Aran Sei

‘வெறுப்பின் உருவம்’ – சர்தார் வல்லபாய் பட்டேலும், ஆர்.எஸ்.எஸ் மீதான தடையும்

Image Credit : thewire.in

ங்பரிவாரும் அதன் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அதன் பிற கூட்டாளிகளும், சர்தார் பட்டேலின் மரபை சொந்தம் கொண்டாடுவதில் தீவிரமாக இருக்கும் போது அந்த அமைப்பு, அந்த ‘இரும்பு மனிதர்’ அதன் அரசியலை கடுமையாக விமர்சித்தவர் என்பதையும், மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு அதனை தடை செய்ததையும் மறந்து விட்டதைப் போல் தெரிகிறது. உண்மையில், அப்போது உள்துறை அமைச்சராக இருந்த பட்டேல், ஆர்எஸ்எஸ் ஐ தடை செய்யும் தனது முடிவை விளக்கி அதன் தலைவர்களுக்கு 1948 ல் கடிதம் எழுதி உள்ளார்.

1948-ல் மத்திய அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில், “நமது நாட்டில் உள்ள வெறுப்பு மற்றும் வன்முறை சக்திகளை, இந்திய சுதந்திரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும், அதன் நேர்மையான பெயரை இருட்டடிப்பு செய்யும் சக்திகளை வேரறுக்க” ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்வதாக தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் ஆவணக் காப்பகத்தில் உள்ள அந்த முழு அறிக்கை இதோ:

1948, பிப்ரவரி 2 ல், இந்திய அரசு நிறைவேற்றிய தீர்மானம், நமது நாட்டில் வேலை செய்யும் வெறுப்பு மற்றும் வன்முறை சக்திகளையும், நாட்டின் சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் மற்றும் அதனுடைய நேர்மையான பெயரை இருட்டடிப்புச் செய்யும் சக்திகளையும் வேரறுக்க உறுதி பூண்டுள்ளது எனவும், இந்த கொள்கையின் அடிப்படையில் இந்திய அரசு, தலைமை ஆணையர் பிரதேசங்களில் (தற்காலிக அரசுகள்) ஆர்எஸ்எஸ் ஐ சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.

பிற ஆளுநர் பிரதேசங்களிலும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது.

 

உண்மையான அரசியல், சமூக, பொருளாதார செயல்களில் ஈடுபடும் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், அவற்றின் நடவடிக்கைகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட சில உரிமைகள் அல்லது சட்டத்தின் வரம்புகளை மீறக்கூடாது என்ற கருத்தில், அவர்களுக்கு நியாயமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க மக்களாட்சி அரசுகளாக உள்ள இந்திய அரசும், மாகாண அரசுகளும் எப்போதும் ஆர்வமாக இருக்க வேண்டும்.

 

இந்துக்களின் ‌உடல், அறிவு மற்றும் ஒழுக்கமான நல்வாழ்க்கையை ஊக்குவிப்பதையும், அவர்களுக்கிடையே சகோதரத்துவம், அன்பு, சேவை மனப்பான்மை ஆகியவற்றை வளர்ப்பதையும் தனது கொள்கையாகவும் நோக்கமாகவும் ஆர்எஸ்எஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. அரசே, அனைத்துப் பிரிவு மக்களின் பொதுவான பொருள் மற்றும் அறிவு சார்ந்த நல்வாழ்வை முன்னேற்றுவதற்கு மிக அதிக ஆர்வமுடையவையாக உள்ளது. இவற்றை செயல்படுத்த, நாட்டின் இளைஞர்களுக்கு குறிப்பாக இராணுவ விவகாரங்களில் உடற்பயிற்சியையும், கல்வியையும் தருவதற்கு தங்கள் கைகளில் திட்டங்களை அரசு வைத்துள்ளது. எனினும் அரசு, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் தங்கள் நடைமுறையில் அது ஏற்றுக் கொண்ட கொள்கைகளைப் பின்பற்றுவதில்லை என்பதை வருத்தத்துடன் நோக்குகிறது.

 

விரும்பத்தகாத, அபாயகரமான செயல்களையும் கூட ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் செய்கிறார்கள். நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்எஸ்எஸ் ன் தனிப்பட்ட உறுப்பினர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, கலவரம், திருட்டு, கொள்ளை, கொலை ஆகியவற்றின் மூலம் சட்டவிரோதமாக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் சேமித்து வைத்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மக்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடவும், ஆயுதங்களை சேமிக்கவும், அரசுக்கு எதிராக அதிருப்தியை உருவாக்கவும் தூண்டும் துண்டு பிரசுரங்களை மக்களிடம் பரப்பி வருவதாகவும், மேலும் காவல்துறைக்கும், இராணுவத்திற்கும் கைக்கூலிக் கொடுத்து தம் பக்கம் திசை திருப்ப முயல்வதாகவும் அறிகிறோம். இந்த நடவடிக்கைகள் யாவும் திரை மறைவாக நடைபெறுகின்றன என்பதையும், இந்த நடவடிக்கைகள், அரசுக்கு அதன் ஒருங்கிணைந்த திறன்கள் மூலம் ஆர்எஸ்எஸ்-ஐ கையாள வேண்டிய பொறுப்பை எந்த அளவு கொடுக்கின்றன என்பதை அரசு அவ்வப்போது கவனித்து வருகிறது. இந்த ஆண்டு நவம்பரில் டெல்லியில் கூடிய மாகாணங்களின் பிரதமர்களும் (முதல் அமைச்சர்களும்) உள்துறை அமைச்சர்களும் கலந்து கொண்ட மாநாட்டில் இதனை அரசு இறுதியாக வரையறுத்தது.

 

இதனால் ஆர்எஸ்எஸ்-ஐ இதனுடன் தொடர்புடையதாக கருதுவதற்கான நிலை இன்னும் முடிவாகவில்லை என்றாலும், அதுவரை தனிநபர்களும் கடுமையாக கையாளப்பட வேண்டும் என ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், அதன் ஏற்றுக் கொள்ள முடியாத தீங்கு தரும் செயல்கள் தடையின்றித் தொடர்கின்றன. அதன் வன்முறை கலாச்சாரத்தை ஆதரிப்பது மற்றும் ஊக்குவிக்கும் செயல்களால் பல உயிர்கள் பலியாகி உள்ளன. அந்த வரிசையில் அண்மையில் இழந்த, விலைமதிப்பற்ற உயிர், காந்தி அடிகளின் உயிரே.

 

இத்தகைய சூழலில் மீண்டும் தோன்றியுள்ள இந்தக் கொடிய வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். அதன் முதல்படியாக, அவர்கள் ஆர்எஸ்எஸ் ஐ சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க முடிவு செய்துள்ளனர். இத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு அரசை, சட்டத்தை மதிக்கும் அனைத்து குடிமக்களும், நாட்டின் நலனை இதயத்தில் ஏந்தி உள்ள அனைவரும் ஆதரிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

காந்தி படுகொலைக்கு முன் ஆர்எஸ்எஸ் மீது சர்தார் பட்டேல் ஒரு மென்மையானப் போக்கைக் கொண்டிருந்தாலும் அதற்குப்பிறகு அந்தக் குழுவின் நடவடிக்கைகளைப் பற்றி மிகக் கடுமையாக எழுதி உள்ளார். 1948, ஜுலை 18-ம் நாள் இந்து மகா சபையின் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு, தடைக்குப் பிறகும் ஆர்எஸ்எஸ் அதன் தீயச் செயல்களைத் தொடர்வது குறித்து ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

“இந்தச் சதி திட்டத்தில் (காந்தியைக் படுகொலை செய்யும்) இந்து மகா சபையின் தீவிரவாத பிரிவுக்கு பங்குண்டு என்பது குறித்து என் மனதில் எந்த ஐயமும் இல்லை. ஆர்எஸ்எஸ் ன் இந்த நடவடிக்கை இந்திய அரசு மற்றும் மாகாண அரசுகளுக்கு விடப்பட்ட தெளிவான அச்சுறுத்தல் ஆகும். எங்களுக்குக் கிடைத்த செய்திகள், தடைக்குப் பிறகும் அதன் செயல்பாடுகள் குறையவில்லை என்பதைக் காட்டுகின்றன. மாறாக, நாட்கள் செல்லச் செல்ல, ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் மேலும் தீவிரமாக அதிக அளவில் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.”

 

பட்டேல், செப்டம்பர், 1948 ல் ஆர்எஸ்எஸ் ஐ தடை செய்யும் தனது முடிவு குறித்து விளக்கி கோல்வால்கருக்கும் கூட கடிதம் எழுதி உள்ளார். அதில்:

 

“இந்துக்களை அமைப்பாக்குவது என்பது ஒன்று. ஆனால் தனது துன்பங்களுக்கு பழி வாங்குவது என்ற பெயரில் ஆதரவற்ற, அப்பாவி ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்வது முற்றிலும் வேறொன்றாகும்….. இதைத்தவிர, அவர்களது காங்கிரஸ் எதிர்ப்பு, அதுவும் இந்த அளவு தீவிரமாக, ஆளுமையைப் பொருட்படுத்தாமல், மரியாதையை நாசமாக்குவது ஆகியவை மக்களிடையே அமைதியின்மையைத் தோற்றுவித்தது. அவர்களுடைய அனைத்து பேச்சுக்களும் மதவாத நஞ்சால் நிரப்பப்பட்டிருந்தன. இந்துக்களை உற்ற்சாகப்படுத்தி, அவர்களது பாதுகாப்பிற்காக அவர்களை அமைப்பாக்குவதற்கு நஞ்சைப் பரப்ப வேண்டிய அவசியம் இல்லை. இந்த நஞ்சின் இறுதி விளைவாக காந்திஜியின் விலைமதிப்பற்ற உயிர் தியாகத்தை நாடு அனுபவிக்க வேண்டியதாயிற்று.

 

அரசு அல்லது மக்களின் ஒரு துளி இரக்கம் கூட ஆர்எஸ்எஸ் மீது இல்லை. அதன்மீது எதிர்ப்புதான் வளர்ந்தது. இந்த எதிர்ப்பு, காந்தியின் மரணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடி, இனிப்புகளையும் விநியோகித்த போது மிகவும் கடுமையானது.. இந்த நிலையில், ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது… அதற்குப் பிறகு ஆறு மாதங்கள் கடந்து விட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆர்எஸ்எஸ் ஆட்கள் முழுமையான, சரியான கருத்துடன் சரியான பாதைக்கு வருவார்கள் என நாங்கள் நம்பினோம். ஆனால் எனக்கு வந்துள்ள அறிக்கைகள் மூலம் அந்த அதே பழைய நடவடிக்கைகளுக்குப் புத்துயிரூட்ட முயற்சிப்பதையே தெளிவாகக் காட்டுகின்றன.”

என்று கூறப்பட்டுள்ளது.

1948-ல் ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரின் வேண்டுகோளை ஏற்று பட்டேல் அவரைச் சந்தித்தார். 1948 நவம்பர் 14 ம் தேதிய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பின் படி இருமுறை அவர்கள் சந்தித்தனர். முதல் சந்திப்பில் கோல்வால்கர் தன் ஆதரவாளர்களிடம் பேசி அவர்களை ‘நல்வழிப்படுத்த’ தனக்கு சிறிது கால அவகாசம் தேவை என கேட்டார். எனினும், இரண்டாவது சந்திப்பில், தடையை நீக்கும்வரை, எந்த மாற்றத்திற்கும் தான் உறுதி கூற முடியாது.” என்று கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

பின்னர், இந்திய அரசு மாகாண அரசுகளை தொடர்பு கொண்டு பேசிய பிறகு வெளியிட்ட அதிகார பூர்வமான அறிவிப்பில், “ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர்கள் செய்து வரும் பல்வேறு விதமான செயல்களும் தேச விரோத செயல்களாக, எப்போதும் அழிவைத் தரும் செயல்களாக, வன்முறை செயலாகளாகவே கருதப்படும். மேலும் கடந்த காலத்தில் இத்தகைய பேரழிவைத் தரும் செயல்கள், அப்போது அதற்கு தேவையான பலன்களைக் கொடுத்தது போன்ற சூழ்நிலையை மீண்டும் உருவாக்க ஆர்எஸ்எஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்தக் காரணங்களால், ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்குவதை எதிர்ப்பதாக தற்காலிக அரசுகள் அறிவித்துள்ளன. இந்திய அரசும் தற்காலிக அரசுகளின் முடிவை ஏற்றுக் கொள்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை அறிந்தவுடன் கோல்வால்கர் பட்டேலையும் நேருவையும் மீண்டும் சந்திக்க விரும்பினார். ஆனால் பட்டேல் அவரை சந்திக்க மறுத்து விட்டார்.

இதன்பிறகு ஆர்எஸ்எஸ் தலைவர் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் எழுதிய கடிதத்தில், “இந்தியாவிற்கு மதச்சார்பற்ற அரசு என்ற கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். மேலும் நாட்டின் தேசிய கொடியை ஏற்றுக் கொள்கிறோம். எனவே, பிப்ரவரி மாதம் அமைப்பின் மீது போடப்பட்டத் தடையை இப்போது விலக்கிக் கொள்ளப்படலாம்.” என்று எழுதினார்.

“மேற்கூறிய ஏற்கனவே விளக்கப்பட்டக் காரணங்களால், இந்த வாக்குமூலம் அவருடைய ஆதரவாளர்களின் செயல்களோடு ஒப்பிடுகையில் பொருத்தமற்றதாக இருப்பதால் தற்காலிக அரசுகளை ஆர்எஸ்எஸ் மீதான தடையை விலக்கிக் கொள்ள அறிவுரை கூற இயலாது நிலையில் இந்திய அரசு உள்ளது.” என்று அரசின் அதிகாரபூர்வ அறிக்கைக் கூறுகிறது.

இறுதியில், கோல்வால்கர் தடையை நீக்குவதற்கான நிபந்தனைகளாக சில குறிப்பிட்ட உறுதிமொழிகளை கொடுக்க ஒப்புக் கொண்டதால், ஆர்எஸ்எஸ் மீதான தடை 1949, ஜுலை 11 அன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. அரசின் அறிவிப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பும், அதன் தலைவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், கொடிக்கும் பற்றுறுதி உடையவர்களாக இருப்பதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் தடை நீக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

“ஆர்எஸ்எஸ் தலைவர் ஒன்றிய அரசியலமைப்பிற்கு பற்றுறுதி உடையவராக இருப்பதையும், தேசியக் கொடியை மதிப்பதையும், மேலும் வன்முறையிலும், இரகசிய நடவடிக்கைகளிலும் நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு அல்லது அதனை செயல்படுத்துபவர்களுக்கு ஆர்எஸ்எஸ்ல் இடமில்லை என்பதையும் ஆர்எஸ்எஸ் அமைப்புச் சட்டத்தில் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தெரிவிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் அதன் அமைப்புச் சட்டம் ஜனநாயக அடிப்படையில் அமைக்கப்படும் என்றும் தெளிவாக்கி உள்ளார்.

 

….. ஆர்எஸ்எஸ் தலைவர் முன்வைத்த இந்த மாற்றங்கள், விளக்கங்களின் அடிப்படையில், இந்திய அரசு அது, வன்முறையையும், இரகசிய நடவடிக்கை களையும் கைவிட்டு இந்திய அரசியலமைப்பையும்,தேசியக் கொடியையும் ஏற்றுக் கொண்டு, ஜனநாயக வழியில்,- கலாச்சார அமைப்பாக செயல்பட ஒரு வாய்ப்பைத் தர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. இத்தகைய கொள்கைகளை தனது அமைப்புச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளும் அமைப்பை செயல்பட தடை செய்வதற்கு நியாயமான எதிர்ப்பை எடுக்க முடியாது என இந்திய அரசு உணர்கிறது.” என்கிறது அரசின் அறிக்கை.

 

(இந்த கட்டுரை, 2018ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி www.thewire.in இணையதளத்தில் வெளியானது.)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்