Aran Sei

சுவாமி அக்னிவேஷ் – மக்களுக்காக வாழ்ந்த சந்நியாசி

சுவாமி அக்னிவேஷ்

“உண்மையான ஆரிய சமாஜ உறுப்பினராக இருப்பது என்பது பகுத்தறிவுவாதியாக இருப்பதும், ஏழைகளுக்காக பணியாற்றுவதுமே ஆகும்” – சுவாமி. அக்னிவேஷ்

சுவாமி அக்னிவேஷின் அலுவலகம், பழைய ஒன்றுபட்ட ஜனதாதளம் கட்சி அலுவலகத்திற்கு பின்னால் உள்ளது. அந்த வீட்டின் கதவுகள் எப்போதுமே திறந்தே இருக்கும். ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்கு வருபவர்களுக்கு வசதியாக அந்த அலுவலகத்தில் நடுவில் ஒரு மிகப்பெரிய மேசை போடப்பட்டிருக்கும். எங்கள் சல்வா ஜூடும்-க்கு எதிரான வழக்குத் தொடர்பாக நான் சுவாமி அக்னிவேஷை சந்திக்க எப்போது சென்றாலும் வெவ்வேறு மக்கள் சுவாமிஜியைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள்.

ஆனால் ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன் ப்யாரி லால் பவனில் உள்ள ஆரிய சமாஜத்தில் அவரது 80-வது பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்த சுவாமிஜியின் நண்பர்கள் வட்டத்தைப் பார்த்து மலைத்துப் போனேன். அந்த அறை முழுவதும் மக்களால் நிரம்பி வழிந்தது. மேடையில் வேறு பல சுவாமிகள் அமர்ந்திருக்க, பார்வையாளர்கள் கூட்டத்தில் சுவாமிஜியால் துவங்கப்பட்ட பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம் இயக்கத்தைச் (Beti bachao andolan) சேர்ந்த பெண்களும், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து தியோரலாவை நோக்கி சுவாமிஜி நடத்திய நெடும் பயணத்தில் பங்கு கொண்டவர்களும், சுவாமிஜியால் அமைக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் விடுதலை முன்னணியால் (Bandua mukthi Morcha) பயன் அடைந்தவர்களும் இருந்தனர்.

அரியானாவில் செங்கல் சூளைகளில் இருந்து கொத்தடிமைகளை மீட்க சுவாமிஜி 1983-ல் மத்திய அரசுக்கு எதிராக நடத்திய வழக்கைப் பற்றியும், அதன் தொடர் நிகழ்வுகளையும் நான் அறிவேன்.. (எடுத்துக்காட்டாக உத்தர பிரதேசத்தில் தரைவிரிப்புத் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிராக 1997-ல் நடத்திய வழக்கை கூறலாம்) இவை எல்லாம் பொது நல வழக்குகள் வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்கள் ஆகும். ஆனால் இவை அத்தனையிலும் சுவாமிஜியின் ஈடுபாடு பற்றி முழுமையாக நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

எல்லாவற்றையும் விட இதில் ஆச்சரியம் என்னவெனில் அங்கு இருந்தவர்களில் ஏறத்தாழ யாரையுமே எனக்குத் தெரியாது‌. இதற்குக் காரணம் அவர் வெவ்வேறு இரு உலகங்களில் வாழ்ந்ததே ஆகும் என நினைக்கிறேன். முதலாவது உலகத்தில் அவரது மத நம்பிக்கை பெரும் முக்கியத்துவம் கொண்டது. அதுவே அவருக்கு இந்து சமூகத்தில் நிலவும் அறிவு மறுப்பு வாதங்களுக்கு எதிராகப் போராடும் வலிமையைக் கொடுத்தது. இரண்டாவது உலகம், ‘ சமதர்ம போராளிகளின்’ உலகம். இங்கும் நர்மதாவை காப்போம் (Narmadha Bachao Andholan) இயக்கத்திலிருந்து மாவோயிஸ்டுகளுடனான அமைதி பேச்சுவார்த்தைகள், அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் வரை பல்வேறு பிரச்சனைகளிலும் அவர் ஈடுபட்டார்.

சுவாமி அக்னிவேஷ் இறுதி பயணம்
சுவாமி அக்னிவேஷ் இறுதி பயணம்

கிறிஸ்துவ விடுதலை சமயவாதிகளைப் போலவே, உண்மையான ஆரிய சமாஜ உறுப்பினர் என்பவன் பகுத்தறிவுவாதியாக, சமுதாயத்தை சீர்திருத்த விரும்புவனாக, இருக்க வேண்டும் என்பது சுவாமிஜியின் எண்ணம். ஆனால் அவரது தாய் அமைப்பான ஆரிய சமாஜம் அவரது முற்போக்கு கருத்துக்களோடு ஒத்திருக்கவில்லை. அவரது ஆன்மீக மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடல் பற்றிய புத்தகங்களை படிப்பதில் எனக்கு ஆர்வம் ஊட்டுவதற்கு அவர் அவ்வப்போது முயற்சித்தார். ஆனால் நானோ பொருள்முதல்வாதியாகவே இருப்பதையே விரும்பினேன்‌.

2018-ல், சுவாமிஜியுடன் ஐதராபாத்தைச் சேர்ந்த இடதுசாரி பெண்கள் அமைப்பு நடத்திய வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதில் மாட்டிறைச்சியை தின்றதற்காக ஒரு அராஜகக் கும்பல் முஸ்லீம்களையும் தலித் மக்களையும் தாக்குவது குறித்த நாடகம் ஒன்று நடைபெற்றது. அதில் ஒரு நடிகர் சுவாமி அக்னிவேஷாக வந்து பகுத்தறிவு ரீதியான உரையாற்றினார். நான் பார்வையாளர்களோடு அமர்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த சுவாமிஜியிடம், அவரது பாத்திரத்தைப் பற்றிக் கேட்டபோது, அவர் சிரித்துக் கொண்டே, “அவர் அசல் அக்னிவேஷை விட சிறப்பாக உள்ளார்.” என பதிலளித்தார்.

சுவாமிஜி மீதான பல தாக்குதல்கள்

சுவாமிஜி இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டதே அவரது உடல் வலிமைக்கு சான்றாகும். ஏனெனில் இதற்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் ஜார்க்கண்டில் பாரதீய மக்கள் இளைஞர் முன்னணி (BJYM) கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டு அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்; அதுதான் இறுதியில் அவரது இறப்புக்குக் காரணமாக அமைந்தது. அந்த நிகழ்வுக்குப் பின் உடனடியாக அவரை சந்தித்த போது முதன்முறையாக சுவாமிஜி வலியாலும் பலவீனத்தாலும் வேதனைப்படுவதைப் பார்த்தேன். அப்போதும் அவர் மதவாதத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்களைத் திரட்டுவதற்கான திட்டம் பற்றி சிந்தனை செய்து கொண்டிருந்தார்.

எனினும் பா.ஜ.க ஆட்சியின் கீழ் பா.ஜ.க ஆதரவாளர்களால் சுவாமிஜி தாக்கப்படுவது இது முதல்முறை அல்ல. நான் கடந்த 2011-லிருந்து சுவாமிஜியுடன் நெருக்கமாக பழகி வருகிறேன். சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளை ஒடுக்குவது என்ற பெயரில் அரசால் உருவாக்கப்பட்ட பழங்குடி இளைஞர்களைக் கொண்ட அமைப்பான சல்வா ஜூடும் குண்டர்களால் தோர்னாபால் என்ற இடத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அப்போது அவர் காவல்துறை மற்றும் சல்வா ஜூடும் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்ட தாட்மெட்லா, மோர்பள்ளி, திமாபுரம் ஆகிய கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கச் சென்றிருந்தார். அந்தக் கும்பலை, அப்போதைய தண்டேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.பி கல்லூரிதான் தூண்டி விட்டிருந்தார்.

அப்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த வழக்கில் இது தொடர்பாக உறுதிமொழி பத்திரம் பதிவு செய்வதற்கு சுவாமிஜி உடனடியாக முன்வந்தார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் நீதிபதிகள் சுதர்சன் ரெட்டியும், எஸ்.எஸ் நிஜ்ஜாரும் சல்வா ஜூடும் அமைப்பைத் தடை செய்து பிறப்பித்த உத்தரவின் மீது அது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

சுவாமிஜியின் உறுதி மொழி பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், சுவாமிஜி தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் அசோக் தேசாய், சுவாமிஜியை நீதிமன்றத்திற்கு வரும்படி கேட்கும் போதெல்லாம், வாய்ப்பிருந்தால் அவர் தவறாமல் வந்து விடுவார். சுவாமிஜியுடன் உச்சநீதி மன்றம் செல்வது ஒரு தனி அனுபவம். நாங்கள் எங்கள் முறைக்காக நீதிமன்ற வாயிலில் காத்திருக்கும் போது ஏராளமான மக்கள் வந்து அவரிடம் ஆசி பெற்று செல்வார்கள்.

இந்திய உச்சநீதி மன்றம்
இந்திய உச்சநீதி மன்றம்

2011-ல் இந்த வழக்கில் சுவாமிஜி தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தின் சாரத்தை அறிந்து கொள்வது பயனுள்ளதாகும்.. அதில் சுவாமிஜி அன்றைய சத்தீஸ்கர் முதலமைச்சர் ரமண் சிங்கால் எப்படி ஏமாற்றப்பட்டார் என தெளிவாக எடுத்துக் காட்டி இருந்தார்‌. சுவாமிஜி அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாராயண்பூரில் மாவோயிஸ்டுகள் பிடித்து வைத்திருந்த காவலர்களை விடுவிக்கச் செய்திருந்தார். இந்த வழக்கிலும் தனது மனிதாபிமான முயற்சிகளுக்கு முதலமைச்சர் ரமன் சிங் உதவுவார் என எதிர்பார்த்தார். சுவாமிஜியுடன் இரண்டு வாழும் கலை அமைப்பின் பிரதிநிதிகள் சென்றிருந்தனர்.

சுவாமி அக்னிவேஷ் 26 மார்ச் 2011-ல் எழுதிய தனது உறுதிமொழி பத்திரத்தில்:

“நாங்கள் தோர்னாபாலை அடைந்த போது, பழங்குடியினர் அல்லாத , நல்ல உடற்கட்டுடன் இருந்த சுத்தமான இந்தியில் கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருந்த ஒருவரால் தலைமை தாங்கப்பட்ட 100-150பேர் அடங்கிய, பலதரப்பட்ட மக்களைக் கொண்ட கும்பல் எங்கள் மூவரையும் காரிலிருந்து வெளியே இழுத்தனர். ஓட்டுநரும் மிரட்டப்பட்டார், கார் டயரில் இருந்த காற்றை பிடுங்கி விட்டனர். நாங்கள் சொல்லமுடியாத அவமானத்துக்கும் தாக்குதல்களுக்கும், தள்ளுதல்களுக்கும் ஆளானோம்.. இது நாற்பது நிமிடங்களுக்கு மேல் நடந்தது.

நாங்கள் அவர்களது கோரிக்கைகளை கேட்க விரும்பினோம் . ஆனால் அவர்கள் சத்தமாக, “மாவோயிஸ்டுகள் 76 ஜவான்களைக் கொன்ற போதும் வன்முறை நடத்திய போதும் நீங்கள் எங்கே போனீர்கள்?” என்று கத்தினர். அதற்கு நான்தான் கடந்த ஆண்டு மே மாதம் 5-10-ம் தேதி வரை மாவோயிஸ்டுகளின் வன்முறையை கண்டித்து ராய்ப்பூரிலிருந்து தான்டேவாடா வரை அமைதிப் பேரணி நடத்தியதாக அவர்களிடம் கூற நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். கொல்லப்பட்ட ஜவான்களுக்கு நாங்கள் மலரஞ்சலி செலுத்தியது பற்றியும் கூறினேன்.

ஆனால் இவை எதையும் கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை. தொடர்ந்து கத்திக்கொண்டும், எங்களை தள்ளிக் கொண்டும் இருந்தனர். அவர்கள் விதவைகள் என்று கூறி சில பெண்களை இழுத்து, எங்கள் மீது தள்ளினர். ஒருபெண் என்மீது விழுந்தார். எனது தலைப்பாகை பிடித்து இழுக்கப்பட்டது.

வாழும் கலை அமைப்பைச் சேர்ந்தவர்கள், எரிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்குத் தருவதற்காக தங்களது கார் நிறைய துணிமணிகள் மற்றும் பிற பொருட்களை வைத்திருந்தனர் . அவை அத்தனையையும் அந்தக் கும்பல் எடுத்துக் கொண்டது.

நல்வாய்ப்பாக எங்கள் கார் ஓட்டுநர் டயர்களில் காற்றை நிரப்பிவிட நாங்கள் காரில் ஏறி அமர்ந்தோம். எங்கள் கார் மீது முட்டைகளை வீசினர். எங்களுடன் வந்த செய்தியாளர்களையும் தாக்கி மிக மோசமாக நடத்தினர். SDOP. திரு . தாரகேஷ்வர் பட்டேல் எங்களுக்கு சிறிது பாதுகாப்பு கொடுக்க முயன்றார். ஆனால் அவரையும் பிடித்துத் தள்ளி விட்டனர்.”

சுவாமிஜி சளைக்காமல் மறுநாளும் அங்கு செல்ல முயற்சித்தார். இம்முறை முதலமைச்சர் ரமண் சிங்கின் நேரடியான உறுதிமொழியின் பேரில் அங்கு சென்றார்.

“நாங்கள் தோர்னாபால் நாக்காவிற்கு அருகில் வந்து கொண்டிருந்த போது மிக நீண்ட வரிசையில் லாரிகளும் பேருந்துகளும் நின்றிருந்ததையும் , பெரிய கூட்டம் கூடி நிற்பதையும் பார்த்தோம். நாங்கள் உடனடியாக ASP மராவியை தொடர்பு கொண்டு ,”ஆபத்து வருவது போல் உள்ளது, நாம் திரும்பி விடுவோம்” என்று கூறினோம். அதற்கு அவர், ”ஒன்றும் பிரச்சனை இருக்காது.” என்று கூறினார். தனது அதீத நம்பிக்கையால், கீழே இறங்கி கும்பலிடம் சென்று எங்களை பாதுகாப்பாக அனுப்பி விட பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ஆனால் அவரையும் பிடித்து கீழே தள்ளிவிட்ட கும்பல், எங்கள் காரை தடிகளுடன் சுற்றி வளைத்தனர்.

அந்த நேரத்தில் நாங்கள் பயன்படுத்துவதற்காக ASP தனது சொந்த புதிய ஸ்கார்ப்பியோ வண்டியை கொடுத்திருந்தார். அந்தக் கும்பல் எங்களை வெளியே இழுத்து அடித்துக் கொலை செய்ய முயன்றது. அது முடியாது போனதும் எங்கள் வண்டிக்கு தீ வைக்க முடிவு செய்தனர். ஒரு கிலோ அளவு எடையுள்ள பெரிய கற்களால் எங்களைத் தாக்கினர். வண்டியின் கண்ணாடி சன்னல்கள் அனைத்தும் உடைக்கப்பட்டன. கற்கள் எங்கள் மீது விழுந்தன. ஓட்டுநரை பிடித்து வெளியே இழுத்து அடித்தனர். ஒரு பெரிய கல் என் தலையைத் தாக்கியது‌ . ஆனால் தலைப்பாகை இருந்ததால் நான் தப்பித்தேன். ரிஷி மிலிந்த் தனது வலது முழங்கையால் கல்லை தடுத்ததால் தப்பினார், அவரது முழங்கை காயமடைந்தது.

இவை அத்தனையும் மாலை 4:45 முதல் 5:00 மணிக்குள் நடந்தது. எங்களுக்கு பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்ட 15-20 காவலர்களும் (முதலமைச்சர் உறுதி அளித்தது போல் 100-150 அல்ல) இவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தனர். அருகிலேயே மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் இருந்தது. அவர்களும் எதுவும் செய்யவில்லை. பிறகு ஓட்டுநர் மீண்டும் வண்டியிலேறி எங்களை அந்த கொலைவெறித் தாக்குதலிலிருந்து காப்பாற்றினார். சல்வா ஜூடும் கும்பலும், சிறப்பு போலீஸ் அதிகாரிகள் எனப்படும் கூலிப்படையும் திரும்பும் வழியில் 15 கி.மீ வரை எங்களைத் துரத்திக் கொண்டு வந்தனர்.”

சுவாமி அக்னிவேஷ்
அரசியல் சட்டப் பிரிவு 377 கிரிமினல் நீக்கம் செய்யப்பட்ட பிறகு உச்சநீதி மன்றத்தின் முன் பத்திரிகையாளர்களுடன் பேசிய சுவாமி அக்னிவேஷ்

அமைதிக்கான தொடர் போராட்டம்:

72 வயதில் இத்தகைய தாக்குதலுக்குப்பின் சுவாமிஜி போலன்றி வேறு பலவீனமான நபராக இருந்திருந்தால் அமைதியாகி விட்டிருப்பார்கள். ஆனால் சத்தீஸ்கரின் அமைதிக்காகவும், தாட்மெட்லா கிராம மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ‌சுவாமி அக்னிவேஷ் தொடர்ந்து போராடினார். 2011-ல் உச்சநீதிமன்றம் கிராமங்களில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் சுவாமி அக்னிவேஷ் மீது நடத்திய தாக்குதல் குறித்தும் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

ஆனால் இது வரை விசாரணை முடியவில்லை. சுவாமிஜி மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் சிலர் சி.பி.ஐ மீது குற்றம் சாட்டியிருந்தும், ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு மேல் எதுவும் நடக்கவில்லை, யாரும் தண்டிக்கப்படவில்லை. அதிகாரிகள் களத்திலிருந்து முழுமையான சாட்சிகளை கொடுத்தாலும், சி.பி.ஐ ஏன் பலவீனமான குற்றப்பத்திரிகைகளையே தாக்கல் செய்கிறது என்பதற்கு சுவாமி அக்னிவேஷ் பற்றி முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் நாகேஸ்வர் ராவ் வெளியிட்டுள்ள வெறுப்பைக் கக்கும் ட்விட்டர் பதிவுகளே சான்று.

2010ல்-தனது உறுதி மொழி பத்திரத்தில் கூறியுள்ளது போல் சுவாமி அக்னிவேஷ் தண்டேவாடா அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்தார். அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமிடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தூதுவராக இருந்தார். சுவாமி அக்னிவேஷ் மூலம் உள்துறை அமைச்சகம் கொடுத்த கடிதத்தை தனது தோழர்களுக்கு எடுத்து சென்ற முக்கிய மாவோயிஸ்டு தலைவர் ஆசாத் ‘ என்கவுன்டரில்’ சுட்டுக் கொல்லப்பட்டார்‌ . இதற்கு சுவாமி அக்னிவேஷ் தன்மீதே பழி சுமத்திக் கொண்டார். தன்னை அரசு பகடைக்காயாக பயன்படுத்திக்கொண்டதாகக் கருதினார். 2015-ல் தன்னை இந்த வழக்கில் சாட்சி சொல்ல ஆந்திரா சென்றார்‌.

என்னை எப்போது சுவாமிஜி அழைத்தாலும், “நமஸ்தே பேராசிரியை நந்தினி சுந்தர்“ என்றே துவங்குவார். முடிக்கும் போது ‘ ஜெய் ஹோ’ என்றே முடிப்பார். ஜெய் ஹோ, சுவாமிஜி – நீங்கள் எப்போதும், எங்கிருந்தாலும் எங்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருப்பீர்கள்.

நந்தினி சுந்தர், தில்லியில் இருந்து செயல்படும் ஒரு சமூகவியலாளர்

கட்டுரை & படங்கள் – நன்றி : https://thewire.in/
மொழியாக்கம் : நாராயணன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்