Aran Sei

ஆர்எஸ்எஸ்-ம் அம்பேத்கரும் – என்றுமே இருந்திராத தோழமை

ற்போது, அண்ணல் அம்பேத்கர் ஒவ்வொரு அரசியல் கட்சியும் சொந்தம் கொண்டாடும் உருவமாகிவிட்டார். அவரது மறைவிற்குப் பின் அவர் விட்டுச் சென்ற செழுமையான அரசியல் மரபையும் அறிவு சார் மரபையும் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்டுள்ளவர்களும் தங்களுக்கு ஆதாயமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். அவரது தனித்துவத்தையும், தனிப்பட்ட செல்வாக்கையும் கணக்கிட்டு அவரது பெயரை பயன்படுத்துவது ஒரு தேவையாகி விட்டது. ஆனால் இவ்வாறு வேறுபட்ட அரசியல் சித்தாந்தங்களுடன் அவரது கருத்துக்களுடனான உறவு பெரும்பாலும் மேலோட்டமான குறியீடாகவே சுருக்கப்பட்டுள்ளது.

இன்று அவரது மரபை தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளத் துடிப்பவர்களில் முன்னணியில் இருப்பவர்கள் ஆர்எஸ்எஸ்-ம், பாஜகவும் தான். 2014-ல் ஆட்சிக்கு வந்தததிலிருந்தே அம்பேத்கரை இந்துத்துவா கருத்தியலை ஆதரிப்பவராக காட்டுவதற்கு பல முயற்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்து வருகிறது. ஆர்எஸ்எஸ், பாஜக வின் அரசியல், கலாச்சார கொள்கைகளுடன் அம்பேத்கர் ஒத்திசைவாக இருந்ததைப் போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

அண்மையில் ‘தி பிரின்ட்’ இதழில் வெளியான ஒரு முக்கியமான ஆர்எஸ்எஸ் ஆதரவாளரின் கட்டுரை இதைத்தான் காட்டுகிறது. அதில் அவர் அம்பேத்கர் ஆர்எஸ்எஸ்-ன் ஆரம்ப கட்ட தலைவர்களான ஹெட்கேவார், கோல்வால்கர் போன்றோருடன் நெருங்கிய உறவு கொண்டிருந்ததாகக் காட்ட முயற்சித்துள்ளார். அதிலும் முக்கியமாக ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் “சித்தாந்த நெருக்கம்” கொண்டிருந்ததாக அவர் வாதிடுகிறார். இந்த உரிமை கோரல்கள் கல்வியாளர்கள் மத்தியிலும் பொது வெளியிலும் கடும் எதிர்ப்பை தோற்றுவித்துள்ளன.

Image Credit : thewire.in
ஹிந்து சமூக அமைப்பு பற்றி பிரபுத்த பாரத்-ன் விமர்சனம் – Image Credit : thewire.in

இவ்வாறு அம்பேத்கருக்கும் இந்துத்துவாவிற்கும் கற்பனை நெருக்கத்தை வருந்தி உருவாக்குவது புதிதல்ல. 1980-களிலிருந்தே அம்பேத்கரையும் அவரது கருத்துக்களையும் இந்துத்துவா சக்திகள் வலிந்து ஏற்றுக்கொள்ளும் போக்கு நடந்து வருகிறது. ஆர்எஸ்எஸ்-ம் அதனுடன் இணைந்துள்ள அமைப்புகளும் அம்பேத்கரிய சின்னங்களை இந்துத்துவா வழிபாட்டில் பொறித்துக் கொள்ளும் வேலையில் தங்கள் கவனத்தை குவித்து வருகின்றனர். ஆர்எஸ்எஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ்ச்சிகளிலும், வெளியிடும் விளக்கங்களிலும் அம்பேத்கரை தீவிரமாக தீண்டாமையை தீவிரமாக எதிர்த்த “இந்துமத சமூக சேவகர்” என்றும், முஸ்லீம்கள் தொடர்பாகவும் “இதே போன்ற கருத்துக்களைத்தான்” அவர் கொண்டிருந்தார் எனவும் திரித்துக் காட்டி வருகின்றனர்.

இதற்கு மேலாக, தற்போது சில ஆண்டுகளாக, ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் அம்பேத்கர் சித்தாந்த நட்பு பற்றிய கற்பனைக் கதைகள் உருவாகத் துவங்கி உள்ளன. அந்த புனை கதைகளில் அம்பேத்கர் ஆர்எஸ்எஸ் முகாமுக்கு சென்றிருந்ததாகவும், அங்கே தீண்டத்தகாதவர்களுக்குத் தரப்படும் சமத்துவம் அவரை ஈர்த்ததாகவும் கூறப்படுகிறது. அம்பேத்கர் அவ்வாறு முகாமை பார்வையிடச் சென்றதாகவும், ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் உறவு கொண்டிருந்ததாகவும் எந்த விதமான ஆவண ஆதாரங்களும் இல்லாமலே, கதை கட்டி வருகின்றனர்.

அதே வேளையில், அம்பேத்கர் தீவிரமாக இந்துமதத்தை கூர்மையாக விமரித்ததற்கான ஆவண ஆதாரங்களை ஆர்எஸ்எஸ் வசதியாக ஒதுக்கி விடுகிறது. அவரது இந்துமத விமர்சனம், அம்மதத்தை வெளிப்படையாகத் துறப்பதையும், அதைத் தொடர்ந்து புத்தமதத்திற்கு மாறியதையும் நோக்கி இட்டுச் சென்றது.

Image Credit : thewire.in
ஹிந்து மகாசபா பற்றிய அம்பேத்கரின் விமர்சனம் – Image Credit : thewire.in

இதே போல் அவரை ‘முஸ்லீம் எதிர்ப்பு’ தலித் தலைவராகக் காட்ட முயல்வதும் சூழ்நிலைக்கு நிலைமைகளுக்கு பொருந்ததாத ஒன்றாகும். இந்துமதத்தைப் போலவே இஸ்லாம் மதத்திலும் உள்ள சாதி, இனவாதம், பிற்போக்குத்தனம் ஆகிய அனைத்தையும் எதிர்த்தார். அவருடைய வாழ்நாள் முழுவதும் காங்கிரசையும் இந்திய கம்யூனிஸ்ட்டுகளையும் தீவிரமாக எதிர்த்தவராக இருந்தாலும் அதுவே அவரை இந்துத்துவாவின் ஆதரவாளராக்கி விடவில்லை.

அம்பேத்கரின் இயக்கத்தின் போர்வாளாகத் திகழ்ந்த ‘ஜனதா’ செய்தித்தாள் ஆர்எஸ்எஸ் பற்றிய அவரது எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. 1934, ஜனவரி 13-ல், நாக்பூரைச் சேர்ந்த தலித் இயக்க செயற்பாட்டாளர் பி. டி. ஷெலேர் எழுதிய கடிதம் ஒன்று ‘ஜனதா’ வில் வெளியானது. அந்தக் கடிதத்தில் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் உள்ளூர் கிளைகளில் (ஷாகாக்களில்) சாதிப்பிரிவினை எந்த அளவு தீவிரமாக, அதிலும் குறிப்பாக உணவருந்தும் போது கடைபிடிக்கப்படுகிறது என்பதையும், ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு இது தெரிந்த போதும் அதைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருந்தது. அதற்கு மேலும், அந்த கடிதம் தேசியம் போன்ற சொற்கள் இந்தியாவில் கிண்டலையும், இரட்டைத்தன்மையையும் பெற்று விட்டதை கேலியாக சுட்டிக் காட்டியது.

இந்த அரிய எடுத்துக்காட்டு அம்பேத்கரும் அவரது ஆதரவாளர்களும் இந்துத்துவா மற்றும் ஆர்எஸ்எஸ் மீது கொண்டிருந்த அவநம்பிக்கையை வெளிக்காட்டுகிறது.

கூடுதலாக, அம்பேத்கரின் பத்திரிகைகளில் இந்துத்துவா மீதான அவநம்பிக்கையை மிகத் தெளிவாக விவரிக்கும் மறைமுக மேற்கோள்கள் ஏராளமாக உள்ளன. இந்த செய்தித்தாள்கள் (குறிப்பாக பாஹிஷ்க்ருத் பாரத், ஜனதா, பிரபுத்தா பாரத்) இயல்பாகவே இந்து ஒற்றுமை என்று வரும் போது தலித்களை வேண்டுமென்றே ஒதுக்கி விடும் பண்பைக் கொண்டவைகளாகவே இந்து தேசியவாத (இந்துத்துவா) அமைப்புகள் (இந்து மகா சபா போன்றவை) இருக்கின்றன என்று வாதிட்டுள்ளன. ஒரு கட்டுரையில் ஜனதா, இந்து தேசியவாத அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், ஏனெனில் அதன் அடித்தளம் பிரிவினைவாத கொள்கைகளான பார்ப்பனியத்தாலும், முஸ்லீம் எதிர்ப்பாலும் கட்டப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டி உள்ளது.

Image Credit : thewire.in
சாவார்க்கரையும் அவரது அரசியலையும் விமர்சிக்கும் அம்பேத்கரின் கட்டுரை – Image Credit : thewire.in

சித்தாந்த ரீதியாக கூற வேண்டுமெனில், 1920-க்கும் 1930-க்கும் இடையே இந்துமகா சபா ஆர்எஸ்எஸ்-ன் பல சித்தாந்த கொள்கைகளை பகிர்ந்து கொண்டுள்ளது. மேற்கு இந்தியாவைச் சேர்ந்த அதன் பல முக்கிய தலைவர்கள் பின்னர் ஆர்எஸ்எஸ்-ன் தொடக்க ஆண்டுகளில் அதன் முதுகெலும்பாக மாறினர். 1936-ல் நடந்த ஒரு பொதுக் கூட்டம் பற்றிய செய்தியில் ஜனதா பத்திரிகை இந்துமகா சபாவையும் அதன் நிர்வாகிகளையும் கண்டித்துள்ளது.

அதன் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் ஆர்எஸ்எஸ் உருவாக அதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஆர்எஸ்எஸ்-ஐ துவக்கியவர்களுள் ஒருவரான விஸ்வநாத் கேல்கர், அவரது பிரிவினைவாத அரசியல் முன்னெடுப்புகளுக்காகவும், குறிப்பாக அது இந்து – முஸ்லீம் பிரச்சனையை நோக்கிச் செல்வதற்காகவும் அவரை ஜனதா பத்திரிகை வெளிப்படையாகக் கண்டித்தது. இது ஆர்எஸ்எஸ்-டன் தொடர்புடைய இந்த நிகழ்வு அம்பேத்கர் அரசியல் பற்றிய தெளிவான பார்வையைக் கொடுக்கிறது.

ஜனதா இதழ்களில் இந்துத்துவா தலைவர்களின் முஸ்லீம் எதிர்ப்பு வாதத்திற்காக மட்டுமின்றி, தலித்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் மிக வசதியாக ஒதுங்கிக் கொள்வதையும் பல முறை விமர்சனம் செய்து செய்திகளை வெளியிடப்பட்டுள்ளன. அம்பேத்கர் தனது “தீண்டத்தகாதவர்களுக்கு காங்கிரஸும் காந்தியும் செய்தது என்ன” என்ற நூலில், இந்து மகாசபா போன்ற அமைப்புகள் தீண்டாமை மற்றும் சாதியைப் பற்றிய சமூகப் பிரச்சினைகளைப் பேசத் தகுதியற்றவை என்றும், இந்திய அரசியலில் முஸ்லீம்களை எதிரியாகக் காட்டுவதே அவர்கள் ஒரே நோக்கம் என்றும் படம்பிடித்துக் காட்டுகிறார்.

தம்மதீட்சா தினத்தன்று உரையாற்றும் அம்பேத்கர் Image Credit : thewire.in
தம்மதீட்சா தினத்தன்று உரையாற்றும் அம்பேத்கர் Image Credit : thewire.in

எனவே, உண்மையில் கூறுவதானால், அம்பேத்கர் எப்போதும் இந்துத்துவா அரசியலுடன் ‘சித்தாந்த நெருக்கம்’ கொண்டிருக்கவில்லை. பாஹிஸ்க்ருத் பாரத் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது அம்பேத்கர் இந்து மகா சபா மற்றும் பிற இந்து தேசியவாத அமைப்புகளையும் குறித்து கடுமையான விமர்சனங்களை எழுதி உள்ளார். அவர் தொடர்ந்து அவர்களின் எதிர் மறை விளைவை ஏற்படுத்தும் முறைகளையும், அவர்கள் பின்பற்றும் பிரிவினைவாத அரசியலையும் குறிவைத்துத் தாக்கி இருக்கிறார்.

பிற்காலத்தில் ஜனதா, பிரபுத்தா பாரத் போன்ற செய்தித்தாள்களின் அன்றாட ஆசிரியர் பணிகளில் அம்பேத்கர் பங்கெடுக்க இயலாத நிலையிலும் அந்தப் பத்திரிகைகளின் இந்துத்துவா அரசியலுக்கு எதிரான கருத்துகள் மறைந்து விடவில்லை. அவை தொடர்ந்து இந்துத்துவா மற்றும் அதன் முன்னணியாளர்களான வி. டி. சாவர்க்கர் போன்றோர் மீதான விமர்சனங்களை வைத்து வந்தன. எடுத்துக்காட்டாக, ரத்னகிரியில் தீண்டத்தகாதவர்களுக்கு மட்டும் எனத் தனியாக சாவர்க்கர் கட்டிய
‘படிட்- பவன்’ (Patit-Pawan) கோவில் விவகாரம் ஜனதா பத்திரிகையின் கடும் கண்டனத்திற்குள்ளானது‌.

மறுபுறம், மராத்திய சொற்களை சமஸ்கிருதமயப்படுத்தும் சாவர்க்கரின் முயற்சி, இஸ்லாமிய செல்வாக்கை நீக்கி மதத்தை சுத்தப்படுத்துவதாக கூறியதைப் போன்ற முட்டாள்தனமானது என சாடியது.

அடுத்த வந்த ஆண்டுகளில் சாவர்க்கர் இந்து மகா சபையின் தலைவராக உயர்ந்தார். அதைத் தொடர்ந்து இந்துத்துவாவின் முக்கிய ஊதுகுழலாக ஆனார். 1956-ல் அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறியதை சாவர்க்கரும், ஆர்எஸ்எஸ்-ம் எதிர்த்தனர். சாவர்க்கர் அதனை “பயன்தராத செயல்”. அது ‘கோழை’ மதம் என அவர் கூறினார். இதற்கு பதில் தரும் விதமாக, பிரபுத்தா பாரத், அம்பேத்கர் மதம் மாறிவதற்கு முன்னதாக, சாவர்க்கர் பெயருடன் உள்ள அடை மொழியான “வீர்” எப்படி வந்தது என வெளிப்படையாக கேள்வி எழுப்பியது. மேலும் புத்த மதம் “காட்டிக் கொடுத்த” வரலாறு கொண்டது கொண்டது என்று கூறிய போது சாவர்க்கர் போன்றவர்கள் அவர்களின் தேசப்பற்றை சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது என பதிலடி கொடுத்தது.

இது போன்ற பல நிகழ்வுகள் காரணமாக, அம்பேத்கருக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்குமான தோழமை பற்றிய கட்டுக்கதைகள் பயனற்றும் வரலாற்று ரீதியாக வலுவிழந்தும் போகின்றன. அம்பேத்கர் வெளியிட்ட செய்தித்தாள்கள், இந்துத்துவா தேசியவாத அரசியலுடன் அம்பேத்கர் ஒத்து போகும் வாய்ப்பு, கற்பனையாகக் கூட ஒரு போதும் இருந்ததில்லை என்பதை முன்னிறுத்தி உள்ளன.

மாறாக, அவரது எழுத்துக்கள் “இந்துராஷ்டிரம்” என்ற கருத்து தொடர்பாக அவர் கொண்டிருந்த கவலைகளை மிகத் தெளிவாகப் பறை சாற்றுகின்றன. அவரது இயக்கமும், பத்திரிகைகளும் இந்துத்துவா குறித்து எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் அம்பேத்கர் அரசியலின் சாரத்தை மேலும் வலுவாக்கின. 1946-ல் ஆர்எஸ்எஸ் மற்றும் அகாலி தள் இரண்டையும் அபாயகரமான அமைப்புகள் என அறிவித்ததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்துத்துவா மீதான அவரது அரசியல் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள, அவருடைய உன்னத படைப்பான “பாகிஸ்தான் அல்லது இந்திய பிரிவினை” என்ற நூலில் உள்ள, இந்து மதவாத அரசியல் பற்றி பேசும் போது “இந்து ராஜ்ஜியத்தின் அச்சுறுத்தல்” போன்ற மேற்கோள்கள் போதுமானவை‌. மேலும் 1951-ல் அம்பேத்கரே எழுதிய ‘பட்டியலினத்தவர் இனக் கூட்டமைப்பு’ (SCF) என்ற கட்சியின் அறிக்கை ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான அவரது திட்டவட்டமான அவநம்பிக்கைக்கு நற்சான்று ஆகும்.

அந்தக் கட்சி அறிக்கை, “பட்டியலினத்தவர் கூட்டமைப்பு இந்து மகாசபை போன்ற பிற்போக்குவாத கட்சிகளுடன் ஒரு போதும் கூட்டு சேராது.” எனத் தெளிவாக அறிவித்தது.

அம்பேத்கரின் ஆர்எஸ்எஸ் உடனான தொடர்பு பற்றிய புனைகதைகள் தொடர்ந்து வரும் ஒன்றுதான். ஏனெனில் அம்பேத்கர் ஆர்எஸ்எஸ் பற்றி மிகக் குறைவாகவே எழுதி உள்ளார்‌. காந்தியுடன் மேற் கொண்டிருந்த அறிவார்ந்த விவாதங்களை போல் அல்லாமல், ஆர்எஸ்எஸ் உடன் மிகக்குறைந்த அளவே உரையாடி உள்ளார். அம்பேத்கர் வாழ்நாளில் ஆர்எஸ்எஸ் ஒரு குறிப்பிட்டத் தக்க அமைப்பாகவும் இருக்கவில்லை. 1940-களில் கூட அதனுடைய செயல்பாடுகள் தேசிய அளவில் பேசப்பட்ட போதும் வட இந்தியாவை ஒப்பிடும் போது மேற்கு இந்தியாவில் உறுப்பினர்களைச் சேர்க்க கடினமாக வேலை செய்ய வேண்டி இருந்தது. மேற்கு இந்தியாவின் பார்ப்பனர் அல்லாதோரும், தலித்துகளும் ஆர்எஸ்எஸ்-ஐ அவநம்பிக்கையுடனே பார்த்தனர். துவக்க ஆண்டுகளில் அதனால் வேகமாக வளர முடியவில்லை. அப்போது அது ஒரு வலுவற்ற அமைப்பாக குறிப்பிட்ட மக்களிடம் மட்டுமே பரவி இருந்தது. மேற்கு இந்தியாவில்தான் அம்பேத்கர் இயக்கம் வலுப்பெற்று இருந்தது.

அம்பேத்கர் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவாவின் ஆதரவாளராக இல்லை என்பது தெளிவாகத் தெரியும் போது, இந்துத்துவா ஆர்எஸ்எஸ் அரசியல் தொடர்பாக அவரது இன்றைய நிலைப்பாடு எப்படி இருக்கும்? இது இயல்பாகவே ஊகத்தன்மையுடைய கேள்வியாக இருந்தாலும், பிரபல தத்துவவியலாளர்களும், அரசியல் அறிஞர்களும், ஒரு சில தலித் செயற்பாட்டாளர்களும் பலமுறை இந்தக் கேள்விக்கு பதில் அளித்துள்ளனர்.

எனினும், 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அம்பேத்கரின் தலித் இயக்கத்திற்கும், இந்துத்துவா அரசியல் இயக்கத்திற்கும் இடையேயான உறவின் நிலை பற்றி குறிப்பிடத்தக்க அளவு வரலாற்று ரீதியான, ஆவணப்படுத்தும் வேலை எதுவும் இன்னும் நடக்கவில்லை. அது போன்ற உறவு இருந்ததற்கான ஆவணச் சான்றுகள் இல்லை என்பது பிரச்சனையின் ஒரு பகுதி. இவ்வாறு ஆவண ஆதாரங்கள் இல்லாமல் இருப்பதால்தான் ஆர்எஸ்எஸ் உடனான அம்பேத்கர் உறவைப் பற்றிய கட்டுக்கதைகளை எப்போது வேண்டுமானாலும் செருகுவதை தடுத்து நிறுத்த இயலாமல் உள்ளது.

இதே போல, பிற அரசியல் கட்சிகளும் அம்பேத்கரின் உருவத்தையும், மக்களிடம் செல்வாக்கையும் பயன்படுத்திக் கொள்வதற்காக அம்பேத்கருடன் தங்களது “மகிழ்ச்சியான” உறவைப் பற்றிய கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்து விட்டு ஆதாயம் தேடிக் கொள்ளப் பார்க்கின்றனர்.

இரண்டாவதாக, அம்பேத்கர் பற்றியும் அவரது அரசியல் இயக்கம் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவாகவே இருப்பதும் ஒரு பிரச்சினை. கல்வியாளர்களுக்கிடையேயும் கூட ஒரு கவர்ச்சிக்காக அம்பேத்கரைப் பற்றி பேசப்படுகிறதே ஒழிய அவரது அமைப்பு ரீதியான அரசியல் மற்றும் செயல்பாடுகள் குறித்த சீரிய ஆய்வுகள் மிக அரிதாகவே நடக்கின்றன.

பெரும்பாலான ஆய்வுகள் மகாராட்டிர அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அம்பேத்கரின் எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டே நடக்கின்றன. காந்தி, நேரு போல இல்லாமல், இந்திய அரசு அம்பேத்கரின் படைப்புகளையும் பிற ஆவணங்களையும் வெளியிடுவதற்கு மிகக் குறைந்த அளவே முதலீடு செய்துள்ளது. உண்மையில், அம்பேத்கரின் எழுத்துக்கள் அச்சிட்டு வெளியிடப்படுவதற்கு 1970-களில் தலித் பாந்தர்கள் கொடுத்த அழுத்தமே காரணம் ஆகும்.

எனினும், இப்போதைய நிலை என்னவென்றால், அம்பேத்கரின் ஒட்டு மொத்த படைப்புகளையும் மகாராட்டிர அரசு வெளியிடவில்லை. வரலாற்று ரீதியான ஆவணங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அரசு செய்து கொடுப்பதும், அம்பேத்கரைப் பற்றி ஆய்வு செய்ய அறிஞர்கள் தங்கள் நேரத்தை செலவிடுவதும் நடக்கவில்லை என்றால் நம்பத் தகுதியற்ற கட்டுக்கதைகளை கட்டுப்படுத்துவது இயலாது.

– பிரபோதன் போல்

த வயர் தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்