Aran Sei

சுஷாந்த் சிங் ராஜ்புட் – மரணத்தில் அரசியல் செய்த பாஜக : ஆய்வு முடிவு

ஜூன் மாதம் நடந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்- ன் [இந்தி திரைப்பட நடிகர்] மரணம் இந்தியச் செய்தித் தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் ஏன் அரசியல் உலகிலும் கூட விசித்திரமான சதித் திட்டங்களின் அலை ஒன்றைக் கிளப்பியது.

இந்த விவகாரம் தலை சுற்ற வைக்கும் அளவுக்குப் பல்வேறுபட்ட விஷயங்களைக் கடைந்து பொதுவெளியில் கடை விரித்தது. பாலிவுட் [இந்தித் திரைப்படத் துறை] குடும்ப அரசியல், மந்திரவாதம் செய்வதாக வங்காளிகளைச் சித்திரிப்பது, திரையுலக நட்சத்திரங்களிடையே இருக்கும் பரவலான போதைப் பொருள் பயன்பாடு, மும்பைக் காவல்துறையின் முட்டுக்கட்டையிடும் பங்கு போன்ற பல கதைகள் புனையப்பட்டன.

கடந்த 3-ம் தேதி இவையெல்லாம் ஒரு முடிவுக்கு வந்தன. அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்பதை உறுதி செய்ததும் கொலை பற்றிய அனைத்துக் கட்டுக்கதைகளும் பிசுபிசுத்துப் போயின. மும்பைக் காவல்துறை இதைத்தான் தொடர்ந்து கூறி வந்தது.

அப்படியானால் கடந்த மூன்று மாதங்களாக இந்த வதந்திகள் பொது வாழ்வை எவ்வாறு ஆக்கிரமித்தன? இது தொடர்பாக, விசாரணையைத் திசை திருப்ப 80,000 போலி முகநூல் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக கடந்த செப். 28-ம் தேதி மும்பைக் காவல்துறை தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளைத் தாக்கல் செய்தது.

இந்திய மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை ஆராய்ச்சியாளராகவும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகவும் பணியாற்றும் ஜோயோஜீத் பால் ஜூன் 14-ம் தேதியிலிருந்து செப். 12-ம் தேதி வரை சமூக ஊடகங்களின் உள்ளடக்கம் பற்றி மேற்கொண்ட ஆய்வு இந்தச் சதித் திட்டக் கதைகள் எவ்வாறு பரப்பப்பட்டன என்பதை விவரிக்கிறது.

ஆய்வாளர்கள், “முக்கியத் தொலைக்காட்சி நிறுவனங்களின் யூடியூப் பக்கங்களையும் ட்விட்டரில் வேகமாகப் பரவிய hashtag-களையும் அரசியல்வாதிகள், செல்வாக்கு செலுத்துவோர், பத்திரிகையாளர்கள் மற்றும் இந்திய ஊடக நிறுவனங்கள் ஆகியோரின் ட்விட்டர் பதிவுகளையும் இந்தியாவில் செயல்படும் தகவல் சரிபார்ப்பவர்களால் பொய்த் தகவல்கள் என்று தொகுக்கப்பட்டவற்றையும் ஆய்விற்கு எடுத்துக்கொண்டனர்.
பெரும்பாலான பதிவுகளும் சிவசேனா தலைமையிலான மகாராட்டிர அரசைத் தாக்குவதற்காக பாஜக-வால் பயன்படுத்தப்பட்டவை என்ற தனித்துவமான அரசியல் நோக்கத்தைக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

எனினும், சுஷாந்த் சிங்கின் இறப்பு பற்றிய செய்தியே பொதுமக்கள் மத்தியில் தீவிர விவாதத்தைக் கிளப்பிவிட்டது. அவரது இறப்பு தொடர்பாக மிகவும் செயற்கையான கட்டுக்கதைகளைப் பரப்பிய பத்திரிகையாளர்களை அவர்கள் ஆதரித்தனர்.

பாஜக எவ்வாறு சதித் திட்டத்தைத் தீட்டியது

தொடக்கத்தில் வெளிவந்த செய்திகள் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்திலேயே தகவல்களை வெளியிட்டன. ஆனால், விரைவிலேயே அந்தச் செய்திகள் சுஷாந்த் கொலை செய்யப்பட்டார் என்ற கருத்திலான மர்மக் கதைகளாக திரிக்கப்பட்டன. இதில் பாஜக தனித்துவமான பங்கை ஆற்றியது என்று அந்த ஆய்வு கண்டறிந்தது.

‘Suicide’/‘Murder’/‘Mystery’ ஆகிய வார்த்தைகளைக் கொண்ட ட்வீட்டுகள் – அரசியல் கட்சி வாரியாக

கொலை என்ற கதையைப் பரப்புவதில் பாஜக தீவிர ஆர்வம் கொண்டிருந்தது. அதே நேரம் காங்கிரஸ் தற்கொலை என்றே செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்தது. ஜூலையின் பெரும்பாலான வாரங்களில் பாஜக கொலை என்ற கதையைத் தொடர்ந்து பரப்பி வந்தது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

சிவசேனா மீது தாக்குதல்

எதற்காக ஒரு அரசியல் கட்சி ஒரு பாலிவுட் நடிகரின் மரணத்தில் இத்தனை அக்கறை காட்டுகிறது? சுஷாந்தின் மரணம் குறித்த சதித்திட்டக் கதைகள் விரைவில் மகாராஷ்டிராவின் சிவசேனா-காங்கிரஸ் அரசைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டன என்ற உண்மையில் இதற்கான விடை அடங்கியுள்ளது.

இந்தச் சதித்திட்ட கதைகளுடன் மும்பைக் காவல்துறையும் கடும் தாக்குதலுக்கு உள்ளானது என்பதை அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. இதனை முன்னின்று நடத்தியது முன்னணி பாஜக-வினருக்குச் சொந்தமான சமூக ஊடகக் கணக்குகள் என்று அந்த ஆய்வு காட்டுகிறது. பாஜக அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் மும்பைக் காவல்துறை திறனற்று இருப்பதாகக் காட்டி சுஷாந்தின் சொந்த மாநிலமான பீகார் மாநிலக் காவல்துறை மும்பைக்கு வந்து விசாரணை நடத்துவதற்கு இந்தத் தாக்குதல் வழிவகுத்தது.

Mumbai/Bihar போலீஸ் குறிப்பிடப்படும் ட்வீட்டுகளின் எண்ணிக்கை
Mumbai/Bihar போலீஸ் குறிப்பிடப்படும் ட்வீட்டுகளின் எண்ணிக்கை

இந்த சமூக ஊடகச் செயல்பாடு, மும்பைக் காவல்துறையை மட்டுமன்றி, குறிப்பாக சிவசேனா அரசை அதிலும் குறிப்பாக முதலமைச்சரின் மகனான ஆதித்ய தாக்கரேவைக் குறி வைத்துத் தாக்கியது. இதனை பாஜக கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுப் பயன்படுத்திய hashtag-களிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். #UddhavResignOrCBI4SSR, #ShameOnMahaGovt, #BabyPenguin (உத்தவ்ராஜினாமாசெய் அல்லது சிபிஐ4சுகாந்த்சிங், மகாராஷ்டிர அரசுக்கு அவமானம், குட்டிபென்குவின்) போன்ற hash tag கள் எதைக் குறிக்கின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மூன்றாவதாக உள்ளது ஆதித்ய தாக்கரே வைக் குறிப்பதாகும்.

பொதுவான ஆர்வம்

பாஜக இதில் முக்கியப் பங்காற்றி உள்ளது என்றாலும் சுஷாந்த் சிங்கின் இறப்பைக் குறித்த கட்டுக்கதைகள் பொதுவான விருப்பத்தின் அடிப்படையிலும் பரவின‌.

ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள், சுஷாந்த் சிங்கின் நண்பர் ரியா சக்கரவர்த்தியைக் குற்றவாளியாகச் சித்திரித்தன. ஆகஸ்ட் மாதத்திலிருந்தே ரியாவைக் குறி வைத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என ஊடகங்கள் வலியுறுத்தி வந்தன என்பதை ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது.

ட்வீட்டுகளின் எண்ணிக்கை

ரியாவைக் கைது செய்ய எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், அவர் சுஷாந்திற்குச் சிறிதளவு போதை மருந்து வாங்கிக் கொடுத்துள்ளார் என்பதை வைத்து அவரை போதை மருந்து தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் கைது செய்தது. இதற்கும் தொடக்கத்தில் எழுப்பப்பட்ட கொலை சதித்திட்ட கதைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனினும் ரியாவைக் குற்றவாளியாகக் காட்டுவதற்கு ஊடகங்கள் எவ்வளவு முழுமையாக வேலை செய்திருக்கின்றன என்பதை இது காட்டுகிறது.

இந்தச் செய்திகளைப் பரப்பிய பெரும்பாலான ஊடகங்கள் பாஜக ஆதரவு ஊடகங்களே‌. இதற்கு “ரிபப்ளிக் டிவி”யின் ட்விட்டர் பதிவுகளுக்கு வந்த பதில் ட்விட்டர் பதிவுகளே சாட்சி. இந்த விஷயத்தில் தலையிட்டது முதல் அதன் ட்விட்டர் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை திடீரெனப் பல மடங்கு உயர்ந்தது.

ஆங்கிலச் செய்தி ஊடகங்களான ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ், CNN நியூஸ் 18, இந்தியா டுடே ஆகிய நான்கும் சுஷாந்த் சிங் மரணம் குறித்து மிக அதிக அளவில் ட்விட்டர் பதிவுகளைப் பெற்றுள்ளன. இதிலிருந்தே பாஜக ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டுக் கதைகளைப் பரப்பியதை உணரமுடியும்.

ஏன் ஊடகங்கள் இதில் மூக்கை நுழைக்க வேண்டும்? இதற்கு ஆய்வு முடிவுகள் ‘ பார்வையாளர்கள்’ எனப் பதில் தருகின்றன. பார்வையாளர்கள் தொடர்ந்து இந்தக் கதைகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளை ஆதரித்தனர். இதற்கு இதைத் தீவிரமாக ஒளிபரப்பிய ரிபப்ளிக் டிவி மிக அதிக தரமதிப்பீடு (rating) பெற்றதையே சான்றாகக் கூற முடியும். [தர மதிப்பீட்டில் மோசடி செய்தது தொடர்பாக ரிபப்ளிக் டிவி மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது]

– சோயிப் தனியால்

கட்டுரை & படங்கள் : நன்றி https://scroll.in/
மொழியாக்கம் செய்யப்பட்டது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்