Aran Sei

தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..

2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும்

மூக்கின் மேலே
மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே…” அதுவா ?

என்று நீங்கள் கேட்க,

கோயமுத்தூர் முனியாண்டி விலாஸில்
அடுப்பில் கிடந்து கருகும்
திருமங்கலத்து பரோட்டா மாஸ்டரொருவன்

அதுவா..?
அதுவா…?
அதுவா….?

என்று திருப்பிக் கேட்டான்

அப்போது உங்களுக்குச் சிலிர்த்துக்கொண்டதா எஸ்.பி.பி ஸார் ?

  • கவிஞர் இசை

கண்டிப்பாக அந்த திருமங்கலத்துக்காரனுக்கு சிலிர்த்திருக்கும். இசையின் இந்த கவிதையே சொல்லிவிடும், ஏதோ ஒரு கோடியில் இருக்கும் கிராமத்தானுக்கும் பாலுவுக்கும் இடையிலான உறவை பற்றி.

சாமானியன் ஒருவனுக்கு பாலுவின் குரல் அவனின் எல்லாவித உணர்வையும் வெளிப்படுத்தும் ஒரு பெரும் ஆற்றலாக இருந்தது. அந்த ஆற்றல் அவனுக்காக எல்லாம் செய்தது.

கல்லூரியிலும், அரசு பேருந்துகளிலும் மினி பஸ்களிலும் எதிர்வீடுகளிலும், ஊர்த் திருவிழாக்களிலும், கல்யாண வீடுகளிலும், அவனுக்காக காதல் தூது சென்றது. அவன் பேச வேண்டியதை எல்லாம், அவளின் காதருகே உள்ள முடியை கோதி விட்டப்படியே கொஞ்சி பேசியது. சில இடங்களில் முரட்டுத்தனமாக கட்டியணைக்கவும் செய்தது. இரவுகளில் அவளோடு காமம் பேசியது, அவள் இல்லாமல் அழுது கரைந்தது, அவளின் பிரிவை சொல்லி சொல்லி கண்ணீர் வடித்தது. அவனின் தற்கொலைகளை தடுத்து, அவளை முழுதாக மறக்கடித்து, ஒரு புது வாழ்க்கைக்கான வழியையும் பாடியது. அவனுடைய ஆன்மாவுக்கு பிரதிநிதியாக ஒலித்தது. அவன் அணுவின் முனங்கலையும் தீண்டி எடுத்து அவனுக்கு முன் நிறுத்தியது.

‘இசை அண்ணாமலை’ – தேனிசை தென்றல் தேவா – மலர்வண்ணன்

இத்தேகம் மறைந்தாலும் இசையாய்
மலர்வேன் கேளாய் பூமனமே”  

அவனின் வலிகளும் அதன் வார்த்தைகளும் ஒன்றையொன்று தழுவி கட்டிப்புரண்டு ஓடும் பெருநதியாக, அதன் மெல்லிய ஆசுவாச மூச்சாக, வாழ்க்கை முழுதும் அவனுடன் வரும். சூல் கொள்ளும் வயிற்றையும், பாலூறும் முலையையும் ஒரு ஆணுக்கு கிடைக்கச் செய்தான்

பாலு, நான் உங்கள் ரசிகன். நான் குரலற்றவன். நான் ஒரு குரல் கொண்டது உங்களால் தான். உங்கள் குரலால் நான் மோட்சம் பெற்றேன்

டேய் தம்பி, நான் தான்டா உன் பாலு. நான் உணர்வு இல்லாதவன். உன் உணர்வால் என் குரல் உயிர் பெற்றது.”

பாதுகாப்பு படை முகாமுக்கு எதிராக 20 நாட்களுக்கும் மேலாக தொடரும் பழங்குடியினர்கள் போராட்டம் – மாவோயிஸ்ட் தூண்டுதலாவென உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு

சில மாதங்களுக்கு முன் இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரிக்கு சென்றிருந்தேன். உடன் வந்திருந்த ராஜேந்திரன் அண்ணனுக்கு பாலு ஓர் நிரந்தர திருத்தலம். ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ முதல் ’ஒருவன் ஒருவன் முதலாளி’ வரைக்கும் எல்லாமே ஆதர்சம். எல்லாவற்றுக்கும் அவரால் ஒரு கதை சொல்ல முடியும். அது கேட்பவரை சிரிக்க வைக்கவும் செய்யும், அழுக வைக்கவும் செய்யும்.

‘இளைய நிலா பொழிகிறது’ என்ற வரிகளோடு ஒரு பிரம்மாண்டம் மேடையை நிரப்பிக்கொண்டிருந்தது. ராஜேந்திரன் அண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் பாலுவை நிரப்பிக்கொள்ள தொடங்கினார். நானும் என்னைவிட இரு மடங்கு வயதுள்ள, போன தலைமுறைக்காரரும் ஒரு குரலால் இணைக்கப்பட்டோம். மனவிணைகள் எல்லா தலைமுறைக்கு ஒன்று தானே?

“இந்தியாவில் 36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம் வெளியிட்ட நிறுவனம்” – அலுவலகம் கூட இல்லை என்பது ஆய்வில் அம்பலம்

மூச்சு விடாம பாடுறேன்னு சொன்னீங்களே..”

பாடகனாக வேண்டும் என கனவு கண்ட எல்லோருக்கும் ஆதர்சமாக இருந்தார். ஆசானாய் இருந்தார். எல்லா தெருக்களிலும், மேடை கச்சேரிகளிலும் பல முகங்களாக பாலு ஒலித்தார். பாடல்களின் இடையில் மெல்லிய குறும்பு சிரிப்போடு பாடிக்கொண்டு திரிய யாருக்கு தான் ஆசை வராது.

இது போல எல்லோருக்குமாக பெய்யன பெய்யும் மழையாய் சிலராலே தான் இருக்க முடிகிறது. அவர்களை இறுகப்பற்றி நாம் வளர முடிகிறது. எங்கள் குரல்களாக நீ வந்தாய், நாளை நாங்கள் இல்லாது போனாலும். நீ ஒலித்துக்கொண்டே இருப்பாய் பாலு.

இன்று பாலுவின் 75 ஆவது பிறந்தநாள்.

– அரவிந்ராஜ் ரமேஷ்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்