Aran Sei

போராட்ட நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் – ஸ்டான் சாமியின் கடிதம்

ஜூலை 2018ல் பத்தல்கடி இயக்கத்தை ஆதரித்தார் என்பதற்காக ஜார்கண்ட் காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப் பதிந்த பின்னர் பாதிரியார் ஸ்டேன் சாமி சிறு குறிப்பொண்றை எழுதினார். பாஜக ஆட்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட முக்தி மோர்சா அதிகாரத்திற்கு வந்ததும் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டன. ஜூலை 31,2018 அன்று பதிவிடப்பட்ட இந்த குறிப்பு எல்கர் பரிசத் வழக்கில் கைதுசெய்யப்பட்ட நிலையில், ஸ்டேன் சாமி ஜூலை 6, 2021ல் மரணமடைந்ததையடுத்து மீள் பதிவு செய்யப்படுகிறது.

கடந்த பத்தாண்டுகளாக பழங்குடி மக்களோடும், அவர்களது சுயமரியாதைக்கான போராட்டங்களோடும் என்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளேன். ஒரு எழுத்தாளனாக பிரச்சனைகளை ஆய்வு செய்ய முயன்றிருக்கிறேன். அரசாங்கத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் அதன் கொள்கைகள் குறித்தும்
இந்திய அரசியல் சாசனத்தின் துணையோடு என்னுடைய மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறேன். ஆளும் வர்க்கம் மற்றும் அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் அதன் சட்டபூர்வமான தன்மை, நீதி குறித்தும், செல்லுபடியாகும் தன்மை குறித்து கேள்விகளை எழுப்பி இருக்கிறேன்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

பத்தல்கடி பிரச்சினையை பொறுத்தமட்டில் ஆதிவாசிகள் ஏன் இப்படி செய்கிறார்கள் ? என்று நான் கேள்வி எழுப்பி இருக்கிறேன். என்னை பொறுத்தவரை சகிப்புத்தன்மைக்கு அப்பால் அவர்கள் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகி இருக்கிறார்கள். அவர்களுடைய மண்ணில் எடுக்கப்பட்ட தாதுக்கள் அன்னியர்களை பணக்காரர்களாக ஆக்கியிருப்பதோடு, அந்த மண்ணின் மைந்தர்களை சாகும் அளவுக்கு கோரமான வறுமைக்குள் தள்ளி இருக்கிறது. அங்கே உற்பத்தியான பொருட்களில் அவர்களுக்கென்று எந்தப் பங்கும் கிடையாது. அவர்களுடைய நலன்களுக்காக உருவாக்கப்படுகின்ற சட்டங்களும் கொள்கைகளும் பெரும்பாலும் அலட்சியத்தின் காரணமாக நடைமுறைக்கு வருவதில்லை. இதற்கு மேல் சகித்துக் கொள்ள முடியாது என்கிற மன நிலைக்கு வந்த பின்னர் அவர்கள் தங்களுடைய அடையாளங்களை மீண்டும் உறுதி செய்து கொள்வதற்காக பத்தல்கடியின் மூலம் கிராமசபைகளை பலப்படுத்தும் வேலைகளை செய்கிறார்கள். அவர்களுடைய செயல்கள் புரிந்து கொள்ள தக்கவைதான்.

ஸ்டான் சுவாமிக்கு நேர்ந்தது போல் இனி எவருக்கும் நிகழக் கூடாது – ஸ்டான் சுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

நான் எழுப்பியுள்ள சில கேள்விகள்

1) பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே உள்ளடக்கிய ஒரு பழங்குடியினர் ஆலோசனைக்குழு (TAC), மாநிலத்தில் பாதுகாப்பிற்காகவும், பழங்குடியினரின் மேம்பாடு மற்றும் நற்சூழல் என சகலத்தையும் குறித்து ஆளுநருக்கு ஆலோசனை வழங்கும் என்று தெளிவாகக் கூறும் அரசியல் அமைப்பின் ஐந்தாவது அட்டவணை பிரிவு 244(1) ஏன் அமல்படுத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறேன். பழங்குடியின மக்களின் நலனை மனதில் வைத்து, பழங்குடியின மக்களின் அரசியல் அமைப்பு பாதுகாவலரான ஆளுநர் சொந்தமாக சட்டங்களையும் உருவாக்கவும் பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றம் இயற்றிய எந்த சட்டத்தையும் ரத்து செய்யலாம். உண்மை என்னவென்றால், ஒன்றிய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என்ற காரணத்தை முன்வைத்து, கடந்த ஏழு தசாப்தங்களில் எந்த ஒரு மாநில ஆளுநரும் அரசியலமைப்பு சட்டம் அளித்திருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி பழங்குடி இன மக்களை நெருங்க முயற்சி செய்யவில்லை. எப்போதேனும் நடைபெறும் பழங்குடியின ஆலோசனை குழுவின் கூட்டம், மாநில முதல்வரால் ஒருங்கிணைக்கப்பட்டு ஆளும் கட்சியினரால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆக, பழங்குடியினர் பாதுகாப்பு குழு என்பது பல்லில்லாத பாம்பாக மாற்றப்பட்டிருக்கிறது. இது கண்டிப்பாக பழங்குடியின மக்களுக்கு எதிரான அரசியல் சாசன மோசடி..

இறுதி வரை ஓயாத போராட்டக்குரல் – பழங்குடியின உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி மரணம்

2) ஆதிவாசி சமூகங்கள் கிராம சபையின் மூலம் தன்னாட்சி செய்வதற்கான செழுமையான சமூக கலாச்சார பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது என்பதை முதன் முறையாக அங்கீகரித்த 1996ஆம் ஆண்டு பஞ்சாயத்து சட்டம் திட்டவட்டமாக புறக்கணிக்கப்பட்டது குறித்து நான் கேள்விகளை எழுப்பி இருக்கிறேன். 9 மாநிலங்களிலும் இந்த சட்டம் உள்நோக்கத்தோடு நடைமுறைக்கு வராமல் பார்த்துக் கொள்ளப் பட்டிருக்கிறது. அதன் பொருள் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் பழங்குடியின மக்கள் தன்னாட்சி பெறுவதை விரும்பவில்லை என்றாகிறது.

3) பட்டியல்படுத்தப்பட்ட, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பழங்குடியின சமூகங்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக வந்த உச்சநீதிமன்றத்தின் சமதா தீர்ப்பை குறித்து அரசாங்கம் அமைதி காப்பது குறித்து நான் கேள்வி எழுப்பினேன். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், சந்தை மயமாக்கல், தனியார்மயமாக்கல் உள்ளிட்ட கொள்கைகளின் விளைவாக தேசிய, சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்திய இந்தியாவின் பழங்குடியினர் பகுதிகளில் தாதுக்களை தோண்டி எடுப்பதற்கு ஆக்கிரமிக்க தொடங்கியிருந்த காலத்தில் அந்த தீர்ப்பு வந்தது. அரசு எந்திரம் அந்த நிறுவனங்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கியது. பழங்குடியின மக்களிடம் இருந்து வந்த எதிர்ப்புகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டன. தங்களுடைய நிலத்தில் தாதுக்களை தோண்டி எடுக்கும் பொழுது அதை கட்டுக்குள் வைத்திருக்கவும், தங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்திக் கொள்ளவும் சில குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அம்சங்களை அந்த தீர்ப்பு தன்னகத்தே கொண்டிருந்தது. எதார்த்தத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மாநிலம் புறம் தள்ளியது. பாதிக்கப்பட்ட சமூகங்கள் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தன, ஆனாலும் , பழங்குடியின மக்களை தங்களது சொந்த நிலத்திலிருந்து அன்னியப்படுத்தி, வளமான தாதுக்களை திருடுவதற்கு, காலனிய கால ‘அரசு உயர் உரிமை’ (law of eminent domain) சட்டங்கள் கை கொள்ளப்பட்டன.

அர்னாபுக்கு உடனடி ஜாமீன்; ஸ்டான் சாமிக்கு ஒரு உறிஞ்சு குழல் கூட தரமுடியாது – நீதியின் வினோதங்கள்

4) 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் தொடர்பாக அரசின் அரை மனது நடவடிக்கைகள் குறித்து நான் கேள்வி எழுப்பினேன். நீர், காற்று,நிலம் இவைதான் பழங்குடியின மக்களின் வாழ்க்கையின் அடிப்படைக் கூறு என்பதை நாம் அறிவோம். அவர்களது பாரம்பரிய உரிமைகள் மீது திட்டமிட்ட வகையில் பல பத்தாண்டுகளாகத் அத்துமீறல்கள் நிகழ்ந்திருக்கின்றன. நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு வரலாற்று ரீதியான அநீதி பழங்குடியினருக்கும் மற்றும் காடு வாழ் மக்களுக்கும் இருக்கின்றன என்பதை உணர்ந்து, அதை சரிசெய்ய இந்த சட்டத்தை அரசு இயற்றியது.
எதார்த்தத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மாநிலம் புறம் தள்ளியது. பாதிக்கப்பட்ட சமூகங்கள் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தன, ஆனாலும் , பழங்குடியின மக்களை தங்களது சொந்த நிலத்திலிருந்து அன்னியப்படுத்தி, வளமான தாதுக்களை திருடுவதற்கு, காலனிய கால ‘அரசு உயர் உரிமை’ சட்டங்கள் கை கொள்ளப்பட்டன.

5) எதார்த்தம் விருப்பத்திற்கு அப்பால் இருக்கிறது. 2006லிருந்து 2011 வரையிலும் 30 லட்சம் பேர் சொத்துரிமை கோரி விண்ணப்பங்கள் அனுப்பினர். அவற்றில் இதுவரையிலும் 11 லட்சம் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு 14 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் 5 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. தற்போது ஜார்கண்ட் அரசாங்கம் கிராம சபைகளை குறுக்கு வழியில் புறக்கணித்து வன நிலங்களை ஆக்கிரமித்து தொழிற்சாலைகளை அமைக்க முயல்கிறது.

6) நீதிமன்றம் தொடர்பில் இருப்பதாலேயே ஒருவர் குற்றவாளி என்கிற சிந்தனையை நிராகரித்திருந்தது. “வன்முறையில் ஈடுபடாத, மக்களை வன்முறைக்கு தூண்டாத, பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்காத வரை ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருப்பது மட்டும் ஒருவரை கிரிமினல் ஆக்காது” என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் ஏன் கடைபிடிக்கப்படுவதில்லை என நான் கேள்வி எழுப்பினேன்.
ஏராளமான ஆண்களும் பெண்களும் நக்சலைட் உங்களுக்கு உதவி செய்கிறார்கள் என்கிற சந்தேகத்தின் பெயரில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர்களை கைது செய்தபின்னர் கூடுதலான பிரிவுகளை அவர்கள்மீது சுமத்துகிறார்கள். காவல்துறையினர் சிறைபிடிக்க விரும்புகிற எவர் மீதும் இலகுவாக குத்துவதற்கு ஏதுவான முத்திரை இது. அதற்கு எந்த ஆதாரமோ, சாட்சியோ தேவையில்லை. தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருந்தாலும் ஒரு நபர் கிரிமினல் ஆக மாட்டார் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. சட்டம் ஒழுங்கை நிலை படுத்த வேண்டிய சக்திகள் நீதிபரிபாலன அமைப்புகளில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறார்கள்?

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை – கனடாவில் நடந்த இன அழிப்பின் சாட்சியங்கள்

7) பழங்குடியின மக்களுக்கு சாவு மணியாக மாறக்கூடிய ஜார்க்கண்ட் அரசு கொண்டு வந்த 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து நான் கேள்வி எழுப்பினேன். பாதிக்கப்பட்ட மக்களின் சுற்றுச் சூழல், சமூக உறவுகள் மற்றும் கலாச்சார விழுமியங்களை பாதுகாப்பட்தை நோக்கமாகக் கொண்ட சமூகத் தாக்க மதிப்பீட்டு தேவையை இது நீக்குகிறது. மிகவும் சேதம் தரத் தக்க அம்சம் என்னவென்றால் எந்த விவசாய நிலத்தையும் விவசாயம் சாராத நோக்கங்களுக்காக அரசால் தர முடியும். எனவே அனைத்தையும் இதில் இணைக்க முடியும்.

8) பழங்குடியின மக்களை அழித்தொழிக்கும் திட்டம் என்று நான் கருதிய நில வங்கி தொடர்பாக நான் கேள்வி எழுப்பினேன். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ‘Momentum Jharkhand’ நிகழ்ச்சியில் இருபத்தோரு லட்சம் ஏக்கர் நில வங்கியில் இருப்பதாகவும், பத்து லட்சம் ஏக்கர் தொழிலதிபர்களுக்கு ஒதுக்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அழிக்கப்பட்டது.

சாகுபடி செய்யப்படாத நிலம் (“Gair-majurwa”) அது தனிப்பட்ட (‘khas’) நபருக்குரியதாகவோ அல்லது பொதுவானதாகவோ (‘aam’) இருக்கலாம். பாரம்பரிய முறைப்படி தனிப்பட்ட பழங்குடியின குடும்பங்களும் அல்லது சமூகங்களோ இந்த நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் (jamabandi) வைத்து பயன்படுத்துவார்கள்.

நீதிக்கான நீண்ட பயணம் – நிரபராதி என்று நிரூபிக்க 12 ஆண்டுகளை சிறையில் கழித்த காஷ்மீரி

அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அரசாங்கம் இந்த உரிமைகள் (jamabandi) அனைத்தையும் ரத்து செய்து சாகுபடி செய்யப்படாத நிலங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தம் என்று கூறுகிறது. அதை சிறிய ஆலைகளுக்கோ அல்லது பெரிய ஆலைகளுக்கோ சுதந்திரமாக கொடுக்க முடியும் என்று அறிவிக்கிறது
தங்களுடைய நிலம் பதிக்கப்பட்டிருப்பதை எண்ணி மக்கள் இருள் சூழ்ந்த குழப்பத்தில் இருக்கிறார்கள். ஐந்தாவது அட்டவணையில் குறிப்பிட்டிருப்பதன்படி பழங்குடியினர் ஆலோசனை குழு (TAC) எந்த அனுமதியும் வழங்கவில்லை. PESA சட்டத்தின்படி ஒப்புதல் பெற வேண்டிய கிராமசபை இடமிருந்தும் ஒப்புதல் பெறப்படவில்லை. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் படி தரப்பட வேண்டிய ஒப்புதலை பழங்குடியின மக்களும் தரவில்லை.

இந்தக் கேள்விகளை தான் நான் தொடர்ந்து எழுப்பி வந்தேன். இந்தக் கேள்விகள் என்னை தேசத்துரோகி ஆக்கும் என்றால் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்