Aran Sei

முருகன் சுப்ரமணியன் ஆன கதை – சூர்யா சேவியர்

தித்தமிழர்களின் வழிபாட்டு முறையானது இறந்தவர்களின் நினைவாக கல்நட்டு,அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளைப் படையலிட்டு வணங்குவதே. இறந்து போனவர்கள் பயன்படுத்திய ஆயுதம் மற்றும் குலத்தின் சின்னம் ஆகியவற்றையும் சேர்த்துப் புதைப்பதே மரபு.

நடுகல் வழிபாட்டின் கருத்தியல் யாதெனில் இறந்தவர்களின் நினைவும், அவர்கள் மீதான நம்பிக்கையும் தங்களுக்கு பேராற்றலைத் தரும் என்ற நம்பிக்கை ஆகும். நடுகல் வழிபாடு குறித்து அகநானூறும்,புறநானூறும் பக்கம் பக்கமாகப் பேசுகிறது.

இல்லடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்

புடை நடு கல்லின் நாட் பலி யூட்டி-புறநானூறு:329

நடுகற் பீலி சூட்டி நார் அரி

சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ-புறநானூறு:232

நடுகள் பீலி சூட்டி துடுப்படுத்துத்

தோப்பி கள்ளொடு துரூ உப்பலி கொடுக்கும்-அகநானூறு:35

இறந்தவர்களின் நினைவிடத்தில் அவர்கள் விரும்பி உண்ட மதுவும், பலி கொடுக்கப்பட்ட ஆடும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட செய்தியையே மேலே உள்ள சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இது சமுதாயத்தின் முதல் கட்டம்.

சமுதாய வளர்ச்சி அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது. அதன் வளர்ச்சியால் புதிய மாற்றங்கள் உருவானது. இக்காலத்தில் தான் அரசு என்ற நிறுவனத்தை ஆதிக்க உடமை வர்க்கம் உருவாக்குகிறது. இந்த உடமை வர்க்கம் உருவாக்கிய முக்கியப் படைப்பு தான் சான்றோர்கள், உயர்ந்தோர்கள் எனப்பட்டது.

உழைப்போடு நேரடியாக எவ்விதத்திலும் தொடர்பற்ற இந்தக் கூட்டம் தான் ஆதிக்கத்தைக் கையில் வைத்திருந்தது. பொது என்ற இனக்குழு வாழ்க்கை முறையை மாற்றி, இவர்கள் உருவாக்கியதே உயரந்தோர், தாழ்ந்தோர், மேலோர், கீழோர் என்ற கருத்தும், அதையொட்டிய சமூக வாழ்வும் மற்றும் கடவுள்களும்.

இந்த ஆதிக்கக்கூட்டம் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளவும் சதாசர்வ காலமும் யுத்தங்களை நடத்திக் கொண்டே இருந்தார்கள். யுத்தங்களில் உயிரிழப்புகள் உருவாகின. இப்போது உயர்ந்த சான்றோர்களுக்கு மேல் உலகமும், வீர சொர்க்கமும் உருவாக்கப்பட்டன. பலியான கீழோர்களுக்கு காட்டுப் பாதைகளில் அதே நடுகல் வழிபாடு தான்.

உடமை வர்க்கம் தங்களுக்காக பலியானவர்களுக்கு மேலே ஒரு உலகத்தைக் கதை கட்டி எழுப்பியது. அவர்களுக்காக வேள்வி யாகங்கள் நடத்தியது. அக்னி வழியாக அவர்களுக்கு மேலே படையல் அனுப்பியது. அந்த மேல் உலகத்திற்குள் ஒரு இடத்தை ரிசர்வ் செய்வதற்குத்தான் இப்போதும் ஒரு கூட்டம் எல்லாப்புறமும் அலைகிறது.

மேல் உலகத்திற்கு மறுக்கப்பட்ட, கீழாவனர்களாக கற்பிதம் செய்யப்பட்ட மக்கள், தங்களுக்காகப் பலியானவர்களுக்கு ஆடு கோழி வெட்டி பலியிட்டு,அதை உண்டு, அவர்களை மனதில் நிறுத்தி தங்கள் வாழ்க்கையை புதிய நம்பிக்கையுடன் தொடர்கின்றனர்.

இந்தத் தெய்வங்கள் தான் சுடலை, விருமன், கருப்பு, மாடன், காடன், மாயன், அய்யனார், முனி, பேச்சி, வீராயி,  காத்தாயி,  ஒச்சு போன்றவைகள்.

இத்தெய்வங்கள் உடமை வர்க்கத்தால் மேல் உலகத்திற்கும் வீர சொர்க்கத்திற்கும் அனுமதிக்கப்படாதவர்கள். பார்ப்பனியக் கருத்தியலின் படி ஒடுக்குமுறையின் வடிவங்கள். பார்ப்பனிய சமய மரபின் முக்கிய பகுதி யாதெனில், கீழோர் தெய்வங்களின் மீதும்,வழிபாட்டு முறைகள் மீதும் நடத்திய தாக்குதலே. இத்தகைய தமிழ்ச்சூழலில் பார்ப்பனியத்தின் தாக்குதலுக்கு உள்ளான கடவுளே கொற்றவையும் அவள் மகன் முருகனும்.

நடுகல் வழிபாடு சார்ந்த வாழ்க்கை முறையிலிருந்த தமிழ்ச்சமூகம் நாகரீகத்தின் வாசத்தை நுகரத் தொடங்கிய காலம் அது. வடக்கே இருந்து சமண, பௌத்த, வைதீகக் கருத்துகள் இங்கே வந்து கலந்தன. பௌத்த சமணக் கருத்தியலின் வேர் எதில் நிலைபெற்றிருந்தது என்றால்,  சமூகத்தில் ஏற்பட்ட பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி தான். ஏனெனில் பார்ப்பனியம் தனது பத்தாம்பசலித்தனமான கோட்பாட்டில் அப்போது நின்று கொண்டிருந்தது.

பௌத்த சமண மதங்களே தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்தது. தமிழில் தோன்றிய மாபெரும் இலக்கியங்கள் எல்லாம் இம்மதங்களின் சிந்தனைகளையே முன் வைத்துப் பேசின.கிபி 6 ம் நூற்றாண்டு வரை இந்த நிலைதான் தமிழ் சமூகத்தில் நீடித்தது. இந்தியா முழுமையும் இதே நிலைதான் இருந்தது. பார்ப்பனிய ஆதிக்கம் அடியோடு பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆரியக் கட்டுமானம் அடியோடு வீழும் நிலையும் ஏற்பட்டது.

பௌத்த சமணத்தின் வாழ்வியல் நெறிகள் துறவிகளுக்கு மட்டுமானதாக இல்லை. மக்களுக்கானதிருப்பரங்குன்ற அதன் கடுமையான வாழ்வியல் நெறிகளைக் கடைபிடிப்பதில் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களே அவை இரண்டின் வீழ்ச்சிக்குக் காரணமாகவும் அமைந்தன. இருப்பினும் பௌத்தமும் சமணமும் நீண்டகாலம் நீடித்திருக்க முக்கியக் காரணம் யாதெனில் இரண்டையும் உருவாக்கியவர்கள் மன்னர்களாய் இருந்ததால் தான்.

தங்களுக்குச் சாதகமான குப்தப் பேரரசின் மூலம் (கிபி 250-550) பௌத்த சமண மதங்களை வீழ்த்தும் கடமையைப் பார்ப்பனியம் பக்குவமாகச் செய்து முடித்தது. எனவே தான் குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம் என புலகாங்கித்தோடு வரலாறு பாடத்தில் படிக்கிறோம்.

பௌத்த, சமணத்தின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி தங்களை புத்துயிர் பெற பார்ப்பனியம் முயன்றது. ஆரியரல்லாத இனக்குழு மக்களிடையே செல்வாக்குடன் இருந்த லட்சக்கணக்கான தெய்வங்களை தன்னுடைய கடவுளின் அவதாரங்கள் அம்சங்கள் என்று பேசியது. இந்த மாயவலையில் எல்லாத் தெய்வங்களும் நங்கூரம் பாய்ச்சி இழுக்கப்பட்டன.

அதுவரை வேதத்தை மறுத்த சுமேரியக் கடவுளான நாராயணனும், வேதக் கடவுளான விஷ்ணுவும் ஒன்றென ஆக்கினார்கள். வேதத்திற்கு புறம்பான சிவசங்கரனும், வேதகால ருத்திரனும் ஒன்றாக ஆக்கினார்கள். ஆரியரல்லாத மக்களிடையே செல்வாக்குடன் இருந்த வாசுதேவகிருஷ்ணனை, பார்ப்பனியக் கடவுளான நாராயண விஷ்ணுவின் அவதாரமாக ஆக்கினார்கள்.

இந்திரனுக்கு எதிராக மேருமலையைத் தூக்கிய இடையர்களின் கடவுள் கிருஷ்ணனையும், விவசாய மக்களின் கடவுளான பலராமனையும் விஷ்ணுவின் அவதாரமாக்கினார்கள். மேய்ச்சல் சமூகம் மற்றும் வேளாண் சமூகத்தின் மீது தனது பண்பாட்டு ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பார்ப்பனியம் அரங்கேற்றிய அரசியல் இது.

ஆரியருக்குப் பகைவனான பன்றி இந்திரனால் கொல்லப்பட்டது என்று ரிக்வேதம் கூறுகிறது. இதன் பொருள் யாதெனில் பன்றியை குலக்குறியாகக் கொண்டு வாழ்ந்த விந்திய மலையைச் சுற்றி வாழ்ந்த பூர்வகுடிகளுடனான பார்ப்பனிய யுத்தம் தான். அவர்களை வீழ்த்தியும் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் உளவியல் ஏற்பாடு தான் வராக அவதாரம்.

பழங்குடி மக்களின் விலங்கு வழிபாட்டில் முக்கியமானது சிங்க வழிபாடு. இந்த மக்களை தன்னுடன் இணைத்த ஏற்பாடு தான் நரசிங்க அவதாரம். நெய்தல் குடிகளின் மீனை தன்னுடன் இணைத்து மச்ச அவதாரம்.கடல்கோளால் அழிந்த துயரத்துடன் தரையில் துள்ளிய மீனைத் தாங்கிப்பிடித்து உருவான பாண்டியப் பேரரசின் கொடியும் மீன் கொடி தான். அந்த மீன் ஆட்சி செய்த இடத்தை தன் கணக்கில் வரவு வைத்தக் கதையே மீனாட்சி என்ற தெய்வம். இது போன்ற அவதாரக் கோட்பாடுகளின் அரசியல் மூலம் பெரும் முடிச்சுப் போடப்பட்டது.

ஆதி மக்களின் செல்வாக்குப் பெற்ற பெண் தெய்வங்களையெல்லாம் ஒருங்கிணைத்து லட்சுமி என்ற வடிவத்துடன் பொருத்தி, லட்சுமியை விஷ்ணுவின் பக்கத்தில் அமர வைத்து அவரின் மனைவியாக்கும் முயற்சியையும் பார்ப்பனியம் பக்காவாக செய்து முடித்தது. இந்த இணைப்பு முயற்சிகளின் தமிழக முயற்சியே முருகனை வைதீகமயமாக்கிய பார்ப்பனிய அரசியல்.

தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தெய்வங்கள் கொற்றவையும் அவர் மகன் முருகனும் தான். கிபி 7 ம் நூற்றாண்டில் இவர்கள் இருவரும் ஆரியத்தை நோக்கி இழுக்கப்பட்டனர். ஆரியக் கடவுளான ஸ்கந்தனுடன் முருகன் இணைக்கப்பட்டான். முருகனின் மனைவியாக அதுவரை இருந்த வள்ளி இரண்டாமவளாக ஆக்கப்பட்டு ஸ்கந்தனின் மனைவி தேவசேனை முதல் மனைவியாக ஆக்கப்பட்டாள். முருக வரலாறு ஸ்கந்த புராணமாக இக்காலத்தில் மாற்றப்பட்டது.

தமிழ் மக்களால் வணங்கப்பட்ட முருகன் மீசை வைத்திருப்பார். யானை மீது ஏறி கம்பீரமாக வருவார். சங்க இலக்கியமான பரிபாடலில்

“சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து”(5-1-10) என்று தான் குறிப்பிடப்படும்.

ஆனால் பார்ப்பனிய வருகைக்குப் பிறகு மீசையை எடுத்துவிட்டு, யானையை அகற்றிவிட்டு மயில் மீது ஏற்றிவிட்டார்கள். ஒரு மனித உடல், எளிய மயில் மீது ஏறி எப்படிப் பறக்க முடியும்?

சங்க இலக்கியங்களில் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தோடு பிசைந்து திணை மாவை படையலிடுவார்கள். அப்போது வேலன் என்ற தனது பூசாரியின் மீது ஆவி உருவில் வந்து குறி சொல்வான் முருகன். பார்ப்பனியம் முருகனைக் கையிலெடுத்த போதுதான் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட புனிதமான ஸ்கந்தனாக மாறி தேவசேனாதிபதியாக ஆக்கப்படுகிறான். சேயோன், செவ்வேள், வேலன் என்ற அடையாளங்கள் அகற்றப்பட்டு ஸ்கந்தன், சண்முகன், சுப்பிரமணியன் என்ற அடையாளங்கள் முன்னிறுத்தப்படுகின்றன.

கொற்றவை, மாரி,  பேச்சி போன்ற பெண் தெய்வங்கள் பார்வதியின் பிம்பங்களாக மாற்றப்படுகிறது. சுடலை மாடன் காடன் ஆகியவை சிவனின் பிம்பங்களாகவும் மாற்றப்படுகிறது. உழைக்கும் மக்களின் லட்சக்கணக்கான கிராம தெய்வங்கள் அனைத்தும் அவதாரம், அம்சம், புராணக்கதைகள் மூலம் பார்ப்பனிய ஆளுமையின் கீழ் கொண்டு வந்ததே கிபி 7 ம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கம்.அது உருவாக்கிய பெரிய புராணமும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேல் வழிபாடும், அதன் பிறகு முருக வழிபாடும் நடந்த இடம் பரங்குன்றம். இலக்கியங்களில் வேற் கோட்டம் என அழைக்கப்பட்ட இடமே பரங்குன்றம். கிபி 7 ம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கத்தின் பிதாமகன்கள் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் இதை சிவத்தளமாக மாற்றி தேவாரம் பாடினர். சிவனுக்கும் முருகனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அவர்கள் பாடலின் மையக்கரு. அன்றிலிருந்து பாண்டி நாட்டின் பதினான்கு பாடல் பெற்ற தளமாக பரங்குன்றம் திருப்பரங்குன்றமாக மாற்றப்பட்டது.

தேவாரத்தின் படியான பூஜை முறையால் இங்கு கடைபிடிக்கும் பூஜை மரபு சிவமரபு தான். இங்கு ஏற்றப்பட்டுள்ள கொடி முருகனுக்குரிய சேவற் கொடி அல்ல. சிவனுக்கான ரிஷபக் கொடி தான். பள்ளியறையும் சிவனுக்குத்தான். முருகனுக்கல்ல. ஆனால் பக்தர்கள் முருகன் கோவில் என்றே இங்கு வருகிறார்கள். நேர்த்திக்கடன் கழிக்கிறார்கள். ஆனால் சிவாச்சாரியார்கள் இது ஈஸ்வரத்தலம் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் உள்ளுக்குள் தங்களுக்கான காரியத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் இது முருகன் கோவில் என்றே இன்றளவும் நம்பி வழிபாடு நடத்துகிறார்கள். நேர்த்திக்கடன் கழிக்கிறார்கள். ஆனால் சிவாச்சாரியார்கள் மட்டும் இது ஈஸ்வரத்தலம். இதற்கும்,முருகனுக்கும் சம்பந்தமில்லையென வழிபாடுகளை சிவனுக்கே நடத்துகிறார்கள்.

வணங்குகிற மக்கள் தங்களுடைய முருகன்கோவில் என நினைத்து வழிபட வருகிறார்கள். ஆனால் வழிபாட்டை நடத்தும் பூசாரியோ வழிபடுபவனுக்குத் தெரியாமல் வேறு ஒரு தெய்வத்திற்கு மந்திரத்தைச் சொல்லி, வழிபாட்டை நடத்தி அர்ச்சனைத்தட்டைத் தருகிறான்.

சமஸ்கிருதத்தில் சொல்லப்படுவது யாருக்கும் தெரியாது என்பதால் மக்கள் முருகனுக்குத்தான் வழிபாடு நடக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறான். இதுதான் இன்று ஆறுபடை வீடுகளின்  கருவறைகளில் நடந்து கொண்டிருக்கிறது.

மக்களின் காலங்காலமான நம்பிக்கைக்கு எதிராக இது ஈஸ்வரத்தலம் தான் என வெளிப்படையாக சொல்லமுடியாமல், அதே நேரத்தில் சத்தமில்லாமல் உள்ளுக்குள்ளேயே காரியம் ஆற்றி வருகிறது பார்ப்பனியக் கூட்டம்.

வைதீகக்கூட்டத்தின் மாற்று மரபுக்கும், உழைக்கும் மக்களின் முருக வழிபாட்டிற்கும் இடையே நடக்கும் நிழல் யுத்தப் போர்க்களம் தான் படைவீடுகள். இங்கு முருகன் வதம் செய்ய வேண்டியது சூரனை அல்ல. பார்ப்பனிய ஆதிக்கக் கருத்தியலையே.

பரங்குன்றத்தில் வழிபட்டு வந்த மதுரை பிரமலைக்கள்ளர்கள், தங்கள் வழிபாடு மறுக்கப்பட்ட நிலையில் எதிர் சமய மரபு ஒன்றை உருவாக்குகிறார்கள். அதுவே விருமாண்டி- பேய்க்காமன்- பேச்சியம்மாள் எனும் மூனுசாமி வழிபாடு. பிரமலைக்கள்ளர்களின் எதிர்சமய மரபை அடுத்து அறியலாம்.

கட்டுரையாளர்: சூர்யா சேவியர், அரசியல் செயல்பாட்டாளர்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்