Aran Sei

மக்களவையில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் – பணியாற்றத் தவறியது பற்றிய ஆதாரங்கள்

image credit : thewire.in

“சீல்டு கவர்” எம்.பி : நாடாளுமன்றவாதி ரஞ்சன் கோகாயின் மௌனம்

சென்ற ஆண்டு மார்ச் 19-ம் தேதி அன்று இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அரசு நியமனத்தின் பேரில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார்.

அவரது நியமனம் நிர்வாகத் துறைக்கும் நீதித்துறைக்கும் இடையில் அதிகாரங்களைப் பிரிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் முறைகளை மீறியது என்று கருதிய எதிர்க்கட்சிகளின் முழக்கங்களால், அவருடைய பதவி ஏற்பு விழா, இடையூறுக்குள்ளானது. சட்டத்துறையினரும், பொது அறிவுத் துறையினரும் இந்த நியமனம் முன்னாள் தலைமை நீதிமன்ற நீதிபதிக்குத் தரப்பட்ட ஓய்வுக்குப் பிந்தைய அன்பளிப்பாக பார்க்கப்படும் என கவலை தெரிவித்தனர்.

ரஞ்சன் கோகோய், தனிநபர் சுதந்திரம் பற்றிய வழக்குகள் தொடர்பான அவரது குறுகிய அணுகுமுறைக்காக கண்டனத்துக்குள்ளானவர். அத்தோடு, நீதித்துறை இந்தியாவில் ஜனநாயகத்தின் பின்னடைவைத் தடுப்பதற்குத் தவறிவிட்டது என்று குற்றச்சாட்டுக்கு அவரது தலைமை வழிவகுத்தது.

மத்திய அரசு அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்களை சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டனர். அது தொடர்பாக தொடரப்பட்ட ஏராளமான ஆட்கொணர்வு மனுக்கள் மீது விசாரணையே மேற்கொள்ளாமல் தயக்கம் காட்டியது உச்சநீதிமன்றத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் சமீபத்திய முக்கிய ஆதாரமாக உள்ளது.

காஷ்மீர் – ஆபத்தான அமைதிக்கிடையே தொடரும் போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஆட்கொணர் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையின் போது, சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்ததற்கான அடிப்படையை ஆய்வு செய்வதற்குப் பதிலாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எந்தவித அரசியல் நடவடிக்கையிலும் இறங்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் யெச்சூரியையே அந்த சட்டமன்ற உறுப்பினரை நேரில் சென்று பார்த்துவிட்டு வந்து நீதிமன்றத்திற்கு அறிக்கைத் தருமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஒரு நிர்வாக உத்தரவுக்கு இணையானது.

அரசியலமைப்பு சட்ட வல்லுநர் கௌதம் பாட்டியா தேசிய மக்கள்தொகை பதிவேட்டினை நடைமுறைப்படுத்துவதை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வது என்ற உச்சநீதிமன்றத்தின் முடிவில் ரஞ்சன் கோகாய் எவ்வளவு முக்கியமான பாத்திரம் ஆற்றினார் என்பதை சுட்டிக்காட்டி உள்ளார். இதன் விளைவாக தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் சட்டத்தன்மை நேரடியாக இந்த நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளிலிருந்து வருவதால், அதனால் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் எந்த நிவாரணமும் பெற இயலாத நிலை ஏற்பட்டது.

“அவரது பதவிக்காலத்தில் உச்சநீதிமன்றம், அதன் ஏற்றத்தாழ்வான வரலாற்றிலும், குறைந்தது தனிநபர் உரிமையை காப்பாற்றுவதை தன் முதற்கடமையாகக் கொண்டிருந்த நிறுவனம் என்ற நிலையிலிருந்து கீழிறங்கி, நிர்வாகத் துறையின் மொழியைப் பேசும் நிறுவனமாகவும், நிர்வாகத் துறையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்று என்ற நிலைக்கும் போய்விட்டது,” என கௌதம் பாட்டியா கூறுகிறார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தான் எதிர்கொண்ட எல்லா விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல், ரஞ்சன் கோகோய் நரேந்திர மோடி அரசு தன்னை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ததை ஏற்றுக்கொள்ள முன்வந்தார்.

“நாடாளுமன்றத்தில் எனது இருப்பு நீதித்துறையின் கருத்துக்களை சட்டமியற்றும் அவையின் முன் வைக்கவும் அதேபோல் சட்டமியற்றும் அவையின் கருத்துக்களை நீதித்துறையின் முன்வைக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்,” என்று கோகாய் தனது ஒப்புதலை நியாயப்படுத்தினார்.

ஒரு தொலைக்காட்சி நேர்காணலில்,” குடியரசுத் தலைவர் உங்களது பணியை கோரும் போது அதனை மறுக்க முடியாது என்ற உறுதியான நம்பிக்கையில்தான், நியமனத்தை நான் ஏற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

மசோதாக்களின் மீது விவாதத்தில் பங்கு கொள்ளவில்லை

அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 80(1)(அ) வின் 3-வது பிரிவு சமூக அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சிறப்பான அறிவுடையவர்கள் 12 பேரை மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கி உள்ளது. இதனை நியாயப்படுத்தி 1947, ஜூலை 28-ம் நாள் அரசியல் நிர்ணய அவையில் வாதாடிய கோபால்சாமி அய்யங்கார், புகழ்பெற்ற நபர்களுக்கு அரசியல் பின்புலம் இல்லாவிட்டாலும் கூட அவர்கள் தங்கள் துறைசார்ந்த நிபுணத்துவத்தை நாடாளுமன்ற விவாதங்களின் மூலம் வழங்க முடியும் என்ற அடிப்படையில் அவர்களை மாநிலங்களவைக்கு நியமனம் செய்வதை ஆதரித்தார்.

ஆகவே நியமனம் செய்யப்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தனது நிபுணத்துவ எல்லைக்குள் வரும் கொள்கைகள், மசோதாக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதங்கள் வரும்போது, சாதாரண உறுப்பினர்களை விட ஒரு படி மேலாக நின்று தங்கள் கருத்துக்களை எழுப்ப வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஒரு முன்னாள் தலைமை நீதிபதி முக்கிய சட்டக் கேள்விகளை எழுப்பும் மசோதாக்களின் மீதான விவாதங்களில், ஏறத்தாழ எல்லா விவாதங்களிலும் தனது தனிச்சிறப்பான திறமையை பங்களிக்க வல்லவர்.

image credit : thewire.in
image credit : thewire.in

இருப்பினும், 2021, மார்ச் 20-ம் தேதி வரையிலான மாநிலங்களவை இணையதள ஆவணத் தகவல்களின் படி, தான் பதவியேற்ற நாளிலிருந்து ஒரு விவாதத்தில் கூட ரஞ்சன் கோகாய் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பங்கெடுக்கவில்லை எனத் தெரிகிறது.

கடந்த ஓராண்டில் நாடாளுமன்றம் பல சர்ச்சைக்குரிய மசோதாக்களை விவாதித்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை வேளாண் மசோதாக்கள்.

வேளாண் சட்டங்களை ஏன் ரத்து செய்ய வேண்டும்? – மத்திய அமைச்சருக்கு பொருளாதார வல்லுநர்கள் விளக்கம்

வேளாண்மை மாநில பட்டியலில் இருக்கும் போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த மசோதாக்கள் மைய அரசின் அரசியலமைப்பு அதிகார எல்லைக்கு வெளியே உள்ளதா என்ற கேள்வி அந்த விவாதத்தின் போது, எழுப்பப்பட்டது. இதில் முன்னாள் தலைமை நீதிபதியின் பகுப்பாய்வு நாடாளுமன்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். எனினும் ரஞ்சன் கோகாய் இந்த விவாதத்தில் பங்கெடுக்க முன்வரவில்லை.

தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்யவில்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தனிநபர் மசோதாக்களை அறிமுகப்படுத்தும் அதிகாரமும் இருக்கிறது. எனினும், ஒரு நல்ல மசோதாவைத் தயாரிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் முன்மொழியப்படும் மசோதா ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களுடன் முரண்படவில்லை என்பதை உறுதி செய்ய சட்டங்களைப் பற்றிய விரிவான அறிவு தேவைப்படுகிறது. மேலும் அது அரசியலமைப்புச் சட்டத்தை மீறவில்லை என்பதை உறுதி செய்யும் அளவிற்கு அரசியலமைப்புப் பற்றிய விரிவான புரிதலும் மிகவும் தேவைப்படுகிறது.

image credit : thewire.in
image credit : thewire.in

முன்மொழியப்படும் கொள்கைகளை சுருக்கமாக மிகப் பொருத்தமாக வெளிப்படுத்தும் வகையிலான சட்டரீதியான மொழியில் இருக்க வேண்டும் என்பதால் மிகச்சிறந்த சட்ட வரைவை உருவாக்கும் திறமையும் தேவைப்படுகிறது. ஒரு சராசரி நாடாளுமன்ற உறுப்பினருடன் ஒப்பிடுகையில் முன்னாள் தலைமை நீதிமன்ற நீதிபதி இந்த அனைத்து தளங்களிலும் தனிச்சிறப்பான திறமைகளை உடையவர்.

ஆனால் நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவையில் ஒரு தனிநபர் ஒரு மசோதாவைக் கூட கொண்டுவரவில்லை.

கேள்விகள் எதையும் எழுப்பவில்லை

அரசு நிர்வாகம் தொடர்பான கேள்விகளை அமைச்சர்களிடம் எழுப்புவதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசை பெறுப்பேற்கச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமைச்சர் எழுத்து மூலமாக பதில் தரக்கூடிய நட்சத்திரமிடப்படாத கேள்வியாகவோ அல்லது அவையில் வாய்மொழி மூலம் பதில் கூற இயலும் நட்சத்திரமிடப்பட்ட கேள்வியாகவோ இருக்கலாம்.

உறுப்பினர்கள் ஆளும் அரசின் கொள்கைகளை நன்கு பரிசீலித்து சட்டம், பொருளாதாரம், தொழில்நுட்பம், அயலுறவு கொள்கைகள், இன்னும் இது போன்ற ஏராளமான துறைகளில் பலவிதமான உண்மைகளை வெளிப்படுத்தும் கேள்விகளை முன் வைக்கலாம்.

image credit : thewire.in
image credit : thewire.in

இருந்தாலும், அறிவுப்பின்னணி உடைய ரஞ்சன் கோகாய் மாநிலங்களவையில் ஒரு கேள்வியைக் கூட எழுப்பவில்லை.

ஒரு அமைச்சர் நட்சத்திரமிடப்பட்ட கேள்விகளுக்கு அவையில் பதில் கூறும் போது சபாநாயகரின் அனுமதியுடன் உறுப்பினர்கள் துணைக் கேள்விகளைக் கேட்கலாம். ஆர்வமூட்டும் வகையில் இந்த பிரிவிலும் ரஞ்சன் கோகாய் பெயரில் எந்தக் கேள்வியும் இல்லை.

கவன ஈர்ப்பு தலையீடு எதையும் செய்யவில்லை

கொள்கைகளை அமலாக்குவது அல்லது நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க தலையிடுவதற்கான தகுதியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு.

image credit : thewire.in
image credit : thewire.in

இவை வழக்கமாக “கவன ஈர்ப்பு குறிப்புகள்” எனப் பட்டியலிடப்படும். இருந்தாலும், இந்தப் பட்டியலிலும், எந்த ஒரு கவன ஈர்ப்பு குறிப்பையும் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கொடுத்திருப்பதாக எந்த பதிவும் இல்லை.

அவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை

மாநிலங்களவை இணையதளத்தின் படி, 2020, ஜனவரி 20 லிருந்து ஏப்ரல் 3 ம் தேதிவரை 34 நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துள்ளது. ரஞ்சன் கோகாய் தான் பதவியேற்ற நாளும் அதற்கடுத்த நாளும் என இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே, அதாவது மார்ச் 19, 20 ஆகிய இரு நாட்கள் மட்டுமே மாநிலங்களவைக்குச் சென்றுள்ளார்.

image credit : thewire.in
image credit : thewire.in

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் 18 நாட்கள் மாநிலங்களவை நடைபெற்றதில் ஒரு நாள் கூட கோகாய் கலந்து கொள்ளவில்லை. தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் 2021 மார்ச் 20 வரை மாநிலங்களவை 33 நாட்கள் கூடியுள்ளது. இதில் பிப்ரவரி 21-ம் தேதி மட்டும்தான் ரஞ்சன் கோகாய் அவைக் கூட்டத்துக்குச் சென்றுள்ளார்.

ரஞ்சன் கோகோய் மாநிலங்களவையில் பேசு பொருளான தருணம்

திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹூவா மொய்த்ரா இந்த முன்னாள் தலைமை நீதிபதி மீது பாலியல் வன்கொடுமைப் புகாரை எழுப்பிய போது மட்டும்தான் ரஞ்சன் கோகாய் மக்களவை உறுப்பினராக இருப்பது துலக்கமாக வெளிப்பட்டது. பாஜக உறுப்பினர்கள் அந்த குறிப்புகளை ஆவணத்திலிருந்து நீக்குவதற்கு எடுத்த விடா முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

முத்திரையிடப்பட்ட உறை ரஞ்சன் கோகோய்

தலைமை நீதிபதியாக பணியாற்றும் போது ரஞ்சன் கோகாய், “முத்திரையிடப்பட்ட உறை” என்ற நீதித்துறை அணுகுமுறையை அடிக்கடி பின்பற்றினார். அதன்படி பொதுவாக நீதிமன்ற நடைமுறையின் வெளிப்படைத்தன்மைக்கு எதிரான வகையில், வழக்கில் தொடர்புடைய தரப்பினருக்கு தகவல்களின் நகலைத் தராமல், அவற்றை முத்திரையிடப்பட்ட உறைகளில் பதிலைத் தர அரசைஅனுமதித்தார்.

அரசு தன்னை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்ததை ஏற்றுக் கொண்ட கோகாய், அது, தனது சேவைகளை நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்கான வாய்ப்பை அளித்திருப்பதாகக் கூறினார். எனவே, நாடாளுமன்றவாதி கோகாய் அவர்களின் இந்த சேவைகள் என்ன வகையான சேவைகள்? ஒரு வேளை இதற்கான பதிலும் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் இருக்குமோ?

thewire.in இணைய தளத்தில் அரவிந்த் குரியன் ஆப்ரகாம் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்