Aran Sei

மருத்துவர் சாந்தா: 12 படுக்கைகள் தொடங்கி, உலகப் புகழ் பெற்ற மருத்துவமனை வரை – ஷியாம் சுந்தர்

டையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைமை டாக்டர் சாந்தா அவர்களின் இழப்பு, மருத்துவத்துறைக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. இன்று சென்னை நகரத்தின் அடையாளமாக திகழும் அடையாறு புற்றுநோய் மையத்தை (Adayar Cancer Institute) உலகத்தர மருத்துவமனையாக மாற்றியதில் பெரும் பங்கு அவருடைய தாகும். அவர் ஆற்றிய மருத்துவ சேவைக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை பெற்றவர்.

புற்றுநோய் என்பது இன்றளவும் கொடிய நோயாக இருக்கிறது. 1960 காலகட்டத்தில், சரியான மருத்துவ வசதிகள் கிடைக்காத காலத்தில், அது இன்னும் கொடியதாக இருந்தது. தமிழக அளவில் புற்றுநோய்க்கு தனியாக எந்த சிறப்பு மருத்துவமனையும் அப்போது இல்லை. மரணம் நிச்சயம் என்றாலும், தாங்க முடியாத வலியுடன் மரணமடைவது பெரும் கொடுமையாக இருந்தது. ஏழை மக்கள் பலர், எந்த மருத்துவ சிகிச்சையும் கிடைக்காமல் கடுமையான வலியுடன் மரணமடையும் கொடுமை தொடர் கதையாக இருந்தது.

“மக்கள் பிரதிநிதிக்குக் கிடைக்கும் மருத்துவம், மக்களுக்கும் கிடைக்க வேண்டும்” – சு.வெங்கடேசன்

சாந்தா, 1927 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். அறிவியல் துறையில் அறிஞரான டாக்டர் சர் சி.வி.ராமன், சாந்தா அவர்களின் நெருங்கிய உறவினர். தனது மருத்துவப் படிப்பை (MBBS) 1949 வருடம் முடித்த சாந்தா, அந்த காலகட்டத்தில் பெண் மருத்துவர்கள் அதிக விரும்பிப் படிக்கும் பிரசவத்திற்கான மேற்படிப்பில், மருத்துவத்துறையில் முதுகலை பட்டம் பெற்றார் (Obstrecian and Gynecologist).

அந்த காலகட்டத்தில் தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அடையாரில் கேன்சருக்கான மருத்துவமனையை நிறுவினார். தனது ஆரம்பகால மருத்துவ வாழ்க்கையில், அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியில் சேர்ந்த சாந்தா, மருத்துவத்துறையில் பெண்கள் சாதிக்க தயங்கும் மருத்துவ சேவையில் சாதிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டவராக திகழ்ந்தார். அவருக்கு மருத்துவத்துறையில் வித்தியாசமாக சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் முத்துலக்ஷ்மி அவர்கள், கேன்சர் மருத்துவமனையை ஆரம்பித்தபோது தாமே முன்வந்து அந்த மருத்துவமனையில் சேர்ந்தார். இதற்கு அவரது குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும் தன் முடிவிலிருந்து அவர் பின்வாங்கவில்லை.

மருத்துவம் – நோபல் பரிசும் கார்ப்பரேட் கொள்ளையும்

அடையாறு புற்றுநோய் மையம் 12 படுக்கை வசதிகள் கொண்ட சிறிய மருத்துவமனையாக தொடங்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் சாந்தா மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்று இரண்டு மருத்துவர்கள் மட்டுமே வேலை பார்த்தனர். அவர் பணிக்குச் சேர்ந்த மூன்று ஆண்டுகளுக்கு பெரிய அளவில் அவருக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை. அதன்பிறகு அவருக்கு, 200 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது. 1955-ம் ஆண்டு, டாக்டர் சாந்தா புற்றுநோய் மையத்தில் உள்ள வளாகத்தில் குடியேறினார். அன்றிலிருந்து கடந்த 75 ஆண்டுகளாக, தான் இறக்கும் வரை, சாந்தா அந்த வளாகத்திலேயே தங்கியிருந்து மக்களுக்கு சேவை செய்து வந்துள்ளார்.

புற்றுநோய் என்றால் குணப்படுத்த முடியாதது அல்ல. தகுந்த சிகிச்சை கிடைக்கப்பெற்றால் மரண விகிதத்தை பெருமளவில் குறைக்க முடியும் என்று சாந்தா திடமாக நம்பினார். பணம் இல்லாமல் மருத்துவம் செய்து கொள்ள இயலாத மக்களுக்கு தேடிச் சென்று மருத்துவம் செய்யத் தொடங்கினார்.

இன்றுவரை அடையாறு புற்று நோய் மையம் ஏழை மக்களுக்கு முழுவதுமாக இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது. மற்ற மருத்துவமனைகளுன் ஒப்பிட்டால், வசதி படைத்தவர்கள் இடமும் 60% வரை குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாறு புற்றுநோய் மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனையை தமிழகத்தின் அடையாளமாக மாற்றியதில் மருத்துவர் சாந்தாவின் பங்கு அளப்பரியது.

கொரோனாவுக்கு எதிரான போர் – பாலஸ்தீனியர்களுக்கு தடுப்பூசியை மறுக்கும் இஸ்ரேல்

அவருக்கு தற்பொழுது 94 வயது ஆகிறது. கொரோனா நோய்த் தொற்றுக்கு முன்பு வரையும் கூட, தனது வயோதிகத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தார்.

சாந்தா மறைந்து விட்டாலும், அவர் கட்டிக்காத்த புற்றுநோய் மையம் உலக அளவில் பெரிய மருத்துவமனையாக உயர்ந்து நிற்கிறது. அது என்றென்றும் மருத்துவர் சாந்தாவின் புகழை பறைசாற்றும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்