Aran Sei

தனி சின்னத்தில் நின்று அங்கீகாரமா? பெரிய கட்சி சின்னம் என்ற ஆதாயமா? – தேர்தலில் சிறிய கட்சிகளின் நிலை

கூட்டணியில் உள்ள கட்சிகளை, கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் (திமுக, அதிமுக) தமது  சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவதாக சமீபத்தில் குரல்கள் ஒலித்தன.

திமுக தலைவர் ஸ்டாலின் தமது கட்சி எந்தக் கட்சியையும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தவில்லை என்று கூறியிருந்தார். கூட்டணி கட்சிகள் விருப்பப்பட்டால் சொந்த சின்னத்தில் போட்டி இடலாம். வெற்றி வாய்ப்புகளை கருத்தில் கொண்டு கூட்டணி கட்சிகளுடன் விவாதித்து இது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

சிறிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாமல் இருப்பவை. எனவே, தேர்தலில் போட்டியிடும் போது எல்லா தேர்தல்களிலும் எல்லா தொகுதிகளிலும் அவற்றுக்கு ஒரே சின்னம் கிடைப்பது இல்லை. எனவே, ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒரே தேர்தலில் கூட போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும் ஒரே சின்னம் கிடைப்பதற்கான உத்தரவாதம் இருப்பதில்லை.

எனவே, அங்கீகாரம் பெறாத சிறிய கட்சிகள், ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தில் போட்டி இடுவதற்கு பதிலாக, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட திமுகவின் உதயசூரியன் சின்னத்திலோ, அதிமுகவின் இரட்டைஇலை சின்னத்திலோ போட்டியிட்டால் தேர்தல் பிரச்சாரம் எளிதாகி, வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யலாம்.

ஆனால், அப்படி போட்டியிட்டால், தேர்தல் ஆணையத்தில் தமது கட்சிக்கான அங்கீகரத்தை பெறுவது பாதிக்கப்படும்.

இதைப் பற்றி புரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் ஒரு கட்சியை அங்கீகரித்து, அதன் அடிப்படையில் சின்னம் ஒதுக்குவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணையம் 1968-ம் ஆண்டு வெளியிட்ட ஆணையில் அரசியல் கட்சிகளுக்கு மாநில அல்லது தேசிய கட்சிகள் என அங்கீகாரம் வழங்குவது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்சி பிராந்திய அல்லது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கான நிபந்தனைகளை இந்த ஆணையின் பத்தி 6 குறிப்பிடுகிறது.

ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், புதிதாக உருவாக்கப்பட்ட கட்சிகள் ஆகியவற்றின் தேர்தல் செயல்பாடு, அடுத்தடுத்த இரண்டு பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு மதிப்பிடப்படும். தேர்தலில் குறிப்பிட்ட அளவு வெற்றி பெறாத கட்சிகளின் அங்கீகாரம் நீக்கப்படும், குறிப்பிட்ட அளவு வெற்றி பெற்ற கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

ஒரு அரசியல் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கு பின்வரும் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.

  • அந்த மாநிலத்தின் சட்டப் பேரவை தேர்தலில், அக்கட்சி நிறுத்திய வேட்பாளர்கள் மொத்தம் பதிவான வாக்குகளில் 6%-க்குக் குறையாத எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், அக்கட்சியின் வேட்பாளர்கள் இரண்டு பேராவது வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆகியிருக்க வேண்டும்.அல்லது
  • அந்த மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், அக்கட்சியின் வேட்பாளர்கள், மாநிலத்தில் பதிவான மொத்து வாக்குக்குகளில் 6%-க்குக் குறையாத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் மேலும் அக்கட்சியின் வேட்பாளர் ஒருவராவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.அல்லது
  • மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலில் மொத்த இடங்களில் 3% இடங்களில், அல்லது 3 இடங்களில், இதில் எது அதிகமோ, அவ்வளவு வெற்றி பெற்றிருக்க வேண்டும் (தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் இருப்பதால் ஒரு கட்சி குறைந்தது 8 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்)அல்லது
  • மக்களவை தொகுதிகளில் அந்த மாநிலத்தின் எண்ணிக்கையில் ஒவ்வொரு 25 தொகுதிகளில் குறைந்தது 1 தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். (தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் இருப்பதால் ஒரு கட்சி குறைந்தது 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.)அல்லது
  • மக்களவை அல்லது சட்டப் பேரவை தேர்தலில் அந்த மாநிலத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 8% வாக்குகளை கட்சியின் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டும்

ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் பின்வரும் நிபந்தனைளை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

  • 4 அல்லது அதிகமான மாநிலங்களில், முந்தைய மக்களவை பொதுத் தேர்தலில் அல்லது மாநில சட்டப் பேரவை தேர்தலில் அக்கட்சி நியமித்த வேட்பாளர்கள், அந்த மாநிலத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 6%-ஐ பெற்றிருக்க வேண்டும்; மேலும், அந்தக் கட்சியின் சார்பில், எந்த மாநிலத்திலிருந்தாவது மக்களவைக்கு குறைந்தது 4 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்அல்லது
  • கடைசி மக்களவை தேர்தலில் அக்கட்சி 2% தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். (மக்களவையில் 540 தொகுதிகள் இருப்பதால் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் ) ; மேலும் வேட்பாளர்கள் குறைந்தது 3 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்அல்லது
  • அக்கட்சி குறைந்தது 4 மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலே உள்ள நிபந்தனைகளின் பேரில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேசிய அளவில் அல்லது மாநில அளவில் அதிகாரபூர்வமான ஒற்றைச் சின்னம் ஒதுக்கப்படும்.

இந்தச் சின்னத்தை குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு, அக்கட்சித் தலைமையின் வேண்டுகோளின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் ஒதுக்கும்.

அக்கட்சியின் தேர்தல் வெற்றிகள்,  நிபந்தனைகளை நிறைவேற்ற போதுமானதாக இல்லாமல் போனால், அக்கட்சி அங்கீகாரத்தையும் தனிச் சின்னத்தையும் இழந்து விடும்.

பெரிய கட்சிகளுக்கு நிலையான வாக்குவங்கி இருப்பதால் தேவையான வாக்கு சதவீதத்தையும், தொகுதிகளின் எண்ணிக்கையையும் வென்று எளிதாக அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்கின்றன. தமது சின்னத்தையும் தக்க வைத்துக் கொள்கின்றன. ஆனால் சிறிய கட்சிகள் அங்கீகாரத்தையும் சின்னத்தையும் தக்க வைத்துக் கொள்வது போராட்டமாகவே உள்ளது.

உதாரணமாக, வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்ப காலத்தில் குடை சின்னத்தில் போட்டியிட்டது. பிறகு, கட்சி அங்கீகாரத்தை இழந்த பிறகு குடை சின்னம் கிடைக்காமல் பம்பரம் சின்னத்தில் நின்றது.

ஆனால் அந்தக் கட்சி 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் 2016 சட்டப் பேரவை தேர்தலிலும் போட்டியிட்டாலும் தமிழ்நாட்டில் 1 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளையே பெற்றது.

2019 பாராளுமன்ற தேர்தலில் அந்தக் கட்சியின் கணேச மூர்த்தி வெற்றி பெற்றாலும் அந்தத் தேர்தலில் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே, அதன் அடிப்படையில் மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்காது.

சில நேரங்களில் கட்சிகள் மேலே சொன்ன நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றாலும் குறிப்பிட்ட கட்சி கேட்கின்ற சின்னம் இருந்தால் அந்தச் சின்னத்தை தேர்தல் ஆணயம் அக்கட்சிக்கு ஒதுக்கி விடும்.

நடிகர் கமலஹாசன் கட்சிக்கு இதன் அடிப்படையில் மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் விருப்பத்தின் பேரில் செய்யப்படும்.

தமிழக தேர்தல் களத்தில் பல கட்சிகள் இருந்தாலும் திமுகவின் உதயசூரியன் சின்னமும் அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் தான் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளன. தேர்தலில் ஓட்டளிக்கும் பொழுது இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றின் ஆட்சி வரும்படிதான் கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் ஓட்டு அளித்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 2016 தேர்தலில் அதிமுக அனைத்து இடங்களிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. பல கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொண்டாலும் அவர்களையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்தது அக்கட்சி.

மாறாக திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் 178 நபர்களே போட்டியிட்டனர். மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் போன்ற பல கட்சிகள் தனி சின்னத்தில் 13 தொகுதிகளில் போட்டியிட்டனர். காங்கிரஸ் கட்சி கை சின்னத்தில் போட்டியிட்டது.

திமுக, தான் போட்டியிட்ட 178 தொகுதிகளில் 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு மாறாக கை சின்னத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, தான் போட்டியிட்ட 43 தொகுதிகளில் 8 இடங்களிலேயே வெற்றி பெற்றது. 13 இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிட்ட சிறு கட்சிகள் 12 இடத்தில் தோல்வியைத் தழுவினர். இதன் காரணமாக திமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மாறாக அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட பிற கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி, நடிகர் கருணாஸ், ஜவஹருல்லா போன்றோர் வெற்றி பெற்றனர். இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மாற்று கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு மக்களுக்கு அறிமுகமான இரட்டை இலை சின்னம் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

கூட்டணி கட்சிகளின் தோல்வியால் வெற்றி வாய்ப்பை இழந்த திமுகவிற்கு அது பெரிய இழப்பாக அமைந்தது

இதன் காரணமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் சிறிய கட்சிகளை தமது சின்னத்தில் போட்டியிட நிர்ப்பந்தித்தன. திமுக கூட்டணியில், பாரிவேந்தர் (IJK கட்சி), கணேசமூர்த்தி (MDMK), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதற்கு மாறாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தமது சொந்த சின்னத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் கட்சியின் ரவிக்குமார் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தனது சொந்த சின்னத்தில் போட்டியிட்ட தொல் திருமாவளவனுக்கு வெற்றி சுலபமாக கிடைக்கவில்லை. கடுமையான இழுபறி ஏற்பட்டது. கடைசியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த இழுபறிக்கு அவருடைய சின்னம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தொல் திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இருப்பாரானால் அவருடைய வெற்றி சுலபமாக கிடைத்திருக்கலாம்.

இந்த அடிப்படையிலேயே சிறிய கட்சிகளை பெரிய கட்சிகள் தமது சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துகின்றன.

அதே நேரம், தமது தனித்துவத்தை இழக்காமல், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெறுவதற்கு,  சொந்த சின்னத்தில் நிற்க வேண்டும் என்று கட்சிகள் நினைப்பதில் நிச்சயம் நியாயம் இருக்கிறது. தமது சொந்த சின்னத்தில் நின்று வெற்றி பெற்றால் தான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நிலைக்க முடியும். அதுதான் தேர்தல் களத்தில் அந்தக் கட்சியை நிலைநிறுத்தும்.

இன்னொரு பக்கம் தேர்தலில் வெற்றி என்பது மிக முக்கிய அங்கமாக உள்ளது. ஒவ்வொரு கட்சியும் சட்டசபைக்கு தனது உறுப்பினர்களை அனுப்ப உதவுவதே தேர்தலில் கிடைக்கும் வெற்றி தான். அந்த வெற்றியை சுலபமாகப் பெறும் வழியாக பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது உள்ளது.

அதனால், பெரிய கட்சிகள் சிறிய கட்சிகள் தமது சொந்த சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவதில் நியாயம் உள்ளது. ஆனால் சிறு கட்சிகள் இதில் என்ன நிலைப்பாட்டை எடுக்க போகின்றன என்பது தேர்தல் வெற்றி தோல்விகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.

கட்டுரையாளர் ஷியாம் சுந்தர் ஐடி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்