Aran Sei

சுதந்திர போராட்ட தியாகி சந்திரசேகர் ஆசாத் – சோசலிச கனவை சிதைத்து விட்ட ஆட்சியாளர்கள்

Image Credit : thewire.in

பிப்ரவரி 27 சந்திரசேகர் ஆசாத்தின் நினைவு நாள்

இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கத்தின் தலைமை தளபதியான சந்திரசேகர் ‘ஆசாத்தின்’ 88-வது நினைவு நாளை நினைவு கூறும் போது, அந்த நினைவு கூர்தல் ஒரு முக்கியமான கவலையை நம்முன் கொண்டு வருகிறது.

ஆசாத் போன்ற புரட்சியாளர்கள் நாட்டை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என கனவு கண்டனர். மேலும் அதற்காக தாய்நாட்டின் பலிபீடத்தில் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்கவில்லை.

நம்முன் உள்ள கேள்வி, அவர்கள் போற்றி பேணிய கனவுகள் எப்படி முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்பதே.

புரட்சியாளர்களின் கனவுகளை நனவாக்குவதற்கான அனைத்து முழக்கங்களையும் மீறி, இன்று நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அந்த புரட்சியாளர்களின் நம்பிக்கைகளின் மீதோ, குறிக்கோள்களின் மீதோ சிறிதும் அக்கறை இல்லாத இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது?

இந்தக் கேள்வியை எதிர் கொள்ளும் ஒவ்வொரு முறையும் அதற்கான பதிலை ஒரு கனமான மௌனத்திலோ அல்லது நம்மை நடுங்க வைக்கும் அளவிலான கசப்பளிக்கும் பதில்களிலோ கண்டறிய வேண்டியுள்ளது.

தனது மிக நெருங்கிய தோழர்கள், காலனிய அரசு கருவூலப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற தொடர்வண்டி மீது நடத்தி தாக்குதலைத் தொடர்ந்து வீர மரணம் அடைந்த போதும், ஆசாத் விரக்திக்கு ஆளாகவில்லை. ஆங்கில அரசின் இரக்கமற்ற ஒடுக்குமுறைகளுக்கு இடையில், அவர் தனது அமைப்பின் இந்துஸ்தான் குடியரசு கழகம் என்ற பெயரை அதன் எழுத்து வடிவிலான, “புரட்சி” என்று பெயரிடப்பட்ட கட்சி அறிக்கையில் மாற்றி அதனுடன் “சோசலிச” என்பதைச் சேர்த்தார்;

Image Credit : thewire.in
அஷ்வகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில், ரோஷன் சிங் Image Credit : thewire.in

மேலும் இந்துஸ்தான் சோசலிச குடியரசு இராணுவம் என்றும் அழைக்கப்பட்ட இந்துஸ்தான் சோசலிச குடியரசு கழகத்தின் தலைமைத் தளபதியாக, ” நமது போராட்டம் இறுதி தீர்ப்பை, வெற்றி அல்லது வீர மரணத்தை, அடையும் வரை தொடரும்” என உறுதியான சொற்களில் அறிவித்தார்.

“புரட்சி” என்ற அறிக்கையை, காகோரி தொடர் வண்டிக் கொள்ளையில் ஈடுபட்ட புரட்சியாளர்களுக்கு எதிரான உறுதியான சாட்சியாக வைத்து, அவர்களுக்குக் கொடூர மரணதண்டனையைக் கொடுத்த நிலையிலும் எந்த தயக்கமும் இன்றி அவர் அந்த அறிவிப்பைச் செய்தார்.

வருத்தத்திற்குரிய வகையில், அவரது தோழர்களான ராம்பிரசாத், பிஸ்மில், பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ், சச்சிந்திராநாத், சன்யால், ஆஷ்ஃபகுல்லா கான், ராஜேந்திரநாத் லஹிரி, ரோஷன் சிங், யோகேஷ்சந்திர சட்டர்ஜி போன்றோருடன் இணைந்து சோசலிச சமுதாயத்தை நிறுவ வேண்டும் என கண்ட கனவை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை ‘ஆசாத்தின்’ சொந்த உயிர் தியாகம் பறித்து விட்டது.

அவரது உயிர் தியாகத்திற்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர நாடு என்ற அதிகாரத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முற்றிலும் வேறொரு திசையில் பயணம் செய்தனர். அவர்களது செயல்திட்டத்தில் ஆசாத்தின் கனவான சோசலிச சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பது முக்கியமானதாக இருக்கவில்லை.

1931, பிப்ரவரி 27ல் தற்போது சந்திரசேகர் ஆசாத் பூங்கா என்று அறியப்படும் ஆல்ஃபிரட் பூங்காவில் காலனிய அரசிற்கு விசுவாசமான காவலர்களால் சுற்றி வளைக்கப்பட்ட போது சரணடையாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். அலகாபாத் முழுவதும் உணர்ச்சியால் நிரம்பி வழிந்ததாகக் கூறப்படுகிறது.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

ரசூலாபாத் நகர எரிமேடையில் இறுதிச் சடங்கு நடைபெற்றபோது காவல்துறையின் அச்சுறுத்தலையும் மீறி இளம் ஆண்களும், பெண்களும் அந்த எரிமேடை இருந்த மைதானத்தில் பெருமளவில் குவிந்து, ஆசாத்தின் சாம்பலை ஒரு கலசத்தில் சேகரித்து எடுத்துக் கொண்டு, நகரில் மாபெரும் ஊர்வலத்தை நடத்தினர். அந்த கூட்டத்தினரிடையே உரையாற்றிய புரட்சியாளர் சச்சிந்திரநாத் சன்யாலின் துணைவியார் பிரதிபா சன்யால் ஆசாதின் சாம்பல் வங்காளத்தின் தியாகி குதிராம் போஸ் சாம்பலுக்குக் கொடுக்கப்பட்ட அதே மரியாதையைப் பெறும் என அறிவித்தார்.

இன்றும் கூட‌, அந்தத் தியாகத் திருநாளில் ஆசாத் பூங்கா விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால் அது மாநிலத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களை தொந்தரவு செய்வதாகத் தோன்றுகிறது. அதனால்தான் இனி 5 ரூபாய் நுழைவுத் கட்டணம் செலுத்தாமல் ஆசாத்தின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்த முடியாது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை அலகாபாத் மேம்பாட்டு ஆணையம் அதன் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். என்பது திட்டம்.

இது சாயாவாதி கவிஞர் சுமித்ரானந்தன் பந்த் கூறியது போல,

‘ஆன்மாவை புறக்கணித்து விட்டு,
நிழலின் மீதும், ஆவியின் மீதும் அன்பைப் பொழிவது’

ஆசாத் என்று பெயரிடப்பட்ட பூங்கா மீது அக்கறை காட்டி விட்டு அவர் தன்னைத் தியாகம் செய்ததற்கான நோக்கத்தை அவமதிப்பது- போன்றதுதான்.

இதே போன்று ஆசாத் பிறந்த, ‌மத்தியப் பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பாம்ப்ரி கிராமம் தற்போது சந்திரசேகர ஆசாத் நகர் என்று அழைக்கப்படுகிறது. ஆசாதின் மூதாதையர்கள் எங்கிருந்து புலம் பெயர்ந்து மத்தியப்பிரதேசத்திற்கு வந்தனரோ, உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அந்த பதார்கா கிராமமும் போதுமான மரியாதையையும் புகழையும் பெற்றுள்ளது என்பதைக் கூறுவது இங்கு பொருத்தமானதாகும்.

இது ஏராளமான புரட்சியாளர்களின் நினைவுகள் மறதியின் படுகுழியில் புதைக்கப்பட்டுள்ள தலைவிதியிலிருந்து ஆசாத் தப்பித்து விட்டதைப் போன்ற தோற்றத்தைத் தரக்கூடும். ஆனால் அதைவிட முக்கியமாக இந்த நாட்டிற்காக ஆசாத் போற்றிப் பாதுகாத்த நம்பிக்கைகளையும், இலட்சியங்களையும் குறைந்தது ஒப்புக் கொள்ளக் கூட அர்த்தமுள்ள எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை.

1919 பைசாகி நாளில் நடந்த ஜாலியன்வாலாபாக படுகொலைகள்தான் ஆசாத்தை விடுதலைப் போராட்டத்தில் குதிக்கத் தூண்டியது. சௌரிசௌரா நிகழ்வினை தன் தொடர்ந்து மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைத்த போது, அந்த நிகழ்வுகளின் போக்கு ஆசாத்திற்கு அதிருப்தியைக் கொடுத்தது. அவர் தனது போராட்டத்தின் திசையை மாற்றிக் கொண்டார்.

இந்துஸ்தான் குடியரசு படை என்ற பதாகையின் கீழ் 1925, ஆகஸ்ட் 9 ம் நாள், முதலாவது மிகப்பெரிய நடவடிக்கையான, காகோரி தொடர்வண்டித் தாக்குதலை அவர் வெற்றிகரமாக நடத்தினார். இதில் பிடிபட்ட தோழர்களின் மீதான வழக்குகள், அவர்களுக்குத் தரப்பட்ட கொடூர தூக்குத் தண்டனைகள் அல்லது அந்தமான் சிறைவாசம் போன்றவற்றையும் தாண்டி, லாலா ல‌ஜபதி ராயின் மரணத்திற்கு பழிவாங்க லாகூரில் சாண்டர்சை குறி வைத்தது, அல்லது டெல்லியில் மத்திய சட்ட அவையில் குண்டு வீசிய நடவடிக்கை என ஆசாதின் செயல்கள் தொடர்ந்தன. ஆசாத் பகத்சிங்கிற்கு பதிலாக வேறு ஒருவர்தான் அந்தத் தாக்குதலை நடத்த வேண்டும் என விரும்பினார். ஆனால், அதை தானே செய்ய வேண்டும் என்ற பகத்சிங்கின் வற்புறுத்தல் அவரை மனதை மாற்றிக் கொள்ளச் செய்தது.

Image Credit : thewire.in
பகத்சிங், சுகதேவ், ராஜகுரு – Image Credit : thewire.in

ஆசாதின் உயிர் தியாகத்திற்குப் பின் அவரது தாய் ஜக்ராணி தேவி சமூகத்தின் நன்றி மறத்தலின் காரணமாக பெரிதும் துன்பப்பட்டார். பிச்சை எடுக்க வேண்டிய ஏழ்மைக்குத் தள்ளப்பட்ட அவர் தனது பசிப்பிணியைப் போக்க வரகு தானியத்தையே நம்பி இருந்தார். ஜவஹர்லால் நேரு இவரது நிலைமை பற்றி அறிந்தவுடன் இவருக்கு 500 ரூபாய் அனுப்பி வைத்தார்.

பின்னர் அவர் ஆசாதின் உண்மையான ஆதரவாளர்களில் ஒருவரான சதாசிவம் மால்காபூர்கர் என்ற இளைஞரின் வடிவில் ஒரு உறுதியான மகனை பெற்றார். 1952 மார்ச் 22 ல் ஜக்ராணி இறந்த போது இறுதி சடங்குகளைச் செய்வது உள்ளிட்ட, ஒரு மகனாகச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் அவர் நிறைவேற்றினார்.

ஜக்ராணி தனது மகன் ஆசாத் ஒரு சமஸ்கிருத பண்டிதராக வேண்டும் என்று விரும்பினார் என்பது ஒரு ஆச்சரியமான விடயம்; அவரோ புரட்சியாளராக வாழ விரும்பி உயிர் தியாகத்தை தழுவிக் கொண்டார். பல ஆண்டுகளாக தன் மகன் திரும்பி வருவான் என நம்பி, தனது இரண்டு கைவிரல்களை ஒன்றாகக் கட்டிக் கொண்டு, தன் மகன் திரும்பினால்தான் கட்டை அவிழ்ப்பேன் என அவர் உறுதி பூண்டிருந்தார். அவரது முடிவில்லாத கண்ணீர் அவரது கண் பார்வையை பாதித்தது.

Image Credit : thewire.in
ஜக்ராணி தேவி, சதாசிவ் மல்காபுர்கர் – Image Credit : thewire.in

எனினும் மல்காபூர்கர் அவரை கவனித்துக் கொள்ள வந்த பின் ஓரளவு மகிழ்ச்சி அடைந்தார். அண்டை வீட்டாரிடம், “சந்து உயிரோடு இருந்திருந்தால் கூட, சதாசிவம் என்னை கவனித்துக் கொள்ள செய்வதைவிட என்ன பெரிதாக செய்திருக்க முடியும்?” என்று கேட்குமளவு மாறிவிட்டார்.

வரலாற்று சிறப்பு மிக்க புசாவால் வெடி குண்டு வழக்கில் பங்கு கொண்டதற்காக 14 ஆண்டுகள் அந்தமான் சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த போது சதாசிவ் மல்காவ்புர்கரின் அம்மா இறந்து விட்டார். அவர் ஜக்ராணி தேவி உருவில் தனது தாயின் சாயலைக் கண்டார். துயரங்களால் பல ஆண்டுகளாக பசியையும் தாகத்தையும் மறந்திருந்த அந்தத் தாய் தனது இறுதி மூச்சை தன் ஆறுதலளிக்கும் மடியில் விட்டதை சதாசிவ் மிகவும் பெருமையாக கருதினார்.

இருப்பினும் ஜான்சியில் உள்ள அந்த வீரத்தாயின் நினைவிடத்தில் மனித நடமாட்டமே இல்லாமல், காதுகளை செவிடாக்கும் அமைதி நிலவுகிறது. உயிர் தியாகம் செய்த அவரது மகனின் நியாயமான சமூகத்தைப் பற்றிய கனவுகள் எளிதாக ஒதுக்கப்பட்டு விட்டது போலவே அவரது அம்மாவின் நினைவிடமும் ஏறத்தாழ ஆதரவற்று கிடக்கிறது.

சந்திரசேகர் ஆசாதின் மற்றுமொரு வழக்கமான நினைவுநாள் கடந்து செல்வதைப் போல வேறு எதுவும் இந்தச் செய்தியை உறுதியாக நமக்குத் தெரிவிக்கவில்லை

இந்தியில் எழுதியவர் சித்ரா பத்மநாபன்

www.thewire.in இணையதளத்தில் கிருஷ்ண பிரதாப் சிங் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்