Aran Sei

அமித்ஷாவை போலீஸ் காவலுக்கு அனுப்பிய நீதிபதி குரேஷி – உச்சநீதிமன்ற நியமனங்கள் முடக்கம்

Image Credit : thewire.in

திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அகில் அப்துல்ஹமீது குரேஷியும் பல உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும், உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்படுவதற்கான வரிசையில் உள்ளனர்.

நீதிபதி குரேஷி 2010-ம் ஆண்டு, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது சோஹ்ராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷாவை போலீஸ் காவலுக்கு அனுப்பியிருந்தார்.

திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு 2019 நவம்பர் 16-ம் தேதி நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி குரேஷி 2022 மார்ச் 6-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதே நேரத்தில் அலகாபாத் (நீதிபதி கோவிந்த் மாத்தூர்), கல்கத்தா (தோட்டத்தில் பி.ராதாகிருஷ்ணன்), சத்தீஸ்கர் (பி.ஆர். ராமச்சந்திர மேனன்), இமாச்சலப் பிரதேசம் (லிங்கப்பா நாராயண சுவாமி), மணிப்பூர் (ராமலிங்கம் சுதாகர்), தெலுங்கானா (குமாரி ஹிமா கோஹ்லி), உத்தரகண்ட் (ராகவேந்திர சிங் சவுகான்) உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் இந்த ஆண்டு ஓய்வு பெறுகின்றனர்.

மற்றவர்களுக்கு முன்னதாக தலைமை நீதிபதி குரேஷியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட கொலீஜியத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக புதிய நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறை முடங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் பேஸ்புக் பதிவு ஒன்றில், கொலீஜியத்தின் ஐந்து நீதிபதிகளில் ஒருவரான (அநேகமாக நீதிபதி ரோகிந்தன் ஃபாலி நரிமன்) நீதிபதி குரேஷியை புறக்கணிக்கும் எந்த ஒரு பரிந்துரையையும் தான் எதிர்ப்பேன் என்று கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார். (நீதிபதி கட்ஜுவின் பதிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது, ஆனால் அது இங்கு வெளியிடப்பட்டுள்ளது),

நீதிபதி குரேஷியின் உரிமையை ஆதரிக்கும் கொலீஜியத்தில் உள்ள நீதிபதியின் பெயரை நீதிபதி கட்ஜூ குறிப்பிடவில்லை, என்றாலும், அந்த உச்சநீதிமன்ற நீதிபதி இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் ஓய்வு பெறும் இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தவிர, இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறும் கொலீஜியத்தில் இருக்கும் இன்னொரு நீதிபதி நீதிபதி நாரிமன் மட்டுமே.

இந்த ஆண்டு ஓய்வு பெறும் மற்ற நீதிபதிகளில்  நீதிபதிகள் அசோக் பூஷண் (ஜூலை 4), நீதிபதி நவின் சின்ஹா (ஆகஸ்ட் 18), நீதிபதி இந்து மல்ஹோத்ரா (மார்ச் 13) ஆகியோர் அடங்குவர். இவர்கள் கொலீஜியத்திற்கு வெளியே இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள். தற்போது, இந்த கொலீஜியத்தில் சி.ஜே.ஐ போப்டே, நீதிபதிகள் என்.வி.ரமணா, நாரிமன், யு.யூ.லலித், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் உள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், தலைமை நீதிபதி குரேஷி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் பிற நீதிபதிகளை விட பணிமூப்பை பெறும் அவர் உச்சநீதிமன்றத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட பணி காலத்தை பெறுவார்.

2019-ம் ஆண்டில் நீதிபதி குரேஷியை மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரையை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற வேண்டியிருந்தது. ஏனெனில் நீதிபதி குரேஷி ஒரு பெரிய உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவதை மத்திய அரசு விரும்பவில்லை. அதற்கு பதிலாக, அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியமும் மத்திய அரசும் ஒரு சமரசம் செய்து கொண்டு நீதிபதி குரேஷியை திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்தனர்.

மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி குரேஷி நியமிக்கப்படாதற்கு, 2010-ம் ஆண்டில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அவர், அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்து பதவியிலிருந்து விலகியிருந்த அமித் ஷாவை சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் காவலுக்கு அனுப்பியதே காரணம்.

பல்வேறு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளில் ஐந்து பேர் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு ஓய்வு பெறுகிறார்கள். தலைமை நீதிபதி சுதாகர் பிப்ரவரி 13 அன்று ஓய்வு பெறுகிறார்; தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் ஏப்ரல் 13 அன்றும் நீதிபதி ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 28 அன்றும், நீதிபதி மேனன் மே 31 அன்றும் நீதிபதி நாராயண சுவாமி ஜூன் 30 அன்றும் ஓய்வு பெறவிருக்கிறார்கள்.

உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்றத்துக்கு நியமிப்பதில் அவர்களது ஓய்வுபெறும் நாளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உயர்நீதிமன்றத்தில் இருந்து ஏற்கனவே ஓய்வுபெற்ற ஒரு நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யும்படி பரிந்துரைப்பதற்கு கொலீஜியத்துக்கு தடை எதுவும் இல்லை.

இவ்வாறு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு வெளியே ஒருவரை பரிந்துரைப்பதற்கு தடை எதுவும் இல்லை என்றாலும், கடந்த சில பத்தாண்டுகளில் உயர்நீதிமன்றங்களில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் தலைமை நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவது ஒரு போக்காக உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதன் மூலம் அவர்கள் இன்னும் 3 ஆண்டுகள் பதவிக் காலத்தை பெறுவார்கள். ஏனென்றால், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 62 வயதில் ஓய்வு பெறுகின்றனர், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயது நிறைவடையும் வரை நீடிக்கும்.

உச்சநீதிமன்றத்தில் உள்ள நான்கு நீதிபதிகள் காலியிடங்களை நிரப்புவதற்கு கொலீஜியம் 2020-ம் ஆண்டில் ஒரு முறை கூட சந்திக்கவில்லை. 34 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தில், மேலும் ஐந்து நீதிபதிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறுவதால் நீதிபதிகளின் காலியிடங்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர வாய்ப்புள்ளது.

நீதிபதி குரேஷியை நியமிப்பதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டால், அடுத்த கொலீஜியம் தனக்கு ஒத்துழைக்கும் என்று அரசாங்கம் நினைக்கலாம். அதில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட், நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் இருப்பார்கள். அந்த கொலீஜியம் நீதிபதி குரேஷியை தவிர்த்து விட்டு வேறு பெயர்களை பரிந்துரைக்கலாம்.

ஒரு சிறந்த நீதிபதியும், தலைமை நீதிபதியுமான நீதிபதி குரேஷி உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்படாதது, நீதித்துறைக்கு இழப்பாகவே கருதப்படும் பலர் கருதுகின்றனர். உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பிற்காக காத்திருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் நீதிபதிகள் நியமிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக அமையும் என்றும் அவர்கள் கவலை கொள்கிறார்கள். பொருத்தமான அமர்வுகளை உருவாக்காமல் இருப்பது காரணமாக, பல அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள் பல மாதங்களாக விசாரிக்கப்படாமல் உள்ளன.

thewire.in தளத்தில் வெளியான வி வெங்கடேசன் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்