Aran Sei

ஜகமே தந்திரம்; திரைப்பிரதியும் அதன் பின்னணி அரசியலும் – முகமது இல்யாஸ்

கார்த்திக் சுப்பராஜ் 2012ல் தமிழ்த் திரையுலகத்திற்கு ‘பீட்சா’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர். ஈழ யுத்தம் முடிவடைந்து, தமிழ் இனம் கொதி நிலையில் இருந்த காலம் அது. அப்போதைய படைப்புகளில் ஈழம் குறித்தோ, தமிழர் இனப்படுகொலை குறித்தோ பெரியளவிலான சித்தரிப்புகள் எதுவும் இல்லை. போரின் முடிவு ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் மாணவர்களிடையே எதிரொலித்தது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தோடு கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்தார்கள். அந்தக் காலகட்டத்தின் இளைஞராக கார்த்திக் சுப்பராஜ் நமக்கு அறிமுகம். அவரது அப்போதைய குறும்படங்கள் பலவற்றில் ஈழம், போரில் வீழ்ந்த தமிழினம் பற்றிய உணர்ச்சிப்பூர்வமான அரசியல் குறித்த சித்தரிப்புகள் இருந்திருக்கின்றன.
இலங்கை மீனவர்களால் சுடப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் குறித்த ‘நீர்’ (விஜய் சேதுபதி நடித்தது), விமானச் சத்தம் கேட்டவுடன் பாதுகாப்பான இடம் தேடி ஓடும் ஈழத்துச் சிறுவன், அகதிகள் முகாமிலிருந்து கடல் நோக்கிக் கடிதம் எறியும் சிறுவன் முதலான அவரது படைப்புகள் அவரது தொடக்க கால அரசியலை ஓரளவு நமக்குப் புரிய வைக்கின்றன. ’யார் இந்தியன்?’ என்ற அவரது குறும்படத்தில் மொழிகளுக்கு அப்பாற்பட்டு இருப்பவனே இந்தியன் என்றும் அதே காலகட்டத்தில் இயக்கியிருந்தார். அதன்மூலம் கார்த்திக் சுப்பராஜுக்கு இந்தியத் தேசியத்தின் சிக்கல், ஈழப்போரில் அதன் பங்கு குறித்த தீர்க்கமான பார்வை எதுவும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஏறத்தாழ 7 ஆண்டுகள் கழிந்த பிறகும், அதே உணர்ச்சிகர அரசியலை அவரது ‘ஜகமே தந்திரம்’ படம் வரை எந்த அப்டேட்டும் ஆகாமல் வைத்திருந்திருக்கிறார். அவரது தொடக்க காலமான 2012-13களிலேயே இந்தக் கதையும் நடக்கிறது.
கார்த்திக் சுப்பராஜின் முந்தைய குறும்படங்களில் அவர் பேசிய அதே அரசியல், அதே பாணியிலான அரசியல் காட்சிகளை, அவரது முந்தைய படங்களில் அவர் இயக்கிய ‘மாஸ்’ காட்சிகள் சேர்த்து, கொஞ்சம் ஸ்டான் லீ (KKK அடையாளங்கள்,’White Power’ நம்பர் ப்ளேட்), கொஞ்சம் டரண்டினோ என்று கலந்துகட்டி ‘ஜகமே தந்திரம்’ என்று உருவாக்கியிருக்கிறார். உலகம் முழுவதும் தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் வெள்ளை ஆதிக்க வலது சாரி அரசியலை, மதுரை ரவுடியை வைத்துப் பேசியிருக்கிறார். லண்டனில் பெரிதாக இல்லாத Ku Klux Klan அமைப்பை வில்லனின் இடத்தில் குறியீடாக வைத்திருப்பது பாராட்டத்தக்கது, எனினும், ‘நானும் உன்ன மாதிரி தான்’ என்று தனுஷ் வட இந்திய பனியா சேட்டுகளிடம் பகை கொண்டிருப்பதையும் சமன்படுத்துவது கார்த்திக் சுப்பராஜிடம் இருக்கும் அரசியல் வறட்சியைக் காட்டுகிறது.
காலனியம் உருவாக்கிய தேசியம் குறித்த சிக்கல் உலகம் முழுவதும் தொடர்ந்து வருகின்றது. காலனியத்தின் எச்சங்கள் தற்போது ட்ரம்ப், போரிஸ் ஜான்சன் முதலானோரை நம் சமகால வரலாற்றில் உற்பத்தி செய்துள்ளன. இவர்கள் தாங்கள் வாழும் நாட்டில் இனவெறியை அரசுக் கட்டமைப்பின் வழியாக உற்பத்தி செய்து, உழைக்கும் மக்களாக இருக்கும் பிற இனங்கள் மீதான வெறுப்பை அரசுக் கட்டமைப்பின் துணையோடு செய்யக் கூடியவர்கள். இன்னொரு பக்கம், இந்தியத் தேசியம் தமிழ்நாட்டில் வட இந்திய முதலாளிகளை அதிகளவில் முதலீடு செய்ய வைக்கிறது; அரசுப் பணிகளில் வட இந்தியர்களைத் திட்டமிட்டு அமரச் செய்கிறது. இந்தியைத் திணிக்கிறது. இதை எதிர்ப்பது என்பது சிங்கள அரசைத் தமிழர்கள் எதிர்த்ததற்குச் சமமான ஒன்று. அதைக் கார்த்திக் சுப்பராஜ் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது.
நியோ நாஸிக்கள் குறித்த படைப்புகள் சம காலத்தில் சர்வதேச அளவில் அதிகமாக வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. தமிழ் சினிமா விவசாயம், பெண்கள் பாதுகாப்பு(!) என்பதிலேயே காலம் தள்ளிக்கொண்டிருக்க, தேசிய வெறி, மண்ணின் மைந்தர்கள் யார் – வந்தேறிகள் யார் என்ற விவாதம், முதலாளித்துவத்தால் ஏதோ கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டான் – அடிமை கலாச்சாரம் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் மேற்கத்திய படைப்புகளோடு தன்னைப் பொருத்திக் கொள்ள விரும்புகிறது ‘ஜகமே தந்திரம்’. சூப்பர்ஹீரோ படைப்பான The Boys, கேங்க்ஸ்டர் படைப்பான Peaky blinders, அல் பச்சீனோ நடித்த Hunters முதலானவை தற்காலத்தில் நாஸிக்கள் குறித்த சித்தரிப்புகளைச் செய்பவை. அதே அரசியல் தாக்கமும் இந்தப் படத்திற்கான வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைக்க அவருக்கு உதவியிருக்கலாம்.
இவற்றைத் தாண்டி, ஈழ அரசியல் குறித்த மெயின்ஸ்ட்ரீம் திரைப்படங்கள் எதுவும் பெரிதாகப் பேசாத நிலையிலும், அதே மெயின்ஸ்ட்ரீமில் ‘தி பேமிலி மேன்’ போன்ற படைப்புகள் வெளியாவதாலும், உணர்ச்சிகரமான சில காட்சிகளும், சில வசனங்களும், சிவதாஸ் கதாபாத்திர வடிவமைப்பும் கவனம்பெறச் செய்கின்றன. ‘மாரி’ கதாபாத்திரம் ‘வடசென்னை’ அன்பு போல நடந்துகொண்டால் எப்படி இருக்கும் என்ற ரீதியில் உருவாகியிருக்கும் சுருளி கதாபாத்திரத்தில் தனுஷ் வெளுத்து வாங்கியிருந்தும், கார்த்திக் சுப்பராஜின் தட்டையான அரசியல் புரிதலால் படத்தின் மீதான ஈர்ப்பு குறைந்துவிடுகிறது.
படக்குழுவினரின் சம்மதமின்றி நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்கு இந்தப் படத்தைத் தள்ளி, ஜகமே தந்திரம் என்று தனது வியாபாரத்தின் சாதுர்யத்தை நிரூபித்திருக்கிறார் தயாரிப்பாளர்.

 

கட்டுரையாளர் – ர. முகமது இல்யாஸ்.

ஊடகவியலாளர், தமிழின் முன்னனி பத்திரிகைகளில் எழுதி வரும் இவர் தற்போது ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்