Aran Sei

சர்தார் வல்லபாய் பட்டேலை இந்துத்துவவாதிகள் கொண்டாடுவது சரியா? – எஸ்.என்.சாஹூ

ரண்டாண்டுகளுக்கு முன் 2018,அக்டோபர் 31 ம் நாள், ‘ஒற்றுமையின் சிலை’ என கூறப்பட்ட சர்தார் பட்டேலின் சிலையைத் திறந்து வைத்து பேசிய மோடி, “தன்னாட்சி அரசுகளை இணைத்து பட்டேல் இந்திய ஒன்றியத்தை அமைத்திருக்காவிட்டால், இன்று சிவ பக்தர்களுக்கு சோம்நாத் கோவிலுக்குச் சென்று வழிபடவும், ஜுனாகரில் (குஜராத்) சிங்கங்களை பார்க்கவும், ஐதராபாத்தின் சார்மினாரை காணவும் விசா தேவைப்பட்டிருக்கும் என்று கூறினார். முஸ்லீம் அரசர்கள் ஆண்டு கொண்டிருந்ததால்  ஐதராபாத்தையும் ஜுனாகரையும் இந்திய ஒன்றியத்துடன் வசதியாக (நமக்கு) இணைத்தார்.” என முழங்கினார்.  மோடி இந்தக் கருத்தை கபடத்தனமாக வெளிப்படுத்தி உள்ளார். பட்டேலின் வரலாற்று சிறப்பு மிக்க பங்கு இல்லை எனில் முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் இணைந்திருக்க மாட்டார்கள். அதனால் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க இயலாமல் போயிருக்கும் என கூறுவதாகவே இது உள்ளது.

மோடி முஸ்லிம் அரசர்களின் அரசுகளைத் தேர்ந்தெடுத்து கூறியுள்ளது பெரும்பான்மை சமூகத்திற்கு ஒரு  மறைபொருளை உணர்த்துவதற்காகவே. அதாவது ஒட்டு மொத்தமாக முஸ்லீம்கள் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை தருபவர்கள். அவர்களுக்கு அதனை எப்போதும் நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே அது.

திருவிதாங்கூர் அரசர்

வெட்கமின்றி  முஸ்லீம் அரசர்கள் இந்திய ஒற்றுமைக்கு இடையூறாக இருந்தார்கள் என விரலை நீட்டும் மோடி, வேண்டு மென்றே ( அல்லது வரலாறை சரிவர புரிந்துகொள்ளாததால்) இந்து மதம் மற்றும் இந்து கடவுளைக் காட்டி இந்து அரசரான திருவிதாங்கூரை ஆண்ட அரசர், இந்தியாவுடன் இணைய விரும்பவில்லை என்பதை வசதியாக மறந்து விட்டார்.

ஒரு வேளை பட்டேலும், வி.பி மேனனும் கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த இந்து அரசை இணைக்காமல் இருந்திருந்தால், இன்று கேரளா என்று அறியப்படும் அந்த நிலத்திற்குள் சென்று பத்மநாப கடவுளை தரிசிக்க விசா தேவைப்பட்டிருக்குமோ?

1946 ல், ஆங்கிலேய அதிகாரம்,  தன்னாட்சி அரசுகள் மீது வழக்கிழந்ததாக அறிவிக்கப்படுவதற்கு  முன்பே முதன்முதலாக இந்தியாவுடன் இணைய மறுத்து,  தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது இந்த திருவிதாங்கூர் அரசுதான்.

“இந்திய அரசுகளை ஒன்றிணைந்த கதை” என்ற தனது நூலில் வி.பி. மேனன், 1946 ஜுன் 11 ஆம் நாள் திருவிதாங்கூர் திவானுக்கு எழுதிய கடிதத்தில் “….. சர் சி.பி.ராமசாமி அய்யர் தன்னாட்சி அரசு இறையாண்மை பெற்ற சுதந்திர நாடாக இருக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். …. இதைத் தொடர்ந்து பலரும் அதே போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த மனப்பான்மை இந்திய அரசுக்கு சிறிது கவலை தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

திருவிதாங்கூரின் முடிவை முகம்மது அலி ஜின்னா பாராட்டி ஆதரித்துள்ளார்.  மேனன் தனது புத்தகத்தில்,” திருவிதாங்கூரின் திவான் பாகிஸ்தானில் தங்கள் வணிக முகவரை நியமிக்க எண்ணியுள்ளதாக தெரிவிக்கும் அளவு சென்றுவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்து அரசரான திருவிதாங்கூர் அரசு, இந்து மதத்தின் பேரில், இந்து கடவுள் பத்மநாபரின் சாட்சியாக  இந்திய ஒன்றியத்துடன் இணைவதில்லை என ஆட்சியாளர்கள் முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளதை இது வெளிப்படுத்துகிறது. அவர்கள் திருவிதாங்கூரின் இறையாண்மை,  கடவுள் பத்மநாபரிடம் உள்ளதாகவும், அவரை  இந்திய இறையாண்மைக்கு கீழ்படிய செய்ய முடியாது என வலியுறுத்தி உள்ளனர்.

மேனன் தனது புத்தகத்தில் “கடவுள் பத்மநாபனின் மேல் மகாராஜா வைத்துள்ள பக்தி வெறித்தனமானது ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கே. ஆர். நாராயணனின் எடுத்துக்காட்டு

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், 1998 ஆகஸ்ட் 14 ல் நாடாளுமன்றத்தில் பட்டேலின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசிய போது ஒரு வருத்தத்திற்குரிய மேற்கோளைச் சுட்டிக்காட்டி பேசினார்.

அப்போது, ” திருவிதாங்கூர் திவான் சர் சி.பி. ராமசாமி அய்யர், திருவிதாங்கூர் அரசு பத்மநாபரின் பெயரால் அவரது வழிகாட்டுதல்படி நடப்பதால் இந்தியாவுடன் இணைப்பது குறித்து எவரும் பேச முடியாது என்று கூறிய போது, பட்டேல் கண்களை சிமிட்டி விட்டு அப்படியா?  அப்படியானால்  திருவிதாங்கூர் ஆட்சியாளர்கள் கடவுள்  பத்மநாபரைக் ஆங்கில அரசுக்குக்  கீழ்படிந்து  நடக்கச் செய்தது எப்படி?” என்று கிண்டலாகக் கேட்டார்.

மேலும் “இந்திய ஒன்றியத்துடன் அரசுகளை ஒன்றிணைந்த கதை நமது சுதந்திர போராட்டத்திற்குப் பிறகு எழுதப்பட்ட ஒரு நாடகத்தனமான பின்னுரை. பட்டேலின் வாதங்களும் , மேற்கொண்ட முறைகளும்  பலவித பயன்களைக் கொண்டது.” என்று கே.ஆர்.நாராயணன் கூறினார்.

இதிலிருந்து ஐதராபாத், ஜுனாகர் இன்னும் பல தன்னாட்சி அரசுகள் போல் அன்றி, இந்து அரசான திருவிதாங்கூரில் மட்டுமே, அரசியலமைப்பிலும், அதன் மதிப்புகளிலும் பொதிந்துள்ள மத சார்பற்றத்  தன்மையை  எதிர்க்க இந்து கடவுள் அழைக்கப்பட்டு, தெய்வீக உரிமைக் கோட்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து, 1949, அக்டோபர் 12 ஆம் தேதி, அரசியல் நிர்ணய சபையில் பேசிய பட்டேல், ” ஜம்மு காஷ்மீர் அரசுடன் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட பிரச்சனைகளை கருத்தில் கொண்டு,  அது இந்திய ஒன்றியத்துடன் அரசியலமைப்பு உறவைத் தொடர நாங்கள் ஒரு சிறப்பு ஏற்பாட்டைச்  செய்துள்ளோம்.” என்று கூறினார்.

இந்துத்துவாவை உயர்த்திப் பிடிக்கும் தலைவர்கள், ஆட்சிக்கலை மீதான  முன்னுரிமையின் நம்பிக்கை பற்றியும், நிர்வகித்தல், சட்டத்தின் ஆட்சி ஆகியன பற்றி எப்போதும் பேசுவார்கள். அவர்கள் பட்டேலின் எடுத்துக்காட்டை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அதாவது, இந்துவாக இருந்து கொண்டே, இந்து அரசரான திருவிதாங்கூர் ஆட்சியாளர்கள் தாங்கள் மிகவும் போற்றும் இந்து கடவுளின் பெயரால் இந்திய அரசுடன் இணைய மாட்டோம் என்று கூறி எடுத்த முயற்சிகளை முறியடிக்க அவர் சற்றும் தயங்கவில்லை.

திருவிதாங்கூர் அரசர், பட்டேல் மற்றும் மேனன் ஆகியோரது முயற்சிகளை முறியடிக்க இந்து கடவுள் பத்மநாபரை பயன்படுத்தியதோடு மட்டுமின்றி, ஒரு விசித்திரமான காரணத்தையும் கூறினார்.  அவர்கள், இந்திய ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்து அரசை மாற்றினால் இந்துமதம் ஆபத்திற்குள்ளாகும் என்ற கருத்தை முன்வைத்தார்.

திருவிதாங்கூர் இணைக்கப்பட்ட ஓராண்டிற்குப் பின் 1950 மே 15 அன்று திருவிதாங்கூர் சென்ற பட்டேல், அங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கூடியிருந்த கூட்டத்தில் ” சிலர் கூறுவது போல இந்து மதம் ஆபத்திற்குள்ளாகும் என்ற பொய்யை நம்பாதீர்கள். இந்தியாவில் இந்து மதம் ஒரு போதும் அழியாது” என உறுதி அளித்தார்.

மகாத்மா காந்தியைப் போன்ற ஒரு மாபெரும் இந்துவை கொலை செய்வதன் மூலம் இந்துமதத்தைப் பாதுகாக்க முடியாது என பட்டேல் கூறிய வார்த்தைகள் தற்போது மிகவும் பொருத்தப்பாடு உடையது. ஏனெனில் இப்போது காந்தியை கொன்றவன் போற்றப்படுகிறான்.  அத்துடன் அப்படி செய்ததற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இந்துத்துவா தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

தற்போதைய பிரதமர் மிக ஆர்ப்பாட்டமாக, “அப்படி செய்தவர்களை இதயத்தின் அடியாழத்தில் கூட மன்னிக்க மாட்டேன்” என அறிவித்து விட்டு அவர்களுக்கு எதிராக இதுவரை எதுவும் செய்யவில்லை. அமித் ஷா கூட அவ்வாறு செய்த பாஜக தலைவர்களிடமிருந்து விளக்கக் கடிதம் கோரி, இந்த விவகாரத்தை உரிமை மீறல் குழுவிற்கு பரிந்துரை செய்தார். அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை. இது பட்டேலுக்குச் செய்யும் அவதூறு இல்லையா?

பட்டேலின் விரிந்த பார்வையை மறுக்கிறது இந்துத்துவா

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளவர்களுக்கு அவர்களின் மத அடிப்படையில் குடியுரிமைத் தரும் குடியுரிமைத்  திருத்தச்  சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் பட்டேல் மீதான அவதூறை ஆழமாக்கி உள்ளது‌ மோடி அரசு. பட்டேல், 1947, ஏப்ரல் 29 அன்று அரசியல் நிர்ணய சபையில் குடியுரிமைப் பற்றி விளக்கியதை இது மறுதலிக்கிறது.

அதில் உள்ளார்ந்த பார்வையுடன் அவர், “உலகம் முழுவதும் குடியுரிமைக்கான ஏற்பாடுகள் மறு பரிசீலனைக்குள்ளாகி வருவதை நாம் மறந்து விடக் கூடாது. நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே குடியுரிமை பற்றிய நமது முகவுரை அல்லது பொதுவான உரிமை மிக விரிவாக இருக்க வேண்டும். அதனை படிப்பவர்கள் நாம் ஒரு அறிவார்ந்த நவீன பண்பாட்டின் பார்வையில் தான் இதனை எடுத்துள்ளோம் என்பதைத் தவிர வேறு எந்த பார்வையையும் வைக்கக் கூடாது.” என வலியுறுத்தி உள்ளார்.

பாஜக தலைவர்களும், இந்துத்துவாவாதிகளும் தங்களை பட்டேலுடன் பொருத்திக் கொள்ளும் போது, பட்டேல் அரசியல் நிர்ணய சபையில் பல முறை தொடர்ந்து வலிமையாக வலியுறுத்தி வந்த இந்த மதசார்பற்ற பார்வையையும், வெளிப்பாட்டையும் பற்றி முழுமையான அமைதி காப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.1949, மே மாதம், பட்டேல் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த ஏற்பாட்டை அரசியல் நிர்ணய சபையில் கொண்டு வந்த போது “அவர்கள் உண்மையில் மதசார்பற்ற மக்களாட்சி முறைக்கு அடித்தளம் இடுகிறார்கள்.” என்று கூறினார்.

மீண்டும் 1949, ஜுன் 5 ல், “….ஒரு வளமான மதசார்பற்ற கண்ணோட்டமே உண்மையான மக்களாட்சியின் அடிக்கல்.” என்று பட்டேல் தெரிவித்துள்ளார்.

அவர் அரசியல் நிர்ணய சபையில் மத சார்பினமை கருத்திற்கு பாதுகாப்பாக கடவுளைக் கூட அழைத்துள்ளார். “…… இன்று நாம் எல்லாம் வல்ல கடவுளின் அருளாலும், கருணையாலும் உண்மையான, மதசார்பற்ற மக்களாட்சி அரசுக்கு அடித்தளம் இட்டுள்ளோம். இதில் அனைவருக்கும் சமமான வாய்ப்பும், தக்க காலமும் தரப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு கொடுத்துள்ளவாறு அனைவருக்கும் சரியானவற்றை செய்ய கடவுள் நமக்கு அறிவையும், ஊக்கத்தையும் தரட்டும்.” என கூறியுள்ளார்.

பட்டேலின் பிறந்த நாளை ‘தேசிய ஒற்றுமை நாளாகக்’ கொண்டாடும் இந்த வேளையில், பிரிவினைவாத, மத அடிப்படையிலான அணுகுமுறையை புறந்தள்ளிவிட்டு, அறிவார்ந்த, குடியுரிமைப்பற்றிய பரந்துபட்ட சிந்தனையை உயர்த்திப் பிடிக்கும் மத சார்பற்ற இந்தியா என்ற பட்டேலின் பார்வையையும் முன்னெடுப்போம்.

(www.thewire.in இணையதளத்தில் எஸ்.என்.சாஹூ எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்