Aran Sei

ஐபிஎல் கிரிக்கெட் கமென்டரியில் ஆர்ஜே பாலாஜியின் வக்கிரம் – பா.பிரேம்

Credit : https://www.dtnext.in

டிக்கல் அடிக்கல் நாட்டுவாரா?.. ரங்கராஜ் பாண்டேவை விட மனீஷ் பாண்டே நல்லா ஃபீல்டிங் பண்ணுவாரு.. கேதாரோ ஆரோரோ-னு நீங்க போடுற மொக்க ரைமிங் எல்லாம் கூட பிரச்சினை இல்ல.. அது உங்க டைமிங் & ரைமிங் மற்றும் வேர்ட்பிளே சென்சப் பொறுத்தது.. அது உங்க சுதந்திரமும் கூட..

ஆனா பிளாக் பிளேயர்ச அசிங்கமா நீங்க பண்ற பாடி ஷேமிங்கப் பாத்திட்டு அப்படியே விட்டுட்டுப் போக முடியாது.

அதுவும் நேத்தைய மேட்ச் முழுக்க கியரோன் பொல்லார்ட உருவத்தை வச்சு நீங்க பண்ணினதெல்லாம் உங்களோட ஆழ்மன வக்கிரம்.

“எந்தக் கடையில அரிசி வாங்குறாருனு தெரியலியே”.. ” பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்தா மூக்கு மட்டும்தான் தெரியும்”.. “எங்க வீட்டுக்கெல்லாம் அவரை சாப்பிட கூப்பிட மாட்டேன்” – இப்படி வரம்பு மீறிப் போய்க்கிட்டே இருக்கீங்க.

இங்கிலீஷ் கமென்ட்ரில இதுவரைக்கும் யாராச்சும் ஒரு கமென்டேட்டர் பிளேயரோட உடல், நிறம், அளவு பத்திப் பேசி நீங்க பாத்திருக்கீங்களா? ஏன்னா, அவங்களுக்குத் தெரியும் பிறப்பு, நிறம், மொழி, அளவு இவற்றில் எதுவுமே முக்கியம் கிடையாது. கிரிக்கெட்டுக்குத் திறமையும் உணர்வும் மட்டும்தான்.

ஆனா, உங்களோட சேர்ந்து தமிழ் கமென்ட்ரி பாக்ஸ்-ல இருக்க யாருக்குமே இது குறித்த அடிப்படையான சென்ஸ் சுத்தமா கிடையாது. ஸ்ரீகாந்த் எல்லாம் தலைக்கனம், திமிரின் உச்சம். ஏன்னா, மரபு வழியாவே உங்களுக்குப் பாகுபாடு அனுபவிக்கிற வலியோ, வாழ்க்கையோ இருந்ததில்ல. ஆனா இந்த உளவியலைக் கொஞ்சம் கூட சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்காம “எதுக்கெடுத்தாலும் எங்கள இப்படியே சொல்றாங்க” அப்படின்னு உங்களைச் சார்ந்தோர் பலர் வருத்தப்படுவார்கள்.

இத நான் உங்களப் பார்த்துச் சொல்றது கொஞ்சம் கடுமையான விமர்சனமா கூட இருக்கலாம். ஆனா, அதுதான் உண்மை. இங்க இருக்கிற பாகுபாடு கோட்பாட்ட டிராஃப்ட் பண்ணவங்களோட மரபுன்றதால அடிப்படையாவே ரொம்ப ஈஸியா வருதுனு நினைக்க வைக்குது உங்களோட கமென்டரி…

நீங்க நகைச்சுவை பண்றதா நினைச்சுகிட்டு, வன்மமா உருவக் கேலி பண்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பத்தி முழுசா தெரிஞ்சா, நீங்க இதுபோல எல்லாம் பேசமாட்டீங்கனு நினைக்கிறேன்..

வெஸ்ட் இண்டீஸ் அரசியல் வரலாற்றில் கிரிக்கெட் தவிர்க்க முடியாத ஒன்று.

அடிமை வாழ்க்கை, நிறவெறி இவற்றைத் தாண்டி வெஸ்ட் இண்டீஸ் மக்களின் விடுதலைக் குரலை உலகிற்கு உரக்கச் சொன்னவர்கள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள்..

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகச் சமர் செய்த நெல்சன் மண்டேலா அவர்களே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியினரைப் பாராட்டிப் பேசியது வரலாறு..

சிறையில் கொடுந்துயரை அனுபவித்த மண்டேலா, போயும் போயும் மைதானத்திற்குள் ஜாலியாக கிரிக்கெட் ஆடியவர்களை ஏன் கொண்டாட வேண்டும்??

அவருக்குத் தெரிந்திருக்கிறது, விடுதலைக்கான கருவியாக எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று.. “நான் மட்டும் சிறையில் வாடுகிறேன், உங்களுக்குக் கிரிக்கெட் ஒரு கேடா?” என்று இழிவு பேசவில்லை.. குறைத்து மதிப்பிடவில்லை.. இதுவும் முக்கியம்தான் என அவர் நினைத்தார்..

1975-ன் தொடக்க காலகட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என வெள்ளையினத்தவர்களிடம் அவமானப்பட்டு வந்தது. விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்குள்ளேயே நிறவெறியை எதிர்கொண்டு உளவியலாகவே மிகவும் சோர்ந்து போயினர்..

இங்கிலாந்தின் அடிமை நாடாக இருந்த வெஸ்ட் இண்டீஸுக்கு அது மேலும் நெருக்கடியான காலகட்டம். பல்வேறு சுரண்டல்கள், நிறவெறித் தாக்குதல் எனக் கொடுந்துயரை அனுபவித்தவர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தோல்வி மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

எல்லாமே 1979 வரைதான். மைக்கேல் ஹோல்டிங், காலின் கிராஃப்ட், சார்லி கிரிஃபித், வெய்ன் டேனியல், ஆண்டி ராபர்ட்ஸ், மால்கம் மார்ஷல், வால்ஸ், கர்ட்லி ஆம்ப்ரோஸ் என வெஸ்ட் இண்டீஸ் உருவாக்கிய ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளருமே வெள்ளையருக்கு எதிரான பீரங்கிகள்தான்.. அவர்கள் வீசிய ஒவ்வொரு பந்துமே வெள்ளையருக்கு எதிரான குண்டுகள்தான்.

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் இப்படிச் சொல்கிறார்..

“மைதானத்திற்கு வெளியேதான் நீ வெள்ளையன் நான் கருப்பன். நீ பிரபு நான் அடிமை என்பதெல்லாம். மைதானத்திற்குள் வந்துவிட்டால் நீயும் நானும் ஒன்றுதான். ஒவ்வொரு ஆட்டமும் போர்தான்” என்று.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டின் எம்பலமே தெளிவான அரசியல் குறியீட்டுடன்தான் உருவாக்கப்பட்டதாக விவியன் ரிச்சர்ட்ஸ் சொல்கிறார்..

“பச்சை நிறம் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளின் பசுமையைக் குறிக்கிறது. மஞ்சள் நிறம் இங்கிருந்து கொள்ளையடிக்கப்படுகிற தங்கத்தினைக் குறிக்கிறது. சிவப்பு நிறம் தங்கத்திற்காக தினம் தினம் வெஸ்ட் இண்டீஸ் வீதிகளில் சிதறுகிற எங்கள் மக்களின் ரத்தத்தினைக் குறிக்கும்” என்று.

உலகெங்கிலும் ஒடுக்கப்படுகிற கறுப்பினத்தவர்களின் விடுதலைக் குரலாக இசையினால் கலகம் செய்த புரட்சிப் பாடகன் பாப் மார்லி கூட வெஸ்ட் கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்துவதற்காக மைதானத்திற்கே சென்று பாடுவாராம்.

போராட்டம் என்பது இந்த வடிவத்திற்குள்தான் இருக்க வேண்டும் என்கிற மிகப் பழமையான கருத்துருவாக்கத்தில் சிக்கி உழன்றுகொண்டிருக்கிற இந்தியச் சமூகம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு ஆயிரம் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களின் சுயமரியாதை உணர்வை, அறவுணர்ச்சியைப் புரிந்துகொள்ள மேலும் ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளாய்ட் என்கிற கருப்பினச் சகோதரன் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, Black Lives Matter (கருப்பின உயிர்களும் முக்கியம்) என்று எழுத்துகள் பொறிக்கப்பட்ட பனியனோடு களம் இறங்கி, உலகத்தினரோடு உரக்கப் பேசியவர்கள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள். ஆங்கில வர்ணனையாளர்கள் கூட அவ்வாசகத்தை உச்சரித்து அடையாளப்படுத்தினார்கள்.

இந்தியாவில் அப்படி நினைத்துப் பார்க்க முடியுமா?

இதோ இப்போது ஐபிஎல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதுதான் உத்தரப் பிரதேசத்தில் ஒரு 19 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். இந்தியாவே அதிர்ந்தது. ஆனால், எந்த அணிக்காவது அப்படி ஒரு யோசனை தோன்றியதா? இல்லை, எந்த இந்திய வர்ணனையாளராவது நேரலையில் அதனை அடையாளப்படுத்தினீர்களா?

கேட்டால், விளையாட்டு வேறு. இது வேறு என்பீர்கள். ஆனால் நீங்கள் மோசமாகக் கிண்டல் செய்கிற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அப்படி இல்லை. அவர்கள் அரசியலோடு விளையாட்டைத் தொடர்புப்படுத்தி, உலகிற்குப் பாடம் சொன்னவர்கள்.

இன்னும் கூட புரியவில்லை என்றால், Fire On Bobylon என்ற ஆவணப்படம் ஒன்று இருக்கிறது. அதைப் பாருங்கள். உங்கள் அடிப்படைவாத உளவியலில் நிச்சயமாக அவர்கள் மாற்றத்தை விதைப்பார்கள்.

அதற்குப் பிறகாவது இப்படி உருவகேலி செய்வதைத் தவிர்க்கிறீர்களா பார்க்கலாம்.

(கட்டுரையாளர் பா.பிரேம் ஒரு கிரிக்கெட் ஆர்வலர்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்