Aran Sei

கொரோனா முழுஅடைப்பு – கிராமப்புறப் பெண் குழந்தைகளின் கல்விக்கு வேட்டு

அஞ்சு சோலங்கி

“நான் புத்தகங்களைத் தொட்டே ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. மார்ச் மாதமே எங்கள் பள்ளி மூடப்பட்டு விட்டதால் என்னால் படிக்க முடியவில்லை.” என்கிறாள் 14 வயதான கீர்த்தி யாதவ். ஜூன் கடைசி வாரத்தில் அவள் தனது அம்மாவுடன் மாம்பழத் தோட்டத்திற்குச் சென்று அவருடன் மாம்பழம் பறிக்கும் வேலை செய்து வந்தாள்.

“அப்போது என் அம்மா வேலைக்குப் போகவில்லை. இப்போது அம்மா வீட்டு உதவி வேலைக்குப் போக ஆரம்பித்து விடவே, நான் எங்கள் வீட்டு வேலையைக் கவனித்துக் கொள்கிறேன்.” என்கிறாள் கீர்த்தி. அவர்களிடம் ஒரே ஒரு திறன்பேசிதான் உள்ளது. அவளது அண்ணன் அதனை தனது இணையவழி வகுப்பிற்குப் பயன்படுத்துகிறான்.

உ.பி. மாநிலம் ஷ்ராவஸ்தி மாவட்டத்தில் வசிக்கும் கீர்த்தி யாதவ், ஊரடங்கு அறிவித்ததிலிருந்து அவள் தாய்க்கு உதவியாக விவசாய வேலைக்குப் போகத் தொடங்கினாள். கொரோனா நோய்த்தொற்று தடுப்புக்காக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்படுவதற்கு முன்பு அவள் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தாள்.

ஷ்ராவஸ்தி மாவட்டத்தின் கிராமப் புறங்களில் உள்ள கீர்த்தி யாதவ் போன்ற பெண் குழந்தைகள் இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்வதை நிறுத்த வேண்டியிருந்தது. ஏனென்றால், மொபைல் ஃபோன்கள் பையன்களுக்குத்தான் பயன்படுத்தக் கிடைக்கின்றன. இது பெண் குழந்தைக் கல்வி இடைவெளியை மேலும் அதிகமாக்குகிறது.

பையன்களுக்கே கல்வி

பானு யாதவ் தன் கிராமத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து ஒரு தேநீர்க் கடையை நடத்தி வருகிறார். அவர்களுக்குச் சொந்தமாக ஒரு துண்டு நிலம் உள்ளது. அதில் அவர்கள் சில காய்கறிகளையும் , தானியங்களையும் பயிரிட்டுள்ளனர். ஆனால் அதிலிருந்து கிடைப்பவை அவர்கள் வீட்டில் உள்ள நான்கு பேருக்கே போதுமானதாக உள்ளது‌. விற்பனை செய்யும் அளவு அதில் விளைவதில்லை.

கீர்த்தி யாதவ்
கீர்த்தி யாதவ்

“எங்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி சென்று விட்டாள். இளைய மகள் கீர்த்தியும், கடைசி மகன் ரோகித்தும் எங்களுடன் உள்ளார்கள். ஊரடங்குக்கு முன் அவர்கள் இருவரும் தனியார் பள்ளியில்தான் படித்து வந்தார்கள். ஆனால் தற்போதைய சூழலில் அவர்கள் இரண்டு பேரையும் படிக்க வைப்பது இயலாத ஒன்று. என் மகனுக்கு மட்டும் கடன் வாங்கி பள்ளிக் கட்டணம் செலுத்தி உள்ளேன். “ என்கிறார் பானு யாதவ்.

கல்வி இடைவெளி

கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மத்திய அரசு பள்ளிகளையும் கல்லூரிகளையும் மூடி விட்ட பிறகு அவை இணைய வகுப்புகளை நடத்தத் தொங்கினர். அதற்கு திறன் பேசி கணினி ஆகியவை தேவைப்படுகிறது. எனினும் அது இல்லாத ஏழைக் குழந்தைகளுக்கு அரசு எந்த மாற்று ஏற்பாடும் செய்யவில்லை. அதனால் கல்வியில், குறிப்பாக கிராமப்புறப் பெண் குழந்தைகளின் கல்வியில் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் பெண்களைவிட ஆண்கள் 20 கோடி பேர் அதிகமாக இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். பெண்களில் ஆண்களை விட 21% பேர் குறைவாக கைப்பேசி வைத்துள்ளனர் என்கிறது , தொழில் நுட்பத்தைக் கையாள்வதிலும் பெறுவதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான வேறுபாட்டைக் குறித்த ஆய்வு ஒன்று.

இந்த வேறுபாடு இணையத்தைப் பயன்படுத்துவதில் மட்டுமல்ல, கல்வி அறிவு விகிதத்திலும் உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உ.பி யில் பெண்களில் கல்வி பெற்றவர்கள் 59.26% ஆக இருக்கும் போது அது ஆண்களில் 79.24% ஆக உள்ளது. உ.பி- யில் கிராமங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வரை படிக்கும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 84,25,790. இதில் 46.6% பேர் பெண்கள். இந்திய அளவில் கிராமப்புறப் பகுதிகளில் மொத்தமாகப் பயிலும் மாணவர்கள் 6.3 கோடி பேரில் 45% பேர் பெண்கள்.

சிறுவயது திருமணம்

இடைநிற்றலையும், முன் கூட்டியே திருமணம் செய்து விடுவதையும் காட்டுவதால் இந்த நிலைமை பெண் குழந்தைகளுக்கு மோசமானதாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே ஆறாவது மிகக் குறைந்த பெண் கல்வி அறிவு பெற்றுள்ள மாவட்டமாக உள்ள ஷ்ராவதியில் 10-17 வயதிற்கும் இடையில் உள்ள பெண் குழந்தைகளில் 25% பேர் ஏற்கனவே திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தனர்.

வைஷ்ணவி யாதவ் அவளது குடும்பத்தினர் அறிவுரைப்படி படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக்கொள்ள முடிவு செய்துவிட்டாள். “நான் இந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பைப் படித்து முடித்தேன். பதினொன்றாம் வகுப்பில் சேர வேண்டும்.” என்கிறாள் வைஷ்ணவி.

வைஷ்ணவி யாதவ்
வைஷ்ணவி யாதவ்

வைஷ்ணவியின் பெற்றோர்கள் தையல் தொழில் செய்பவர்கள். 16 வயதான அவளுக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் உள்ளனர். “ இப்போதைய நிலையில் நாங்கள் முடிவு செய்துவிட்டோம். நான் படிப்பை நிறுத்திக்கொள்வேன். எப்படியும், இன்னும் ஓரிரு வருடங்களில் எனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் “ என்று மிக வெகுளியாகக் கூறுகிறாள் வைஷ்ணவி.

சத்தான உணவு சாத்தியமில்லை

பள்ளிக்குச் செல்ல முடியாததால் வெறும் படிப்பை மட்டும் இந்தப் பெண் குழந்தைகள் இழக்கவில்லை. அது இன்னொரு பிரச்சனையையும் ஏற்படுத்தி உள்ளது. முழு ஊரடங்கு அடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு விட்டதால் அங்கு தரப்படும் மதிய உணவும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் மாணவர்களுக்குச் சத்தான உணவும் கிடைப்பதில்லை. அரசுப் பள்ளிகளில் பருப்பும் காய்கறிகளும் மதிய உணவில் கிடைத்து வந்தன. ஆனால் இப்போது வீட்டில் வெறும் ரொட்டி அல்லது சோறு மட்டுமே கிடைக்கிறது.

“நாங்கள் நல்ல நாட்களில் சப்பாத்தியுடன் வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கு சாப்பிடுகிறோம் அல்லது சோற்றுடன் பருப்பு சேர்த்து சாப்பிடுகிறோம்‌. எங்களுக்குப் பள்ளியில் பலவிதமான காய்கறிகளும் கிச்சடியும் கிடைக்கும். நான் மீண்டும் பள்ளிக்குப் போக வேண்டும்.” என்கிறாள் வைஷ்ணவியின் தங்கை குடியா. 8 வயதாகும் குடியாவுக்கு ஏன் இத்தனை நாள் பள்ளி மூடியே கிடக்கிறது என்று தெரியவில்லை.

தெற்காசிய யூனிசெஃப் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு பத்திரிகைச் செய்தியில் அதன் மண்டலக் கல்வி ஆலோசகர் ஜிம் ஆக்கர்ஸ், ”பள்ளிகள் நீண்ட நாட்கள் மூடியிருப்பது எங்களுக்குக் கவலை அளிக்கிறது. இதனால் பெண் குழந்தைகளையும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டு மிகவும் பலவீனமானவர்களையும் மிகவும் பாதிக்கிறது. பெண் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டு வேலை செய்யவும், சிறிய குழந்தைகளை கவனித்துக் கொள்ளவுமே பயன்படுத்தப்படுகிறார்கள்‌. இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டு வன்முறையால் பெண் குழந்தைகளின் மனநலம் மிகவும் பாதிக்கப்படுகிறது என்பது குறித்தும் மிகவும் கவலைப்படுகிறோம்“ எனக் கூறி உள்ளார்.

பெண் கல்வி மீதான தாக்கம்

“பள்ளியிலிருந்து இரண்டு முறை அறிவிப்பு வந்தும் அஞ்சு சோலங்கியால் (13) இணைய வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. அவளது ஆசிரியர் வந்து கைப்பேசி எண்ணுக்குப் பாடங்களை அனுப்புவதாகவும், அதற்கு கைப்பேசி எண்ணைத் தருமாறும் கேட்கிறார்.” என்கிறார் அஞ்சுவின் தாய் ரமாபாய்.

“நாங்கள் எண்ணைக் கொடுத்தோம். ஆனால் எங்களிடம் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கத் திறன்பேசி இல்லையே. பள்ளி திறந்தவுடன் பாடங்களைப் படித்துக் கொள்ளட்டும். ‌நாங்கள் அன்றாடச் சாப்பாட்டிற்கே திண்டாடிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய கைப்பேசியை வாங்கும் நிலையில் இல்லை.”என்கிறார் ரமாபாய் வேதனையுடன்.

ரமாபாய் சோலங்கி பக்கத்து நகரில் காய்கறி வியாபாரம் செய்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு சாலை விபத்தில் தன் கணவனை இழந்து விட்டார். தற்போது தன் குழந்தைகளுடன்  தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் ஒருவர்தான் இன்று குடும்பத்தில் சம்பாதிப்பவர்.

“அவர்களுடைய தந்தை எங்களுக்கு எதுவும் சேர்த்து வைக்கவில்லை. அரசுப் பள்ளியில் கட்டணம் இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் புத்தகங்கள், சீருடை இன்னும் மற்றவற்றிற்கு எங்கே போவது? எனக்கு அவர்களைப் படிக்க வைக்க விருப்பம்தான். அதற்காக இணைய வகுப்பிற்கு அதிக பணம் கொடுத்து சேர்க்க முடியாது. எங்களைப் போன்ற ஏழைகளுக்கு இந்த அரசாங்கம் ஏன் உதவக் கூடாது?” என்று கேட்கிறார் ரமாபாய்.

(கட்டுரையாளர் ஜிக்யாசா மிஸ்ரா ராஜஸ்தானிலும் உத்தரப்பிரதேசத்திலும் இருந்து எழுதுபவர்)

கட்டுரை & படங்கள் : நன்றி Thewire.in

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்