Aran Sei

சகுந்தலா தேவிக்கு ஒரு நீதி, அய்யன் மணிக்கு ஒரு நீதி – ர.முகமது இல்யாஸ் 

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த அக்டோபர் 2 அன்று வெளியாகியிருக்கிறது ‘சீரியஸ் மென்’. நவாசுதீன் சித்திகி, நாசர், இந்திரா திவாரி, ‘மெர்சல்’ படத்தில் விஜயின் மகனாக நடித்த சிறுவன் அக்‌ஷத் தாஸ், ஷ்வேதா பாசு பிரசாத் முதலானோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். வாழ்க்கையில் எப்போதும் வெற்றியை நோக்கிய சிந்தனை கொண்டோரை ‘சீரியஸ் மென்’ எனக் குறிப்பிடும் இந்தப் படம், 2010-ம் ஆண்டு இதே தலைப்பில் நாவலாக வெளிவந்தது. எழுத்தாளர் மனு ஜோசப் எழுதிய இந்த நாவல், தற்போது சுதிர் மிஷ்ரா இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் ஒன்றில், வித்யா பாலன் நடித்த ‘சகுந்தலா தேவி’ வெளியானது . அதன் தொடக்க காட்சிகளில், குழந்தை சகுந்தலா தேவியிடம் மிகக் கடினமான கணக்குக் கேள்விகள் கேட்கப்பட, அந்த ஐந்து வயது குழந்தையின் கண் முன், கணக்குக் கேள்விகள் CGயில் தெரிய, அந்தக் குழந்தையும் மிகச் சரியான விடையைச் சொல்வாள். கன்னடப் பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தக் குழந்தையை அவளது தந்தை ஒவ்வொரு பள்ளிக்கும் அழைத்துச் சென்று, காட்சிப் பொருளாக மாற்றுவார். ‘சீரியஸ் மென்’ படத்தின் கதையும் இதே போல ஒன்று தான். ஒரே வித்தியாசம் – பார்ப்பனக் குழந்தையான சகுந்தலா தேவி பிறவியிலேயே Human computerராக இருப்பார்; ‘சீரியஸ் மென்’ படத்தில் ஒரு தலித் தந்தை தனது குழந்தையை அப்படி காட்டுவதற்குப் பல்வேறு தகிடுதத்தங்கள் செய்ய வேண்டியதாக இருக்கும்.


இப்படி சொல்வதன் மூலம், சகுந்தலா தேவியின் கணிதம் குறித்த திறமையைக் குறைசொல்லவில்லை; ஆனால் அந்தத் திறமை அவரது பிறவிலேயே இருந்தது என்ற சித்தரிப்பு அபத்தமானது. பிறப்பின் வழியாகத் திறமை உருவாகிறது என்பது இந்தியாவை ஆளும் கருத்தியலான பார்ப்பனியத்தின் ஆணிவேர். இதே கருத்தியலை மையமாகக் கொண்டு, ஓர் தலித் தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான உறவை வைத்து அபத்தக் களஞ்சியமாக உருவாகியுள்ளது ‘சீரியஸ் மென்’.

அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரான அர்விந்த் ஆச்சார்யா (நாசர்) ஓர் தமிழ்ப் பார்ப்பனர். வானில் இருந்து விழும் விண்கற்களில் ஏலியன் கிருமிகள் பூமிக்கு வருவது குறித்த ஆராய்ச்சி அவருடையது. எப்போதும் தோல்வியில் முடியும் இந்த ஆராய்ச்சிக்காக அரசிடம் நிதி பெறுவது மட்டுமே அவரது தலையாய நோக்கம். அவரது உதவியாளரான அய்யன் மணி (நவாசுதீன் சித்திகி), தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்குப் புலம்பெயர்ந்த தலித். தான் சந்தித்த பிரச்னைகளைத் தனது மகன் ஆதி சந்தித்து விடக் கூடாது என்பதற்காக, தனது மகனை ஒரு ஜீனியஸாகக் காட்ட விரும்பும் தந்தை அவர். அதற்கான மகனுக்குப் பல்வேறு பயிற்சிகள் அளித்து, மற்றவர்கள் அந்தச் சிறுவனை ஜீனியஸாகவே பாவிக்கப் பல்வேறு ரகசிய வேலைகளை நிகழ்த்துகிறார் அய்யன் மணி. இந்த ரகசிய வேலைகளை அறியாத சமூகம், அந்தச் சிறுவனைக் கொண்டாடுகிறது.

அய்யன் மணி வசிக்கும் ஹவுசிங் போர்டு பகுதியை நவீன அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற விரும்பும் தலித் எம்.எல்.ஏ ஒருவரும், அவரது கோடீஸ்வர மகளும் நவாசுதீனின் மகன் ஆதியை அம்பேத்கர், ஐன்ஸ்டீன் ஆகியோரின் மறுவடிவமாகவே பார்க்கின்றனர். காலப்போக்கில், அப்பாவின் அழுத்தம் ஒரு பக்கமும், தனது குழந்தைமை குறித்த தேடல் மறு பக்கமும் எட்டிப் பார்க்க, சிறுவன் ஆதி கடும் மன உளைச்சலில் உழல்கிறான்.

அய்யன் மணியின் கனவு என்ன ஆனது, சிறுவன் ஆதி அப்பாவின் கனவை நிறைவேற்றினானா, அர்விந்த் ஆச்சார்யாவின் ஆராய்ச்சியில் என்ன கண்டுபிடித்தார் என்பது மீதிக்கதை.

அர்விந்த் ஆச்சார்யா உள்ளிட்ட பார்ப்பன கதாபாத்திரங்களை இயல்பிலேயே அறிவானவர்களாக பதிவு செய்யும் கதையில், மகனின் ‘ஜீனியஸ் இமேஜ்’ காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக அய்யன் மணி செய்யும் ரகசிய வேலைகள் மூலம் தலித்துகள் குறித்த மிக மோசமான சித்தரிப்பை நிகழ்த்தியிருக்கிறது இந்தப் படம். மகனின் காதில் ப்ளூடூத் கருவி மூலம் மேடைப் பேச்சுக்கு உதவுவது, தொடக்க நிலைக் கல்விக்கான கேள்வித் தாள்களைக் கூட பெற்றுத் தருவது என தலித் சிறுவன் ஜீனியஸாக இருக்க வேண்டும் என்றால் குறுக்கு வழி ஒன்றே தீர்வு என்று சொல்லாமல் சொல்லும் இந்தப் படத்தின் மூல நாவலிலும் இதே சர்ச்சைகள் இடம்பெற்றிருந்தன.

மனு ஜோசப்

பத்திரிகையாளரான மனு ஜோசப் கடந்த 2016-ம் ஆண்டு, ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட போது, “ரோஹித் வெமுலா மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார். நாடு முழுவதும் கடுமையான வன்கொடுமைக்கு உள்ளாகும் தலித்துகள் தற்கொலையா செய்துகொள்கிறார்கள்? ஆதலால் ரோஹித் வெமுலாவின் மரணத்தில் சாதிய ஒடுக்குமுறை இல்லை” என்று எழுதினார். மனு ஜோசப்பின் பார்வையில் ரோஹித் வெமுலாவுக்கு இருந்தது மன அழுத்தம் மட்டுமே; சாதிய ஒடுக்குமுறை இல்லை. இதே கண்ணோட்டம் அவரது படைப்புகளிலும் வெளிப்படாமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யம். ஆனால் இப்படிப்பட்ட மனு ஜோசப்பையும் தாண்டி இந்துத்துவத்திற்குச் சேவை செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் சுதிர் மிஷ்ரா.

மனு ஜோசப்பின் நாவலில் அய்யன் மணி கதாபாத்திரம் இந்து மதத்தை விட்டு வெளியேறி பௌத்த மதத்தை ஏற்றிருக்கும்; ஆனால் படத்திலோ, விநாயகருக்கு அமெரிக்க சுதந்திர தேவி வேடம் போட்டு, விநாயகர் சதுர்த்தியில் ‘கணபதி பாப்பா மோர்யா!’ என்று முழக்கம் வைக்கும் கதாபாத்திரம் அய்யன் மணியுடையது. மகன் படிக்கும் கிறித்துவப் பள்ளியில் மகனை மதமாற்றம் செய்யுமாறு துணிச்சலாகக் கேட்கிறார் பள்ளியின் முதல்வரான கன்னியாஸ்திரி ஒருவர். அதற்கு அய்யன் மணி சொல்லும் பதில் – ‘விவேகானந்தர் பள்ளியில் என் மகனைச் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்கிறார்கள்; அங்கு எந்த மதத்தில் இருந்தாலும் பிரச்னை இல்லையாம்!’.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பள்ளி நெட்வொர்க்காக கல்விப் புலத்தில் கிளைகள் பரப்பி வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதி. அந்தப் பள்ளிகளில் தேசியம் என்ற பெயரில், அறிவியலுக்கு எதிரான கதைகளும், வரலாற்றில் நிகழாத சம்பவங்களும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளால் மூளைச்சலவை செய்யப்படுகின்றன. ஆனால் காலம் காலமாக, சிறுபான்மைச் சமூகங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகின்றன என்ற ஆர்.எஸ்.எஸ் பிரசாரமே இங்குப் பொதுப் புத்தியில் நிலைத்து நின்றிருக்கிறது.

இறுதிக் காட்சியில், அய்யன் மணியின் தவறுகளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கி, அவரது தவறுகளில் இருந்து மீள வழியமைத்துத் தருகிறார் பெருந்தன்மை உள்ளம் கொண்ட பார்ப்பனரான அர்விந்த் ஆச்சார்யா. மக்களின் வரிப்பணத்தைத் தனது பயனற்ற ஆராய்ச்சியில் செலவிட்ட பார்ப்பனரும், மகனை ஜீனியஸாகக் காட்டிக் கொள்ள முனைந்த தலித்தும் ஒரே தராசில் நிற்கவைக்கப்படுகிறார்கள். ஒட்டுமொத்தமாக, சாதி குறித்தோ, இட ஒதுக்கீடு குறித்தோ எந்தப் புரிதலும் இல்லாமல், தலித்துகளை அறிவற்றவர்களாகவும், குயுக்தியின் மூலமே அவர்களால் வெல்ல முடியும் என்றும் பேசியிருக்கின்றன இந்தப் படமும், இதன் மூல நாவலும்.  நவாசுதீன் சித்திகி, நாசர் உள்ளிட்ட தேர்ந்த நடிகர்களின் மிகச்சிறந்த நடிப்பும், அலெக்ஸாண்டர் சுக்லாவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் கூட இந்தப் படத்தின் அரசியலால் தரம்தாழ்ந்து நிற்கின்றன.

குழந்தைகள் மீது பெற்றோர் தமது கனவுகளைத் திணிக்கக் கூடாது என்று பொருள்படுவதாக உருவாக்கப்பட்டிருக்கும் கதையில் கூட தலித்துகளுக்கு வகுப்பெடுக்கும் ஆதிக்க மனப்பான்மையே மேலோங்கியிருக்கிறது.

நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு என ஒவ்வொரு நாளும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் வன்கொடுமைகளை அனுபவித்து வரும் தேசத்தில், இட ஒதுக்கீட்டுக்குத் தொடர்பே இல்லாத ‘மெரிட்’ என்ற வாதத்தை அதனோடு மீண்டும் மீண்டும் மோத விட்டு, பார்ப்பனர்கள் உருவாக்கிய பொதுப் புத்திக்குத் தீனி போடுகிறது ‘சீரியஸ் மென்’.

(கட்டுரையாளர் தனியார் கல்லூரியில் இதழியல்துறை ஆசிரியராக பணியாற்றுகிறார்)
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்