் பாதையை பேணி வளர்த்துள்ளன. இரண்டும் சில குறிப்பிட்ட தன்மைகளை பொதுவாகக் கொண்டிருந்தாலும், பகுப்பாய்வு ரீதியிலான இந்த வேறுபாடு பயனுள்ளது என்று நாங்கள் கருதுகிறோம்.

‘சமூக ஜனரஞ்சகம்’ என்பது நவீன துறைகளிலும் பொதுச் சொத்துகளிலும் அனைவருக்கும் வாய்ப்பை உறுதி செய்யும், உரிமை அடிப்படையிலான தலையீடுகளைக் குறிக்கிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க மறுவினியோக தன்மையைக் கொண்டுள்ளது. இடஒதுக்கீடு கொள்கைகள், நிலச் சீர்திருத்தங்கள், அல்லது பெண்களுக்கு சொத்தில் சம உரிமைக்கான சட்டங்கள் ஆகியவை சில உதாரணங்கள்.

‘பொருளாதார ஜனரஞ்சக’ கொள்கைகள் வேறானவை. அவை தேர்தல் தேவைகளுக்காக அறிவிக்கப்படுபவை, கடும் ஏழ்மை தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கானவை. அவற்றுக்கு உதாரணமாக உணவு மானியங்களையும், கல்வி மானியங்களையும் விரிவுபடுத்துவதைக் குறிப்பிடலாம்.

இங்கு ‘மேட்டுக்குடி சார்பு’ இல்லை

இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு கொள்கைகள் வரலாற்றுரீதியாக மேட்டுக்குடியினருக்கு சார்பாக இருந்திருக்கின்றன என்று மைரன் வய்னர் போன்ற அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அனைவருக்கும் ஆரம்பக் கல்வி வழங்குவதை விட உயர்கல்விக்கு முன்னுரிமை கொடுப்பதிலும், வருமுன் காக்கும் மற்றும் ஆரம்ப மருத்துவத்தில் அதிக முதலீடு செய்வதை விட குணப்படுத்தும் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ வசதிகளில் அதிக முதலீடு செய்வதிலும் அத்தகைய சார்புகள் வெளிப்படுவதைக் காண முடியும். தமிழ்நாட்டில் மருத்துவத் துறையிலும் கல்வியிலும் அரசின் தலையீடு  இந்த ‘மேட்டுக்குடி சார்பை’ எதிர்த்து செயல்பட்டுள்ளன.

தமிழ்நாடு 1950-களிலிருந்து பள்ளிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அதன் பின்னர், படிப்படியாக உயர்கல்வி மீதான முக்கியத்துவத்தை அதிகரித்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்த நீதிக் கட்சி அரசிடமிருந்தே தொடங்கும் மதிய உணவுத் திட்டம் போன்ற அரசு தலையீடுகள் நன்கு அறியப்பட்டவை. கூடுதலாக, தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்காக தங்கும் விடுதிகள், போக்குவரத்து மானியங்கள், கல்விக் கட்டண மானியங்கள் ஆகியவை, தமிழ்நாட்டில் நாட்டிலேயே அதிக அளவில் அனைவரையும் உள்ளடக்கிய குறைந்த செலவிலானதாக கல்வியை மாற்றியுள்ளன.

உயர்கல்வியில், இத்தகைய அடிப்படை உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதோடு கூடவே, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், தமிழ்நாடு பரந்துபட்ட கல்வி வாய்ப்புகளை  உருவாக்கியது. அதே நேரம், பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களுக்கிடையேயும், பட்டியல் சாதியினருக்கிடையேயும் இருக்கும் வேறுபாடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

மருத்துவத் துறையில் மேம்பட்ட குறியீடுகள்

மருத்துவத் துறையில் தமிழ்நாடு ஒப்பீட்டளவில் சிறந்த குறியீடுகளை சாதித்துள்ளது. சாதகமான மொத்த குழந்தை பிறப்பு வீதம், குறைந்த குழந்தை இறப்பு வீதம், குறைந்த குழந்தைப் பேறில் தாய் இறப்பு வீதம் ஆகியவை பல்வேறு சமூக பிரிவினரிடையேயும் சாதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நீண்ட காலமாக மருத்துவத் துறையில் செய்யப்பட்ட அரசு தலையீட்டின் விளைவுகள் ஆகும்.

மருத்துவத்துக்கென்றே தனிச்சிறப்பான ஒரு செயற்குழுவுடன் இந்தியாவிலேயே முதல் மாநில திட்டக் குழுவை அமைத்தது, அரசு மருத்துவக் கட்டமைப்பில் முதலீடு, சமூக ரீதியில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய மருத்துவ பணியாளர்கள் உருவாவதை உறுதி செய்தல் போன்ற ‘சமூக ஜனரஞ்சக’ நடவடிக்கைகளை மானியத்துடன் கூடிய மருத்துவக் காப்பீடு, விரிவாக்கப்பட்ட மதிய உணவுத் திட்டங்கள், மகப்பேறு நலத் திட்டங்கள் போன்ற ‘பொருளாதார ஜனரஞ்சக’ நடவடிக்கைகளுடன் இணைப்பதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய ஆரோக்கிய பலன்கள் பெறப்பட்டன.

சமூக ஜனரஞ்சக கொள்கைகள் அரசு மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கவும், மருத்துவ நிர்வாகத்தை ஜனநாயகமாக்கவும் உதவின என்றால், பொருளாதார ஜனரஞ்சக கொள்கைகள் அதன் வீச்சை அதிகரித்ததோடு, குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றுவதற்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தின. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) ஒரு சிறந்த உதாரணம். இந்தத் திட்டத்தின் மூலமாக, முதன் முதலில் அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளையும் மருத்துவ சோதனைகளையும் இலவசமாக வழங்குவது தொடங்கி வைக்கப்பட்டது. இதன் விளைவாக, தமிழ்நாட்டின் குடும்பங்கள் நாட்டிலேயே மிகக் குறைந்த அளவில் மருத்துவத்துக்காக சொந்த காசை செலவு செய்பவையாக உள்ளன.

மனிதவள மேம்பாட்டில் இத்தகைய சாதனைகள் பொருளாதார செயல்துடிப்பை நீடிக்கச் செய்து, அதனை துரிதப்படுவும் செய்தன. மேட்டுக்குடி அல்லாத சாதியினர்தான் மக்கள்நல திட்டங்களிலிருந்து அதிக பலன்களை பெறுகின்றனர் என்ற பொதுவான புரிதலுக்கு மாறாக, தமிழ்நாட்டின் அனுபவம் பற்றிய எங்களது பகுப்பாய்வு வேறுபட்ட ஒரு சித்திரத்தைத் தருகிறது. மகாராஷ்டிராவோடும் குஜராத்தோடும் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் மேட்டுக்குடி அல்லாத சாதியினரைச் சேர்ந்த தொழில்முனைவர்களின் சதவீதம் அதிகமாக உள்ளது. வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றுடன் சேர்ந்து ஏற்பட்ட இந்த நிகழ்வு, 1990-களில் முன்னேற்றத்துக்குத் தேவையான பொருளாதார ஆதாரங்களை, குறிப்பாக தனியார் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம், திரட்டும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட போது குறிப்பிடத்தக்க அளவுக்கு வெளிப்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் உயர்கல்வியில் நீண்டகால முதலீடுகள் மேட்டுக்குடி அல்லாத சாதியினரில் ஒரு பகுதியினரின் மூலதனத் திரட்டலாக மாற்றமடைந்தன. மேட்டுக்குடி அல்லாத சாதிகளைச் சேர்ந்த, தொழில்நுட்பத் திறனால் வலுவாக்கப்பட்ட பல தொழில்முனைவர்கள் உருவானார்கள்.

கூடுதலாக, தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் பலன்களின் அதிகரிப்பும் தமிழ்நாட்டில் ஒப்பீட்டளவில் சிறந்ததாக இருப்பதைக் காணலாம். உலக அளவிலும் தேசிய அளவிலும் தொழிலாளர்களுக்கு எதிரான போக்குக்கு தமிழ்நாடு விதிவிலக்கில்லை என்றாலும், அமைப்பாக்கப்பட்ட துறையிலும் சரி, அமைப்புசாரா துறையிலும் சரி கூலி மட்டங்களும், சமூக பாதுகாப்பும் சரி ஒப்பீட்டளவில் சிறப்பாகவே இருக்கக் காணலாம். ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலான ஒப்பந்தமயமாக்கல் மட்டுமின்றி, அமைப்பாக்கப்பட்ட உற்பத்தித் துறையில் கூலியின் பங்கு மகாராஷ்டிரா, குஜராத் போன்ற தொழில்துறையில் செயல்துடிப்பான மாநிலங்களில் இருப்பதை விட தமிழ்நாட்டில் மிக அதிகமாக உள்ளது.

இதைச் சாத்தியமாக்கியது தொழிற்சங்கமாக்குவதில் மேம்பட்ட செயல்பாடு மட்டுமின்றி, பணியிடத்துக்கு வெளியில் கிடைத்த நலத்திட்டங்களாலும் கூட, தொழிலாளர்களின் பேரம் பேசும் திறனை அதிகரிக்க உதவியதே ஆகும். மேட்டுக்குடி அல்லாத சாதியினரிடையே சமூக ஒற்றுமை என்பதில் வேர் கொண்டுள்ள தொழிலாளர் அணிதிரட்டல் தொழிற்சங்கமாக்கல் அதிகமாக இருப்பதற்கும், தொழிலாளர் கோரிக்கைகளுக்கு அரசு எதிர்வினையாற்றுவதற்கும் முக்கியமானதாக உள்ளது.

மனிதவள உருவாக்கத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் இந்த நிகழ்முறைக்கு உதவின. ஒப்பீட்டளவில் உயர்ந்த கூலிகளை,  ஒப்பீட்டளவில் உழைப்பின் அதிக திறன் மூலம் ஈடு கட்டி, மூலதனத் திரட்டலின் போட்டியிடும் திறனை பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டின் அனுபவத்திலிருந்து, மனித வள மேம்பாடும், பொருளாதார செயல்துடிப்பும் கைகோர்த்து செல்கின்றன, பகவதி-சென் விவாதம் முன்வைப்பதைப் போல அவை ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்று என்று இருக்க வேண்டியதில்லை என நாம் சொல்லலாம்.

சில சமநிலை குலைவுகள்

இருந்தாலும், இந்த முன்னேற்றப் பாதையில் சில சமனின்மைகள் தோன்றி வருகின்றன. நிதி ஆதாரங்களை பெறுவதிலும், சுயேச்சையான கொள்கைகளை வகுப்பதிலும் மாநில அரசின் மீது ஒன்றிய அரசின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கின்றன. துணைதேசிய அளவில் வெகுமக்கள் கோரிக்கைகளுக்கு முகம் கொடுப்பதற்கான அதிகாரத்தை இவை மட்டுப்படுத்துகின்றன.

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஐ தன்னிச்சையாக புகுத்தியது இதற்கான ஒரு எடுத்துக்காட்டு. மருத்துவ சேவையிலும், கல்வியிலும் தரத்தில் ஏற்றத் தாழ்வுகளை நாம் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். பள்ளிக் குழந்தைகள் மத்தியில் கற்றல் திறன்களின் மோசமான நிலைமையும், விளிம்பு நிலை சமூக குழுக்கள் மத்தியிலும் கூட தனியார் பள்ளிகளை நாடுவது அதிகரித்து வருவதும் கவலையளிக்கக் கூடிய போக்குகள் ஆகும்.

அதே போல, தரம் தொடர்பான கருத்து ரீதியான அல்லது உண்மையான வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு தனியார் மருத்துவ சேவைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருவது, பொது சேவைகள் பிளவுபடுவதைக் காட்டுகிறது. இது தமிழ்நாட்டுக்கு மட்டும் தனித்துவமானது இல்லை என்றாலும், அது புதிய ஏற்றத் தாழ்வுகளுக்கான வெளியை திறந்து விடுகிறது.

மேலும், மிகவும் செயல்துடிப்பான உற்பத்தித் துறையும், உயர்மட்ட சேவைத் துறையும் இருந்த போதும், வேலை வாய்ப்புகளின் அளவும் தரமும், மேட்டுக்குடி அல்லாத சாதிகள் மத்தியிலிருந்து உழைப்புச் சந்தைக்குள் நுழையும் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு போதுமானவையாக இல்லை. அதிகரிக்கும் தனியார்மயமாக்கம் காரணமாக திராவிட மக்கள் திரட்டலின் மையமாக உள்ள இட ஒதுக்கீட்டின் செயல்திறனை குறைவதை இது இன்னும் மோசமாக்குகிறது.

இவை இரண்டும் சேர்ந்து சாதிகளுக்குள்ளேயும், சாதிகளுக்கிடையேயும் ஏற்றத்தாழ்வுகளின் புதிய அச்சுகளை தோற்றுவித்து திராவிட கட்டமைப்பின் நீடித்த தன்மையை பிடிப்பதை கேள்விக்குள்ளாக்குகின்றன. மக்கள்நல தலையீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மட்டும் போதுமானதல்ல என்பது தெளிவு.

புதிய நிலைமைகளில் பொருத்தமான கோரிக்கைகளை எழுப்புவதற்கான களத்தை, அரசியல் அணிதிரட்டல் எந்த அளவுக்கு மறுசீரமைப்பு செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வலுவான ஜனநாயகத்தை மேலும் விரிவாக்குவதற்கான சாத்தியங்கள் உருவாகும்.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த கலையரசன் ஏ, விஜய் பாஸ்கர் எம் ஆகியோர் தி ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்