Aran Sei

” 4 மாநில தேர்தல்களுக்கு முன்பு தேர்தல் நிதி பத்திரங்கள் மீதான வழக்கு விசாரணை தேவை ” – பிரசாந்த பூஷண்

image credit : thewire.in

ரசியல் கட்சிகள் வைத்திருக்கும் நிதி இப்போது தேர்தல்களில் வெற்றி பெறுவதைத் தீர்மானிக்கும் முக்கியமான சக்தியாய் மாறி உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் முதலிடம் பிடிப்பவருக்கு வெற்றி என்ற முறை இதற்கு உதவியாக உள்ளது.

ஒரு வேட்பாளர்தான் வெல்ல முடியும் என்பதும், ஒரு கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும் என்பதும் வாக்காளர்களுக்குத் தெரியுமாதலால், தங்கள் வாக்கை வெற்றி வாய்ப்பற்ற வேட்பாளருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களித்து வீணாக்கக் கூடாது என்பது அவர்களுக்குத் தெரியும். விளம்பரங்கள், பதாகைகள், கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாட்கள், தற்போது பணம் கொடுத்து பேரணிக்கு ஆட்களை சேர்ப்பது ஆகியவற்றின் மூலம் வாக்குகளை விலைக்கு வாங்குவதை கண்முன்னே பார்ப்பதன் அடிப்படையில்தான் ஒரு கட்சியின் வெல்வதற்கான வாய்ப்பு மதிப்பிடப்படுகிறது.

‘பாஜகவுக்கு சுங்கத்துறையும் அமலாக்க துறையும் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றன’ – பினராயி விஜயன் குற்றச்சாட்டு

இந்த நிலைமையை அங்கீகரித்த, தேர்தல் சட்டங்கள் ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவிற்கு வரம்பு விதித்துள்ளன. ஆனால் கெடுவாய்ப்பாக, இது போன்ற ஒரு வரம்பு கட்சிகளுக்கு இல்லை என்பதால், ஒரு வேட்பாளர் சொந்தமாக செலவு செய்வதைவிட பலமடங்கு அதிக செலைவை கட்சிகள் செய்கின்றன. வேட்பாளரின் செலவு வரம்பும் கூட கணக்கில் காட்டப்படாமல் ரொக்கமாக செலவு செய்வதன் மூலம் மீறப்படுகிறது.

2018 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் அறிவித்த போது, அவர் பண பரிவர்த்தனை இல்லா பொருளாதாரத்தை உருவாக்குவதே அதன் வெளிப்படையான நோக்கம் என அறிவித்தார். ஏழை மக்கள் தங்கள் பரிவர்த்தனைகள் அனைத்தையும் வங்கிகள் மூலம் செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாத அதே நேரத்தில், அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் அவ்வாறு செய்ய கடமை உள்ளவர்களாக ஆக்கப்பட்டிருக்கலாம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’

இருப்பினும், இதைச் செய்வதற்குப் பதிலாக, நேர் எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பாஜக அரசாங்கம் நான்கு சட்டங்களைத் திருத்தியது. பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையை மீறி 2016, 2017 ம் ஆண்டுகளின்  நிதிச் சட்டங்களாக அவற்றை நிறைவேற்றியது.

முதலாவதாக, அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை (FCRA) திருத்தியதன் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள தங்கள் துணை நிறுவனங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதை சட்டபூர்வமாக்கியது. பாஜகவும் காங்கிரசும் அன்னிய பங்களிப்புகளை பெற்று வந்தது திருத்தப்படாத முந்தைய சட்டத்தின் கீழ் குற்றம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் அன்னிய நிதி பெறுவதைத் தடுப்பதற்காகவே அன்னிய பங்களிப்பு ஒழுங்குசட்டம் கொண்டு வரப்பட்டது என்ற உண்மையை புறக்கணித்து, இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இரண்டாவது திருத்தம், நிறுவனங்கள் சட்டத்தில் செய்யப்பட்டது. அந்த திருத்தத்தின்படி (கடந்த மூன்றாண்டுகளில்) பெற்ற ஆண்டு லாபத்தில்7.5% வரை மட்டுமே நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாகத் தரலாம் என்றிருந்த வரம்பை நீக்கி விட்டார்கள்.

மூன்றாவது திருத்தம் வருமான வரிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் நன்கொடை தரும் நிறுவனங்கள் அத்தகைய நன்கொடைகளை எந்த அரசியல் கட்சிக்குத் தருகிறார்கள் என்ற விவரத்தை தர வேண்டிய அவசியம் இல்லை.

எனினும், மத்திய ரிசர்வ் வங்கி சட்டத்தில் கொண்டு வரப்பட்டத் திருத்தம் இவை எல்லாவற்றையும் விட மிக மோசமான தீமைகளை விளைவிக்கக் கூடியது. இந்தத் திருத்தம், அரசியல் கட்சிகள் வங்கி வழி முறைகள் மூலமே கூட தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்கிறது. இது வெளிப்படையற்ற முறையில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்க அனுமதிக்கிறது.

கார்ப்பரேட் நன்கொடை வசூலில் 698 கோடி பெற்று பாஜக முதலிடம்

தேர்தல் பத்திரங்கள் அல்லது கொணர்பவர் பத்திரம் (bearer bond) என்பது அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கக் கூடியவை. இந்தப் பத்திரங்களை வாங்குபவர் குறித்த விவரங்கள் பொது மக்களுக்கோ, தேர்தல் ஆணையத்திற்கோ கூட தெரியாது, ஆனால் பாரத ஸ்டேட் வங்கிக்கும் அதன் மூலம் அரசுக்கும் தெரியும்.

இந்த நான்கு திருத்தங்களும் தேர்தலில் பணத்தின் பங்கை அதிகரிக்கச் செய்வதுடன், அரசியல் நிதி வழங்கல் அதிகாரத்தில் உள்ள கட்சிக்கு பாகுபாடான முறையில் திருப்பப்படுவதற்கு வழி வகுக்கிறது. தேர்தல் பத்திரங்களின் ஆரம்ப கால கடன் பத்திரங்களில் 95% பாஜக வுக்கே கிடைத்தது. அதற்குப் பின்னரும் மிகப் பெரிய அளவு பாஜகவுக்கே சென்றுள்ளது‌. இந்த நன்கொடைகள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் தரப்படுவதால் 99% பத்திரங்கள் ஒரு கோடி, 10 லட்சம் ரூபாய் பத்திரங்களாகவே வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் தங்களுக்கு சாதகமாக கொள்கைகளையும் முடிவுகளையும் எடுப்பதற்காக எவ்வளவு பணம் லஞ்சமாகத் தரப்பட்டது என்பது தெரியாது.

இந்திய தேர்தல் ஆணையமும், இந்திய ரிசர்வ் வங்கியும் தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“உலக அளவில் அண்மையில் இத்தகைய கொணர்பவர் பத்திர முறை தொடர்பான எந்த முன்னுதாரணமும் இல்லை. இதனால் இத்தகைய பத்திரங்களை தற்போதைய வடிவில் வெளியிட அனுமதித்தால், பினாமி நிறுவனங்கள் மூலம் நிதியைத் தவறாகப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாங்கள் கவலைப்படுகிறோம். மேலும் இது ரிசர்வ் வங்கியை பணமோசடி பரிவர்த்தனைகளுக்கு துணை போகச் செய்து கடுமையான நீண்டகால அபாயத்திற்கு உட்படுத்தும்,” என ரிசர்வ் வங்கி ஒரு கடிதத்தில் கூறியுள்ளது.

இதேபோல் 2017, மே 26-ம் தேதி தேர்தல் ஆணையம் எழுதியுள்ள ஒரு கடிதத்தில், 2017 நிதிச் சட்டம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திருத்தங்களை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்து, “இந்த திருத்தங்கள் அரசியல் நிதி/ அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதன் வெளிப்படைத் தன்மையில் கடுமையானத் தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று கூறி உள்ளது.

ஒரு அரசியல் கட்சி பெறும் எந்த ஒரு நன்கொடையையும் 1951, மக்கள் பிரநிதித்துவச் சட்டம் 29 இ பிரிவின்படி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்பதை தேர்தல் பத்திரங்கள் மூலம் நீக்கி இருப்பது நன்கொடைகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்கு எதிரான பிற்போக்குத்தனமான நடவடிக்கை என்பதால் இந்த திருத்தம் திரும்பப் பெற வேண்டும்,” என்றும் தேர்தல் ஆணையம் எழுதியுள்ளது.

நிறுவனங்களின் நிதியளிப்பில் 7.5% என்ற உச்சவரம்பை நீக்கியது, “பினாமி நிறுவனங்கள் மூலம் அரசியல் நிதியில் கருப்புப் பணத்தை அதிகரித்த அளவில் பயன்படுத்த வழிவகுக்கும்,” என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இவ்வாறு, இந்தத் திருத்தங்கள், ஒட்டு மொத்தமாக கார்ப்பரேட்டுகளும் வரம்பின்றி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதை மட்டுமல்ல, அன்னிய நிறுவனங்கள் (ரஃபேலை உற்பத்திச் செய்யும் டசால்ட் போன்றவை) ஒப்பந்தங்களைப் பெறத் தங்கள் துணை நிறுவனங்கள் மூலம் நன்கொடைகளை வழங்கவும், அதனையும் பெயர் தெரியாமல் தேர்தல் பத்திரங்கள் மூலம் கொடுக்கவும் அனுமதிக்கின்றன. அரசுக்கு மட்டுமே இந்த நன்கொடையாளர்களின் விவரம் தெரியுமதலால் மத்தியில் ஆளும் கட்சிக்கே பெரும்பான்மையான நன்கொடைகள் செல்லும் என்பதில் வியப்பிற்குரியதல்ல.

இந்தப் பிற்போக்குத்தனமான திருத்தங்களை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் பொது நலனுக்கான சங்கம்(ADR) உச்சநீதிமன்றத்தில் தடை கோரும் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. 2019, ஏப்ரல் 12-ம் நாள் நடந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைகளின் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டு தனது உத்தரவில், “எதிர்ப்பு சச்சரவுகள் நாட்டின் தேர்தல் நடைமுறைகளின் உண்மத்தன்மைகளுக்கு மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தும் பிரச்சனைகளை எழுப்புகின்றன. அத்தகைய பிரச்சனைகள் குறித்து மிக ஆழமான விசாரணைத் தேவைப் படுகிறது…” என்று கூறியுள்ளது.

இதன்பிறகு உச்சநீதிமன்றம் அனைத்து அரசியல் கட்சிகளும் அவை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற அனைத்து நன்கொடைகளைப் பற்றிய விவரங்களையும் மூடி முத்திரையிட்டு உறையில் 2019, மே 30 க்குள் தர வேண்டும் என உத்தரவிட்டது. எனினும், ஒவ்வொரு மாநிலத் தேர்தல்களின் போதும் தேர்தல் பத்திரங்களைக் தடை செய்யக் கோரும் விண்ணப்பங்கள் போடப்பட்டு வரும் நிலையிலும், இது குறித்து அடுத்த விசாரணை நடைபெறவே இல்லை.

வெளிநாடுகளில் மதிப்பிழந்துள்ள இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் – ஆய்வு

உண்மையில், சட்டவிரோதமாகவும், கூடுதலாகவும் தேர்தல் பத்திரங்கள் ( அதாவது 2018 ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தையும் மீறி) 2018ல் கர்நாடகா தேர்தலின் போதும் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் தேர்தல்களின் போதும் விற்கப்பட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற பீகார் தேர்தலை ஒட்டி 2018 தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், அவசர விசாரணைக்கு பட்டியலிடக் கோரியும் போடப்பட்ட பல மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்கவும் இல்லை. பட்டியலிடவும் இல்லை.

அடுத்த தேர்தல் பத்திரங்கள் அநேகமாக தமிழகம், கேரளா, மேற்கு வங்க மாநிலத் தேர்தல்களை ஒட்டி ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டலாம். ஏடிஆர் (ADR) மீண்டும் அந்த விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரும் மனுவுடன், அவசர விசாரணைக்கு பட்டியலிடக் கோரும் விண்ணப்பத்தையும் அளித்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக ஆளும் கட்சிக்கு வரம்பற்ற, அனாமதேய மற்றும் வெளி நாட்டு நிதி புரள வழி வகுத்து அதன் மூலம் போட்டியிடுவதற்கான சமதளத்தை கடுமையாக அழிக்கும், நமது ஜனநாயகத்தை தடம்புரளச் செய்யும் தேர்தல் நிதியின் புதிய சட்டங்களை எதிர்த்த இந்த முக்கியமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தால் மிகக் குறைவான முன்னுரிமை தருவது மிக கெடுவாய்ப்பாகும்.

ஒருவேளை இது நாம் வாழும் காலத்தின் அடையாளமோ?

www.thewire.in இணையதளத்தில் பிரசாந்த் பூஷண் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்