Aran Sei

இந்தியாவின் ‘ஜோன் ஆஃப் ஆர்க்’ – மறக்கப்பட்டு விட்ட சுசீலா அக்காவின் வாழ்க்கை

image credit : thewire.in

னைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொண்ட இயக்கம் என்ற வகையில் இந்திய சுதந்திர போராட்ட இயக்கம் வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ளது. அனைத்து வர்க்கங்களையும், சாதிகளையும், மதங்களையும் சேர்ந்த ஆண்களும், பெண்களும் சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம் செய்துள்ளனர். எனினும், எப்போதும், ஆங்கிலேயரை எதிர்த்த போராட்டத்தில் தொடர்புடைய ஆண்கள் மட்டுமே மக்களின் நினைவில் இருக்கின்றார்கள். பெண்களின் பங்கு காலப்போக்கில் ஒதுக்கப்பட்டு விட்டது.

மேற்கே பஞ்சாப் முதல் கிழக்கே வங்காளம் வரை சுதந்திரத்திற்காக தங்கள் உறுதியை ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காமல் போராடிய பெண்கள் ஏராளம். அதே போல் இந்திய புரட்சி இயக்கமும் தனக்கே உரிய, ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பெண்களின் பங்களிப்பைக் கொண்டுள்ளது. ஆனால் சோகத்திற்குரிய வகையில், கல்பனா தத், துர்கா வோரா போன்றவர்களை மேலும் பிரபலமான ஆண் புரட்சியாளர்களுக்கு துணை புரிந்தவர்களாக மட்டுமே வரலாறு கருதுகிறது.

இந்திய புரட்சி இயக்கத்தின் வரலாற்று ஏடுகளில் உள்ள அத்தகைய பெயர்களில் ஒன்றுதான் ‘சுசீலா அக்கா’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட சுசீலா மோகன்.

1905, மார்ச் 5-ம் நாள் காலனிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார் சுசீலா அக்கா. இவரது தந்தை இராணுவத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். சுசீலா அக்கா 1921 முதல் 1927 வரை ஜலந்தரில் தங்கி, அங்கிருந்த ஆரிய பெண்கள் கல்லூரியில் கல்வி கற்றார்.

தேசியவாத கவிதைகளை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும், தனது கல்லூரி வாழ்க்கையில்தான் சுசீலா அக்கா தேசியவாத அரசியல் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஆரியக் கல்லூரி அப்போது தேசியவாத அரசியல் இயக்கத்தின் மையப் புள்ளியாக இருந்தது. அதன் முதல்வர் ஷன்னோ தேவியும், முன்னாள் முதல்வர் குமாரி லஜ்ஜாவதியும் அதன் முக்கிய அமைப்பாளர்களாகவும், செயற்பாட்டாளர்களாகவும் இருந்தனர்.

அவரது மாணவ நாட்களில்தான் சுசீலா அக்காவுக்கு புரட்சி இயக்கத்துடனான தொடர்பு ஏற்பட்டது. டேராடூனில் நடைபெற்ற இந்தி இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்ட குழுவில் ஒருவராக சுசீலா அக்கா இருந்தார். அங்கு புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த லாகூர் தேசியக் கல்லூரி மாணவர்கள் சிலரை சந்தித்தார்.

பின்னர் அவர், பகவதி சரண் வோரா, துர்கா தேவி வோரா ஆகியோரைச் சந்தித்து புரட்சிகர குழுவில் இணைந்தார். அவர் சில பெண் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து ஜலந்தரில் புரட்சிகர இலக்கியங்களை விநியோகிப்பதில் ஈடுபட்டதுடன் ஏராளமானவர்களை கட்சியில் இணைத்தார்.

சுசீலா அக்கா, சுதந்திரமான பெண் என்ற சொல்லின் முழுப்பொருளில் சுயேச்சையாக இருந்தார். காகோரி தியாகிகள் தண்டிக்கப்பட்டது பற்றிய செய்தியை அறிந்ததும் அவர் தன்னை புரட்சிகர இயக்கத்தில் முழுமையாக மூழ்கடித்துக் கொள்ள முடிவு செய்தார். அவரது அப்பா அவரை அரசியலிலிருந்து விலகி இருக்கும்படி அறிவுரை கூறினார். இல்லை என்றால் தான் தனது வேலையை இழக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.

ஆனால் சுசீலா அக்கா இந்த எச்சரிக்கைகளை சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவரது முதல் கிளர்ச்சி அவருடைய வீட்டை எதிர்த்தே ஆரம்பித்தது. அவர் வீட்டை விட்டுப் வெளியேற முடிவு செய்து இரண்டு ஆண்டுகள் கழித்தே திரும்பினார். அப்போது அவரது அப்பாவும், அவரைப் பின்பற்றி இந்திய விடுதலை இயக்கத்தில் சேர முடிவு செய்தார். சுசீலா அக்கா தனது கையில் அணிந்திருந்த தங்க வளையல்களை காகோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உதவி நிதிக்காக அளித்தார்.

1928-ல் தனது கல்லூரி முதல்வர் ஷன்னோ தேவியின் வற்புறுத்தலால் கல்கத்தா சென்று அங்கு சஜ்ஜுராம் சௌத்ரி என்பவரது மகளுக்கு தனிப்பட்ட ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். லாகூரில் சாண்டர்ஸ் கொலைக்குப் பின் அங்கிருந்து தப்பி பகத் சிங்கும், துர்கா தேவியும் கல்கத்தா வந்தனர். சுசீலா அக்காதான் அவர்களுக்கு சஜ்ஜுராம் வீட்டில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.

அவர் கல்கத்தாவில் இருந்த போது பெண் புரட்சியாளர்கள் குழு ஒன்றை நிறுவினார். அக்குழு சைமன் கமிஷனுக்கு எதிராக சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் இந்த பெண் செயல்பாட்டாளர்களின் குழு ‘பகத்சிங் பாதுகாப்பு கமிட்டி’ யை உருவாக்கி லாகூர் வழக்கிலும், டெல்லி சதி வழக்கிலும் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களுக்கு ஆதரவாக நிதி திரட்டியது. சுசீலா அக்கா ‘மேவார் பதான்’ என்ற நாடகத்தையும் எழுதி, அந்த நாடகத்தை நடத்தி குழுவினர் நிதி திரட்டவும் புரட்சிகர கருத்துக்களை பரப்பவும் செய்தனர்.

டெல்லி வெடிகுண்டு வழக்கில் பகத்சிங்கும் மற்ற புரட்சியாளர்களும் கைது செய்யப்பட்ட பிறகு, இந்துஸ்தான் சோசலிச குடியரசுப் படை (HSRA) புரட்சியாளர்கள் வைஸ்ராய் இர்வினை கொலை செய்ய திட்டமிட்டனர். மற்ற எல்லா புரட்சியாளர்களும் தீவிர கண்காணிப்பில் இருந்ததால், வைஸ்ராய் பயணம் செய்யும் தொடர்வண்டி குறித்த அனைத்து விவரங்களையும் சேகரிக்கும் பணி சுசீலா அக்காவின் பொறுப்பாக மாறியது. ஒரு முழுமையான ஐரோப்பிய பாணி உடை அணிந்து ஒரு ஆங்கில சீமாட்டியாக ஆள்மாறாட்டம் செய்து, சுசீலா அக்கா வைஸ்ராயின் பயணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்தார்.

ஆனால் இந்த இர்வின் கொலைத் திட்டம் தோல்வி அடைந்த பிறகு, HSRA புரட்சியாளர்கள் சிறையைத் தகர்த்து பகத்சிங்கையும் பிற புரட்சியாளர்களையும் விடுவிக்க திட்டமிட்டனர். சுசீலா அக்காவும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டார். கொல்கதாதவில் தனது வேலையை விட்டு விட்டு, லாகூர் சென்றார். அங்கு ஒரு சீக்கிய பையனைப் போல மாறு வேடத்தில் வாழ்ந்தார். மற்ற புரட்சியாளர்களுடன் இணைந்து சிறை தகர்ப்பிற்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும், பொருட்களையும் சேகரித்தார்.

ஆனால் கெடு-வாய்ப்பாக, ராவி நதிக்கரையில் ஒரு வெடிகுண்டை சோதனை செய்து கொண்டிருந்த போது, பகவதிசரண் வோரா இறந்து போனதும், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து காவல்துறையின் தேடுதல் வேட்டை தீவிரமானது. அவர்கள் மீது பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் சுசீலா அக்கா, துர்கா அண்ணிஇருவரும் தலைமறைவாயினர்.

பகத்சிங்கிற்கு சுசீலா அக்கா எழுதிய கடிதம் “சுதந்திர பாரத்” என்ற தேசியவாத பத்திரிகையில் வெளியிடப்பட்டது தொடர்பாக சுசீலா அக்கா மீது மேலும் ஒரு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த பத்திரிகையின் ஆசிரியர் பகத் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு பத்தாயிரம் ரூபாய் அபராதமும், ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

1931, பிப்ரவரி 27 ல் சந்திர சேகர ஆசாத் உயிர் தியாகம் செய்த பிறகு, 1931, மார்ச் 23 ல் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட பிறகு இந்துஸ்தான் சோசலிச குடியரசு படை முழு குழப்பத்தில் இருந்தது. இந்த நேரத்தில்தான் சுசீலா அக்கா டெல்லியிலும் லாகூரிலும் இயக்கத்தின் தலைமையை ஏற்று பஞ்சாப் அரசாங்க செயலாளர் சர். ஹென்றி கிர்க்கைக் கொலை செய்ய திட்டமிட்டார். மூன்று புரட்சியாளர்கள் தூக்கிலிடப்படுவதற்கு அவரை பொறுப்பாக்கிய சுசீலா அக்கா, புரட்சியாளர்களின் தியாகத்திற்கு அவரை பழிவாங்க வேண்டும் என விரும்பினார்.

“லாகூர் கிர்க் திட்டம்” என புரட்சியாளர் உள் வட்டத்தில் அறியப்படும் இந்தத் திட்டத்தில் தன்வந்திரி, சுக்தேவ் ராஜ், ஜகதீஷ் ஆகிய புரட்சியாளர்கள் சுசீலா அக்கா தலைமையில் செயல்படுவதற்கான திட்டம் வகுக்க லாகூரில் கூடினர். ஆனால் கெடு வாய்ப்பாக காவல்துறை இந்தத் திட்டம் குறித்து மோப்பம் பிடித்து லாகூரின் ஷாலிமார்பாக் அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜகதீஷை கொல்லப்பட்டார், சுக்தேவ் ராஜ் கைது செய்யப்பட்டார்.

இந்த துன்பியல் நிகழ்விற்கு சில நாட்களுக்குப் பின் சுசீலா அக்காவும் கைது செய்யப்பட்டு, பார்லிமென்ட் வீதி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். ஆனால் டெல்லி காவல்துறை அவர்மீது வழக்கு ஏதும் போட இயலாததால், 24 மணி நேரத்திற்குள் டெல்லியை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

1932 ல், காலனிய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்த டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் சுசீலா அக்கா உற்சாகமாக பங்கேற்றார். இந்து என்ற பெயரில் ஒருஉ பெண்கள் குழுவுடன் அதில் கலந்து கொண்ட அவர் கைது செய்யப்பட்டு ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் 1933 ல் காங்கிரஸ் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ஷியாம் மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டு டெல்லியில் குடியேறி, தன் அரசியல் செயல்பாடுகளைத் தொடர்ந்தார்.

டெல்லியில் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த போதும் சுசீலா அக்கா தனது புரட்சிகர சித்தாந்தத்தை கைவிடவில்லை. காகோரி வழக்கில் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த புரட்சியாளர்கள் விடுதலையடைந்து நாடு திரும்பிய போது அவர்களை வரவேற்க ஒரு மாபெரும் அரசியல் பேரணியை நடத்த சுசீலா அக்காவும், துர்கா தேவியும் திட்டமிட்டனர். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் புரட்சியாளர்களை வரவேற்பதற்கு மகாத்மா காந்தி எதிர்ப்பு தெரிவித்த போதும், இரு பெண்களும் அவரை மீறி, டெல்லி காவல்துறை விடுத்த பல எச்சரிக்கைகளையும் கைதுகளையும் மீறி, பேரணியை வெற்றிகரமாக நடத்தினர்.

ஏராளமான தடைகளை மீறி அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சுசீலா அக்காவை அந்தமான் செல்லுலார் சிறையில் பல ஆண்டுகள் கழித்திருந்த, ஜான்சியைச் சேர்ந்த புரட்சியாளர் பண்டிட் பரமானந்தா “இந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க்” என அழைத்தார். அதன் பின்னர் 1942-ல் நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்திலும் தன் கணவருடன் இணைந்து பங்கு கொண்டு சிறை சென்றார்.

image credit : thewire.in
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஒரு பகுதியாக பெங்களூருவில் நடைபெற்ற ஒரு பேரணி – image credit : thewire.in

1947ல் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிய பிறகு சுசீலா அக்கா பழைய டெல்லியின் பால்மொரான் என்ற பகுதியில் பெண்களுக்கான கைவினை பொருட்கள் செய்ய கற்று தரும் பள்ளியை நிறுவினார். அவர் முக்கியமாக (அப்போது அரிஜன்கள் என்று அழைக்கப்பட்ட) தலித் மக்கள் காலனிகளிலேயே பணியாற்றினார். அங்கு நூற்றுக்கணக்கான பெண்களுக்குக் கைவினை பொருட்கள் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தார். சில காலம் டெல்லி நகராட்சி கழக உறுப்பினராக பணியாற்றினார். டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்தார்.

இன்று சாந்தினி சௌக்கில் கரிபோலியில் “சுசீலா மோகன் சாலை” என அவரது பெயரில் ஒரு சாலை உள்ளது. ஆனால் யார் அந்த சுசீலா மோகன் என்பதே பலருக்குத் தெரியாது. அந்தத் தெருவைப் போலவே அவரது பெயரும் புரட்சிகர நினைவுகளின் குவியலில் காணாமல் போய் விட்டது.

www.thewire.in இணைய தளத்தில் அன்கூர் கோஸ்வாமி மற்றும் ஹர்ஷ்வர்த்தன் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்