Aran Sei

கி.ரா – கரிசல் இலக்கியத்தின் பிதாமகன்

எல்லா கிராமங்களிலும் 90 வயதை கடந்தாலும், ராஜப்பாட்டை போட்டு வாழும் முதியவர்கள் உண்டு. நான்கு தலைமுறைகளோடு உறவாடிய ஆலமரங்கள் உண்டு. நூற்றாண்டுகளாக ஊத்தெடுத்துக்கொண்டிருக்கும் கண்மாய்களும், ஊரணிகளும் உண்டு. இவையெல்லாம் கிராமங்கங்களின் அங்கங்கள் மட்டுமல்ல. ஆன்மாக்கள்.

கரிசல் நிலம் என்று அழைக்கப்படுகிற தென் தமிழகத்து மண்ணின் ஆன்மாவை, அந்த மக்களின் வாழ்வை, தன் கதைகளின் மூலம் உரையாடி, கரிசல் நிலத்தின் மூத்தோனாக வாழ்ந்து வருபவர், இன்று தன் 99-வது வயதை எட்டும் கி.ரா தாத்தா என்று அழைக்கப்படுகிற கி.ராஜநாராயணன்.

கரிசல் நிலத்தின் தாத்தா

‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னை பற்றி கூறும் கி.ரா, கரிசல் நிலத்தின் வாழ்வியலை இத்தலைமுறைக்கும், அதே உயிர்ப்புடன் கதைகளாக சொல்லிவருகிறார். கரிசல் வாழ்வியலென்பது அம்மக்களின் கதைகள் மட்டுமல்ல. அந்த மண்ணிலுள்ள ஆடு, மாடு, கிடாய்களும், கண்மாய் கரைகளும், வயக்காடுகளும், ஊர் மந்தைகளும், அம்மந்தைகளில் வாழும் மரங்களும் இதில் சேர்த்தி.

நன்றி : புதுவை இளவேனில்

கோபல்ல கிராமம்

முகலாயர் ஆட்சியின் கீழ் இருந்த ஆந்திரா கிராமம் ஒன்றில், மன்னனிடமிருந்து தங்கள் மகளை காப்பாற்றிக்கொள்ள, நடை பயணமாக கரிசல் நிலத்தை நோக்கி பிழைக்க வருகிறது, நாயக்கர் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம். அங்கே எப்படி நிலத்தை பண்படுத்தி, ஒரு கிராமத்தை உருவாக்குகிறார்கள் என்பதை ‘கோபல்ல கிராமம்’ என்ற பெயரில் நாவலாக எழுதினார். அதற்கு பின்னான கோபல்ல கிராம மக்களின் வாழ்க்கையை கோபல்லபுரத்து மக்கள் என்ற பெயரில் எழுதிய நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றது.

கரிசல் வட்டார களஞ்சியம்

கி.ரா, கரிசல் நிலத்தில் ஆண்டாண்டுகாலமாக புழக்கத்திலிருந்த வட்டார வழக்குகளை தொகுத்து கரிசல் வட்டார வழக்கு களஞ்சியம் என்ற பெயரில் வெளியிட்டார். இது இந்தியாவின் வாட்டார வழக்கு களஞ்சியங்களின் முன்னோடியாக உள்ளது.

நாட்டுப்புற பாலியல் கதைகள்

கி.ரா தாத்தாவின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்று கரிசல் எழுத்தாளர் கழனியூரானுடன் சேர்ந்து, கரிசல் நிலத்தின் நாட்டுப்புற பாலியல் கதைகளை தொகுத்தது. நாற்றாண்டுகளாக இச்சமூகத்தில் மக்களின் வாய் மொழியிலேயே பிறந்து வளர்ந்த பாலியல் சார்ந்த நாட்டுப்புற கதைகளை தொகுத்தார். இது வெறும் பாலியல் வேட்கைகளையும், அத்துமீறல்களையும், ஆபாசத்தையும் மட்டும் பேசும் கதைகள் அல்ல. மாறாக அம்மக்களின் பாலியல்சார் உளவியல் எவ்வாறு பொது சமூக கட்டமைப்புகளால் சிதைக்கப்படுகிறது, அந்த கட்டமைப்புகளிலிருந்து தங்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் மக்கள், எப்படி இந்த பாலியல் கதைகள் மூலம் தங்களின் கோபத்தை வடிகாலாக்கிக்கொள்கிறார்கள் என்பதை உணரலாம். அதேநேரம் இவை மக்களுக்கு ஒழுக்கப்பாட்டின் கையேடாக இல்லாமல், நகைச்சுவை, நய்யாண்டித்தனமான முறையில் மக்களால் சொல்லப்பட்டவையே.

இப்பாலியல் கதைகள் குறித்து கீ.ரா தாத்தா சொல்லும்பொழுது, “’பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதைத் திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது பேதமை. மானுடவியலில் இதெல்லாம் இருக்கு. பாலியல் கதைகள் அனைத்தையும் படித்துப் பார்த்தால் அதன் காலக்கட்டம் கி.மு – கி.பி என்பது போல் – நம் சமூகத்தில் திருமணம் என்ற மரபு வருவதற்கு முன்னால் – திருமணத்திற்குப் பின்னால் என்று கொள்ள வேண்டும். மானுட வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் தான் திருமணம் வருகிறது…” என்கிறார்.

இலக்கியத்தின் பிதாமகனான கி.ராவின் பிறந்தநாளில், அவரின் படைப்புகளை பரவலாக எல்லோரிடமும் கொண்டு சேர்பதுதான் அவருக்கு நாம் செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும்.

– அரவிந்ராஜ் ரமேஷ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்