Aran Sei

சிவாஜி எனும் பெருங்கலைஞர்

‘கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்… கோவில் கூடாது என்பதற்காக அல்ல… கோவில் கொடியவரின் கூடாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக… பூசாரியைத் தாக்கினேன்… அவன் பக்தன் என்பதற்காக அல்ல… பக்தி பகல் வேஷம் ஆகி விட்டதைக் கண்டிப்பதற்காக’

தமிழ் சினிமா என்றென்றும் சிவாஜி கணேசனை நினைவு கூர்வதற்கு பராசக்தி படத்தில் இடம்பெற்றுள்ள இந்த நீதிமன்றக் காட்சி போதும்.

நவரசங்களையும் தன் நடிப்பின் வழியே வெளிப்படுத்திய அப்பெருங்கலைஞரின் 93-வது பிறந்த நாள் இன்று. தமிழ்த் திரையுலகம் நமக்கு அளித்த கொடை அவர். இந்தியாவின் எத்தகைய நடிகரோடும் ஒப்பிடக்கூடிய திறமையாளர்.

சிவாஜி கணேசன் திரைத்துறையில் பதித்த தடம் குறித்து திரைச்செயற்பாட்டாளர் ‘நிழல்’ திருநாவுக்கரசு, “நாடக நடிப்புக்கும் சினிமா நடிப்புக்குமான வேறுபாட்டை நிகழ்த்திக் காட்டியவர் சிவாஜி. அவரது வருகைக்குப் பிறகுதான் தமிழ் சினிமாவில் ‘நடிப்பு’ என்கிற அத்தியாயமே ஆரம்பமானது. சிவாஜிக்கு முன்பு நடித்தவர்கள் சபா கலைஞர்களாக இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். அவர்களிடமிருந்து சினிமாவுக்கான நடிப்பு அவ்வளவாக வெளிப்படவில்லை. அதைத் திறம்பட வெளிப்படுத்திக் காட்டியவர் சிவாஜி” என்கிறார்.

மேலும் அவர், “சினிமாவுக்கேற்ப தன்னை பல விதங்களில் தயார்படுத்திக் கொண்டார் சிவாஜி. பிற நாட்டுப் படங்களைப் பார்த்து தனது நடிப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டதாக அவர் கூறியிருக்கிறார். சினிமாவிலும் அவரிடமிருந்து நாடகத்தன்மையுடைய நடிப்பு பல இடங்களில் வெளிப்பட்டது. அதைக் கடந்தும் ‘சாந்தி’ போன்ற படங்களில் உச்சமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். கேமராவின் நகர்வுக்கு ஏற்றபடியும், எந்த ஷாட் என்பதற்கு ஏற்றபடி நடிக்கும் அளவுக்கு தொழில்நுட்ப அறிவும் அவரிடமிருந்தது. எந்த லென்ஸ் உபயோக்கிறார்கள் என்பதைக் கூட கேட்கக்கூடியவர்.

சிவாஜி வருகைக்குப் பிறகு தமிழில் பல நடிகர்கள் தங்களது வாய்ப்பை இழந்தார்கள். ஏனென்றால் சிவாஜி அளவுக்கு செந்தமிழ் பேசும் திறன் அவர்களுக்கில்லை. தமிழ் சினிமாவில் தன் நடிப்பு, வசன உச்சரிப்பு என பல விதங்களிலும் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் சிவாஜி. அகிரா குரோசவா போன்ற உலகத்தரமான இயக்குனர்கள் சிவாஜியை இயக்கியிருக்க வேண்டும். அவர்கள் மூலம் சிவாஜியின் முழுமையான நடிப்பாற்றல் வெளிப்பட்டிருக்கும். உலகத்தரத்தில் நிறுத்தப்படக்கூடிய ஓர் தமிழ் திரைப்படக் கலைஞனாக அவர் இருந்திருப்பார். ஆனால் நம் இயக்குனர்கள் அவருக்கான நடிப்பை வாங்கவில்லை. உட்பல் தத், சஞ்சீவ் குமார், ப்ரான் போன்ற இந்திய நடிகர்களோடு ஒப்பிடுகையில் பல  மடங்கு உயர்ந்தவர் சிவாஜி” என்கிறார் திருநாவுக்கரசு.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்