திருவனந்தபுரம் நகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், மலையின்கீழ் பொட்டன்காவு அருகே, பேருந்து நிறுத்தத்தில் ஒரு சிறிய தேநீர் கடை உள்ளது, இது 19 ஆண்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஆண்கள் வெவ்வேறு பணி நேரங்களில் (ஷிப்டுகளில்) வேலை செய்கிறார்கள். மேலும் ஒரு சரக்கு வாகனத்தையும், இரண்டு மக்கள் மருந்தகங்களையும் வைத்திருக்கிறார்கள். பொட்டங்காவு தேவி ஆண்கள் சங்கம் என்ற இந்த வணிகக் குழு அக்ஷயஸ்ரீயின் கீழ் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கமாகும். பொட்டங்காவு தேவி ஆண்கள் சங்கத்தின் செயலாளர் கே.எஸ். ராஜேஷ் கூறும்போது, “நாங்கள் சங்கத்தை உருவாக்கி, ஆண்கள் சுயஉதவி குழுவாக செயல்படத் துவங்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது. லாபத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம், அதில் ஒரு சதவீதத்தை எங்கள் அலகின் (யூனிட்) செயல்பாடுகளுக்காக வைத்திருக்கிறோம். எங்கள் உறுப்பினர்களுக்கு தேவைப்படும்போது நாங்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறோம், மேலும் தொடர்ந்து தொண்டுக்கு செலவிடுகிறோம். குடும்பங்களுக்கு இறுதிச் சடங்குகளுக்கு உதவும் ‘எரியூட்டுதல்’(Agnithahanam) என்ற சேவையும் செய்யப்படுகிறது. இதற்காக உடலை எரியூட்ட சங்கத்தின் சார்பில் 5,000 ரூபாய் தரப்பட்டு இறந்தவர்களின் செலவில் இறுதி சடங்குகளைச் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.
“நாங்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ்காரர்கள்” என்கிறார் ராஜேஷ். இந்த சமூகம் அக்ஷயஸ்ரீ பரஸ்பர உதவியுடனான நிலையான வளர்ச்சி இயக்கத்தின் ஒரு பகுதியாகும் – இது நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் சகாகர் பாரதியால் (Sahakar Bharathi) நிறுவப்பட்ட ஒரு அரசு சாரா தன்னார்வலர் அமைப்பு ஆகும். சகாகர் பாரதி, ஆர்எஸ்எஸ்காரர்களால் தொடங்கப்பட்டது. அக்ஷயஸ்ரீ தன்னை ஆர்எஸ்எஸ், அமைப்பாக வெளிப்படையாகக் குறிப்பிடாவிட்டாலும், கேரளாவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழ் கட்டப்பட்ட சுய உதவிக் குழுக்களும், கூட்டுறவு நிறுவனங்களும், பிற நிறுவனங்களும் அதன் அரசியல் பிரிவான பாஜகவுக்கு அல்லது அதன் இந்துத்துவா அரசியலுக்கு அரசியல் அடித்தளத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்படும், சொற்பொழிவின் ஒரு பகுதியாக பிரார்த்தனைக் குழுக்களைப் பயன்படுத்தி பஜனைகளைப் பாடி, அரசியல் விவாதங்கள் நடத்தப்படும். குறுங்கடன் மற்றும் வாழ்வாதாரம் தேவைப்படுபவர்களுக்கு இந்தக் குழுக்கள் உதவுகின்றன.
வலதுசாரிகள் தலித்துகள் மேல் காட்டும் கரிசனம் உண்மையானதா? – வரலாறு சொல்வது என்ன?
சுய உதவிக் குழுக்களையும், கூட்டுறவு இயக்கத்தையும் பயன்படுத்தி அரசியல் தலையீடு செய்வது கேரளாவில் புதிதல்ல. உண்மையில், விவசாயிகள் எழுச்சியின் போது எழுந்த கூட்டுறவு சங்கங்களின் பின்னணியில் மாநிலத்தில் இடதுசாரி கட்சிகள் முக்கியத்துவம் பெற்றன. எவ்வாறாயினும், சகாகர் பாரதி போன்ற துணை நிறுவனங்கள் மூலம் ஒன்றிய அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி, அத்தியாவசியமாக அதிகார பரவல் கொள்கையின் அடிப்பயில் கட்டப்பட்டுள்ள மாநிலத்தின் கூட்டுறவு இயக்கத்திலிருந்து அரசியல் ஆதாயம் பெறுவது ஆர்.எஸ்.எஸ். இன் திட்டமாகும்.. உண்மையில், மாநில உரிமைகளில் ஊடுருவ உருவாக்கப்பட்ட அமித் ஷாவின் புதிய கூட்டுறவு அமைச்சகத்திற்கான வெள்ளோட்டம் முதலில் சகாகர் பாரதி மூலம் நடத்தப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ்-பாஜக மாதிரி எப்படி வேலை செய்கிறது? கூட்டுறவு கலாச்சாரம் கொண்ட கேரளாவில் அதன் தற்போதைய ஆதாயங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் என்ன? போன்ற இந்தத் திட்டத்தின் அரசியல் உள்நோக்கங்களைக் கண்டறிய தி நியூஸ் மினிட் (TNM) ஆழமாக மூழ்கியது. அது இந்த திட்டத்தில் நான்கு பகுதிகள் இருப்பதைக் கண்டது. அக்ஷயஸ்ரீ என்ஜிஓவின் கீழ் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவுகள்; சகாகர் பாரதியின் விவசாய கூட்டுறவு திட்டமான பாம்கோவின் உதவியுடன் கிராமின் சம்ருதி கடைகள்; ‘இந்து வங்கிகள்’; மற்றும் பெண்கள் அமைப்புகள் அமைக்கப்படுகின்றன.
பாஜக நிர்வாகியாக இருந்தும் இஸ்லாமியர் என்பதால் கைவிடப்பட்டேன் – சிறைபட்ட பாஜக உறுப்பினரின் கதை
கேரளாவில் சகாகர் பாரதியின் செயல் திட்டம்
கூட்டுறவு சங்கங்கள், அல்லது வெறுமனே கூட்டுறவு, தனிநபர்கள் பொதுவான பொருளாதார இலக்குகளுக்காக ஒன்று கூடும் குழுக்கள். எனவே சுய உதவிக் குழு என்பது ஒரு கூட்டுறவு ஆகும், அங்கு உறுப்பினர்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்கும் ஒரு சிறிய நிறுவனத்தை உருவாக்க விரும்பலாம். ஒரு கூட்டுறவு சங்கத்தின் மற்றொரு எடுத்துக்காட்டு அமுல், இது குஜராத் முழுவதும் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களின் ஒன்றுபட்ட அமைப்பாகும். கூட்டுறவு உறுப்பினர்கள் இலாபங்கள் மற்றும் செலவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், மேலும் ஒருவருக்கொருவர் பொறுப்புள்ளவர்கள். ஆர்எஸ்எஸ்-பிஜேபியின் சுய உதவிக்குழு-கூட்டுறவு அரசியல் திட்டத்தின் கட்டமைப்பு, லக்ஷ்மண்ராவ் இனாம்தார் மற்றும் மாதவ்ராவ் காட்போல் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் ஆர்வலர்களால் 1978 இல் தொடங்கப்பட்ட சகாகர் பாரதியிலிருந்து உருவானது.
கொச்சியில் உள்ள ஒரு சிந்தனைக் குழுவான பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டி.தனுராஜ் கூறுகையில், “சஹகர் பாரதியின் மூலம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் கூட்டுறவு முன்னெடுப்புகளை ஆர்எஸ்எஸ் வலுவாகக் கொண்டுள்ளது. இந்த மாநிலங்களில், கூட்டுறவு இயக்கத்தை பயன்படுத்தி அரசியல் அதிகாரம் பெற்றதில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ கட்சிகள் சாதனை படைத்துள்ளன என்று அவர் விளக்குகிறார். “உண்மையில், அமித் ஷா கூட்டுறவு இயக்கத்தில் இருந்து வெளியே வந்த தலைவர். மகாராஷ்டிராவில் உள்ள சரத் பவார் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக நுழைந்தவர் – அவர் இன்னும் சர்க்கரை கூட்டுறவு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார், ”என்று தனுராஜ் கூறினார்.
இந்திய வரலாற்றை சிதைக்க முயற்சிக்கும் இந்துத்துவா – ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப் கண்டனம்
கேரளாவின் சகாகர் பாரதியின் தலைவர் பி.சுதாகரன் கூறுகையில், இந்த அமைப்பு 2001 முதல் மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. “அக்ஷயஸ்ரீ பிரிவுகள் 2015 இல் தொடங்கப்பட்டன, ஆனால் அவை 2018 இல் வேகத்தை அதிகரிக்கத் தொடங்கின,” என்று அவர் கூறுகிறார். திருவனந்தபுரத்தில் அனந்தபுரம் கூட்டுறவு சங்கம் எங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்திடம் கிட்டத்தட்ட ரூ.650 கோடி வைப்பு நிதி உள்ளது, இது தலைநகரில் உள்ள அதிக வைப்பு நிதி கூட்டுறவு சங்கங்களில் ஒன்றாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.
கேரளாவில் பாஜகவின் வாக்காளர் தளத்தை மேம்படுத்துவது என்ற பொதுவான இலக்கை நோக்கி இந்த அமைப்பு பல முனைகளில் செயல்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.அக்ஷயஸ்ரீயின் எழுச்சி முதலாவதாக, சகாகர் பாரதி தனது தன்னார்வ தொண்டு நிறுவனமான அக்ஷயஸ்ரீயைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் ஆண்களின் சுய உதவிக் குழுக்களை உருவாக்குகிறது. தனிப்பட்ட குழுக்கள் தாலுகா, மாவட்டம் மற்றும் மாநில அளவில் தொகுப்புகளை உருவாக்கி, கூட்டுறவு சங்கங்களை உருவாக்க ஒன்று கூடுகின்றன. இன்று அக்ஷயஸ்ரீ 7,300 சுய உதவிக் குழுக்களைக் கொண்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் 10 முதல் 20 உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றன, மேலும் மாநிலத்தில் 1,40,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில், கரிக்ககோம் அருகே உள்ள ஒரு வீட்டில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் சுமார் 20 பெண்கள் கூடுவார்கள். மசாலா பொடிகள், மாவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளை உள்ளூரில் விற்கும் குழுவின் உறுப்பினரான மஞ்சு கூறுகையில், “பெண்களின் அதிகாரமளிப்புக்காக நாங்கள் இங்கு கூடியுள்ளோம். “இந்தப் பொருட்களை விற்பதன் மூலம் நாங்களே எங்கள் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாங்கள் ஒரு சுய உதவிக் குழு,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த சுயஉதவி குழுக்கள் வீட்டில் பொருட்களை உற்பத்தி செய்கின்றன, சிறிய தேநீர் கடை மற்றும் சமையலறைகளை நடத்துகின்றன, தையல் அலகுகள், சிறிய அளவிலான பண்ணைகள், மக்கள் மருந்தகங்கள், வாகன வாடகைக்கு விடுவது, சிறிய அளவிலான உற்பத்தி அலகுகள், ஒப்பந்த வேலைகள், திறமையான தொழிலாளர்களை உருவாக்குவது ஆகியவற்றை செய்கிறது, மற்றும் பொதுவாக பல வகையான சிறுதொழில் முதலீட்டிலும் ஈடுபட்டுள்ள இந்த குழுக்கள் பஜனைக் கூட்டங்கள் மற்றும் அரசியல் சொற்பொழிவுகளிலும் பங்கேற்கின்றன.
குறைந்தது 10 லிருந்து 20 வரையிலான உறுப்பினர்களைக் கொண்ட அக்ஷயஸ்ரீ அலகுகள் உருவாக்கப்படுகின்றன. இந்தக் குழுக்களின் கூட்டங்கள் பொதுவாக உறுப்பினர்களின் வீடுகளில் நடக்கும், மேலும் இந்த கூட்டங்களில், உறுப்பினர்கள் வணிகம் மட்டுமல்ல, அரசியலையும் விவாதிக்கின்றனர். கரிக்ககோம் அக்ஷயஸ்ரீ பிரிவின் செயலாளரான மஞ்சுளா கூறுகையில், “எங்கள் குழுவை உருவாக்கிய பிறகு, நாங்கள் தேர்தலில் தீவிரமாக இருந்தோம். “2015 முதல், எங்கள் வார்டு உறுப்பினர் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக இருந்து வருகிறார். அதுவரை இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று வந்தது.
திருச்சூரை சேர்ந்த அக்ஷயஸ்ரீ உறுப்பினரான சோபா கூறுகையில், “நான் எந்த கூட்டுறவு நிறுவனத்திலும் அங்கம் வகிக்கவில்லை. “ஆனால் அக்ஷயஸ்ரீ உருவாக்கப்பட்ட பிறகு, நான் அங்கு செல்ல முடிவு செய்தேன்,” என்று அவர் மேலும் கூறுகிறார். அக்ஷயஸ்ரீயை ஆதரிக்கும் முடிவை விளக்கிய அவர், “சபரிமலையில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். இளைய தலைமுறையினருக்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அறிவோம் – அவர்கள் நம் கலாச்சாரத்தை இழக்கிறார்கள். பல காரணங்களுக்காக, நாம் அணிதிரட்டப்பட வேண்டும்.பெண்களுக்கு அதிகாரம் அளிக்க, அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவை. புனித புத்தகங்களைப் பற்றி விவாதிக்கவும், பஜனைப் பாடவும், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றி பேசவும் நாங்கள் ஒன்று கூடுகிறோம்,” என்று அவர் விளக்குகிறார். கூட்டுறவு இயக்கம் அவர்களின் அரசியலை வளப்படுத்த உதவியது.அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, கேரள அரசின் இயக்கமான சுய உதவி குழுக்களான குடும்பஸ்ரீக்கு போட்டியாக அக்ஷயஸ்ரீயை வைக்க சகாகர் பாரதி விரும்புகிறது. குடும்பஸ்ரீயில் மாநிலத்தில் 45 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
சம்ருதி கடைகள்: ஒரு பல்பொருள் அங்காடி உரிமை
சகாகர் பாரதியின் இரண்டாவது முன்னணி, சகாகர் பாரதியின் திட்டமான பாரத் அக்ரோ ப்ராசசிங் அண்ட் மார்கெட்டிங் கூட்டுறவு லிமிடெட் (பாம்கோ) உதவியுடன், கிராமின் சம்ருதி ஸ்டோர் என்ற பெயரில் கேரளா முழுவதும் பல்பொருள் அங்காடிகளை அமைக்கிறது. இந்தக் கடைகளின் உரிமை மாறுபடும்; ஆரம்பத்தில், சம்ருதி அங்காடிகள் அக்ஷயஸ்ரீயின் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டன, மேலும் பொதுவாக, சுய உதவிக்குழுக்களின் குழு ஒன்று சேர்ந்து ஒரு சம்ருதி அங்காடியைத் தொடங்கும். ஆகஸ்ட் 2020க்குள், மாநிலத்தில் இதுபோன்ற 24 கடைகள் இருந்தன.
இருப்பினும், கேரளாவில் சிஏஏ எதிர்ப்பு, என்ஆர்சி எதிர்ப்பு போராட்டங்களுக்கு எதிர்வினையாக, ஆர்எஸ்எஸ் – மற்றும் சககர் பாரதி – சம்ருதி பெயரில் அதிக வலுவை சேர்க்க முடிவு செய்தனர். சிஏஏ வுக்கு ஆதரவாக பாஜக கூட்டங்களை நடத்த விரும்பும் இடங்களில் கேரளாவில் வணிகர்கள் தங்கள் கடைகளை மூடிய போது, ஆர்எஸ்எஸ் அதிக பல்பொருள் அங்காடிகளைத் தொடங்க முடிவு செய்தது, இந்த முறை ஆர்எஸ்எஸ் ஆதரவு வணிகர்களின் உதவியுடன் அவர்களின் கிளைகளாக செயல்பட்டன. இன்று, மாநிலத்தில் 36 கிராமின் சம்ருதி கடைகள் உள்ளன, மேலும் இதைப் பற்றிய விரிவான கட்டுரையை வெளியிட்ட தி சிக்னல் படி, ஐந்து ஆண்டுகளில் கேரளாவில் இதுபோன்ற 1,500 பல்பொருள் அங்காடிகளை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் ஸின் குறிக்கோள். ஆதாரங்களின்படி, சம்ருதி கடையின் அங்கீகரிக்கப்பட்ட கிளையை விரும்பும் எவரும் அதற்கு விண்ணப்பிக்கலாம்.எர்ணாகுளத்தின் திரிபுனித்துராவில் உள்ள பேட்டா மெட்ரோ நிலையத்திற்கு அருகில் ஒரு சம்ருதி ஸ்டோர் அமைந்துள்ள இடம் இப்பகுதியில் ஒரு முக்கிய மிகவும் பரபரப்பான இடமாகும். கடையில் மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்ற தேவையான பொருட்கள், அனைத்தும் உள்ளன. இது எந்த அரசியல் அமைப்புப் பற்றிய குறிப்பும் இல்லாமல், மற்ற எல்லாப் பொருள் அங்காடிகளையும் போலவே உள்ளது.இது குறித்து மருது அக்ஷயஸ்ரீ மிஷன்களின் மண்டல கூட்டமைப்பு செயலாளர் உன்னிகிருஷ்ணன் கூறும்போது, “திரிப்புனித்துராவில் உள்ள கடை சமூக பங்கேற்புடன் இயங்குகிறது. முதலில், நாங்கள் 10-12 சுய உதவிக்குழுக்களை உருவாக்குகிறோம், அவர்களால் பணம் திரட்ட முடியும். அத்தகைய ஐந்து குழுக்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்குகின்றன. ஒவ்வொரு கூட்டமைப்பின் கீழும் ஒரு தனி அங்காடி இருக்கும். ரூ.25 லட்சம், ரூ.50 லட்சம் அல்லது ரூ.1 கோடி என திரட்டப்படும். நிதியின் அளவைப் பொறுத்து, கடைகள் ஏ, பி மற்றும் சி என வகைப்படுத்தப்படும்.
திரிப்புனித்துராவில் உள்ள இந்த பல்பொருள் அங்காடி C என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடையானது மாராடுவில் உள்ள அக்ஷயஸ்ரீ மிஷனின் பிராந்திய கூட்டமைப்பின் கீழ் வருகிறது. தானியங்கள், மாவுகள் போன்ற பல பொருட்கள் அரசின் குடும்பஸ்ரீயைப் போலவே சுயஉதவி குழுக்களால் வழங்கப்படுகின்றன. “சுய உதவிக்குழுக்கள் செழிப்பான நிலையில் உள்ளன, நாங்கள் வெளியில் இருந்து பொருட்களையும் வாங்குகிறோம்,” என்று உன்னிகிருஷ்ணன் கூறுகிறார்.
“குழு உறுப்பினர்கள் வருவாயிலிருந்து பெயரளவு லாபத்தை மட்டுமே வருடாந்திர ஈவுத்தொகையாக எடுத்துக்கொள்கிறார்கள். மீதி லாபத்தை, சேவா பாரதி என்ற அலகுகள் மூலம் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகிறோம். சேவா பாரதி மூலம், உதவி தேவைப்படும் குடும்பங்களைக் கண்டறிந்து, கல்வி, சுகாதாரம் மற்றும் நிதித் தேவைகள் போன்ற பல்வேறு தேவைகளில் அவர்களுக்கு உதவுகிறோம். பல்வேறு வழிகளில் பணம் திரட்டுகிறோம்; உதாரணமாக, எங்கள் உறுப்பினர்களை அவர்களது வீடுகளில் இருந்து பழைய செய்தித்தாள்களை கொண்டு வரும்படி கேட்போம். நாங்கள் அவற்றை பழைய பொருட்கள் வாங்குபவர்களிடம் விற்று, ஒருவருக்கு உதவப் பயன்படும் சிறிய தொகையைத் திரட்டுவோம், ” என்று அவர் விளக்குகிறார்.
‘இந்து வங்கிகள்’ திட்டம் – மூன்றாவது செயல் திட்டத்தின்படி, நிதி)(Nithi) நிறுவனங்களை அல்லது பரஸ்பர நலன் சங்கங்களை பயன்படுத்தி, ‘இந்து வங்கிகள்’ என்ற பெயரில் வாக்காளர்களைக் கவருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்த நிதி நிறுவனங்கள், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் சிறிய சங்கங்கள், அவை கடன் கொடுக்கலாம், கடன் வாங்கலாம். ஆனால் அதன் உறுப்பினர்களிடமிருந்து மட்டுமே அதைச் செய்ய முடியும். இந்த நிறுவனங்கள் வைப்புகளை ஏற்க முடியாது. அவை வங்கி சாரா நிதி நிறுவனங்கள். நிதி நிறுவனத்தைத் தொடங்குவது மிகவும் எளிமையானது, அதற்கு குறைந்தபட்சம் ஏழு உறுப்பினர்கள் மட்டுமே தேவை.
ரிசர்வ் வங்கியின் பதிவு தேவையில்லை, மேலும் ரூ. 5 லட்சம் தொடக்க மூலதனம் தேவை. முத்தூட், மணப்புரம் போன்ற பெரிய நிதி நிறுவனங்களும் நிதி நிறுவனங்களே. பாஜக விவசாயிகள் அமைப்பின் துணைத் தலைவர் வெங்கனூர் கோபகுமார் 2020ல் தனது சமூக ஊடகக் கணக்குகளில் வெளியிட்ட கட்டுரைக்குப் பிறகு கேரளாவில் ‘இந்து வங்கிகள்’ பற்றிய விவாதம் தொடங்கியது. சமூகத்தில். ‘இந்து வங்கி’ என்பது தான் முன்வைத்த ஒரு கருத்து என்று தி நியூஸ் மினிட்டிடம் கூறுகிறார். மேலும் இந்த நிதி நிறுவனங்கள் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களை பாகுபாட்டுடன் நடத்தும் என்று அவர் ஒருபோதும் நினைக்கவில்லை என்று கூறுகிறார். எனினும், கடந்த சில மாதங்களில், சங்கத்துடன் இணைந்தவர்களால் நிதி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன என்று அவர் கூறுகிறார். தி நியூஸ் மினிட்டிடம் பேசிய பல பார்வையாளர்களும், வரும் மாதங்களில் இந்த நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்களுக்கும், ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகளால் இயக்கப்படும் பிற கூட்டுறவு சங்கங்களுக்கும் நிதியளிப்பதற்கான ஒரு மைய புள்ளியாக மாறும் என்கின்றனர்.கேரள முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக், டிஎன்எம்-க்கு அளித்த பேட்டியில், இந்த நிதி நிறுவனங்களை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகியவை மாநிலத்தில் கடன் வழங்குவதை வகுப்புவாதமாக்க பயன்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டினார். “நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நிதிகளை அமைப்பதன் மூலம், பல நிலை கூட்டுறவுகளை அமைத்து கேரளாவில் கால் பதிக்க பாஜக முயற்சிக்கிறது. அதை ‘இந்து வங்கிகள்’ என்பார்கள். இதையும் வகுப்புவாதமாக்க விரும்புகிறார்கள்,” என்றார்.
வகுப்புவாதத்தை ஏற்படுத்த வரலாற்றைத் திரிக்கும் வலதுசாரிகள் – மதமாற்ற திருமணங்களும் சில விளக்கங்களும்
மகிளா செல்கள் மூலம் பெண்களை அடைவது சகாகர் பாரதியின் நான்காவது அம்சம் பெண்களை நேரடியாகச் சென்றடைவதாகும். சகாகர் பாரதி, பெண்களுக்காக, ஒவ்வொரு உள்ளூர் சுயாட்சி அமைப்பிலும் தலா ஒரு கூட்டுறவு சங்கத்தை நிறுவும் பணியில் உள்ளது. “உள்ளூர் மட்டத்தில் பெண்களின் மேம்பாட்டை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம், மேலும் அவர்களை தன்னிறைவு அடையச் செய்கிறோம். 1200 உள்ளாட்சிகளிலும் தலா ஒரு மகிளா செல்கள் உருவான பிறகு ஒரு புரட்சியை உறுப்பினர்கள் எதிர்பார்க்கின்றனர். “அடிமட்டத்தை வலுப்படுத்துவதே எங்கள் நோக்கம். உள்ளாட்சி அமைப்புகள் பலவற்றில் நாங்கள் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறோம். கூட்டுறவுச் சங்கங்களின் பரவலால் நாங்கள் இங்கு பெரும் ஆதாயத்தைப் பெறுவது உறுதி,” என்கிறார் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையும், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அக்ஷயஸ்ரீ உறுப்பினருமான சந்தியா.
நீண்டகால விளையாட்டை விளையாடுவது: கொச்சியில் உள்ள ஒரு சிந்தனைக் குழுவான பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டி.தனுராஜ் கூறும்போது, “பாஜகவுக்கு இங்கு நீண்ட காலத் திட்டம் உள்ளது. அவர்கள் பிரார்த்தனைக் குழுக்கள், பெண்கள் அதிகாரமளிக்கும் சங்கங்கள், சுய உதவிக் குழுக்கள் – கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் ஆகியவற்றின் மூலம் மக்களைத் திரட்டுகிறார்கள். அவர்கள் பல துறைகளிலும் நுழைகிறார்கள் – அவர்கள் பல பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பலவற்றைச் சொந்தமாக வைத்திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்-பாஜக குறுகிய கால ஆதாயங்களைத் தேடவில்லை என்று அவர் விளக்குகிறார். “அசாமில், 1980களில், பாஜக, தங்கள் பணியை துவங்கி, 2016ல் ஆட்சிக்கு வந்தது. திரிபுனித்துரா நகராட்சியில், பாஜக கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக அடிமட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இப்போது அவர்கள் எதிர்க்கட்சியில் உள்ளனர்.“கேரளாவில் சேவா பாரதியும், சகாகர் பாரதியும் மிகவும் வலுவாக உள்ளனர்,” என்று தனுராஜ் விளக்குகிறார், “அவர்கள் களத்தில் இறங்கும்போது, ஆரம்பத்தில் அவர்கள் ஆர்எஸ்எஸ் அல்லது பிஜேபி உடனான தொடர்பைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். கேரளாவில், மற்ற பல வட இந்திய மாநிலங்களைப் போலல்லாமல், இங்கே குறியீடுகள் அதிகமாக இருப்பதால், அவர்கள் காலூன்றுவதற்கு வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். ஏழைகளுக்கு உணவு கொடுப்பது இங்கு உதவாது. அந்த வகையில் கூட்டுறவு சங்கங்கள் உயர் மட்ட சிந்தனையின் ஒரு பகுதியாகும்,” என்று அவர் கூறுகிறார்.”கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் பணம் வாக்காளர்களை வெளிப்படையாக பாதிக்கும்,” என்று அவர் கூறுகிறார், “பாஜக ஏற்கனவே பல மாநிலங்களில் வலுவான கூட்டுறவு கட்டமைப்பைக் கொண்டுள்ளது. கூட்டுறவுக்காக தனி மத்திய அமைச்சகத்துடன், பல மத்திய அரசின் திட்டங்கள் கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். தற்போது மாநில அரசின் மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு பணம் செல்கிறது. ஆனால் இந்தச் சட்டத்தின் மூலம் மத்திய அரசு நேரடியாக இந்தச் சங்கங்களுக்கு நிதி வழங்க முடியும். இதில் மாநில அரசுகளின் பங்கு இருக்காது,” என்கிறார் அவர்.
www.thenews minute.com இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு
எழுதியவர் : ஹரிதா ஜான் , ஊடகவியலாளர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.