Aran Sei

சமீபத்தில் வெளியான ரஃபேல் பேர ஊழல் பற்றிய விபரங்கள் – அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல் சொல்லும் பாடம்

image credit : thewire.in

வாட்டர்கேட் விவகாரம்தான் 20-ம் நூற்றாண்டு அரசியலின் மிகவும் இழிபுகழ் பெற்ற நிகழ்வு. அது ஒரு அமெரிக்க அதிபரை பதவி விலகும் நிலைக்குத் தள்ளியது, கேட் என்ற பின்னொட்டுடன் கூடிய ஒரு புதிய சொல்லை அரசியல் மொழியில் புகுத்தியது. ஒரு ஊழல் முறைகேட்டை குறிப்பிடுவதற்கு அந்தச் சொல் இன்றளவும் இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப் படுகிறது. எடுத்துக்காட்டாக கோல் கேட் (நிலக்கரி ஊழல்- coalgate).

1972 கோடைக் காலத்தில், ஜனநாயகக் கட்சியின் தலைமையகமான வாட்டர்கேட் கட்டிடத்திற்குள் ஐந்து பேர் கதவை உடைத்து உள்ளே நுழைந்த இந்த ஊழல் விவகாரத்தை அமெரிக்க நாளிதழ்கள் ‘வாட்டர்கேட் கேப்பர்’ என்று விவரித்தன; (அதிபர் நிக்சன் அங்கு இரகசியமாக ஒலிப்பதிவு கருவிகளை வைத்து உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக புகார் எழுந்தது.) அதாவது அது அரசியல் முக்கியத்துவம் இல்லாத வேடிக்கை சாகசம் என்று ஊடகங்கள் கருதின.

1970-களின் அமெரிக்க தலைநகருக்கும் சமீபத்திய ஆண்டுகளின் இந்தியத் தலைநகருக்கும் இடையேயான பல்வேறு ஒற்றுமைகளின் காரணமாக, அந்த உண்மை இந்திய ஊடகங்களுக்கு ஒரு முக்கியமான நுண்ணறிவை அளிக்கிறது.

ஜூன் 1972-ல் நடந்த உளவு பார்க்கும் முயற்சிக்கும், ஆகஸ்ட் 1974-ல் அதிபர் நிக்சனின் பதவி விலகலுக்கும் இடையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஓடி விட்டன. இந்த காலகட்டத்தின் போது, வாட்டர்கேட் ஊழல் விவகாரம் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகவும், அது ஒரு வேடிக்கையான காட்சி மட்டுமே என்பதாகவும், அல்லது அந்த ஆண்டு நவம்பரில் நடக்கவிருந்த தேர்தலுக்கு முந்தைய அரசியல் சண்டை என்றும் மட்டுமே கருதப்பட்டது.

அப்போது கற்றுக்குட்டி பத்திரிகையாளரான லெஸ்லி ஸ்டால், இந்த விவகாரத்தின் ஆரம்ப நாட்களில் செய்தி சேகரிக்க அனுப்பப்பட்ட பத்திரிகையாளர்களில் ஒருவராக, வாஷிங்டன் போஸ்ட்டின் பத்திரிகையாளரான பாப் உட்வார்டுடன் அனுப்பப்பட்டிருந்தார்.

ஒரு கட்டத்தில், ‘இந்தச் செய்தி செத்து விட்டது, அது முடிந்து விட்டது, நாம் எவ்வளவு தூரம் போக முடியுமா அவ்வளவு போய் விட்டோம். இதற்கு மேல் நமக்கு எந்தத் தகவலும் கிடைக்கப் போவதில்லை, அது முடிந்து போன ஒன்று” என்று பாப் உட்வர்டிடம் தான் கூறியதாக லெஸ்லி ஸ்டால் தனது “ஸ்லோ பர்ன்” ஒலிபரப்பில் தெரிவிக்கிறார்.

பாப் உட்வர்ட் அதனை விடாப்பிடியாக மறுத்து, “இந்தச் செய்தியை உன்னிடமிருந்து எடுத்து விட அனுமதித்து விடாதே, அது இன்னும் செத்துப் போய் விடவில்லை. என்ன நடக்கிறது என்று தொடர்ந்து பின்பற்று” என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், ரிச்சர்ட் நிக்சனின் புகழ் அதுவரைக்கும் இல்லாத அளவு உச்சத்தில் இருந்தது.

அவர் அப்போதுதான் மாவோவின் சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்தியிருந்தார். அதன் மூலம் சோவியத் யூனியனுடனான பனிப்போரின் அதிகார சமநிலையில், அமெரிக்காவுக்கு ஒரு தீர்மானகரமான ஆதாயத்தை பெற்றிருந்தார்.

அமெரிக்கா இன்னும் வியட்நாமில் சிக்கிக் கொண்டிருந்தாலும், 1972-க்கும் 1973-க்கும் இடையே வட வியட்நாம் மீது சரமாரியாக வான்வழி தாக்குதல் நடத்தும் நிலையிலிருந்து, ஒரு சமாதான உடன்படிக்கையை நோக்கியும், போரிலிருந்து அமெரிக்க படைகளை மொத்தமாக விலக்கிக் கொள்வதை நோக்கியும் அமெரிக்க அரசு முன்னேறியிருந்தது.

வாட்டர்கேட்டில் நடந்த கதவுடைப்பு, 1972 அதிபர் தேர்தலுக்கு வெகு முன்னரே நிகழ்ந்து விட்டிருந்தது. பெரும்பாலான செய்திக் குழுமங்கள் அதை ஒரு தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செய்தியாகவே கருதின. நவம்பர் தேர்தலில் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அதிபர் நிக்சனின் மீது ஏதாவது ஒரு ஊழல் குற்றம் சாட்டுவதற்கான ஜனநாயக கட்சியினரின் கடைசி முயற்சியாக இது பார்க்கப்பட்டது. நிச்சயமாக அது அப்படியும் இருந்தது.

ஆனால் உண்மை என்னவென்றால், “பைத்தியக்கார இடதுசாரி” வேட்பாளரான ஜார்ஜ் மெக்கவர்ன், சந்தேகத்துக்கிடமான ஒரு கதவுடைப்பு முயற்சிக்காக நேரடியாக அதிபர் மீதே குற்றம் சாட்டியது, பல ஊடக ஆசிரியர்கள் வாட்டர்கேட்டை முக்கியமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததற்கான காரணமாக இருந்தது. தேர்தலில், அதற்குப் பிறகு எந்த அமெரிக்க அதிபரும் முறியடிக்க முடியாத அளவுக்கு நிக்சன் மகத்தான வெற்றி பெற்றார்.

இது நமக்கு பழக்கமான ஒன்றைப் போல இல்லையா?

2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் ரஃபேல் ஊழல் தொடர்பான உச்சநீதிமன்ற மேல்முறையீடு, பாஜகவின் இரண்டு முன்னாள் மத்திய அமைச்சர்களால், மத்திய பாஜக அரசாங்கத்துக்கு எதிராக விடாப்பிடியாக நடத்தப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான ஊடகங்கள் அதை ஒரு தேர்தல் காட்சியாக மட்டுமே கருதி செய்தி வெளியிட்டது தெளிவாக தெரிந்தது. காங்கிரசின் முழக்கங்களுக்கும், காவி ஹேஷ்டேகுகளுக்குமிடையிலான மோதலாகவே அதை அவர்கள் பார்த்தனர்.

ஓரளவுக்கு அவர்களை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய தலைமை தணிக்கை அதிகாரியும், உச்சநீதிமன்றமும் அந்த ஒப்பந்தத்தை பரிசீலிப்பதை தவிர்த்தனர். தலைமை தணிக்கை அலுவலகம் தனது கடமையை கைவிட்டது; உச்சநீதிமன்றம், ஒப்பந்தத்தின் நியாயத்தன்மையை விட “நீதித்துறை பரிசீலனைக்கான வரம்புகள்” மீது மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தி, தனக்கு அது தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்று முடிவு செய்தது.

ஊடகங்கள் நேரடியான கேள்விகளை எழுப்பிய ஒரு சில நேரங்களில் கூட, அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். மோடிக்கு பாதகமானவர் என்று ஒருபோதும் கருதப்படாத ஏபிபியின் நட்சத்திர தொகுப்பாளர் ருபிகா லியாகத், இந்த ஒப்பந்தம் அனில் அம்பானிக்கு சாதகமானதா என்ற ஒரு நேரடியான கேள்வியை கேட்டதற்காக பிரதமர் மோடியிடமிருந்து கசப்பான தனிநபர் தாக்குதல்களை எதிர்கொண்டார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமடைந்தது. ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்ததற்காக, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் ராகுல்காந்தி கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.. ரஃபேலை, ஒரு சாத்தியமான ஊழலாகவும் பெரிய புலனாய்வு வாய்ப்பு என்பதாகவும் பார்ப்பதை விட, ஒரு தேர்தல் பிரச்சினையாகவும் ஒரு ராகுல் காந்தி பிரச்சினையாகவும் மட்டுமே பார்ப்பது இன்றும் கூட ஊடகங்களுக்கு பாதுகாப்பானதாக உள்ளது.

எனவே, இந்தச் செய்தி தொடர்பான புதிய பரபரப்பான விபரத்தை வெளிக் கொண்டு வருவது பிரான்சு நாட்டு இணையதளமான மீடியாபார்ட்டின் மூலமே நடந்தது. அது வெளிக் கொண்டு வந்த தகவல்களின்படி ரஃபேல் விமானத்தை உற்பத்தி செய்யும் டசால்ட் ஒரு இந்திய இடைத்தரகருக்கு 2017ல் €10 லட்சம் (ரூ. 8.32 கோடி) கொடுத்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் – ” இந்திய ஆவணங்களை ஃபிரெஞ்சு தரப்புக்குக் கொடுத்து பல கோடி சம்பாதித்த இடைத்தரகர்கள் “

அந்த இடைத்தரகர் முந்தைய பாதுகாப்புத்துறை ஊழல்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேலான கால கட்டத்தில் பல பத்து லட்சம் யூரோ பணத்தை டசால்ட் அவருக்குக் கொடுத்துள்ளது. இதற்கு கைமாறாக, அந்த இடைத்தரகர் இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் மிக இரகசியமான ஆவணங்களை பிரெஞ்சு தரப்பிற்கு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வேடிக்கை என்னவென்றால், மிகப் பொருத்தமாக “சாப்பர் கேட்” என்று பெயரிடப்பட்ட, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பான இந்திய அமலாக்கத் துறையின் விசாரணை ஆவணங்களின் அடிப்படையிலேயே மீடியாபார்ட் இந்த விபரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.

சென்ற வார நிலவரப்படி, ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்னெப்போதையும் விட வலுவாக தோற்றமளிக்கின்றன. பிரதமரை முதல் பதிலளிப்பவராகக் கோரும் புதிய மனுவை அனுமதிக்க வேண்டிய கட்டாயம் உச்சநீதிமன்றத்துக்கு ஏற்படலாம்.

இது ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சார உள்ளுணர்வுகளை நியாயப்படுத்தி விடாது என்றாலும் பிரதமர் அலுவலகத்தின் மீது நேர்மை தொடர்பான தீவிரமான கேள்விகள் எழுப்பப்பட வேண்டும் என்ற அவரது வலியுறுத்தலை அது நியாயப்படுத்தியுள்ளது. அவரது அந்த வலியுறுத்தலை பல இந்திய பத்திரிகையாளர்கள் மகிழ்ச்சியாக ஒதுக்கித் தள்ளினர்.

அரசியல் வரலாற்றை மாற்றி அமைக்கும் நிகழ்வுகள் அவை நடக்கும் போது அவ்வளவு முக்கியமானவை என்று தோன்றுவதில்லை என்பதை வாட்டர்கேட் ஊழல் நமக்கு நினைவுபடுத்துகிறது. பொதுக் கருத்தின் மன நிலையாலும், புறநிலை காரணிகளாலும் உந்தப்பட்டு நாம் ஆதாரங்களை கண்டு கொள்ளாமல் போகலாம். ஆனால், அவை வரலாற்றை படைப்பதாகவே முடிந்து விடலாம்.

சரியான நபர்களின் விழிப்புணர்வும் உறுதியும், ஒரு குற்றச்சாட்டு ஒரு சில பரபரப்பான செய்தி சுழற்சிகளிலேயே முடிந்து போவதற்கும், அது அம்பலப்படுத்தப்பட்டு அரசியல் இழிபுகழின் ஏடுகளில் பொறிக்கப்படுவதற்கும் இடையேயான வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன.

அத்தகைய நபர்களிடம் குறிப்பாக ஊடகவியலாளர்களிடம் “அது செத்து விடவில்லை, அதை விடாமல் பின்தொடர்” என்று பாப் உட்வர்ட் சொல்வார்.

www.thewire.in இணைய தளத்தில் வெளியான ரகு கர்னாட் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்