Aran Sei

சென்னை உயிர்ச்சூழலின் கடைசி நம்பிக்கை – பள்ளிக்கரணை சதுப்புநிலமும் குடிநீர் பிரச்சினையும்

ள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் தூர்வாரும் பணி செய்யக் கூடாதென பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் “தூர்வாரும் பணிக்காக ”  29.02 கோடி ரூபாய் வழங்கப்பட்ட அரசு உத்தரவிற்கு எதிராகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு  பொது நல மனுவைத்   தாக்கல் செய்திருந்தது.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் மத்திய அரசால் தேசிய சதுப்புநிலங்கள் பாதுகாப்பு – மேலாண்மை (NWCMP) திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநிலங்கள் என அறிவிக்கப்பட்ட 94 சதுப்புநிலங்களில் ஒன்றாகும்.
 இது முன்னர்  6000 ஹெக்டேர்  பரப்பளவு கொண்டதாக  இருந்தது. ஆனால், சென்னை நகரத் திட்டமிடல் என்பது தெளிவாக மேற்கொள்ளப்படாததன் காரணமாக தற்போது வெறும்  900 ஹெக்டேராக சுருங்கியுள்ளது.
மேலும், பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னைக்கான குடிநீரை சேகரித்து வைக்கும் இடமாகவும், அதிகளவிலான மழைப்பொழிவு பொழியும்போது இதனைச் சுற்றியுள்ள  32 சதுப்பு நிலங்களிருந்து வரும் உபரி நீரை பெறுகின்ற இயற்கை அரணாகவும் உள்ளது. ஒருவேளை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் பரப்பளவு சென்னையின் நகரமயமாக்கத்தால் குறையாமல் இருந்திருந்தால்  சென்னை பெருவெள்ளத்திருந்தும் நம்மைக் காத்திருக்கக்கூடும்.
இந்தச் சதுப்பு நிலப்பகுதியில் 178 பறவையினங்கள், 1௦ பாலுட்டியினங்கள், 15 ஊர்வன வகைகள், 11 நில நீர்வாழ் உயிரினங்கள் என ஏறத்தாழ  633 தாவரம் மற்றும் விலங்கினங்களுக்கு இது புகலிடமாக உள்ளது.
இதனோடு,  உலகளவில்  சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் ராம்சர் சாசனத்தின்  (Ramsar Convention)  அந்தஸ்துக்கான அனைத்து அம்சங்களும் கொண்டது  பள்ளிக்கரணை சதுப்புநிலம்.
இவ்வளவு சிறப்புமிக்க  சதுப்பு நிலத்தைச் சென்னையின் வெள்ள நீரை வடிக்க சென்னை மாநகராட்சி மூலம் சதுப்புநிலத்தை தூர்வாரி ஆழப்படுத்தி, நீர்தேக்கும் ஏரிபோல் உருவாக்கப் போவதாக கடந்தாண்டு  அப்போதைய  தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்குச் சூழலியலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
 இந்நிலையில்,கடந்த  2018ம் ஆண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தி2018ம் ஆண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்  “தூர்வாரும் பணிக்காக ”  அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில்;
 1) பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளக் கூடாது.
2) பள்ளிக்கரணை பாதுகாப்பு நிதி அனைத்தும் பள்ளிக்கரணை பாதுகாப்பு ஆணையம் மூலமாக மட்டுமே செலவிடப்பட வேண்டும்.
என்று உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயிர்ச்சூழலின் கடைசி நம்பிக்கையாக உள்ள  பள்ளிக்கரணை சதுப்பு நிலம் காக்கப்படும்போது தான், சென்னை என்னும் சாமானியர்களின் நகரம் தன் இருப்பை தொடர முடியும் என்பது தவிர்க்க இயலாத உண்மை.
கட்டுரையாளர் : பிரதீப் இளங்கோவன், சூழலியல் செயற்பாட்டாளர்,

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்