Aran Sei

மேட்டூர் அணை உருவான வரலாறும் மக்களின் தியாகமும் – சூர்யா சேவியர்

வெள்ளையர்கள் இங்கு அணைகள் கட்டியதற்கு முக்கியமான அரசியல் காரணம் இருந்தது. உலகை பங்கிட்டுக் கொள்ளுவதற்காக ஏகாதிபத்திய நாடுகளிடையே ஏற்பட்ட மோதல்களே இரண்டு உலக யுத்தங்கள். இந்த யுத்தங்களை உருவாக்குவதில் மையப்புள்ளியாக அன்று இருந்தது இங்கிலாந்து.

இந்திய மக்களுக்கும் உலக யுத்தத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் இந்திய மக்கள்மீது யுத்தம் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது. மாட்டுக்கு புல் போடுவது மாடுகளின் மீதான கருணையா? நிறைய பால் கறக்க வேண்டும் என்ற தேவையா? இந்த முறையில் உருவானது தான் இந்திய அணைகள்.

‘சொந்த கட்சியின் பணத்தையே திருடிய கேரள பாஜக; அவிழும் உண்மைகள் – ராஜீவ் ராமச்சந்திரன்

யுத்தங்களினால் ஏற்படும் இழப்பைச் சரி செய்யவும், புதிய வருமானங்களை உருவாக்கி மேலும் யுத்தம் நடத்தி பல நாடுகளைப் பிடிக்க வேண்டும் என்ற தேவையும் இங்கிலாந்திற்கு இருந்தது.

காவிரியைத் தடுத்து அணை கட்ட வேண்டும் என்ற திட்டத்தை முதலில் 1828 ல் ஆராய்ந்தவர் பொறியாளர் ஆர்தர் காட்டன். 1856 ல் மேஜர் லாபோர்டு என்பவர் ஒரு திட்டத்தை உருவாக்கினார். இருந்தாலும் ஆர்தர் காட்டன் உருவாக்கிய திட்டத்துக்கு 1910 ல் அரசு ஒப்புதல் வழங்கி 3 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் 1925 ல் அடிக்கல் நாட்டப்பட்டதே மேட்டூர் அணைத் திட்டம்.

‘காங்கிரஸுக்கு உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை தேவை; கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்’ – வீரப்ப மொய்லி

அணை கட்டிவிடலாம், நீர் எப்படி பெறுவது?

அதற்கான ஒப்பந்தம் உருவானது.கிருஷ்ணராஜ சாகர் எனும் கன்னம்பாடி அணையின் அன்றைய உயரம் 80 அடி.11 ஆயிரம் மில்லியன் கன அடி கொள்ளவு.
அதை 124 அடியாகவும், 41 ஆயிரத்து 500 கன அடி கொள்ளவாகவும் மாற்ற மைசூர் அரசு பிரிட்டிஷ் அரசிடம் விண்ணப்பம் போட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்டு 3 லட்சத்து 1000 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் மேட்டூர் அணை கட்ட மைசூர்-, சென்னை மாகாணங்கள் ஒப்பந்தம் போட்டன.

அணை கட்ட நிலம் கையகப்படுத்தும் பணி அடுத்து தொடங்கியது. ஆண்டாண்டு காலமாக பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மக்கள், பொதுத் தேவையெனக் கருதி, இடத்தை விட்டு அநாதைகளாக வெளியேறினார்கள்.

கிரிக்கெட்டில் நிறவெறிக்கு எதிரான இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும் – மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் ஜேசன் ஹோல்டர்

கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் அளவு 18 லட்சத்து 43 ஆயிரத்து 584 ஏக்கர். காலி செய்த வீடுகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 146. 21 கிராமங்கள் முற்றிலுமாக காலி செய்யப்பட்டது. இழப்பீட்டு தொகை 29 லட்சத்து 66 ஆயிரத்து 284 ரூபாய். கையகப்படுத்தப்பட்ட நிலத்தோடு இழப்பீட்டு தொகையை ஒப்பிட்டுப் பாருங்கள்.ஒரு ஏக்கருக்கு ஒரு ரூபாய் 50 காசு தான். எத்தகைய பெரிய தியாகம் இது.

வளர்ச்சி என்ற வல்லூறுகளின் குரலுக்கு பின்னால் வாழ்விழந்து நின்றது ஏழை மக்களே. 1895 ல் கட்டப்பட்ட முல்லை பெரியாரும்,1910 ல் கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகரும், ஆயிரக்கணக்கான உழைப்பாளர்களும் உருவாக்கி கொடுத்த அனுபவத்தின் புதுமை தான் மேட்டூர் அணையின் பிறப்பு. 1800 குடிசைகள் அமைத்து, 11 ஆயிரத்து 800 பேர் உழைத்து, ஆண்களுக்கு 7 அணாவும், பெண்களுக்கு 4 அணாவும் கூலியாகக் கொடுத்து உருவாக்கப்பட்டது.

பொங்கி வரும் வெள்ளத்தில் அணை கட்டுவது அவ்வளவு எளிதானதல்ல. 1930 ல் அமராவதியில் பெருக்கெடுத்த வெள்ளம் அணையின் ஒரு பகுதியை அடித்துச் சென்றது. எத்தனை பேர் இறந்தார்கள் என்ற விபரம் இதுவரை இல்லை. ஆனால், இறந்த எண்ணிக்கை மறைக்கப்பட்டதை ஒரு செய்தி உறுதிப்படுத்துகிறது.அணை கட்டிய காலத்தில் 23 ஆயிரத்து 804 பேர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றதாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உபா சட்டத்தில் சிறுவன் கைது – தன் இயலாமையால் குழந்தைகளிடம் ’வீரத்தைக்’ காட்டுகிறதா அரசு?

கட்டுமானப் பணியின்போது அங்கு மலேரியா பரவியது. மொத்த தொழிலாளர்களில் 25% பேர் பாதிக்கப்பட்டார்கள். இவ்வளவு வலி வேதனைகளைத் தாங்கி 1934 ஆகஸ்ட் 21 ம் தேதி அன்றைய சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லி என்பவரால் அணை திறக்கப்பட்டது.

ஒன்பது ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணைக்கு ஒதுக்கிய நிதி 7 கோடியே 37 லட்சம். செலவான தொகை 6 கோடியே 67 லட்சம்.ஒதுக்கீட்டில் மிச்சம் 70 லட்சம்.
இன்று இப்படியொரு கணக்கைக் கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?

அணை வந்தது. நீர் வந்தது. அடுத்தடுத்து அனைத்தும் வந்தது. அணை கட்ட ஒதுக்கிய நிலத்தில் 229 ஏக்கர் நிலத்தை 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து பிரிட்டன் மான்செஸ்டரை மையமாகக் கொண்டு உலகப் புகழ் பெற்ற பியர்ட்செல் கம்பெனி 1937 ல் துணி ஆலையை தொடங்கியது.

மோடியின் ஏழு(ஏழரை) ஆண்டுகள்: இந்தியா ஏன் ஒரு ஜோ பைடனைத் தேட வேண்டும்?

நாளொன்றுக்கு 5 டன் காஸ்டிக் உப்பு தயாரித்த மேட்டூர் கெமிக்கல்ஸ் 1941 ல் தனது உற்பத்தியைத் தொடங்கியது. 1950 ல் மெட்ராஸ் அலுமினியம் கம்பெனி தொடங்கப்பட்டது. இவை அனைத்தும் வருவதற்கான மின் தேவைக்காகத்தான் 1937 ல் 47 லட்சத்து 60 ஆயிரத்து 100 ரூபாய் செலவில் மேட்டூர் நீர் மின் நிலையம் தொடங்கப்பட்டது.

இந்தப்பகுதி மக்களுக்கு ஜூன் 12 என்பது தங்களது குடும்ப விழாக்களை விட முக்கியமானது. ஜூன் 12 தான் மேட்டூர் அணை திறக்கப்படும் தேதி. ஏனெனில் ஆனி தொடங்கினால் அணை திறப்பார்கள் என்பதே அந்த மக்களின் எதிர்பார்ப்பு. அதுதான் ஜூன் 12. இப்போதெல்லாம் ஜூன் 12 அரசியல் காரணங்களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுக அரசு அந்த கொண்டாட்டத்தை மீண்டும் தொடங்கி வைக்கிறது.

பாஜக அரசால் வீழ்த்தப்பட்ட செங்கல்பட்டு மருந்து உற்பத்தி நிறுவனத்தின் வரலாறு – சூர்யா சேவியர்

ஆயிரக்கணக்கான மக்களின் தியாகத்தால், உழைப்பால் உருவானதே மேட்டூர் அணையும், அதையொட்டிய அடுத்தடுத்த வளர்ச்சியும். ஆறுகளின் இயல்பு பள்ளத்தை நோக்கி பாய்வது தான். பள்ளங்களில் வாழ்ந்த மனிதர்கள் எங்கே செல்வார்கள்?பள்ளங்களிலிருந்து மேடான இடம் நோக்கிச் செல்வார்கள்.

மேடான உயர்ந்த வாழ்க்கையை ஆறுகள் மட்டுமே மனிதனுக்கு வழங்க முடியும். மனிதர்களை உயர்த்த பள்ளத்தில் பாய்ந்த ஆறுகளை, மேடான இடத்தில் மட்டுமே பாயச் செய்ய மேட்டிமைக் குடிகள் நினைக்கிறது. அது ஆதிக்கத்தின் இயல்பு.

ஆனால், ஆறுகள் மேடுகளில் மட்டுமே இருப்பதை விரும்புவதில்லை. மேட்டையும், பள்ளத்தையும் சமப்படுத்தும் அரசியல், சமூக, பொருளாதாரப் பணிகளை மனிதர்களை விட ஆறுகளே செய்து முடிக்கும். அந்தப் பெரு வெள்ள ஆற்றல் அதற்கு மட்டுமே உண்டு.

லட்சத்தீவை ஆட்டிப் படைக்கும் இந்த பிரஃபுல் படேல் யார்? – பேராசிரியர் அ.மார்க்ஸ்

மேட்டை நோக்கியே பாய வைக்க முயலாதீர்கள். அங்கு நிரந்தரமான பெரிய பள்ளத்தை ஆறுகள் உருவாக்கும். ஆறுகளின் பயணத்திற்கு வழிவிட்டு மேடான பகுதிக்கு மக்கள் நகர்ந்து வாழத் தொடங்கிய ஊர் என்பதால் அதற்கு மேட்டூர் எனப் பெயர்.

அணையில் நீர் வற்றினால் மூழ்கிப் போன கோவில்களும், தேவாலயமும் தெரியும். அணை நிறைந்தால் அது மூழ்கிப்போகும். அணை எப்போதும் நிறைந்தே இருக்கட்டும். நிறைவான வாழ்க்கை நிறைந்திருப்பதில் தான் இருக்கிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்