Aran Sei

எதிர்ப்புகள் இந்து மதத்தையும் இந்தியாவையும் வடிவமைத்த வரலாறு – ரொமிலா தாப்பருடன் நேர்காணல்

ரொமிலா தாப்பர் இந்தியாவின்  தனிச் சிறப்பு மிக்க வரலாற்றாசிரியர். 1960 களில் துவங்கிய அவரது எழுத்துக்கள், இந்தியாவின் கடந்த கால வரலாற்றை நுணுக்கமாக அறிந்து கொள்ள உதவுகிறது. பெருமை வாய்ந்த க்ளஜ் பரிசை(Kluge Prize) 2008ம் ஆண்டில் பெற்ற அவர், தனது நீண்ட எழுத்துலக வாழ்க்கையில் அனைத்துத் துறைகள் பற்றியும் முழுமையாக எழுதி உள்ளார். முற்கால இந்தியா குறித்த அவரது சிறந்த எழுத்துக்கள் மிகவும் பிரபலமானவை.

சமீப சில பத்தாண்டுகளாக தாப்பர், பொதுவான அறிவுசார் கருத்துக்களை  வெளிப்படையாகப் பேசுவதால் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பெறுபவர்.  கடந்த கால இந்திய வரலாற்றை, வெறும் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான சண்டையாக   முன்னிறுத்தும் வலதுசாரிகளின்  வரலாற்றுப் பார்வையை கேள்விக்குள்ளாக்குபவர்.

அவரது புதிய புத்தகமான ”எதிர்ப்புகளின் குரல்கள்’ (Voices of Dissent) முற்கால இந்தியாவில்   ஆதிக்க சக்திகளின் கருத்துக்களுக்கு  எதிர்நிலைக் கருத்துக்கள் தோன்றிய  நிகழ்வுகளை உற்று நோக்குகின்றன. அவை வேதகாலத்தில் ‘தாசாக்கள்’, ஷ்ரமணர்கள்(shramanas) எனப்படும் புத்த, ஜைன, அஜிவிகா மதத்தை சேர்ந்தவர்களால் அல்லது இடைக்காலத்தில் தோன்றிய பக்தி இயக்க துறவிகள் மற்றும் சூஃபி குருமார்களால் எழுப்பப்பட்ட பிராமண கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்துக்களாக இருக்கலாம்.

“நாம் இன்று இந்து மதம் என்று இன்று அழைப்பது வரலாற்று ரீதியான மாற்றங்களுக்கு ஆட்பட்டது. அதனால் அதன் நம்பிக்கைகளிலும், அதனுடன் அடையாளப்படுத்தப்படுபவைகளிலும் ஏற்கத்தக்க மாற்றங்களை, பிறழ்வுகளை உள்ளடக்கியது……

இந்த சீர்திருத்தங்களை ஏற்படுத்திய எதிர்ப்புகளின் பங்களிப்பையும், அல்லது  தேவையான பிறழ்வுகளை ஊக்கப்படுத்த தவறியதையும்  ஒதுக்கிவிடுவது, இந்தியாவின் மதங்கள் பண்படுத்தப்பட்டதையும் மேலும் பல சமூக வடிவங்களின் அடிப்படைகளையும் மதிப்பீடு செய்யும் போது அதில் எதிர்ப்புகள் அழுத்தமாக இருந்ததையும்  புறந்தள்ளி விடுவதாகும்…

மதங்கள் நிலையானவை அல்ல. சமூகங்கள் மாறுவதைப்போலவே அதனோடு பிணைந்துள்ள மதங்களும் மாறுகின்றன. ஏனெனில் மத அடையாளங்கள் தனியாகத் தோன்றுவதில்லை. சிலர் அதை பாரம்பரியம் எனவும், சிலர் அதை மற்றதன் எதிர்வினை எனவும் பார்க்கிறார்கள், அது சமூகத்திற்குள்ளேயோ அல்லது வெளியிலிருந்தோ இருக்கலாம்.

சைவ தாஷ்னமிகள் மற்றும் வைணவ பைராகிகள் புராண மதங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். அதே போல பார்ல்விஸ் (Barelvis) மற்றும் தியோபந்திகள் (Deobandis) குரானின் மதத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். எது தொடர்கிறது, எது மாறுகிறது, ஏன் மாறுகிறது – அதைத்தான் நாம் தேடுகிறோம்.  இந்த தேடுதல் நிரந்தரமானது” என்று எழுதுகிறார் தாப்பர்.

இந்த எதிர்ப்புகளின் வரலாற்றை, இந்திய துணைக்கண்டத்தில் மதங்களைப் பற்றிய புரிதல்,  இந்தியாவின் கடந்த காலத்தை பற்றிய காலனிய விளக்கங்கள்  பூசிய வர்ணங்களிலிருந்தே பெறப்படுகின்றன என்பதிலிருந்து பார்க்க வேண்டும் என்று இந்த புத்தகம் காட்டுகிறது. மேலும் அதன் தொடர்ச்சியாகவே, காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தை – ஒரு துறவியின் நேர்மையான குணங்களின் மீது அதீத நம்பிக்கை கொண்டு- நவீன கால இயக்கங்களின் எதிர்ப்புகளின் வெளிப்பாடுகள் என காண்பதையும் அது சுட்டிக் காட்டுகிறது.  குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பெண்கள் முன்னின்று நடத்திய ஷாஹீன்பாக் போராட்த்தினைப் பற்றிய தாப்பரின் கருத்துக்களுடன் அந்த புத்தகம் நிறைவு பெறுகிறது.

“தங்கள் உரிமைகளோடு இணைந்த சமத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலான குடியுரிமையையே அவர்கள் கோருகிறார்கள். காலனிய ஆட்சிக்கு எதிரான நாட்டுப்பற்றின் வேரிலிருந்து எப்படியோ கிளைத்த எதிர்ப்புகளின் வடிவத்தை பல காலத்திற்குப் பிறகு அங்கு நான் கண்டேன். அந்த அனைத்து உள்ளடக்கிய தன்மையில் தவறேதும் இல்லை. 1940 களில் என் இளமைக் காலத்தில், காலனிய எதிர்ப்பு தேசப்பற்று போராட்டத்தில் கலந்து கொண்ட நாட்களுக்கு அது என்னை இழுத்துச் சென்றது.”

நான் தாப்பருடன்,  இந்திய வரலாற்றில் எதிர்ப்புகளின் நிலை பற்றியும், எவ்வாறு நவீன முத்திரைகள் கடந்த காலத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு வர்ணம் பூசியுள்ளன, அவர் அடிக்கடி எதிர்கொள்ளும்  தவறான கண்ணோட்டங்கள் யாவை என்பது பற்றி பேசினேன்.

நீங்கள் உங்கள் புத்தகத்தில் பல இடங்களில்,  இங்கிருந்த எதிர்ப்புகளின் இந்திய வரலாறு,  அது இந்தியாவிற்கு வெளியில் எங்கிருந்தோ வந்ததல்ல என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதுதான் உங்களை இந்த புத்தகத்தை எழுதத் தூண்டியதா?        

எதிர்ப்புகள் என்பது குறிப்பாக இந்தியாவினுடையதல்ல. அது பிற எல்லா இடங்களையும் போல இந்தியாவிலும் இருந்தது. எதிர்ப்புகள் எல்லா சமூகத்திலும், எல்லா நாகரீகத்திலும் இருக்கிறது. அது கருத்துக்கள், தத்துவங்கள், நடைமுறைகள், நம்பிக்கைகள் ஆகிய  எல்லாவற்றுடனும் தொடர்புடையது. அது அறிவைத் தேடுதல் மற்றும் தத்துவார்த்த விவாதங்களுடன் இணைந்த செயல்பாடுகளில்  உள்ள அதிக வெளிப்படையான விழிப்புணர்வில் உள்ளது. முதலாவதாக கூறப்பட்டது, முற்கால இந்தியாவில் விவாதத்தை முன்மொழிவதற்கான பார்வை  வருவதற்கு முன் “மற்றவர்களின்” கருத்துக்களையும், பார்வையையும் பற்றி கேட்டறிவதிலிருந்து துவங்கியது.

இதுதான் பண்டைய எல்லா கலாச்சாரங்களின் தன்மை. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. எதிர்ப்புகள் என்பது ஐரோப்பிய தத்துவத்துடன் இணைக்கப்பட்டு மேற்கிலிருந்து காலனி ஆதிக்க காலத்தில், எப்போதும் நினைப்பது போல்,  இறக்குமதி செய்யப்பட்டது அல்ல.  பல நாகரீகங்களிலும் சிந்தனையில் மற்றும் நடத்தையில் இருக்கும் எதிர்ப்பு இந்திய சிந்தனையிலும் உள்ளுறைந்த ஒன்று. அது அப்போதும் இப்போதும் அறிவின் முன்னேற்றத்திற்கு அவசியமான காலடி. நமக்கு தரப்பட்ட விளக்கங்கள் நமக்கு ஏற்புடையதாக இல்லாத போதும், அல்லது மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் எழும் போதும், அறிவின் வழி நடக்கும் ஆராய்ச்சியும், கண்டுபிடிப்புகளும் நாம் வாழும் இந்த உலகைப் பற்றி நமக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களைக் கேள்வி கேட்பதை அடிப்படையாகக் கொண்டது.

முற்கால இந்தியாவிலிருந்து  தற்கால இந்தியாவிற்கு வரும் வரை, எதிர்ப்புகளின் பங்கும், அது பற்றிய விழிப்புணர்வும் ஆய்வுகளில் போதுமான அளவு அங்கீகரிக்கப்பட்டு செய்யப்படவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. இது குறித்து எனது முந்தைய ஆய்வுகளில் கூறியுள்ளேன். இம்முறை, இந்தகருத்தை அங்கீகரிப்பது குறித்த எனது முடிவை வலியுறுத்த விரும்புகிறேன். அதாவது  முற்கால இந்தியாவில் பல்வேறு வகையான சிந்தனைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புகள்  முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது போலவே, தற்காலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கு அதுவே முன்னுரையாக உள்ளது.

கலாச்சாரம் பற்றி எழுதும் பல வரலாற்று ஆசிரியர்கள்- ஒரு சிலர் தவிர- இதனை விட்டு ஒதுங்கி விடுகின்றனர். மறைமுகமாக புறந்தள்ளி விடுகிறார்கள். இந்திய கலாச்சாரம் தடையற்ற முழுமையாகக் தரப்படுகிறது. ஆனால் அதன் பெரும்பாலான ஒளியூட்டும் பண்புகள் கேள்வி கேட்டதிலிருந்தே வந்தன. ஆக்கபூர்வமான கேள்விகளை கேட்பதற்கு உபநிஷத்துக்கள் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

இந்திய கலாச்சார கட்டிடத்தில் நாம் எதிர்ப்புகளை  வைக்க வேண்டிய அவசியம் என்ன?

எதிர்ப்புகள் பன்முகத் தன்மை கொண்டவை. நான் ஒரு சில பண்புகளில் மட்டுமே அதன் வெளிப்பாட்டை  பற்றி பேசியிருக்கிறேன். அதிலும் மிக குறைந்த அளவு மரபுகளை மட்டுமே எடுத்துக்காட்டாகக் காட்டி விவாதித்து இருக்கிறேன். அது பேச்சு வழக்காகவும் அதே சமயம் அதற்கு இணையாக  நிறுவனமயமான அதிகாரத்தால் பராமரிக்கப்படுவதாகவும் இருப்பதால், அது பற்றி முழுமையாக எழுத பல புத்தகங்கள் தேவைப்படும். எனினும் இதை நான் எழுதுவதற்கான நோக்கம், குறைந்த எடுத்துக்காட்டு களுடன், அது எவ்வாறு தோன்றியது, ஏற்கனவே உள்ள எண்ணங்கள் மற்றும் நடைமுறைகளை ஏற்றுக் கொள்ள இயலாத போது , விவாதங்களின் மூலம் கிடைக்கும் முடிவுகளின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் அல்லது தூங்கிக் கிடப்பதாகத்  தோன்றும் கருத்துக்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது என்பனவற்றை எல்லாம் காட்டுவதே ஆகும்.  இது தற்போது மிக அதிகமாகி வருகிறது.

வரலாறு முற்காலத்திலிருந்து தற்காலத்திற்கு குறுகிய,  தடைபட்ட நகர்வாக இருந்ததில்லை, ஒருபோதும் இனியும் இருக்காது என்பதும், அதன் அங்கமாக இருப்பவர்கள் கேள்வி கேட்காமல் வளர்ந்ததில்லை என்பதும், எந்த ஒரு கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ள மிகவும் அவசியமானதாகும். ஷ்ரமனர்கள்(shramanas) எனப்படும் புத்த, ஜைன, அஜிவிகா மதத்தை சேர்ந்தவர்கள் வேதகால பார்ப்பனியத்தைக் கேள்வி கேட்டனர். அதனால் இந்த கேள்விகள் மூலம் எழுந்த புதிய கருத்துக்கள் மீது  ஒரு மிக நீண்ட கால விவாதம் நடந்தது. இவை, சிறப்புமிக்க அசோகரின் கல்வெட்டுக்களில் மட்டுமல்ல, அந்த காலத்தில் உருவான மகாபாரதத்தின் சில பகுதிகளிலும் பிரதிபலித்தன.

இதற்கான பல குறிப்புகள் தொடர்ந்து இந்து மதம் எடுத்த புதிய வடிவங்களிலும் உள்ளன. பக்தி இயக்க துறவிகள் சிலரை இதற்குச் சான்றாக கூறலாம். பக்தி இயக்க கவிஞர் ரவிதாஸ், சாதி பாரம்பரியம் இல்லாத சமத்துவ சமூகத்தை தனது கற்பனையில் படைக்கும் போது எதிர்ப்பிற்கு வடிவம் தருகிறார். இது முன்னுரிமையுடன்  சமூகத்தை கட்டுப்படுத்தியது எது என்பதையும்,  எது அதை கேள்வி கேட்டது என்பதையும் நமக்கு சொல்கிறது. ஆனால் இந்த கூறுகள் சமூக வரலாற்றைக் கற்பிக்கும் போது பெரும்பாலும் சொல்லித் தரப்படுவதில்லை. இவ்வாறு சமூகத்தை பகுத்தாய்ந்து எப்போதாவது விமர்சனம் செய்த கருத்துக்கள்,  மறைக்கப்பட்டு,  அவை வெறும் மத நூல்களாகவே இருக்கின்றன.

இந்த புத்தகம்,  காலனிய எதிர்ப்பாக நகர்வதற்கு முன் பண்டைக்கால மற்றும் இடைக்கால இந்தியாவில் மத அமைப்புகளில் எழுந்த எதிர்ப்புகளையும்,  அதற்குப் பிறகு தற்போது அரசை எதிர்த்து  வைக்கப்படும் விமர்சனங்கள்  “தேச விரோதம்” என முத்திரை குத்தப்படுவதையும் கோடிட்டு காட்டுகிறது.  நீங்கள் ஏன்  முதலாவதாக இந்திய வரலாற்றில் எதிர்ப்புகளை  திரும்பி பார்ப்பதற்குப் பதில் இந்தப் பாதையை  ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

சமூகம்  தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மரபுச் சொற்கள் வரலாற்றில் மாறியுள்ளன. அவை ஒரு காலத்தில் இருந்தது போலவே அடுத்த காலத்திலும் இருந்ததில்லை. இந்தப் பகுதிதான், சிந்தனை  வரலாற்றை அறிவுபூர்வமாக ஆய்வு செய்யவும்,  எழுதவும் ஆர்வமூட்டும் பகுதியாகும். இதுதான் சமூகத்துடன் தொடர்புடைய கருத்துக்களையும், அவைகளுக்கிடையிலான விளைவுகளையும் விரிக்கின்றன. நான் மதக்கருத்துக்கள் உடைய மரபுச் சொற்களைத் சான்றாகக் தேர்ந்தெடுத்தேன்.

முதலில், மற்றவற்றை விட இந்த கருத்தின் மீது பார்வையைச் செலுத்திய நூல்கள் கடந்த காலத்தில் நிறைய இருந்தன. அதனால் நமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. தற்கால இந்தியாவிற்கு முந்தைய இந்தியாவில்,  சமூகம் மற்றும் அரசியல் தொடர்பான விளக்கக் கோட்பாடுகள் கொண்ட நூல்கள் அதிகமாக இல்லை. ‘ தர்ம சாஸ்திரங்கள்’ அல்லது அரசியல் பொருளாதார நூலாக காட்டப்படும் ‘ அர்த்த சாஸ்திரம்’ மீதான உரைகள் எழுதப்பட்டன. அர்த்த சாஸ்திரத்தில், விளக்கங்கள் தருவதற்கு , காரண காரிய கருத்துக்களையும், தத்துவார்த்த கருத்துக்களையும் இணைத்து சில கருத்துக்கள் தரப்பட்டன. ஆனால் அவையாவும் அதன் முக்கிய நோக்கமான அரசியல் பொருளாதாரத்தை விளக்கும் போது தற்செயலாக எழுதப்பட்டவையே. இவை சிறிய, தனித்தனியான பகுதிகளாக விவாதிக்கப்பட வேண்டியவை.

பல்வேறு வகையான நூல்களையும் கிளறித்தான் வரலாற்று ஆசிரியர்களாகிய நாம் அரசியல் பொருளாதார எதிர்நிலை கருத்துக்களைப் பற்றிய ஆய்வைத் துவங்க வேண்டும். இரண்டாவதாக, மதமும் சாதியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதால் மத மரபுச் சொற்களை ஆய்வு செய்வது ஒரு குறிப்பிடத்தக்க அளவு அரசியல் மற்றும் சமூகத்தை ஆய்வு செய்வதை உள்ளடக்கி உள்ளது. இந்த பரிமானங்கள் எதிர்நிலைக் கருத்துக்களிலேயே பெரும்பாலும் மறைந்துள்ளன.

முற்கால இந்தியாவில் பரவலாக  இருந்த இருதுருவ இந்து – முஸ்லீம் சிந்தனை, எவ்வாறு காலனிய காலத்திற்கு வந்தது என்பதை கருத்தில் கொண்டால், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு இந்த மதவாத தேசப்பற்று என்பது காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய காலத்தில் இருந்த நிலையே நீடிப்பது தவிர்க்க முடியாதது என நீங்கள் நினைக்கிறீர்களா?

இல்லை‌ நான் இதை தவிர்க்க முடியாது எனக் கூற மாட்டேன். நாம் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இரண்டு நாடு கோட்பாடு என்பது இந்து தேசப்பற்று என்ற கருத்தியலாக காலனிய இந்தியா பற்றிய புரிதலில் இருந்து நேரடியாக உருவான பல கோட்பாடுகளில் ஒன்று. இது என்ன என்பதற்கான தொடர்பு காட்டப்பட்டிருக்க வேண்டும். சில பத்தாண்டுகளுக்கு முன் பலர் இந்துத்துவா என வாதிட்டது மற்றும் இன்றும் சிலர் வாதிட்டுக் கொண்டிருப்பது இந்து மதம் அல்ல. இரண்டிற்குமான வேறுபாட்டை விளக்க நமக்கு எதிர்வினைக் கருத்துக்கள் தேவை. சுதந்திரத்துடன் வந்த வரலாற்று ரீதியான அடிப்படை மாற்றங்களை,  அடுத்து வந்த தேசங்கள் புரிந்து கொள்ளவில்லை.

நான் தேசிய அரசுகள் உருவானதையும், அரசியலமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ளவாறு, குடிமக்கள் மற்றும் அரசுகளுக்கான உரிமைகளையும் கடமைகளையும் அவை உள்வாங்கிக் கொண்டதையும் பற்றிக் கூறுகிறேன். நாம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். எனினும்,  நாங்கள் ஏற்கனவே அங்கே உள்ளோம் என சிலர் கூறுவார்கள், பெரும்பான்மை மதத்தினருக்கான முன்னுரிமைகள் கொண்ட நாடாக மேலும், தங்கள் சொத்து மற்றும் தகுதி நிலை   (status)  ஆகியவற்றின் மூலம் குடியுரிமையை உறுதிப் படுத்திக் கொண்டவர்களின் நாடாக  இருப்பதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். எனவே ஒரு குறிப்பிட்ட இடம் வரை நாம் வந்திருப்பது முன்னறியக் கூடியது.

எனது பின்இளமைக் காலத்திலும், விடுதலைக்கு சற்று பின்னரும் சுதந்திர நாடாக இந்திய சமூகம் எத்தகைய வடிவம் பெறும் என்பது பற்றிய கிளர்ச்சியூட்டும் விவாதங்களை ஏராளமாகக் கேட்டிருக்கிறேன். அது சமூக சமத்துவம் மற்றும் வறுமையிலிருந்து விடுதலை என்ற நோக்கில் இருந்தது. நாம் இதற்கு வெகு தூரத்தில் உள்ளோம்.

நீங்கள் இடைக்கால வட இந்தியாவில்  உயர்நிலையில் வைக்கப்பட்ட முஸ்லீம்கள் உட்பட கிருஷ்ண பக்தி ஏன் மேலேழுந்தது என்பது போன்ற சில கேள்விகளை வெளிப்படையாகக் கேட்டுள்ளீர்கள். இதை மேலும் புரிந்து கொள்வதன் மூலம் நமக்கு என்ன சொல்கிறது என்பது பற்றியும், குறிப்பாக நாம் எப்படி சிட்டைகளை(lable) பயன்படுத்தி கடந்த காலத்தை புரிந்து கொள்வது பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நாம் நிகழ்காலத்தை கடந்த காலத்தின் மீது திணிக்கக் கூடாது என கற்றுக் கொள்ள வேண்டும். பல்வேறு கால நிலைகளில் கடந்த காலம் தன்னைத் தானே எவ்வாறு பார்த்துக் கொண்டது என்பதை அங்கீகரிக்க வேண்டும். நான் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டை தருகிறேன். நாம் இடைக்காலத்தைப் பற்றி பேசும் போது” முஸ்லீம்கள்” இதைச் செய்தார்கள், “இந்துக்கள்”  இதைச் செய்தார்கள். என்று பொதுமைப்படுத்தி குறிப்பிடுகிறோம். இதிலிருந்து முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் பற்றி முடிவுகளை எடுக்கிறோம்.

எனினும் நமது முன்னோர்கள் அவர்கள் பேசிய சமூகத்தை(community) நம்மை விட துல்லியமாக அடையாளப்படுத்தினர். நான் கூறியது போல, அவர்கள் யவனர்கள், சாகர்கள், துருஷ்கர்கள் மற்றும் சூஃபிகள் என அவரவர் வாழ்க்கை முறையை கவனத்தில் கொண்டு குறிப்பிட்டனர். இதற்கு சற்றும் குறையாத வகையில் முஸ்லீம்களையும் குறிப்பிட்டனர். இதைப் போலவே அவர்கள் சைவர்கள், வைணவர்கள், சாக்தர்கள் மற்றும் நாத்திகர்கள் இன்னும் போல பலரையும் அவரவர் குறியீடுகளை மனதில் கொண்டு,  “இந்துக்கள்” என மொத்தமாக குறிப்பிடாமல் தனித்தனியாக  குறிப்பிட்டனர். மிக பிற்காலத்திலேயே ” இந்து” என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்தது.

அதிக எண்ணிக்கையில் இருந்த சமூகங்கள் கூட பலவித வழிகளில் செயல்பட்டனர். இந்த வேறுபாடுகள்தான் நாம் மக்களை எவ்வாறு  அறிந்து கொள்கிறோம் என்பதை  அடிக்கடி கோடிட்டு காட்டுகின்றன. எல்லா முஸ்லீம்களும் கிருஷ்ண பக்தர்களாகி விடவில்லை. ஆனால் சிலர் , அவர்களிலும் வெகு சிலரே உயர்வான இடத்தில் வைக்கப்பட்டனர். மற்றவர்கள் கீழ்சாதியை சேர்ந்தவர்கள். பிராமணர்களிடமிருந்தும், அதேபோல முல்லாக்கள் மற்றும் காஜிகளிடமிருந்தும் (quazi) இடைவெளி விட்டு நடந்த ஒரு வகையினர் இருந்தனர் என்பதையும்,  ஏனெனில் இது கட்டுப்பாடான பழமைவாதத்திலிருந்து மாறுபடுவது ஆகும் என்பதையும்  நான் குறிப்பிட்டுள்ளேன்.

இன்றும் கூட அந்த கிருஷ்ண பக்தர்களின் பாடல்களை, இந்துஸ்தானி இசையில் ஒரு இசைத் தொகுப்பின் ஒரு பகுதியாக பாடும் போது,  சிலரே அதன்    பரிமானம் மற்றும்  சமகால நுணுக்கங்களை அறிந்திருப்பர். இது பற்றி நாம் பேசவே மாட்டோம். அவை சிறிய அளவில் இருந்தாலும் எழுச்சியின் ஒரு பகுதியாகும். மதத்தில் எழுச்சியை விட அதிகமான ஒன்று இருந்ததை மறைப்பதாகவும் இருந்தது. நாம், இது சமுதாயத்தை எப்படி பல்வேறு வழிகளில் பாதித்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

நான் இந்த புத்தகத்தை படிக்கும் போது எனக்கு மனதில் தோன்றிய ஒன்று, தங்கள் சொந்த எதிரிகளாகவோ கற்பனையாகவோ அல்லது வேறு வகையிலோ எதிரிகளாக, மிதவாத மேல்தட்டு மக்கள், உள் அரசுகள், மேற்கத்திய நாடுகள், இஸ்லாம் இன்னபிற இருக்கும் போது, இந்திய ஆளும் கட்சியினர் இந்த கடந்த கால எதிர்ப்பு என்பதன் இலக்கணத்தை எந்த அளவு மோடி ஒரு துறவி என்பதுடன் இணைத்துப் பயன்படுத்துகின்றனர். இந்திய பொதுமக்களிடம் நீங்கள் கண்ட அதே பாரம்பரியத்தை வலதுசாரிகள் தட்டிப் பார்க்கிறார்களா?

நான் அவர்களுக்கு எடுத்துக் காட்டிய வண்ணம் அவர்கள் அந்த பாரம்பரியத்தின் வெளிப்பாடுகளைப் அறிந்துள்ளார்கள் என நான் நினைக்கவில்லை. அதனால் அவர்கள் அதைச் செய்ய வில்லை. இந்திய மக்கள் வாழ்க்கையில் இன்று ஒரு உறுதியான வரையறுக்கப்பட்ட சமத்துவ வலதுசாரி பெரும்பாலும் இல்லை. மதவாத வலதுசாரிகள், இந்துத்துவாவின் ஆதரவாளர்கள், நான் கூறும் துறவிற்கு சிறிது பயன்படுவார்கள். அவர்கள் முழுமையான துறவு நிலையையும் இதையும் வைத்து குழம்பிய நிலையில் உள்ளார்கள். நான் என் புத்தகத்தில் விவாதித்துள்ளது போல, இரண்டிற்கும் இடையே ஒரு வேறுபாட்டை காட்டி உள்ளேன்.

அவர்கள் துறவுநிலை அடையாளங்களை அரசியலுடன் இணைக்கும் போது, எப்போதாவது செய்வது போல, மற்றதை விட அரசியலை நோக்கி மக்களின் கவனம் திரும்புகிறது. இப்போது யோகிகள், சாமியார்கள் (yogis,sadhavis) போன்றோர் செய்வது போல அரசியலில் தீவிரமாக செயல்படும்போது, அவர்களது அரசியல் பங்கே பெரிதும் பேசப்படும். இந்துமத நிறுவனங்களின் தலைவர்கள் இவர்களுக்குத் தரும் அரசியல் ஆதரவு துறவிகளின் பாரம்பரியத்திற்கு வெகு தூரத்தில் உள்ளது.

ஒரு துறவி என்பவர் தன்னை சமுதாயத்திற்கு வெளியே அல்லது அதன் எல்லையில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதை இவர்கள் யாரும் செய்வதில்லை அல்லது செய்ய நினைப்பது கூட இல்லை.  ஒரு துறவி சமுதாயத்தில் ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் போது அவரது நன்னடத்தை யின் அதிகாரம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமே அன்றி, அவரது அரசியல், நிர்வாக அதிகாரங்கள் அல்ல. காந்தி இந்த துறவிகளின் நன்னடத்தை அதிகாரத்தைப் பெற்றிருந்தார், அதனால் அவர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் பயன் தருவதாக  இருந்தன.

இந்த வகையான வலதுசாரி எண்ணம்  நான் கூறும் பாரம்பரியத்தைப் பின்பற்றாது. ஏனெனில் இது அனைத்து இந்தியர்களுக்கும் சமத்துவத்தை தருவதை ஏற்றுக் கொள்வதில்லை- இது அதீத சகிப்புத்தன்மையை சுட்டிக்காட்டுகிறது-என்பதுடன்,  அதனோடு முரண்படுபவர்களுக்கு  எதிரான வன்முறையிலிருந்து விலகி இருப்பதும் இல்லை. நான் எனது புத்தகத்தில் எழுதியுள்ள எதிர்ப்பின் மரபில், ஒருவரும், ஒருவரும் கூட, “மற்றவர்களை” (எதிர்கருத்துடையவர்களை ) சுட்டுத் தள்ள வேண்டும் என்று கோரவில்லை.

ஆச்சரியமப்படத்தக்க வகையில் இந்தியாவில், எதிர்ப்புகள் போராட்டமாக மாறவில்லை என சுட்டிக் காட்டி உள்ளீர்கள். ஏன் அப்படி இருந்ததாக நினைக்கிறீர்கள்? இது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை  ஒரு பக்கத் தராசுத் தட்டில் வைத்தால் , பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கையால் ஏற்பட்ட துன்பங்களுக்கு  எதிராக பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறவில்லை  என்பது நமக்கு ஏதாவது செய்தியை கூறுகிறதா?

நான் சாத்தியமான பதில்களை மட்டுமே  கூறுமுடியும். ஒன்று மக்கள் தொகை குறைவாக இருந்ததாலும், நிலம் எடுத்துக் கொள்ள நிறைய  இருந்ததாலும், இருக்கும் அரசை எதிர்த்து போராடுவதை விட அதன் அதிகார எல்லையைத் தாண்டி, பக்கத்து இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வது மேல் என்று நினைத்திருக்கலாம். முற்காலத்தில் விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே குறைவான தரகர்களே இருந்தனர். இது இடைக்காலத்தில் மாறிவிட்டதாக தோன்றுகிறது.

இதே கோட்பாட்டின்படி மக்கள் தொகை அதிகரிப்பு விவசாயிகளுக்கு அழுத்தத்தைக் கொடுத்திருக்கலாம். அத்துடன் இடைமறிக்கும் இடைத்தரகர்கள் அதிகமானதும், வளமான நிலங்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டதும் காரணமாக இருக்கலாம். ஆனால் எனது நண்பர் எழுப்பிய கேள்விக்கு, உண்மையில் பெரும்பாலான நிகழ்வுகளில் விவசாயிகள் புலம் பெயர்ந்தார்களா என்பதையும் அல்லது  புலம் பெயர்வு ஒரு அச்சுறுத்தலாக பயன்பட்டதா  என்பதையும் நிச்சயமாகக் கூற முடியவில்லை. எப்போதாவது விவசாயிகளும், நகர்புற கைவினைஞர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தியது சொல்லப்பட்டுள்ளது.

அதிருப்தி அவ்வப்போது மற்றும் தன்னெழுச்சியாக திடீர் கிளர்ச்சிக்கு சென்றுள்ளது. ஆனால் இது போராட்டமாக மாறுவதற்கு, அமைப்பு, தலைமை, நிதி, வன்முறைக்குத் தயாராக இருத்தல் ஆகியவையும் தேவை. சமத்துவமான சமூக பொருளாதார மாற்று அமைப்பை பரப்புரை செய்வது ஊக்குவிக்கும்  சக்தியாகும்.  இங்கிலாந்தில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில், முதலில் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதுவே போராட்டமாக மாற ஊக்கப்படுத்தியது. இதுபோன்ற  நிறைய வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. சமீபத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நடந்த எதிர்ப்புகள் யாவும் வெறும் அதிருப்தியாகவே இருந்தன.

கடந்தகால இந்தியாவின் எதிர்ப்புகளைப் பற்றிய நமது புரிதலில் என்ன தவறான கண்ணோட்டத்தை நீங்கள் அடிக்கடி எதிர்கொள்கிறீர்கள்?

ஒரு வரலாற்று ஆசிரியராக, எனது தலைமுறை வரலாற்று ஆசிரியர்கள் எதிர் கொள்ள வேண்டியவைகளாக  நான்  சொல்ல விரும்புவது, கடந்த சில ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்டது, இரண்டு உண்டு: இந்திய வரலாற்றை பெரிய அளவில் பெரும்பான்மை சமூகத்தின் வரலாறாக மாற்றுவதை வலியுறுத்துவது,   இரண்டாவதாக, தொடர்ந்து பல்வேறு  மூலங்களிலிருந்து வரும் புதிய தகவல்களையும், விசாரணை மற்றும் பகுப்பாய்வில் புதிய வழிமுறைகளை  புகுத்துவது ஆகிய இரண்டையும் வரலாற்றைப் ஆய்வு செய்வதில்  இணைப்பதை   நிலையாக தள்ளி விடுவதையும் ஆகும்.

வரலாற்றைக் கூர்ந்து  படிப்பதில் அறிவார்ந்த தேவைகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. மேலும் வரலாறு உறுதியற்ற கதைகளாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக, இடைக்கால வரலாற்றின் பெரும்பாலான நிகழ்வுகளும் மத அடிப்படையிலான இந்து முஸ்லீம் விரோதத்தை அடிப்படையாகக் கொண்டே விளக்கப்பட்டுள்ளதுடன், இதை மறுதலிக்கும்  வேறு எந்தவித விளக்கமும் ஏற்க முடியாத வகையில் மூடப்பட்டுள்ளது.

எனவே நாம் மீண்டும் ஒருமுறை  காலனிய ஆட்சியின் கடைசி கட்டத்தில் நாம் கேள்வி கேட்க துவங்கியதையும், அதை புறந்தள்ளிவிட்டதையும் குறித்த, இந்திய வரலாறு பற்றிய  காலனியகால விளக்கத்தை பார்க்க வேண்டும். சமீப காலமாக பொதுவான அறிவார்ந்த தன்மை எதிர்ப்பிற்கு தரப்படும் ஊக்குவிப்பு, தவிர்க்க முடியாமல் கேள்வி கேட்பதை ஊக்குவிப்பதை கெடுப்பதாகவும் மட்டுமின்றி நம்மை சிந்தனை வறுமைக்குள் தள்ளிவிடுவதிலுமே முடியும்.

கடந்த அரை நூற்றாண்டு களாக வரலாற்றாசிரியர்கள் கொடுத்துவரும் செழுமையான, வேறுபட்ட, கலவையான மற்றும் வசதியான விளக்கங்களுக்கு பல்வேறுபட்ட புதிய வழியிலான சிந்தனைகளின் மூலம் அறிவார்ந்த தன்மையை ஊட்ட வேண்டும். இல்லையெனில் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட வரலாற்றை எழுதுவதில் உள்ள” மூடுதல்”  தடுத்து நிறுத்தப்பட இயலாது. பிற நாடுகளில் இதே போன்ற நிலைகளில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.

உங்கள் புத்தகத்தைப் படித்த பின்பு,  இந்த துறையில் ஆர்வமுடையவர்களுக்கு நீங்கள் எந்த மூன்று புத்தகங்களை பரிந்துரைப்பீர்கள்?

மூன்று என்பது மிக குறைந்தது. உண்மையில் உபநிடதங்களில் துவங்கி சாக்ரடீஸ் என்று தொடர்ந்து செல்ல வேண்டும் என நான் பரிந்துரை செய்கிறேன். ஆனால் வரலாற்றில் எந்த நூல், எந்த சிந்தனையாளர்கள் எதிர்ப்புகளைப்பற்றி பேசினார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் ஒன்றுமில்லை. அவை பல புத்தகங்களில் வெளிப்படையாகவும்,  மறைந்தும் உள்ளன. நான் நூலின் ஒவ்வொரு பகுதியை படிப்பதற்குமான புத்தகங்களை கொடுத்துள்ளேன். அவை பெரும்பாலும் நான் எனது பணிகளுகாகப் புரட்டியவை.

எனினும், எதிர்ப்பு பற்றிய சிந்தனை எவ்வாறு தோன்றியது என்பது பற்றியும், ஏன் அது சமகால சிந்தனைகளின் மையமாக இருந்தது என்பது பற்றியும் உலகம் முழுவதும் நடந்த செயல்களை பற்றியும் புரிதல்  இருப்பது, படிப்பதைப் போலவே சம அளவில் முக்கியமானது. இதை புரிந்து கொள்ள இது மாறுபட்ட அணுகுமுறை கொண்ட பல பலவகையான புத்தகங்களை நான் பரிந்துரைக்க முடியும். அவை ஒவ்வொன்றும் அதன் வழியில் சிந்தனையைக் தூண்டக் கூடியவை.

எட்வர்ட் செயிடின் “அறிவாளிகளின் பிரதிநிதித்துவம்” (Representation of Intellectual- Edward Said) என்ற புத்தகத்திலிருந்து துவங்கலாம். நான் இந்த புத்தகத்தை பரிந்துரைப்பது அது எதிர்ப்பு இருந்ததற்கான விளக்கத்தை தருகிறது என்பதால் மட்டுமல்ல, நாம் இன்றும்கூட பரவலாக அறிந்திருக்கும் பல மரபுகளை விரிவாக உள்ளடக்கி இருந்தாலும்,  இதற்கு தொடர்புள்ள,  தொடர்பற்ற வற்றைப் பற்றியும்  ஆய்வு செய்ய பரிந்துரை செய்ய உதவுகிறது என்ற வகையிலான புத்தகம் என்பதாலும் அதை பரிந்துரைக்கிறேன்.

அன்னா அரென்ட்டினின் “சர்வாதிகாரத்தின் தோற்றம்” எதிர்ப்பை மறுத்த, குறிப்பாக இரண்டு சமூகங்களான நாஜி ஜெர்மனி மற்றும் சோவியத் ரஷ்யா பற்றி பகுப்பாய்வு செய்கிறது. ஃப்ரான்ஸ் ஃபனோன், பெர்டோல்ட் ப்ரெக்ட், டேரியோ ஃபோ          ( Franz Fanon, Bertolt Brecht, Dario Fo) ஆகியோரின் எழுத்திலும்,  எதிர்ப்பு பற்றிய ஆர்வத்தைத் தூண்டும் ஆய்வுகளும்,  அதனுடன் தொடர்புடைய பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும் உள்ளன.

(www.scroll.in இணையதளத்திற்காக ரோகன் வெங்கட்ராமகிருஷ்ணன், ரோமிலா தாப்பருடன் நடத்திய உரையாடலின் மொழியக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்